அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

திங்கள், 31 மே, 2010

புகையிலை பொருட்கள் புதிய எச்சரிக்கை படங்கள்

புதுடில்லி : புகையிலை பொருட்களின் உறையின் மீது, வரும் டிசம்பரில் இருந்து புதிய எச்சரிக்கை படங்கள் அச்சிடப்படவுள்ளன. இது மிகவும் தாமதமான நடவடிக்கை என, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் புகார் தெரிவித்துள்ளன.




சிகரெட், பீடி உள்ளிட்ட புகையிலை பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் உடல் நலக்கேடு குறித்து எச்சரிக்கும் வகையில், அவற்றின் உறையின் மீது எச்சரிக்கை படங்கள் அச்சிடும் நடவடிக்கையை மத்திய சுகாதார அமைச்சகம் ஏற்கனவே கொண்டு வந்துள்ளது. இந்த எச்சரிக்கை படங்கள், ஒவ்வொரு ஆண்டும் சுழற்சி முறையில் மாற்றப்படும். இந்திய தன்னார்வ சுகாதார கழகத்தின் உறுப்பினர்கள் ஆய்வு நடத்தி, அதன் அடிப்படையில் உறையின் மீது அச்சிடப்பட வேண்டிய படங்கள் தேர்வு செய்யப்படும். இதன்படி வரும் ஜூன் மாதம் முதல், தற்போது அச்சிடப்பட்டுள்ள படத்துக்கு பதிலாக, புதிய படம் அச்சிடப்பட வேண்டும். புகையிலை பொருட்கள் பயன்படுத்துவதால் வாய் புற்று நோய் ஏற்படும் அபாயத்தை வலியுறுத்தும் வகையிலான படத்தை அச்சிடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்த நடவடிக்கை தாமதமாகியுள்ளது. இதுகுறித்து விசாரித்தபோது, ஜூன் மாதத்துக்கு பதிலாக, வரும் டிசம்பர் 1ம் தேதியில் இருந்து புதிய படம் அச்சிடப்பட்ட புகையிலை பொருட்களின் உறைகள் விற்பனைக்கு வரும் என, தெரியவந்துள்ளது.




இதுகுறித்து, இந்திய தன்னார்வ சுகாதார கழகத்தினர் கூறுகையில், "புகையிலை பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் அரசுக்கு ஏற்படுத்தும் நெருக்கடி காரணமாகவே, இந்த கால தாமதம் ஏற்பட்டுள்ளது. புகையிலை பொருட்களின் உறைகளில் தற்போது அச்சிடப்பட்டுள்ள படம், அதை பயன்படுத்துவோரிடையே பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை' என்றனர். புகையிலை பொருள் தயாரிப்பு நிறுவனங்களின் தரப்பில் கூறுகையில், "உறைகளின் மீது புதிதாக அச்சிட பரிந்துரை செய்யப்பட்டுள்ள படம், மிகவும் கொடூரமாக உள்ளது. இதனால், விற்பனை பாதிக்கப்படும். மேலும், இதற்கான உத்தரவு எங்களுக்கு மார்ச் மாதம் தான் வந்தது. புதிய படத்தை அச்சிடுவதற்கு போதிய அவகாசம் தேவைப்படுகிறது' என்றன

விபத்துக்களை விலைக்கு வாங்கும் வாகன ஓட்டிகளின் மொபைல் பேச்சு







தகவல் தொழில் நுட்பத்தின் வளர்ச்சியால் உருவாக்கப் பட்டுள்ள மொபைல் போன் இல்லாதவர்களே இன்று இல்லை எனலாம். நமது வசதிக்காக வரப்பிரசாதம் போல் கிடைத்து உள்ள இவற்றை நாம் முறையாக பயன்படுத்த வேண் டும். நமக்கு உதவுவதற்காக கண்டுபிடிக்கப்பட்ட சாதனத்தை நம் உயிருக்கு உலை வைக்கும் வகையில் பயன்படுத்தக்கூடாது. வாகனங்களை ஒட்டிச்செல்லும் போது மொபைல் பேசுவதால் கவனம் சிதறி விபத்துக்கள் ஏற்படுகிறது என்பதை யாரும் சொல்லி தெரியவேண்டியதில்லை. ஆங்காங்கே ஏற்படும் விபத்துக்களுக்கு மொபைல் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவதும் காரணமாக உள்ளது. இருசக்கர வாகனங்களில் செல்வோரும், கார், லாரி டிரைவர்களும் பேசிக்கொண்டே வாகனங்களை ஓட்டுவதால் கவனம் சிதறி விபத்துக்கள் அதிகளவில் நடக்கின்றன. இதை தவிர்க்க ஒவ்வொருவரும் தங்களுக்குள் விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொண்டால் தான் உண்டு. ஒவ்வொரு வாகன விதிமீறல் களையும் சட்டம் போட்டு தடுப்பது என்பது இயலாத காரியம். தங்கள் உயிர், குடும்பம் மேல் அக்கறை உள்ளவர்கள் வாகனம் ஓட்டும் போது மொபைல் போனை முற்றிலுமாக தவிர்ப்பதே நல்லது. இதை ஒவ்வொருவரும் உணர்ந்தால் விபத்துக்கள் குறையும்



16 வயது நிரம்பியவர் முதல் 18 வயது வரையுள்ளவர்களுக்கு, "டிரைவிங் லைசன்ஸ்' வழங்கப்படுகிறது. வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் முன், 50 சிசி, திறன் கொண்ட பழைய வாகனங்களை ஓட்டி காண்பித்து லைசென்ஸ் பெற்று செல்கின்றனர். தற்போது அனைத்து டூவீலர் உற்பத்தி நிறுவனங்களும், 50 சிசி திறன் கொண்ட வாகனங்களை தயாரிப்பதை நிறுத்திவிட்டனர். 70 சிசி க்கு மேல் தான், வாகனங்கள் தயாரிக்கப்படுகின்றன. இதனால் டிரைவிங் லைசென்ஸ் பெற்ற சிறுவர்கள் அதிக திறன் கொண்ட டூவீலர்களை அதிவேகமாக ஓட்டுகின்றனர். விபத்துகள் ஏற்பட்டு பிறர் காயமடையும் போது, இவர்கள் மீது தான் வழக்கு பதிவு செய்யப்படும்.படிக்கும் காலத்தில் இதுபோன்ற பிரச்னைகளால் போலீஸ் ஸ்டேஷன், வழக்கு என அலைய வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் படிப்பு பாதிக்கும் நிலையும், வீணான மனக்குழப்பங்களுக்கும் ஆளாக நேரிடுகிறது. மேலும் வாகனங்கள், உயிர் சேதங்கள் ஏற்படும் போது காப்பீடு பெற முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் முழு இழப்பீடையும் பெற்றோர்கள் வழங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.வேலை, திருமணம் என்ற சில நடைமுறைகளுக்கென வயது வரம்பு உள்ளது போல வாகனங்களை இயக்குவதற்கும் வயது வரம்பு நிர்ணயிக்க வேண்டும். ரோட்டில் வாகனங்களை சிறுவர்கள் இயக்குவதை பெற்றோர் தடுத்தாலே இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும்

புகைப்பதை விட்டுவிட்டால் ஏற்படும் நன்மைகள்

இன்று உலக புகையிலை எதிர்ப்பு தினம். போர்ச்சுகீசிய நாடுகளிலிருந்து வந்த வணிகர்கள் மூலம் 16 ம் நூற்றாண்டுகளில் புகையிலை இந்தியாவுக்கு அறிமுகம் ஆனது. தினமும் 2465 பேர் வீதம், ஆண்டுதோறும் 9 லட்சம் பேர் புகையிலை தொடர்பான நோயால் இறக்கின்றனர். இந்தியாவில் 2020ல் 16 லட்சம் இறப்பார்கள் என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கிறது.
புகையிலையால் ஏற்படும் பாதிப்புகள், அதிலிருந்து விடுபடுவதற்கான வழிகள், நன்மைகள் குறித்து மதுரை மனநல டாக்டர் சி. ராமசுப்பிரமணியன், டாக்டர் ரத்தினவேல், உளவியல் நிபுணர் ரவிச்சந்திரன், பேராசிரியர் கண்ணன் கூறியதாவது :புகையிலையால், நுரையீரல், கண் உட்பட உடலின் பல்வேறு உறுப்புகள் பாதிக்கும். புகையிலை தொடர்பான சிகரெட், பீடி போன்றவற்றை வாங்க தினமும் 20 ரூபாய் செலவழிக்க வேண்டியுள்ளதால், பொருளாதார பாதிப்பும் ஏற்படுகிறது. தோலின் தன்மைமாறி, சுருக்கங்கள் ஏற்பட்டு, எண்ணெய் பசை குறைந்து, இளம் வயதிலேயே முதுமை அடைந்தது போல் இருக்கும். எப்போதும் வாய் நாற்றம், இருமல் இருக்கும். பற்கள் மஞ்சளாகவும், கை விரல்கள் கறுப்பாகவும், ரத்தசோகை பிடித்தது போல் இருக்கும்.




புகையை கைவிடுவது எளிது :  புகைப்பதை ஏன் விட்டுவிட வேண்டும் என்று பட்டியல் தயார் செய்ய வேண்டும். நன்மைகளை கைப்பட எழுதி வைத்திருக்க வேண்டும். எப்போது, ஏன், யாருடன், எந்த சூழலில் புகைபிடிக்கிறோம் என அட்டவணை தயார் செய்ய வேண்டும். லைட்டர், தீப்பெட்டி, ஆஷ்டிரே, மீதமுள்ள சிகரெட்டை, காலி பாக்ஸ்களை வீட்டிற்கு வெளியே போட்டு விட வேண்டும். வீட்டை நறுமண பினாயில் போட்டு சுத்தமாக கழுவி வைக்க வேண்டும். நெருக்கமான உறவினர்கள், நண்பர்களிடம் எந்த தேதியிலிருந்து புகைபிடிப்பதை விட்டுவிட போகிறீர்கள் என தெரிவிக்க வேண்டும். பின் சொன்னதை செய்ய வேண்டும்.

புகைப்பதை விட்டுவிட்டால் ஏற்படும் நன்மைகள் : ரத்தஅழுத்தம், நாடித்துடிப்பும் சாதாரண நிலைக்கு வரும். கை, காலில் அபரிமிதமான சூடு உஷ்ணம் குறையும். உடலில் தீங்கு விளைவிக்கும் கார்பன் மோனாக்ஸைடு குறையும். ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு அதிகரிக்கும். நாக்கில் சரியான ருசி தெரியவரும். மாரடைப்பு வாய்ப்பு குறையும். மூச்சு விடுவதில் சிரமம் இருக்காது. இருவாரங்களுக்கு பின், ரத்தம் ஓட்டம் சீராக இருக்கும். நடக்கவே சிரமப்பட்டவர்கள், நுரையீரல் விரிவடைந்து பிராண வாய்வு அதிகமாக சென்றுவிடுவதினால் மிக வேகமாக நடக்கவும், ஓடவும் முடியும்.

ஒன்பது மாதங்களுக்கு பின், இருமல், மூக்கடைப்பு குறைந்து சளி வருவது நிற்கும். ஓராண்டிற்கு பின், மாரடைப்பு வருவது பாதியாக குறையும். ஐந்து ஆண்டுகளுக்கு பின், பக்கவாதம், மாரடைப்பு, ரத்தஅழுத்தத்தினால் மூளையில் ஏற்படும் ரத்தக்கசிவு போன்றவற்றிலிருந்து விடுதலை ஏற்படும்.பத்தாண்டுகளுக்கு பின், புற்றுநோயால் இறப்பது பாதியாக குறையும். பதினைந்து ஆண்டுகளுக்கு பின், புகைப்பதை நிச்சயம் விட்டுவிட முடியும் என்று உறுதியாக நம்பி, மற்றவர்களையும் இதைப்போல நடந்துகொள்ளும் வகையில் முன்மாதிரியாக இருக்க வேண்டும். இவ்வாறு கூறினர்

1.இடையூறாக "கட்-அவுட்'கள் பாகுபாடின்றி அகற்ற எதிர்பார்ப்பு

பிரச்னைகள்


ஊட்டி: "போக்குவரத்துக்கும், மக்களுக்கும் இடையூறாக இருக்கும் "கட்-அவுட்'கள், விளம்பரத் தட்டிகளை, கட்சிப் பாகுபாடின்றி அப்புறப்படுத்த வேண்டும்' என வலியுறுத்தப்பட்டுள்ளது.கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், நீலகிரி மாவட்ட நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு செயல்படுத்தும் கிராம நுகர்வோர் மன்றங்கள் மற்றும் மக்கள் மையங்களின் ஆலோசனை கூட்டம், ஊட்டியில் நடத்தப்பட்டது.மக்கள் மைய ஒருங்கிணைப்பாளர் மாரிமுத்து வரவேற்றார். பொதுச் செயலர் வீரபாண்டியன், மனித உரிமை காப்பாளர் கூட்டமைப்பின் அவசியம், மனித உரிமை ஆணையம் குறித்து விளக்கினார். நுகர்வோர் மைய செயலர் கணேசன், குழந்தை தொழிலாளர் மற்றும் அடிப்படை கல்வியின் அவசியம் குறித்து பேசினார்.மூலிகைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த, நீலகிரியில் மூலிகைக் கண்காட்சி நடத்த வேண்டும்; பல பகுதிகளில் தேயிலைத் தூள் கலப்படம் நடப்பதால், தேயிலை வாரியம், சுகாதாரத் துறையினர் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும்; மழை காலம் துவங்கியுள்ளதால், மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்; நவம்பர் மாத மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, முறையாக சீரமைக்க வேண்டும்.போக்குவரத்துக்கும், மக்களுக்கும் இடையூறாக இருக்கும் "கட்-அவுட்'கள், விளம்பரத் தட்டிகளை, கட்சிப் பாகுபாடின்றி அப்புறப்படுத்த வேண்டும்; அப்புறப்படுத்தும் செலவுத் தொகை, உரியவர்களிடம் வசூலிக்க வேண்டும்; கோடை விழா பெயரில், ஆடம்பர அழைப்பிதழை தவிர்க்க வேண்டும் என்பன உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புகையிலை எதிர்ப்பு நாளை முன்னிட்டு, புகையிலையிலிருந்து விடுதலை பெற உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.கூட்டமைப்பு பெருந்தலைவர் கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். தலைவர் சிவசுப்ரமணியம் முன்னிலை வகித்தார். கிராம நுகர்வோர் மன்ற நிர்வாகி ஜெயப்பிரகாஷ் நன்றி கூறினார்.

ஞாயிறு, 30 மே, 2010

ஊதித் தள்ளுவதால் ஊசலாகி போகுது உயிர்: புதிய ஆய்வு எச்சரிக்கை

புதுடில்லி : "புண்பட்ட மனதைப் புகை விட்டு ஆற்றுவோம்' என்று நினைக்கிறீர்களா? அப்படியானால் இதைப் படியுங்கள்; புகைபிடிக்கும் பழக்கத்தால் இந்திய ஆண்களின் ஆயுளில் ஓர் ஆண்டு குறைந்து விடுவதாக, புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
கடந்த 1947ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி, இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் 37 வயது. 2007ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி, 64.7. ஆனால் புகைபிடிக்கும் பழக்கம் தற்போது அதிகரித்திருப்பதால், ஆயுளில் ஓராண்டு குறைந்து விடுவதாக, ஆராய்ச்சியாளர் பிரபாத் ஜா கூறுகிறார்.
டொரன்டோ பல்கலைக்கழகத்தில் பொது நலவாழ்வு ஆராய்ச்சியாளராக இருக்கும் பிரபாத் ஜா, இந்தியாவில் புகைபிடிக்கும் பழக்கம் குறித்தும், புகையிலை மீதான வரி விதித்தல் குறித்தும் ஆய்வு நடத்தி வருகிறார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: இந்தியாவில் ஆண்டுக்கு 10 லட்சம் பேர், புகைபிடிக்கும் பழக்கத்தால் மரணம் அடைகின்றனர். 10 பேரில் ஒருவர், இப்பழக்கத்தில் உயிரிழக்கிறார். பிரிட்டன் மற்றும் அமெரிக்காவை விட, இந்தியாவில் இந்த வகையிலான இறப்பு அதிகம். கடந்த 1999ல் புகைபிடிப்போர் தொகை 13 சதவீதம். 2006ல் 25 சதவீதம். நகர்ப்புறங்களில் உள்ள ஆண்களின் சராசரி ஆயுட்காலம், இந்தப் பழக்கத்தால், ஓராண்டு குறைகிறது.
இந்தியாவில் புகைபிடிப்பதற்கு எதிரான சட்டம் கடுமையாக அமல்படுத்தப்படவில்லை. இங்கு புகைபிடிப்போர், மொத்தம் ஐந்து கோடி பேர் இருக்கின்றனர். இவர்களில், மூன்று கோடியே 84 லட்சம் பேர், பீடி குடிப்பவர்கள். ஒரு கோடியே 32 லட்சம் பேர், சிகரெட் பிடிப்பவர்கள். இவர்களில் பெரும்பாலோர் மரணம் 30 வயதிலிருந்து 69 வயதுக்குள்ளாக, அற்பாயுசில் முடிந்து விடுகிறது.
அமெரிக்கா, பிரிட்டனில் 40 சதவீதம் பேரும், தாய்லாந்தில் 15 சதவீதம் பேரும் புகைப் பழக்கத்திலிருந்து மீண்டுள்ளனர். இந்தியாவில், வெறும் இரண்டு சதவீதம் பேர் தான், இப்பழக்கத்திலிருந்து மீண்டுள்ளனர். இவ்வாறு பிரபாத் ஜா தெரிவித்தார்.
புகைப்பிடிக்கும் பழக்கத்தை ஒழிக்க இப்போது இருக்கும் ஒரே ஆயுதம், அதன் மீது அதிக வரியை விதிப்பதுதான். இந்த பட்ஜெட்டில், மத்திய நிதியமைச்சர், புகையிலை மீது 17 சதவீத வரி விதிக்கலாம் என்று யோசனை தெரிவித்தார். இதனால், சிகரெட் விலை ஆறு சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது

ஐ.பி.எல்., அதிகாரமும் சூதாட்டமும்: உரத்த சிந்தனை, ஆர்.ரங்கராஜ் பாண்டே

அடுத்தடுத்து இரண்டு விக்கெட்கள் விழுந்திருக்கின்றன. முதல் விக்கெட் உறுதியாகி விட்டது -சசி தரூர். அடுத்த விக்கெட், மூன்றாவது அம்பயரின் முடிவுக்காக காத்திருக்கிறது -லலித் மோடி. அது, "அவுட்' தானா இல்லையா என, நகத்தை கடித்தபடி, "டிவி' ஷோரூம் முன்னால் நிற்கும் ரசிகர்களைப் போல, ஆவலோடு காத்திருக்கிறது இந்தியா.

மோடி என்ற பெயர் இருந்தாலே சண்டையும், சச்சரவும் சேர்ந்தே வரும் போல! ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகளைப் போலவே, லலித் மோடிக்கான ஆதரவும், எதிர்ப்பும் சம அளவில் இருக்கின்றன. அணிகளுக்கான விலை நிர்ணயம், புதிய அணிகளுக்கான கட்டணம், அதிபர்களின் நிதி ஆதாரம், பின்னணி பைனான்சியர்கள் பற்றிய விவரம், ஐ.பி.எல்.,லின் துபாய் தொடர்பு, போட்டிகளின் வெற்றி, தோல்வி நிர்ணயத்தில் விளையாடிய பணம் என, ஏராளமான விஷயங்கள் சந்திக்கு வந்துவிட்டன. இந்த ஐ.பி.எல்., காமெடியில் எத்தனை ஆயிரம் கோடி பரிமாற்றம் நடந்திருக்கும் என்பது, புலனாய்வுத் துறைக்கே புரியாத புதிராய் இருக்கிறது. விஞ்ஞானப்பூர்வ ஊழல் நடந்திருக்கிறது என்பதில், யாருக்கும் எந்தச் சந்தேகமும் இல்லை. அதை எப்படி வெளிக்கொணர்வது என்பதில் தான், மத்திய அரசும், வருமான வரித்துறையும் மண்டையைப் பிய்த்துக்கொண்டு இருக்கின்றன. மோசடி நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்துக்கு, ஆரம்ப முகாந்திரங்கள் ஆயிரம் இருக்கின்றன. பல்லாயிரக்கணக்கான கோடிகள் புரளும் மையமாக, ஐ.பி.எல்., திகழ்கிறது.

ஐ.பி.எல்.,லின் இன்றைய சந்தை மதிப்பு, ஒன்றல்ல... இரண்டல்ல... 18 ஆயிரம் கோடி ரூபாய். 2008ம் ஆண்டு ஏப்ரல் 18ம் தேதி துவக்கப்பட்ட முதல் போட்டி, மிகச் சரியாக இரண்டே ஆண்டுகளில் இந்த உயரத்தை எட்டியுள்ளது. லாட்டரியில் கூட இப்படி ஒரு பம்பர் பரிசு கிடைத்ததாக பதிவு இல்லை. இதுமட்டுமின்றி, பல்வேறு மாநில அரசுகள் இந்த விளையாட்டுக்கும், அணிகளுக்கும், வீரர்களுக்கும், டிக்கெட்டுக்கும் கோடிக்கணக்கான ரூபாய் வரிவிலக்கு அளித்திருக்கின்றன. யார் வீட்டு பணத்துக்கு யார் விலக்களிப்பது? இத்தனை ஆயிரம் கோடிகள் புரண்டும், இந்த ஐ.பி.எல்.,காரர்களுக்கு எந்தச் சமூகப் பொறுப்புணர்வும் கிடையாது. விளையாட்டு வீரரின் நெற்றியைத் தவிர, கிடைத்த இடத்தில் எல்லாம் விளம்பரத்தைப் போட்டு, ரசிகனின் பாக்கெட்டில் இருந்து பணம் பறிப்பதையே அடிப்படைக் குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டனர். கடந்த 2009ம் ஆண்டு, இந்தியாவில் பொதுத் தேர்தல் நடந்த சமயம்... "கொஞ்சம் ஒத்திவையுங்கள்' என, மத்திய அரசே கெஞ்சிக் கேட்டது. "அதெல்லாம் முடியாது; வட்டிக் கணக்கு என்ன ஆவது?' என அலட்சியப்படுத்திவிட்டு, அந்த ஆண்டுக்கான போட்டிகளை தென்னாப்ரிக்காவுக்கு கடத்திச் சென்றார் லலித் மோடி. அவ்வளவு ஏன்? ஐ.பி.எல்.,லை ஆரம்பித்ததிலேயே நல்ல நோக்கம் கிடையாது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவை முன்னிலைப்படுத்தி, இந்தியன் கிரிக்கெட் லீக் (ஐ.சி.எல்.,) ஆரம்பிக்கப்பட்டது.

"நல்ல வீரர்கள், இளைஞர்கள், இந்திய அணியில் புறக்கணிக்கப்படுகின்றனர்; அணிக்கு ஆள் சேர்ப்பதில், பணம் பாதாளம் வரை பாய்கிறது' என்ற புகாரின் காரணமாக, இளம் வீரர்களை நாட்டுக்கு அடையாளம் காட்டும் விதத்தில், ஐ.சி.எல்.,லுக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டது. அது நடந்துவிட்டால், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் குட்டு உடைந்து விடுமே! உடனடியாக, அவசரத் தீர்மானம் நிறைவேற்றி ஆரம்பிக்கப்பட்டது தான் ஐ.பி.எல்., மொத்த நோக்கமும் பாழ். வீரர்களைச் சேர்க்கும்போது, அதன் முதல் நிபந்தனையே, "ஐ.சி.எல்.,லோடு எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது' என்பது தான். அதோடு ஐ.சி.எல்., ஊத்தி மூடப்பட்டது; ஐ.பி.எல்., செழித்து வளர்ந்தது. அணியைச் சொந்தமாக்கிக்கொள்ள நூற்றுக்கணக்கான கோடிகள் பேரம் பேசப்பட்டன. அந்த அணிகளுக்கான வீரர்கள், ஆடு, மாடுகள் போல் ஏலம் எடுக்கப்பட்டனர். அவர்களது விலையும் கோடிகளில் கொளுத்தியது. கண், மண் தெரியாமல் பணம் விளையாடியது; இன்று, சர்ச்சையில் வந்து நிற்கிறது.

இப்போது எல்லா விரல்களும், லலித் மோடியை நோக்கி பாய்கின்றன. அத்தனைக்கும் காரணகர்த்தா அவர் தான் என்றாலும், அத்தனையையும் அவரே அள்ளிப் போட்டிருக்க வாய்ப்பில்லை. எந்த இடத்திலாவது ஊழல் நடந்தால், இரண்டு காரணங்களுக்காக அது வெளியில் தெரியும். ஒன்று, நியாயவான்கள் கொதிப்பது; இரண்டு, கூட்டாளிகளுக்கு உரிய பங்கு கிடைக்காதது. ஐ.பி.எல்.,லில் நியாயஸ்தர்களும் இல்லை; பங்கு கிடைக்காதவர்களும் இல்லை; "அத்தனை பேருக்கும் ஆனந்தம்' என்பது தான் லலித் மோடியின் அடிப்படை தத்துவம். தான் சம்பாதித்தது மட்டுமின்றி, அணி அதிபர்களும், உறவினர்களும், நண்பர்களும், அதிகார வர்க்கத்தினரும், ஆளும் கட்சியினரும் சம்பாதிக்க வழிவகுத்துக் கொடுத்தார் மோடி. அதனால் ஒருவரும் வாய் திறக்கவில்லை. இப்போது இவ்வளவு பெரிய பிரச்னை எழுந்தது கூட, யாருக்கு எவ்வளவு என்ற மோதல் எழுந்ததால் தான். தன் மூன்றாவது தோழிக்காக சசி தரூர் சண்டை பிடிக்க, லலித் மோடி முரண்டு பிடிக்க, கத்தரிக்காய் முற்றி கடைக்கு வந்துவிட்டது. "பிப்டி பிப்டி' என்பது வர்த்தகர்களின் வார்த்தை. அவர்கள் அணி திரண்டு அமைத்தது தான் ஐ.பி.எல்., என்பதால், இந்த விளையாட்டுக்கும், "டுவென்டி டுவென்டி' என்றே பெயர் வைத்தனர் போலும்.

அணிகளின் அதிபர் பட்டியலைப் பாருங்கள்... ரிலையன்ஸ் அம்பானி, விஜய் மல்லையா, இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசன், ஷாருக் கான், பிரீத்தி ஜிந்தா, ஷில்பா ஷெட்டி... அத்தனை பேரும் நம்பர் ஒன் கோடீஸ்வரர்கள். அப்போதே இது, விளையாட்டு என்ற அந்தஸ்தை இழந்து, வர்த்தகமாக பரிணமித்துவிட்டது. வியாபாரம் என்றால், லாபம் - நஷ்டம் தான் அளவீடே தவிர, வெற்றி - தோல்வி அல்ல. போதாதகுறைக்கு, அரசியல்வாதிகளின் நேரடி தலையீடு வேறு. சரத் பவார், பிரபுல் படேல், அருண் ஜெட்லி, சசி தரூர், லாலு பிரசாத், நிதிஷ் குமார், நரேந்திர மோடி என, மத்திய, மாநில கிரிக்கெட் வாரியங்களில், அரசியல்வாதிகளின் நேரடி பங்களிப்பு இருக்கிறது. இவர்கள் எல்லாம் சேர்ந்தால், விளையாட்டு வினையாகத் தானே செய்யும்!

சரி, இவற்றுக்கெல்லாம் தீர்வென்ன? சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள மோடியை நிரந்தரமாக நீக்கிவிடலாமா? நீக்கலாம்; நீக்காமலும் போகலாம். அது, மோடியின் பையில் எவ்வளவு சரக்கு இருக்கிறது; அது வெளியில் வந்தால் யார் யாருக்கு பாதிப்பு என்பதைப் பொறுத்தது. ஒருவேளை மோடி தொடராவிட்டாலும், மோசடி தொடரும் என்பதில் சந்தேகமில்லை. காரணம், ஒட்டுமொத்த இந்தியாவின் கவனமும் ஐ.பி.எல்., பக்கம் திரும்பிவிட்டதால், பிரச்னையை தமக்குள்ளேயே, "தீர்த்துக்கொள்ள' பி.சி.சி.ஐ., திட்டமிட்டு வருகிறது. இல்லாது போனால், கிரிக்கெட்டின் மொத்த கட்டுப்பாடும், கையை விட்டுப் போய்விடும் என்ற அச்சம். எனவே, மோடியையோ, கேடியையோ பலி கொடுத்துவிட்டு, வர்த்தகத்தைத் தொடரவே வாரியம் விரும்பும். அதை அனுமதித்துவிடக் கூடாது. வீரர்களுக்கும், அணி அதிபர்களுக் கும், ஐ.பி.எல்.,லுக்கும், கிரிக்கெட் வாரியத்துக்கும் கடுமையான வரி விதிக்க வேண்டும். அவர்களது வருவாயில் குறிப்பிட்ட சதவீதத்தை கிராமப்புற விளையாட்டு மேம்பாட்டுக்கு வழங்க வேண்டும். வாரியத் தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும். தேர்தல் கமிஷன் போல, சுதந்திரமான அமைப்பின் கண்காணிப்பில் இருக்க வேண்டும். வாரியத்தின் அத்தனை முடிவுகளும், அந்தக் கமிஷனின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். இதெல்லாம் நடந்தால், ஒழுங்கான கிரிக்கெட், ஓரளவு சாத்தியம். இல்லாவிட்டால் கிரிக்கெட்டும் உருப்படாது; நாடும் உருப்படாது. இது சத்தியம்!

தன்னார்வ அமைப்புகளிடம் வழங்கலாமே...! கழிப்பிட பராமரிப்பு விவகாரத்தில் யோசனை

ஊட்டி; "நீலகிரி மாவட்டத்தில் இலவச கழிப்பிடங்கள் அமைத்து, பராமரிக்க, தன்னார்வ அமைப்புகளிடம் வழங்கலாம்' என யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய, மக்கள் மையத் தலைவர் சிவசுப்ரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கை: மக்களின் "அவசர' தேவையை நிறைவேற்ற, அரசு, மாநகராட்சி, உள்ளாட்சி மன்றங்கள் மூலம் கட்டண கழிப்பிடங்கள் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு விடப்பட்டுள்ளன; இதை குத்தகைக்கு எடுத்துள்ளவர்கள், குத்தகை ஒப்பந்தத்தை மீறி, கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர். இதனால், மறைவிடங்கள் பல, திறந்தவெளி கழிப்பிடமாக மாற்றப்படுகின்றன; சுகாதார சீர்கேட்டால், நோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது.

நீலகிரி மாவட்டத்தில், நகராட்சி மற்றும் போக்குவரத்து கழகம் மூலம் கட்டப்பட்டுள்ள கழிப்பிடங்களில், ஒரு ரூபாய் முதல் 3 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆத்திரமடையும் சிலர் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். குறிப்பாக, ஏ.டி.சி., அருகில், எச்.ஏ.டி.பி., அரங்கம் செல்லும் சாலை, பஸ் ஸ்டாண்ட் சாலை, மாவட்ட கலெக்டர் அலுவலகப்  பகுதி உட்பட பல இடங்கள் திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தப்படுகிறது; இந்நிலையை மாற்ற மாவட்ட நிர்வாகம், நகராட்சி உரிய நடவடிக்கை எடுக்காததால், மாவட்டத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள், முகம் சுளித்து செல்கின்றனர். இதை தடுக்கும் வகையில் நகராட்சி, மாவட்ட நிர்வாகம், மலைப்பகுதி மேம்பாட்டு திட்டம், பொதுப்பணித் துறை இணைந்து, புதிய சுகாதார தூய்மை திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும்.

தூய்மை நீலகிரி, தூய்மை ஊட்டி என பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டாலும், முறையாக செயல்படுத்தாததால், நடைமுறையில் வெற்றி பெறாமல் உள்ளது.  இதை தவிர்க்க, மக்கள் அதிகம் திரளும் இடங்களில் இலவச கழிப்பிடங்கள் அமைக்க வேண்டும்; புதிய கழிப்பிடங்கள் கட்டப்பட்டாலும், கட்டணமின்றி பயன்படுத்த ஏற்பாடு செய்ய வேண்டும். ஏற்கனவே உள்ள கழிப்பிடங்களில் இலவசமாக அனுமதிக்க வேண்டும். கழிப்பிடங்கள், லாப நோக்கில் செயல்படுத்தப்படும் பட்சத்தில், சுகாதாரமான நீலகிரியை உருவாக்க முடியாது.

கழிப்பிடப் பராமரிப்பை, நகராட்சி தன்னுடைய கட்டுபாட்டில் வைத்திருக்க வேண்டும். தற்போது, மதுரை உட்பட மாநகராட்சிகளில், சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பராமரிப்பில் கழிப்பிடங்கள் பராமரிக்கப்படுகின்றன; இங்கு பணிபுரியும் சுகாதார ஊழியருக்கு சம்பளம் வழங்கப்படுகிறது; கழிப்பிடத்தை பயன்படுத்த  மக்களிடம் கட்டணம் ஏதும் வசூலிப்பதில்லை.  இதே போல், நீலகிரி மாவட்டத்திலும் இலவச கழிப்பிடங்கள் அமைத்து தன்னார்வ அமைப்புகளிடம் பராமரிக்க வழங்கலாம்; அல்லது, உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் தனி ஊழியர் நியமித்து பராமரிக்கலாம். சுகாதார மாவட்டமாக நீலகிரியை மாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, சிவசுப்ரமணியம் கூறியுள்ளார்

நெஞ்சில் உரமும் இல்லை;​ நேர்மைத் திறமும் இல்லை

உலக மகா அதிசயம்.​ அதுவும்,​​ களைத்துப்போன தொழிலாளர்களின் உடல் வலிக்குக் ​ கட்டாயம் சாராயம் வேண்டும் என்றே நேற்று வரை கருதி வந்த கம்யூனிஸ்டுகள் கூட,​​ டாஸ்மாக் சாராயம் ஒரு மிகப்பெரிய பிரச்னை என்று இன்று ஒத்துக் கொண்டுள்ள அதிசயம்.நடந்து முடிந்த சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில்,​​ பா.ம.க.,​​ கம்யூனிஸ்டு மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தமிழகத்தில் அதிகரித்து வரும் டாஸ்மாக் மதுப்பழக்கத்தைப் பற்றிக் கவலை தெரிவித்துள்ள நிகழ்வு வரவேற்க வேண்டிய மாற்றம்.இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சிவபுண்ணியம்,​​ ஆறரைக் கோடி மக்களில்,​​ இரண்டு கோடி மக்கள் டாஸ்மாக் சாராயத்தில் கரைகிறார்களே,​​ இது என்ன வளர்ச்சி என்று கூறி புண்ணியம் தேடிக் கொண்டுள்ளார்.சில மாதங்களுக்கு முன் சி.பி.ஐ.​ கட்சித் தலைவர் நல்லகண்ணுவிடம் வரைமுறையற்ற டாஸ்மாக் சாராய வியாபாரம் பற்றிக் கருத்து பரிமாறிக் கொண்டபொழுது,​​ ""அது தான் வருமானம் வேணும்னுதான் முச்சந்தியில் எல்லாம் கவர்மெண்ட் சாராயக்கடை வெச்சிருக்கிறாங்களே,​​ மேலும் குடிகாரனாகப் பார்த்து திருந்தினாத்தான் உண்டு'' என்று பேசினார்.​ அனுபவம் மிக்க அரசியல் தலைவர்களிடம் கூட,​​ இந்தியாவில் ​ அசுர வளர்ச்சி பெற்று எல்லா சமூகத்தினரையும் புதை குழிக்குள் தள்ளிக் கொண்டிருக்கும் சாராயச் சந்தையைப் பற்றிய முழுமையான புரிதல் இல்லை என்பதே உண்மை.இன்றைக்கு இந்திய மக்களின் மிகப்பெரிய பொது எதிரியானது சாராயச் சந்தைதான் என்றால் மிகையில்லை.​ தமிழக அரசு தனது மிகக் கேவலமான சாராய வருமான மூர்க்கத்தனத்தை உடனடியாக மாற்றிக் கொள்ளவில்லை என்றால்,​​ இன்னும் பத்துப் பதினைந்து ஆண்டுகளில்,​​ தமிழகத்தில் மதுவுக்கு அடிமையாகாத இளைஞர்களை-மதுவால் ​ பாதிக்கப்படாத குடும்பங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.​ இதை ஏதோ வீரியத்துடன் எழுத வேண்டும் என்பதற்காகக் கூறவில்லை.​ மதுப்புழக்கத்தால்,​​ சமூகம்,​​ பொருளாதாரம்,​​ மனித வளம்,​​ கலாசாரம்,​​ நடத்தை மற்றும் ஒழுக்கவியல்,​​ சுகாதாரம் போன்ற பல்வேறு தளங்களில் மிக வேகமாக ஏற்பட்டுக் கொண்டிருக்கும் நுணுக்கமான பாதிப்புகளைக் கூட தொடர்ந்து உன்னிப்பாகக் கவனித்து புரிந்து வைத்திருப்பதால் தான் இதனை உறுதியுடன் கூற முடிகிறது.​ இன்றைக்கு எந்த ஒரு பொது நிகழ்வுகளிலும் இளைஞர்களைக் காண முடிவதில்லை.​ இளைஞர்கள் நுகர்வுக் கலாசாரத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள்.​ மிக அதிகமான எண்ணிக்கையில் இளைஞர்கள்,​​ கூடிக் களிக்கும்-இல்லையில்லை-விட்டில் பூச்சிகளாக விழுந்து கொண்டிருக்கும் இடங்களாக டாஸ்மாக் விடுதிகள் உள்ளன.தமிழகம் முழுவதுமுள்ள ​(அரசின் அடுத்த சாதனையாக கட்டிக் கொண்டிருக்கிற பிரம்மாண்டமான அண்ணா நூலகம் உள்பட)​ நூலகங்கள்,​​ இளைஞர்களைக் கவர்வது இப்பொழுதெல்லாம் முடியாத காரியமாகி விட்டது.ஜூன் மாதக் கடைசியில் ​ கோவையில் அரசு நடத்த இருக்கும் செம்மொழி மாநாடு வரலாறு படைக்குமா என்பது வேண்டுமானால் கேள்வியாக இருக்கலாம்.​ ஆனால்,​​ மாநாடு நடக்க இருக்கும் வாரத்தில்,​​ கோவை மாவட்ட டாஸ்மாக் சாராய விற்பனை புதிய சாதனை படைக்கும் என்பதை இன்றே உறுதியுடன் கூற முடியும்.தமிழக அரசு,​​ டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள்,​​ ஊழியர்கள்,​​ சாராய நிறுவனங்கள்,​​ இடைத்தரகர்கள்,​​ கட்சிக்காரர்கள் எல்லோரும் இணைந்து கொள்ளையடிக்கும் மையப் புள்ளியாக,​​ மாஃபியாவாக,​​ டாஸ்மாக் சந்தை மாறி உள்ளது.​ இதன் மூலம் தமிழகத்தில் ஒரு நிழல் உலகம் உருவாக்கப்பட்டுள்ளது என்பதை சமூகத்தில் அக்கறை உள்ளவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.​ எல்லாவகை குற்றங்களுக்குமான இடங்களாக டாஸ்மாக் விடுதிகள் மாறிவிட்டன.​ ​​ இந்தியா முழுவதுமே மதுக் கலாசாரத்தில் சிக்கிக் கொண்டுதான் இருக்கிறது.​ அதிலும்,​​ தமிழகத்தில் அரசு இயந்திரம் இயங்குவதற்கே,​​ மது வருமானத்தைத்தான் மிக அதிகமாக நம்பியுள்ள நிலை உள்ளது.​ அதனால்,​​ தமிழக அரசு மிக வேகமாக மது விற்பனையை அதிகரிக்க வேண்டிய நிர்பந்தத்திற்குள் சிக்கிக் கொண்டுள்ளது.​ மற்ற அண்டை மாநில அரசுகளும் தமிழக அரசின் வெற்றி பார்முலாவை அப்படியே நடைமுறைப்படுத்த முயன்று வருகின்றன.எதிர்க்கட்சிகளிடமும்,​​ பொது மக்களிடமும் இந்த மது வியாபாரம் ஒரு சுனாமி போன்று உருவெடுத்துள்ளது என்ற பொதுக் கருத்து இல்லாமையால்தான்,​​ தமிழக அரசால்,​​ இப்படி பொது நன்மையை முற்றிலும் முறிக்கும் கொள்கையைச் செயல்படுத்த முடிகிறது.எதிர்காலத்தில்,​​ மற்றொரு அரசோ அல்லது இன்றைய ஆளுங்கட்சி அரசோ கூட மதுவிலிருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற முற்போக்கு நடவடிக்கை எடுக்க நினைத்தால்,​​ முடியாது போய்விடும்.​ ஏனென்றால்,​​ இந்த நிழல் உலகத்தில் பலரது தொழில்,​​ வருமானம் பாதிக்கப்படும்.​ அதனை அவர்கள் விட்டுவிட மாட்டார்கள்.​ மதுச் சந்தை மூலம் சுலபமாக குறுக்கு வழியில் வருமானம் ஈட்டி வருபவர்கள்,​​ நாளை தங்கள் வருமானத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காக எந்த ஒரு பாதகச் செயலிலும் ஈடுபடத் தயங்கமாட்டார்கள்.​ இன்றைக்கு லட்சக்கணக்கான ஆண்கள் குடிநோயில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.​ அரசு நடத்தும் குடிநோய் மையங்கள் தமிழகத்தில் மொத்தமே எட்டு ​ மருத்துவமனைகளில்தான் உள்ளன.​ இந்த நிலையில்,​​ ஊருக்கு ஊர் தனியார்கள்,​​ குடி சிகிச்சை மையங்களை ஏற்படுத்திக் கொண்டு வருகின்றனர்.​ இவ்வகை குடிசிகிச்சை மையங்களில்,​​ 90 சிகிச்சை மையங்கள் போலியானவை.​ "எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்' என்ற ​ விரக்தி மனநிலையில் உள்ள மனைவிமார்கள்,​​ தங்கள் குடிநோயுள்ள கணவர்களை இப்போலி மையங்களில் சேர்த்து எப்படியாவது குணமடைய வேண்டும் என்று கடன் வாங்கியாவது செலவு செய்கின்றனர்.​ ஆனால்,​​ சிகிச்சை என்ற பெயரில்,​​ இங்கு துன்புறுத்தலும்,​​ அறிவியல் சாராத ஏமாற்று சிகிச்சைகளும்தான் அளிக்கப்படுகின்றன.போலி மருந்துகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் அரசு,​​ இம்மையங்களுக்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை.​ அரசே,​​ தமிழகம் முழுவதும் ஒவ்வொரு தாலுகாவிலும் குடிமுறிவு மையங்களை ஏற்படுத்தினால்தான் இவ்வகை போலி நிறுவனங்களை ஒழித்துக் கட்ட முடியும்.​ குடிநோயில் இருந்து ஒருவரை மீட்பது மிகமிகக் கடினம்.​ மீட்டாலும் அது மிகத் தாற்காலிக நடவடிக்கையாகவே இருக்க முடியும்.​ ஆனால்,​​ குடிநோய் வராமல் ​ தடுப்பது சுலபம்.​ ​​ போலி குடிமுறிவு மையங்களைப் போலவே,​​ சித்தா,​​ ஆயுர்வேதா,​​ யுனானி என்று விதவிதமான போலி குடிநோய் மருத்துவர்கள் தமிழகம் முழுவதும் கடை பரப்பி உள்ளனர்.​ இப்படிப்பட்ட போலி மருத்துவர்களின் விளம்பரங்களை ஏமாற்று வேலை என்று தெரிந்து கொண்டே வெளியிடும் பத்திரிகைகளை என்னவென்று சொல்வது.​ பல மனைவிமார்கள் இவ்வகை போலி மருத்துவர்களிடம்,​​ குளிகைகளையும்,​​ மருந்துப்பொடிகளையும் மிகுந்த விலை கொடுத்து வாங்கி ரகசியமாக கணவர்களுக்கு உணவிலும்,​​ பாலிலும் கலந்து கொடுத்து ​(மருத்துவர் அறிவுரைப்படி)​ ஏமாந்துபோய் வருவது சகஜமாகி விட்டது.தாய்மார்களோ,​​ இந்தப் போலி குளிகைகளுக்காக,​​ தங்கள் தாலிகளைக் கூட அடமானம் வைக்கிறார்கள்.​ தமிழக அரசோ,​​ சாராய வருமானத்துக்காக தனது ஆன்மாவையே அடமானம் வைக்கிறது.​ சமீபத்தில் சென்னைக்கு அருகில் புழல் பகுதியில் உள்ள 50 பள்ளிகளில் படிக்கும் 13-16 வயதுக்குள்பட்ட மாணவர்களிடம் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது.இதில் 11 சதவிகிதம் பள்ளி மாணவர்கள் மது அருந்துகிறார்கள் என்று தெரிய வந்ததுள்ளது.​ இந்த 11 சதவிகிதம் இன்னும் சில ஆண்டுகளில் 30 சதவிகிதம் ஆகாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.​ ஏனென்றால்,​​ அரசின் மது விற்பனை நடவடிக்கைகள் அத்தனை கேவலமாக உள்ளது.ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள்,​​ நாட்டின் இன்றைய நிலவரத்தைப் பற்றியும்,​​ எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பின் விளைவுகள் பற்றியும் உச்சகட்ட அலட்சியத்தைத் தன்னுள் கொண்டுள்ளனர்.எந்த ஒரு பள்ளி மாணவனும் பள்ளிக்கு வரும் போதும்,​​ வீடு திரும்பும் போதும் டாஸ்மாக் கடையைத் தாண்டாமல் போக முடியாது என்ற நிலையே உள்ளது.​ சட்டசபையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தபோது,​​ இதனால் வேலை இழப்பு ஏற்படுமே என்ற கேள்வியைத் தான் ​ ​ ​ புத்திசாலித்தனமாக முதல்வர் கேட்டுள்ளார்.​ ​​ நடு இரவில் தோன்றிய கடவுளிடம்,​​ நாளை காலை உலகில் யாருக்குமே எய்ட்ஸ் நோய் இருக்கக் கூடாது என்று வரம் கேட்டு,​​ கடவுள் அருள் புரிந்தால் என்ன ஆகும்?எய்ட்ஸ் நோயை நம்பி,​​ கடை பரப்பியுள்ள நூற்றுக்கணக்கான தொண்டு நிறுவனங்கள்,​​ மருந்து நிறுவனங்கள்,​​ ஆராய்ச்சி நிறுவனங்கள்,​​ மருத்துவர்கள்,​​ செவிலியர்கள்,​​ விளம்பர நிறுவனங்கள்,​​ அரசின் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத்துறை ஊழியர்கள் எல்லோருக்கும் அடுத்த நாள் காலையே வேலை போய்விடும்.​ அதனால்,​​ நாட்டில் எப்பொழுதும எய்ட்ஸ் நிலைத்துநின்று வேலை வாய்ப்பை வழங்க வேண்டும் என்கிறாரா முதலமைச்சர்.​ டாஸ்மாக் கடைகளை மூடி விட்டால்,​​ 35,000 ஊழியர்களின் வேலை போய் விடும் எனும் முதலமைச்சரின் விளக்கம்,​​ பாரதியின் இந்தக் கவிதை வரிகளைத்தான் நினைவுபடுத்துகிறது.""நெஞ்சில் உரமும் இன்றி,​​ நேர்மைத் திறமும் இன்றி வஞ்சனை சொல்வாரடி கிளியே,​​ வாய்ச்சொல்லில் வீரரடி.''

லஞ்​சம் வாங்​கு​வ​தில் ​ நவீ​னத்​து​வம்!

லஞ்​சம் வாங்​கு​வ​தில் திற​மை​சா​லி​கள் யார் என்று உலக அள​வில் போட்டி நடத்​தி​னால் நிச்​ச​யம் இந்​தி​யர்​கள்​தான் முத​லி​டத்​தைப் பிடிப்​பார்​கள்.​ அதி​லும் ஊழல் தடுப்பு,​​ கண்​கா​ணிப்​புப் பிரி​வு​க​ளை​யும் லோக் அயுக்​தா​வை​யும் நிய​மித்த பிற​கும்​கூட லஞ்​சம் வாங்​கு​வது என்​றால் சாதா​ர​ணம் இல்லை.​​ லஞ்​சத்தை எங்கே,​​ எப்​படி,​​ யார் மூலம் வாங்​கு​வது என்று மத்​திய,​​ மாநில அரசு அதி​கா​ரி​கள் வார இறு​தி​யில் ரூம் போட்டு யோசிக்​கி​றார்​கள் என்​றால் மிகை​யில்லை.​ இன்ன வேலைக்கு இன்​னின்ன பத​வி​க​ளில் உள்​ள​வர்​க​ளுக்கு இவ்​வ​ளவு என்று அவர்​கள் "ரேட்' நிர்​ண​யம் செய்​யும் துல்​லி​யம் இருக்​கி​றதே அது ஊதி​யக் கமி​ஷன்​க​ளுக்​கும் மத்​திய -​ மாநில அர​சு​க​ளுக்​கு இடையே வரு​மா​னத்​தைப் பிரித்​துத் தரும் நிதிக் கமி​ஷன்​க​ளுக்​கும் கூட கிடை​யாது.​​ மாநில அர​சு​க​ளைப் பொறுத்​த​வ​ரை​யில் லஞ்​சம் வாங்​கு​வ​தில் முத​லி​டம் பிடிப்​பது வரு​வாய்த்​து​றை​தான்.​ அர​சுக்கு வரு​வாய் வரு​கி​றதோ இல்​லையோ அதி​கா​ரி​க​ளுக்கு வீடு தேடி வந்​து​வி​டு​கி​றது.​ என​வே​தான் அந்​தத் துறைக்கு வரு​வாய்த்​துறை என்று பெயர்.​ அதில் நிய​ம​னம் பெறு​வ​தற்​குத்​தான் எத்​தனை பரிந்​து​ரை​கள்,​​ கட​வு​ளி​டம் வேண்​டு​தல்​கள்,​​ போட்​டித் தேர்​வு​கள்...​​ சமீ​பத்​தில் தமிழ்​நாட்​டில் கிராம நிர்​வாக அலு​வ​லர் பத​விக்​கான தேர்​வுக்கு முது​க​லைப் பட்​ட​தா​ரி​கள்,​​ ஆய்​வி​யல் நிறை​ஞர்​கள்​கூட அலை மோதி​னார்​கள்.​ அர​சி​தழ் பதிவு பெறாத வேலை​தான்;​ ஆனால் வரு​மான வரி கூட செலுத்த வேண்​டிய அவ​சி​யம் இல்​லாத -​ அதே சம​யம் வரு​மா​னத்​தைப் பெருக்​கிக் கொள்​ளக்​கூ​டிய பத​வி​யா​யிற்றே?​ அவ்​வ​ளவு ஏன்,​​ கிராம அள​வில் தலை​யாரி பத​விக்கு நிய​ம​னம் என்​றால்​கூட தமிழ் நாட்​டில் மிகப்​பெ​ரிய அடி​த​டியே நடக்​கும்.​​ லஞ்​சம் வாங்​கு​கி​ற​வர்​கள் நேர​டி​யா​கக் கேட்​ப​தில்லை.​ சிலர் கூச்​சம் கார​ண​மா​கக் கேட்​ப​தில்லை,​​ சிலர் குறை​வா​கக் கேட்டு நஷ்​டம் அடைந்​து​வி​டு​வோமோ என்று கேட்​ப​தில்லை.​ மற்​ற​வர்​கள் பக்​கத்து சீட்​டில் இருப்​ப​வர்​கள் காதில்​வி​ழுந்து அவர்​க​ளும் பங்கு கேட்​பார்​களோ என்று கேட்​ப​தில்லை.​​ பழக்​கப்​பட்ட மூத்த ஊழி​யர்​கள்​தான் இந்த பேரங்​க​ளையே நடத்​து​கி​றார்​கள்.​ அலு​வ​லக வேலை​க​ளைப் பார்த்​துக் கொண்டே அடிக்​குர​லில் கேட்​ப​தும்,​​ ஏதா​வது கசங்​கிய தாளின் ஒரு மூலை​யில் கிறுக்​கிக் காட்​டு​வ​தும்,​​ அடை​யாறு கலா​ஷேத்​ரா​வில் பயிற்சி பெறா​ம​லேயே அட​வு​கள்,​​ கண் அசை​வு​கள்,​​ உதட்​டுச் சுழிப்​பு​கள் ஆகி​யவை மூலம் பேரங்​களை அவர்​கள் நடத்​தும் சாமர்த்​தி​யமே சாமர்த்​தி​யம்.​​ லஞ்​சம் வாங்​கு​வது நல்​லதா,​​ கெட்​டதா என்​ப​தெல்​லாம் இருக்​கட்​டும்;​ இந்த லஞ்​சம் மட்​டும் இல்லை என்​றால் தமிழ் நாட்​டில் எத்​தனை அரசு ஊழி​யர்​கள் வறு​மைக் கோட்​டுக்​குக் கீழே போயி​ருப்​பார்​கள் இந்த விலை​வாசி உயர்வு காலத்​தில்.​ ஏதோ லஞ்​சம் வாங்க வழி​யி​ருப்​ப​தால்​தான் அவர்​க​ளால் அன்​றாட வாழ்க்​கை​யை​யும் நடத்​திக்​கொண்டு,​​ ​ பிள்​ளை​க​ளைக் கல்​லூ​ரி​யில் படிக்க வைத்து,​​ திரு​ம​ணம் செய்து கொடுத்து,​​ சொந்​த​மாக வீடு கட்டி,​​ பெண்​க​ளுக்கு நிறைய நகை போட்டு சீர் செய்து மாமி​யார் வீட்​டுக்கு அனுப்ப முடி​கி​றது.​​ வெறும் சம்​ப​ளம் மட்​டுமே வாங்​கி​னால் சாமி​யா​ரா​கக்​கூட பணம் போதாது.​ ​(சாமி​யார் என்​றால் ஆஸ்​ர​மம் வைக்க வேண்​டும்,​​ அங்கே சாப்​பாட்​டுச் செல​வோடு மாத்​திரை,​​ மருந்​துக்​கும் அதி​கம் செல​விட நேரி​டும்.​ கேமரா செலவு தனி...)​​ இந்த நிலை​யில் எந்த அச​டும் லஞ்​சத்தை தான் வேலை செய்​யும் டேபி​ளுக்​குக் கீழேயே ரொக்​க​மாக கத்​தை​யாக வாங்கி மாட்​டிக் கொள்ள விரும்​பு​வ​தில்லை.​ ​​ லஞ்​சத்தை பார்ட்​டி​யி​ட​மி​ருந்து வாங்​க​வும் அதை உரி​ய​வ​ரி​டம் கொண்டு போய்ச் சேர்க்​க​வும் முக​மை​யா​ளர்​கள் வந்​து​விட்​டார்​கள்.​ இவர்​களை மாநில அர​சுத் தேர்​வா​ணை​யமோ,​​ மத்​திய அரசு தேர்​வா​ணை​யமோ தேர்வு செய்​வ​தில்லை.​ அரசு ஊழி​யர்​களே அவர்​க​ளு​டைய அலு​வ​ல​கத்​துக்கு வந்து போகும் டீக்​க​டைக்​கா​ரர்​கள்,​​ ஜெராக்ஸ் கடை உரி​மை​யா​ளர்​கள் போன்​றோரி​லி​ருந்து தேர்வு செய்​கின்​ற​னர்.​​ லஞ்​சப் பணத்தை அதி​கா​ரி​கள் கையால் தொடு​வ​தில்லை என்​ப​தால் அவர்​தான் லஞ்​சம் வாங்​கி​னார் என்​பதை போலீ​ஸô​ரால் நிரூ​பிக்க முடி​யா​மல் லஞ்ச வழக்கு தோற்​று​வி​டு​கி​றது.​​ லஞ்ச விஷ​யத்​தில் பிற மாநி​லங்​க​ளுக்​குத் தமி​ழ​கம்​தான் முன்​னோடி.​ இங்கே லஞ்​சத்தை முக​மை​யா​ளர்​கள்​தான் வாங்கி வைத்து,​​ அலு​வ​ல​கம் முடிந்​த​வு​டன் உரிய அதி​கா​ரி​க​ளி​டம் சேர்க்​கின்​ற​னர்.​ ரொக்​க​மா​கச் சில சம​யங்​க​ளி​லும்,​​ பொரு​ளாக பல சம​யங்​க​ளி​லும் கொடுக்​கின்​ற​னர்.​ கம்ப்​யூட்​டர்,​​ கட்​டில்,​​ மேஜை,​​ மரச்​சா​மான்​கள்,​​ கேமரா போன்ற அத்​தி​யா​வ​சி​யப் பண்​டங்​கள் வீடு தேடி வந்​து​வி​டு​கின்​றன.​​ அதி​கா​ரி​கள் கோடை விடு​மு​றைக்கு சிம்லா,​​ டார்ஜி​லிங்,​​ ஊட்டி அல்​லது வெளி​நா​டு​க​ளுக்​குப் போக​வும் இந்த ஏஜெண்​டு​களே டிக்​கெட் வாங்கி,​​ ரூம் போட்டு எல்​லா​வற்​றை​யும் செய்​து​வி​டு​கின்​ற​னர்.​ அதற்​காக இவர்​க​ளுக்கு சிறிய தொகை சேவைப் பண​மாக அவ்​வப்​போது தரப்​ப​டு​கி​றது.​ இது சாதா​ரண சேவையா என்ன?​ அரசு ஊழி​யர்​க​ளுக்கு லஞ்​ச​மும் கிடைக்க வேண்​டும்,​​ அதே​ச​ம​யம் அவர்​கள் லஞ்ச ஒழிப்​புப் போலீ​ஸô​ரி​டம் சிக்​கா​ம​லும் இருக்க வேண்​டும் என்​றால் இந்த ஏஜெண்​டு​க​ளின் துணை இல்​லா​மல் முடி​யுமா?​​ சரி,​​ இந்​தப் பணத்​தை​யெல்​லாம் ஏஜெண்​டு​கள் ஒழுங்​கா​கத் தரு​வார்​களா,​​ கணக்​கில் ஏமாற்​றி​வி​டு​வார்​களா என்றா கேட்​கி​றீர்​கள்?​ அரசு அதி​கா​ரி​கள் என்ன விவ​ரம் இல்​லா​த​வர்​களா?​ அவர்​க​ளுக்கு வர வேண்​டிய பணத்தை எந்த நாளும் இழந்து மோசம் போக​மாட்​டார்​கள்.​ அவர்​களை மீறி ஏஜெண்டு நம்​பிக்​கைத் துரோ​கம் செய்​தால் அந்​தப் ​ பாவத்​துக்​காக அவ​ரைச் சும்மா விட​மாட்​டார்​கள்.​​ லஞ்​சம் என்​பது தொடர்​க​தை​தான்,​​ முடிவே இல்​லா​தது.​ இப்​படி வாங்கி வாங்​கியே பழக்​கப்​பட்ட அதி​கா​ரி​கள் தங்​கள் அலு​வ​ல​கங்​க​ளி​லேயே தங்​க​ளின் கீழ் பணி புரி​கி​ற​வர்​க​ளி​டம் விடுப்பு அளிக்க,​​ சிறப்பு ஊதி​யம் தர,​​ வருங்​கால வைப்பு நிதியி​லி​ருந்து கடன் பெற,​​ வீடு கட்​டு​வ​தற்​கான கட​னுக்​கான நடை​மு​றை​க​ளைப் பூர்த்தி செய்ய,​​ ஈட்​டிய விடுப்​பைப் பண​மாக்​கிக் கொள்ள லஞ்​சம் வாங்​கி​வி​டு​கி​றார்​கள்.​ ​​ சில சம​யம் சிக்​க​லான சீட்டி​லி​ருந்து ​(சிக்​கல் வேறு எது​வு​மில்லை,​துறை​வி​தி​களை எல்​லாம் படித்​துப்​பார்த்து ஒழுங்​காக வேலை செய்ய வேண்​டும்)​ பணம் சம்​பா​திப்​ப​தற்கு மட்​டுமே வழி​யுள்ள சீட்​டு​க​ளுக்கு மாற்​றித்​த​ர​வும் லஞ்​சம் வாங்​கப்​ப​டு​கி​றது.​ ""தமிழ்​நாட்​டில்​தான் லஞ்​சத்தை விஞ்​ஞான முறைப்​படி வாங்​கு​கி​றார்​கள்'' என்று அகில இந்​திய அள​விலே நமக்கு சிறப்பு இடத்தை அளித்​தி​ருக்​கி​றார்​கள்.​ என்ன இருந்​தா​லும் ""பகுத்​த​றி​வோடு'' செயல்​ப​டு​கி​ற​வர்​கள் அல்​லவா நாம்?​​ காற்று வீசா​மல் இருக்​க​லாம்,​​ காலரா பர​வா​மல் இருக்​க​லாம்,​​ லஞ்​சம் வாங்​கா​மல் அரசு அலு​வ​லர்​க​ளால் ஒரு நாளும் இருக்க முடி​யாது என்று இந்த விவ​கா​ரத்தை ஆழ ஆய்ந்​த​வர்​கள் தெரி​விக்​கி​றார்​கள்.​​ ​

கிராமங்களை அழிக்கும் மதுக்கடைகள்!

தமிழகத்தில் உள்ள கிராமங்களில் டாஸ்மாக் மதுபானக் கடை அவசியமா என்பது குறித்து பொது விவாதம் நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் அரசுக்கு அதிக வருவாய் தரும் பட்டியலில், டாஸ்மாக் மதுபான நிறுவனமே முன்னிலையில் உள்ளது.நிதிநிலை அறிக்கையில், மொத்த வருவாய் ரூ. 63 ஆயிரம் கோடி, மொத்தச் செலவு ரூ. 66 ஆயிரம் கோடி, அரசுக்கு வருவாய் பற்றாக்குறை ரூ. 3 ஆயிரம் கோடி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல, மொத்த நிதிப் பற்றாக்குறை ரூ. 16 ஆயிரம் கோடி என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.  இதை எப்படிச் சமாளிக்க முடியும் என்று பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, அரசுக்கு டாஸ்மாக் மதுபான விற்பனை மூலம் அதிக வருமானம் வருகிறது. அதை வைத்து பற்றாக்குறையைச் சமாளிப்போம் என்றார் அப்போதைய நிதித் துறைச் செயலர். அந்த அளவுக்கு டாஸ்மாக் நிறுவனம் வளர்ந்துள்ளது.    மேலும், அரசு செய்தி ஊடகங்களின் வழியாக பண்டிகைக் காலங்களில் மதுபான விற்பனை மூலம் பல ஆயிரம் கோடி வருமானம் என்றும், இது நிர்ணயிக்கப்பட்ட இலக்கைவிடப் பல மடங்கு விற்பனை அதிகரித்துள்ளது என்றெல்லாம் செய்தி வெளியிட்டு மது குடிப்பவர்களை அரசு ஊக்கப்படுத்தி வருகிறது.   பல்வேறு கவர்ச்சித் திட்டங்களையும், இலவச அறிவிப்புகளையும் அறிவித்து வரும் மாநில அரசுக்கு கைகொடுப்பது மதுபான விற்பனைதான்.  தமிழகத்தில் சுமார் 12 ஆயிரம் ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் 6 ஆயிரத்து 500 டாஸ்மாக் கடைகள் இயங்குகின்றன.சென்னை, திருச்சி, கோவை, மதுரை, நெல்லை, சேலம் உள்ளிட்ட பெருநகரங்களில் ஒவ்வொரு வார்டிலும் இரண்டு அல்லது மூன்று மதுபானக் கடைகள் இருக்கின்றன. நகராட்சி அளவிலான ஊர்களில் 7 அல்லது 8 என்ற ஒற்றை இலக்கத்திலும், கிராம ஊராட்சிகளை இணைக்கும் முக்கியச் சாலைகளில் ஒரு மதுபானக் கடை வீதம் தெருவெங்கும் கடைகள் உள்ளன. அதிலும், நகரப் பகுதிகளின் மையத்தில் இந்தக் கடைகள் உள்ளன. கிராமங்களில் மிக முக்கியமான இடங்களிலேயே மதுபானக் கடை உள்ளது.  மது குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் ஊரின் கடைக்கோடியில் மதுக்கடை இருந்தாலும் தேடிச் சென்று குடிப்பார்கள். அதனால், பள்ளிகள், கோயில்கள் இருக்கும் இடங்களில் இந்தக் கடைகள் இருக்கக் கூடாது.போக்குவரத்து இடையூறு மற்றும் இருசக்கர வாகன விபத்துகளுக்கும் பெரும்பாலும் பல இடங்களில் டாஸ்மாக் கடைகளே காரணமாகின்றன.  குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறையினர் அறிவித்து சோதனை செய்தால், இந்தக் கடையில் இப்போதுதான் குடித்துவிட்டு வருகிறேன். கடை நகரத்திற்குள் இருந்தால் எப்படி வாகனத்தில் செல்லாமல் இருக்க முடியும் என்றும் குடிப்பவர்கள் விவாதிக்கின்றனர்.   கடை மற்றும் பார் நடத்த அனுமதிப்பதால் வாடகை சற்று அதிகமாகக் கிடைக்கிறது. அதனால் கட்டட உரிமையாளர்களும் இதற்குச் சம்மதம் தெரிவிக்கின்றனர்.  திருச்சி மாவட்டம், மணப்பாறை ஒன்றியம், பன்னாங்கொம்பில் இருந்த டாஸ்மாக் மதுபானக் கடையை கட்டட உரிமையாளர் காலி செய்யச் சொன்னதால், அருகில் உள்ள காவல்காரன்பட்டிக்கு மதுபானக் கடையை மாற்றினர்.  கடையைத் திறக்க முற்பட்ட போது ஐம்பதுக்கும் மேற்பட்ட பெண்கள் கடை முன் திரண்டு எதிர்ப்புத் தெரிவித்தனர்.   அங்கு வந்த வட்டாட்சியர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பெண்களின் நியாயமான கோரிக்கைக்கு செவிமடுக்காமல், மறு நாளே மீண்டும் மதுபானக் கடையை அதே ஊரில் திறந்தனர். அப்போதும் பெண்கள் திரண்டு சாலை மறியல் செய்து கைதானார்கள்.   இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குச் சென்று ஆட்சியரிடமும்  மனு கொடுத்துவிட்டு திரும்பியுள்ளனர். ஆனாலும், அந்த ஊரிலிருந்து மதுக் கடை இன்னும் மாற்றப்படவில்லை. மது விற்பனை அமோகமாக நடந்து கொண்டிருக்கிறது.      நகரப் பகுதிகளில் அதிகரித்து வரும் மதுபானக் கடையைக் கட்டுப்படுத்த இயலாமல் போனாலும், கிராமப்புறங்களில் மதுபானக் கடை தேவையா என்பது குறித்து அரசு சிந்திக்க வேண்டும். இதுதவிர, கிராமங்களில் கடை திறப்பதற்கு முன்பு கிராம சபைக் கூட்டத்தைக் கூட்டி மக்களின் ஒருமித்த கருத்து அடிப்படையில் கடைகளைத் திறக்க முயற்சிக்கலாம்.  அதைவிடுத்து, மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ள கிராமங்களிலும்கூட விடாப் பிடியாக அரசு மதுபானக் கடைகளைத் திறக்கக் கூடாது. 1994-95-ம் ஆண்டு ரூ. 995.69 கோடியாக இருந்த மது விற்பனை 2009-2010-ம் ஆண்டில் ரூ. 13,720 கோடியாக அதிகரித்துள்ளதாக அரசு விளம்பரப்படுத்தி மகிழ்ச்சியடைவதைத் தவிர்த்து, கிராம மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு செவிமடுப்பது நல்லது.  உடனடியாக மதுபானங்களுக்குத் தடைவிதிக்க முடியாமல் போனாலும், படிப்படியாக கிராமப்புறங்களில் உள்ள மதுபானக் கடைகளுக்குத் தடை விதிக்கலாம். தொழில் துறை வளர்ச்சி, கிராமப் பொருளாதார முன்னேற்றம் உள்ளிட்ட பிற காரணிகளின் மூலம் வருவாயைப் பெருக்க அரசு முயற்சிக்க வேண்டும்.  அரசுக்கு வருவாய் தரும் நிறுவனம் என்பதால் மட்டுமே டாஸ்மாக் நிறுவனத்தை வளர்த்து விட முடியாது. அது கொஞ்சம், கொஞ்சமாக நமது மக்களை கொன்றுவிடும் என்பதையும் அரசு கவனத்தில் கொள்வது நல்லது.

சுகாதார சோகம் தீருமா?

ஆரோக்கியமான உடல் என்ற சுவர் இருந்தால்தான் நீண்ட ஆயுள் என்ற சித்திரம் வரையலாம். சுற்றுப்புற சுகாதாரம் இதற்கு முக்கிய அஸ்திவாரமாகும். சுகாதாரமற்ற கழிவுகளை குறைக்கத் திணறும் நாடாக இந்தியா மாறிவருவது அபாய பாதையில் பயணிப்பதைக் காட்டுகிறது.÷சுகாதாரத்தில் நம் நாட்டின் நிலையை மத்திய அரசின் சமீபத்திய கணக்கெடுப்பு வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது. சுகாதாரமான நகரங்களைத் தேர்ந்தெடுப்பது குறித்த இந்தக் கணக்கெடுப்பில் எந்த நகரமுமே 90 மதிப்பெண்களை எட்டிப் பிடிக்கவில்லை என்பது வருத்தத்துக்குரியது.÷சுத்தமான குடிநீர், கழிப்பறை வசதி, குப்பைகள் அகற்றுதல் என பல்வேறு காரணிகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டு வழங்கப்பட்ட மதிப்பெண்களில் சண்டீகர் 73 மதிப்பெண்களைப் பெற்று முதலிடம் பெற்றது. இப் பட்டியலில் மைசூர், சூரத் நகரங்கள் 69 மதிப்பெண்களும், தில்லி 68 மதிப்பெண்களும் பெற்று அடுத்தடுத்த இடத்தைப் பிடித்துள்ளன.÷தமிழகத்தில் திருச்சி மட்டுமே 59 மதிப்பெண் பெற்றுள்ளது. சென்னை, தூத்துக்குடி, மதுரை, ஈரோடு உள்ளிட்ட பிற நகரங்களின் நிலை பரிதாபத்துக்குரியது.÷சுகாதார நகரங்களின் பட்டியலில் தமிழகத்தின் நிலை மிகவும் பின்தங்கியிருப்பது தமிழர்கள் அனைவருக்குமே தலைகுனிவு.சுகாதாரக் கேடுகளுக்கு முக்கிய காரணிகளாக கழிப்பறையின்மை, கழிவுநீர் வாய்க்கால்களை முறைப்படுத்தாமை போன்றவற்றை நிபுணர்கள் பட்டியலிடுகிறார்கள்.÷தமிழகத்தில் கழிப்பறை வசதியில்லாத பகுதிகளே இருக்கக் கூடாது என்ற முனைப்போடு கிராமங்களில் சுகாதார வளாகங்கள் உருவாக்கப்பட்டன.÷கழிப்பறை வசதி மட்டுமன்றி, குளியலறைகளும் இதில் இடம்பெற்றிருந்தன. ஆனால், மாதங்கள் சில கடந்த பின்பு இதன் பராமரிப்பு கேள்விக்குறியாகியது. திறக்கப்பட்ட அதே வேகத்தில் தற்போது பல சுகாதார வளாகங்களின் கதவுகள் மூடிக்கிடக்கின்றன. கழிவுநீர் கால்வாய்களை முறைப்படுத்துவதிலும் தமிழகத்தின் கவனம் கூடுதலாக்கப்பட வேண்டியது அவசியம்.÷இதேபோல மது, புகையிலைக்குப் பின்னர் உலகை மெல்லக் கொல்லும் விஷமாக பிளாஸ்டிக் கழிவுகள் மாறி வருகின்றன.காலையில் பல் துலக்குவதில் தொடங்கி இரவில் தூங்குவதற்காக கொசு வலைகளைத் தொங்கவிடுவது வரை பிளாஸ்டிக்கின் துணையின்றி இன்றைய வாழ்க்கை என்பது கேள்விக்குறியாகிவிட்டது.÷அழகிய தோற்றம், எளிதான எடை, தண்ணீரிலிருந்து தற்காக்கும் தன்மை என பிளாஸ்டிக்கின் பயன்பாட்டுக்கு மக்கள் சொல்லும் காரணங்கள் அதிகம். ஆனால், அவை மண்ணில் புதைந்ததும் மக்கிப் போக எடுத்துக் கொள்ளும் ஆண்டுகளைப் பற்றி விழிப்புணர்வுப் பிரசாரம் செய்தாலும் கூட அதை மனதில் கொள்வதில்லை.÷உலகில் ஆண்டுதோறும் 500 பில்லியன் பிளாஸ்டிக் பைகளை மனிதர்கள் உபயோகிக்கிறார்கள். தமிழகத்தைப் பொறுத்தமட்டில் அதிகப்படியாக சென்னை நகரில் நாள் ஒன்றுக்கு 3,400 டன்கள் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டு வருவதாகப் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.÷சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் 50-க்கும் மேற்பட்ட பகுதிகளில் குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்கும் நவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி சுழற்சிக்கு வழி செய்யப்பட்டது. சில இடங்களில் மகளிர் சுயஉதவிக் குழுவினரும் இப் பணியை ஏற்றனர். இதில் பாதிக்கும் மேற்பட்ட மையங்கள் தற்போது செயலிழந்துவிட்டன.÷நிலவில் குடியேற ஆய்வுகள் நடக்கும் வேளையில் குப்பைகளைக் கொட்டத் தங்கள் ஊராட்சிப் பகுதியைப் பயன்படுத்துவதாகக்கூறி ஊராட்சி நிர்வாகங்கள் நீதிமன்றங்களின் படிக்கட்டுகளில் ஏறுவதே தமிழகத்தின் நிலை. சில பகுதிகளில் குப்பைகளை அப்புறப்படுத்தும் ஒப்பந்ததாரர்களுக்கு விலைபோய், அவர்களின் கண் அசைவுகளுக்கு ஆடும் கவுன்சிலர்களும் உள்ளனர்.÷இதனால் நோய்களின் பிறப்பிடமான குப்பைத் தொட்டிகள் நிரம்பி வழிந்தாலும் கண்டுகொள்வதில்லை. மனித வாழ்வுக்கு அடிப்படையான இந்த சுகாதாரப் பிரச்னைகளுக்கு அரசு செவி சாய்க்காமல் இருப்பது ஏனோ?÷20 மைக்ரான் அளவு கொண்ட பிளாஸ்டிக் பைகளைத்தான் பயன்படுத்த வேண்டும். பொது இடங்களில் புகைபிடிக்கத் தடை, கழிவுநீரை முறையாக சுத்திகரிக்காத தொழிற்சாலைகளுக்கு அபராதம் போன்ற அரசின் கட்டளைகள் மற்றும் சட்டங்களுக்கு "ஈசல்'களைப் போல குறைந்த வாழ்நாள் இருப்பது நம் நாட்டில் மட்டுமே.÷மருத்துவம், கல்வி, விஞ்ஞானம், விவசாயம் போன்றவற்றில் மட்டும் வெளிநாட்டு தொழில்நுட்பங்களை அறிந்து செயல்பட மத்திய, மாநில அரசுகள் ஆர்வம் காட்டுகின்றன.÷குப்பைகளை அகற்றி சுகாதாரத்தைப் பேணுவதில் பன்னாட்டு நிலை அறிந்து நம் நாட்டின் செயல்பாட்டில் மாற்றம் ஏற்படுத்துவது தவறில்லை.ஒவ்வொரு தாலுகாவிலும் குப்பைகளைச் சுழற்சி முறையில் மாற்றவோ, பாதுகாப்பாக அழிக்கவோ நவீன தொழில்நுட்பக் கூடங்களை அமைக்கலாம். ÷மக்களுக்கு நோயற்ற வாழ்வை ஏற்படுத்த கடும் சிரத்தை எடுப்பது அரசின் முக்கியப் பணியாக இருந்தால் உற்பத்திப் பெருக்கம் எளிதாகிவிடும். எனவே கழிப்பறை இல்லா வீடுகள் இல்லை என்பதையும், பிளாஸ்டிக் கழிவுகளைப் பாதுகாப்போடு அழிக்கவும், குப்பையில்லா நகரங்களை உருவாக்கவும் புதிய திட்டங்களை உருவாக்கி சுகாதார சோகத்தை போக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு

மகளிர் காவல் நிலையங்கள் சமரச மையங்களாகுமா?

மகளிர் காவல் நிலையங்கள், வழக்குகளைப் பதிவு செய்து நடவடிக்கையெடுக்கும் இடம் என்ற நிலையிலிருந்து மாறி குடும்பப் பிரச்னைகளில் சிக்கி உதவி தேடிவரும் உள்ளங்களைச்  சேர்த்துவைக்கும் சமரச மையங்களாக மேம்பட வேண்டும்.  கணவன்-மனைவி பிரச்னைகளை போலீஸôர் எச்சரிக்கையுடன் கையாள வேண்டும். அப்போதுதான் அவர்கள் மீண்டும் ஒன்று சேர வழி பிறக்கும், இத்தகைய வழக்குகளை பெண் போலீஸôர்தான் திறமையாகக் கையாள்வர் என்று கருதியதால்தான் தமிழகத்தில் மகளிர் காவல் நிலையங்கள் தொடங்கப்பட்டன.  இந்த மகளிர் காவல் நிலையங்கள் எல்லாம் கணவன் மனைவி ஒன்று சேர்வதற்கான சமரச மையங்களாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.  ÷ஆனால் இங்கு சிறிய பிரச்னைகளுக்குக்கூட பெரிய அளவிலான குற்றம் என்ற தோற்றம் ஏற்படுத்தப்படுகிறது. கணவனுக்கும் அவர் குடும்பத்துக்கும் எதிராக குற்றச்சாட்டுகளைக்  கூறுமாறு பெண்கள் உற்சாகப்படுத்தப்படுகின்றனர். இதனால் பல சமயங்களில் வரதட்சிணை தடுப்புச் சட்டத்தின் நோக்கமே திசைமாறிச் செல்லும் நிலை ஏற்பட்டு விடுகிறது.  150 ஆண்டுகால தமிழக காவல்துறையில் கடந்த 1973-ம் ஆண்டில்தான் முதன் முறையாக போலீஸ் பணிக்கு பெண்கள் தேர்வு செய்யப்பட்டனர்.  பெண் போலீஸôர், ஆண் காவலர்கள் பணிபுரியும் காவல் நிலையங்களிலேயே பணியாற்றினர். இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஜெய லலிதா ஆட்சியில் பெண்கள் தொடர்பான வழக்குகளில் போலீஸôரின் அணுகுமுறை மாற வேண்டும் என்ற நோக்கில் 1992-ல் சென்னையில் முதல் முறையாக மகளிர் காவல் நிலையம் ஏற்படுத்தப்பட்டது.   தமிழகம் முழுவதும் தற்போது 200-க்கும் மேற்பட்ட மகளிர் காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.    தாயுள்ளத்துடன் செயல்பட்டு, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பிரச்னைகளைத் தீர்த்துவைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட மகளிர் காவலர்கள், ஆண் காவலர்களுக்கு நாங்களும் சற்றும் சளைத்தவர்களல்ல என்பதை பல வழக்குகளிலும் நிரூபித்துக்காட்டியுள்ளனர். தமிழகம் முழுக்க குடும்பப் பிரச்னைகளைக் கையாளும் விதத்தில் பெண் போலீஸôரும் ஆண் போலீûஸப் போலவே மோசமாக நடந்து கொள்கிறார்கள் என்பது குடும்பப் பிரச்னைகளுக்காக மகளிர் காவல் நிலையங்களுக்குச் சென்றுவந்த பெரும்பாலானவர்களின் வேதனை.   குடும்பத்துக்குள் ஏற்படும் பிரச்னைகளைத் தீர்த்துவைக்க வேண்டும் என மகளிர் காவல் நிலையங்களுக்குப் பெண்கள் சென்றால் உடனே வரதட்சிணைக் கொடுமை சட்டத்தின் படியே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுகிறது. இந்த வரையறைக்குள் இப்போது வந்திருப்பது குடும்ப வன்முறைச் சட்டம்.  உண்மையில் குடும்பத்தில் நடக்கும் வன்கொடுமைகளைச் சந்திக்கும் பெண்களில் பெரும்பாலானோர் வெளியில் வருவதில்லை. அவர்கள் தங்கள் மீது நிகழ்த்தப்படும் கொடுமைகளுக்கு நீதி வேண்டி காவல் நிலையங்களுக்கும் செல்வதில்லை.    குடும்பங்களில் கணவன் மீதோ, மாமனார் மாமியார் மீதோ ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு வேண்டி அதாவது பிரச்னையை சுமுகமாகத் தீர்க்க மகளிர் காவல் நிலையங்களை அணுகினால் கூட அதைத் தீர்த்து வைக்கும் சமரச மையங்களாக மகளிர் காவல் நிலையங்கள் செயல்படுவதில்லை.  வரதட்சிணை வழக்காக அதைப் பதிவு செய்யும்படி அறிவுறுத்தி அதன் மூலம் கணவன் குடும்பத்தை மிரட்டி, பணிய வைக்கும் ஒரு தவறான போக்கை பெண் போலீஸôர் கையாளுகின்றனர். போலீஸôரால் அவமானப்படுத்தப்பட்டு மனவேதனையடைந்தவர்கள் தற்கொலை செய்துகொண்ட நிகழ்வுகள் பலமுறை நிகழ்ந்துள்ளன.    குடும்ப வன்முறைச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துவதையும், கணவனுக்கு எதிராக மாற்றும் போக்கு அதிகரித்து வருவதையும் உச்ச நீதிமன்றம் கண்டித்திருக்கிறது.  விருப்பமில்லாத இருவரைக் கட்டாயமாகத் திருமணம் செய்து வைப்பதும், சிறிய பிரச்னையோடு காவல் நிலையம் செல்பவர்களை நிரந்தரமாகப் பிரித்து வைப்பதற்கும் இச்சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. மனைவி கொடுக்கும் பொய் புகார்களினால்  பாதிக்கப்படுகிற ஆண்களுக்கு எவ்வித தீர்வும் கிடைப்பதில்லை.    பெண்களுக்கு நியாயமான தீர்வுகளைக் கொடுக்கும் அதேநேரத்தில் அவர்களின் குற்றச்சாட்டில் இருக்கும் உண்மை குறித்தும் மகளிர் போலீஸôர் பாரபட்சமின்றி விசாரிக்க வேண்டும்.  குடும்ப வன்முறைச் சட்டத்தால் ஆண்களும் பாதிக்கப்படுகின்றனர். கணவர் மீது பொய் புகார் கொடுக்கப்படுவதால், இந்தச் சட்டத்தின் அடிப்படை நோக்கமே  சிதைந்து விடுகிறது. குடும்ப வன்முறைச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தும் பெண்கள் மீதும் நடவடிக்கை எடுக்க சட்டத்திருத்தம் கொண்டு வரவேண்டும் என்று கேரள மாநில உயர் நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.  குடும்பத்தில் பெண்கள் அனுபவிக்கும் வேதனைகள் களையப்பட வேண்டும் என்கிற நோக்கத்தில்தான மகளிர் காவல் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டன.  காவல்துறையில் பெண் போலீஸôரைப் பார்த்த போது குடும்பப் பிரச்னைகளைச் சந்திக்கும் பெண்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால் வழக்குகளை விசாரிக்கிற விதத்திலும் காவல் நிலைய அணுகுமுறைகளிலும் ஆண் போலீஸýக்கும் பெண் போலீஸýக்கும் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை. மகளிர் காவல் நிலையங்கள் தோற்றுவிக்கப்பட்டதன் உண்மையான நோக்கம் இனி வரும் காலத்திலாவது நடைமுறைபடுத்தப்படவேண்டும். இதற்கான தெளிவான விதிமுறைகளை ஏற்படுத்துவதோடு, மனித நேயமுள்ள காவலர்கள் உருவாக பெண் காவலர்களுக்குத்  தொடர் பயிற்சிகளை வழங்க அரசு முன்வர வேண்டும்.

பொது நூலகத்துறைக்கு விடிவுகாலம் எப்போது?

இந்திய நூலகத் தந்தை டாக்டர் எஸ்.ஆர்.ரங்கநாதனின் பெருமுயற்சியால், அன்றைய கல்வி அமைச்சர் தி.சு.அவிநாசிலிங்கம் செட்டியாரின் முழு உதவியால் சென்னை மாகாணப் பொது நூலகச் சட்டம் 1948-ல் நிறைவேற்றப்பட்டு, 1950 முதல் அந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. 1951-ல் கல்விக் காவலர் நெ.து. சுந்தரவடிவேலு, பொதுக்கல்வி இயக்குநராகப் பதவியேற்றபோது, முதல் பொது நூலக இயக்குநராகவும் பதவி ஏற்றார்.÷நூலக இயக்கத்தின் தேவையை உணர்ந்த கல்வியாளரான அவர் பதவியேற்றபோது தமிழ்நாட்டில் மாவட்ட மைய நூலகங்கள் மட்டும் செயல்பட்டு வந்த நிலையை மாற்றி,   தமிழ்நாடு முழுவதும் 400-க்கும் மேலான கிளை நூலகங்களை ஏற்படுத்தினார். பல மாவட்டங்களில் மைய நூலகங்களுக்குச் சொந்தக் கட்டடங்கள் கட்ட ஏற்பாடு செய்தார். ÷சென்னையில் தற்போது அண்ணாசாலையில் அமைந்திருக்கும் தேவநேயப் பாவாணர் மாவட்ட மைய நூலகக் கட்டட இடமும் அதற்குப் பின்னால் உள்ள இடமும் சென்னை மாவட்ட நூலக ஆணைக்குழுவுக்குச் சொந்தமாக வாங்க, அன்றைய மாவட்ட நூலக ஆணைக்குழுத் தலைவர் வி.என்.சுப்பராயனுக்கு, தொழிலதிபர் சிம்சன் அனந்தராமகிருஷ்ணன் உதவியுடன், அரசு மூலம் எல்லா உதவிகளையும் பெற்றுத் தந்தவர் நெ.து.சுந்தரவடிவேலு.÷மேலும், தமிழ்நாட்டில் ஒன்பது மாவட்டங்களில் தன்னலமற்ற தகுதி வாய்ந்தவர்களை மாவட்ட நூலக ஆணைக்குழுத் தலைவர்களாக நியமித்து, நூலகங்களுக்குச் சொந்தக் கட்டடங்கள் கட்டி, சிறப்பாகச் செயல்பட அடித்தளம் அமைத்தவர். அந்தக்காலம் தமிழ்நாடு நூலக இயக்கத்தின் பொற்காலமாகும்!÷நூலகம் என்பது வளர்ந்து கொண்டே இருக்கும் அமைப்பாகும். அதன் அடிப்படையில், ஏற்பட்ட வேலைப்பளு காரணமாக, அரசாணை எண்.1034 - கல்வி - 5.7.1972-ல் வெளியிடப்பட்டு, பள்ளிக்கல்வி இயக்குநரகத்திலிருந்து பிரிக்கப்பட்டு, தன்னிச்சையாகச் செயல்பட "பொது நூலகத் துறை' உருவாக்கப்பட்டு, நூலகவியலில் முதுகலைப் பட்டமும், நூல் அனுபவமும் கொண்டு கன்னிமாரா பொது நூலக நூலகராகப் பணியாற்றிய வே.தில்லைநாயகத்துக்குப் பதவி உயர்வு தரப்பட்டு, முதலாவது பொது நூலகத்துறை இயக்குநராக 31.7.1972 முதல் நியமிக்கப்பட்டார். அதன்பின் அரசாணை எண்.223 - கல்வி - 9.2.1974-ல் வெளியிடப்பட்டு பொது நூலகத்துறை இயக்குநர் நியமனத்துக்கான விதிமுறைகளும், கல்வித் தகுதிகளும் வெளியிடப்பட்டன. அதன்படி பொது நூலகத்துறை இயக்குநர் நியமனம் பெற நூலகவியலில் முதுகலைப்பட்டமும், குறைந்த பட்சம் 10 ஆண்டுகள் நூலகப்பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.÷1982-ல் வே.தில்லைநாயகம் ஓய்வுபெற்ற பின் தொழில் நுட்பக் கல்வி இயக்ககம், கல்லூரிக் கல்வி இயக்ககம் பள்ளிக் கல்வி இயக்ககம் ஆகியவற்றிலிருந்து அரசாணை எண். 223 கல்வியின் கல்வித்தகுதி விதிமுறைகளைப் பின்பற்றாமல் பொது நூலகத்துறை இயக்குநர்கள் நியமிக்கப்பட்டார்கள். அவர்களுள் சிலர் இயக்குநர் பதவி பெற்ற பின், பணியாற்றிக் கொண்டே நூலகவியலில் இளங்கலை, முதுகலைப்பட்டம் பெற்றார்கள்.÷ஆனால் கடந்த 20 ஆண்டுகளாகத் தொடர்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரகத்திலிருந்தே பணி மாற்றத்தின் மூலம், அரசாணை எண்.223-கல்வியின் படி போதிய நூலக அனுபவம், நூலகவியலில் முதுகலைப்பட்டம் இல்லாவிட்டால் கூட பொது நூலகத்துறை இயக்குநர்களாக நியமனம் பெற்று வருகிறார்கள். அதன் மூலம் அரசாணை எண்.1043 (கல்வி) 5.7.1972-ன் செயல்பாடுகள் தொடர்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரகத்தால் செயல் இழக்கச் செய்யப்பட்டுள்ளன. இதற்கு என்ன காரணம்?÷பள்ளிக் கல்வி இயக்குநரகத்தில் பத்தோடு பதினொன்றாக இணை இயக்குநராக இருப்பவர்கள், பணி மாற்றம் பெற்று பொது நூலகத்துறை இயக்குநராக வந்தபின், இங்கு முதல் இடத்துக்கு வந்து விடுகிறார்கள். அதன் மூலம் "பல வசதிகளைப்' பெறுகிறார்கள்.÷சட்டவியலில் பட்டம் பெறாமல் வழக்குரைஞர்களாகவோ, நீதிபதியாகவோ ஆகமுடியுமா? மருத்துவப்பட்டம் பெறாதவர்கள் டாக்டர்களாகச் செயல்பட முடியுமா? பொறியியல் பட்டம் பெறாதவர்கள் பொறியாளர்களாகச் செயல்பட முடியுமா? ஆனால் நூலகவியலில் பட்டம் பெறாதவர்கள், பள்ளிக்கல்வி இயக்ககத்தில் பணியாற்றியபின் பணிமாற்றம் பெற்றால், பொதுநூலகத்துறை இயக்குநராகப் பணிபுரியலாம்!÷பள்ளிக் கல்வி இயக்ககத்தில் பணிபுரிபவர்கள் மட்டும் எல்லாத் திறமைகளும் பெற்றவர்களா? அரசாணை எண்.1034-கல்வி-5.7.1972-ன் படி பள்ளிக் கல்வித்துறையிலிருந்து பொது நூலகத்துறை தனியாகப் பிரிக்கப்பட்டும், கடந்த 20 ஆண்டுகளாகப் பள்ளிக்கல்வித்துறை தனது நிர்வாகத்தின் கீழ் இயங்கும் எட்டுத் துறைகளில் ஒன்றாகவே பொது நூலகத்துறையை வைத்துக் கொண்டு, இயக்குநர் நியமனத்தை மறைமுகமாகத் தனது கட்டுப்பாட்டுக்குள்ளேயே வைத்துக் கொண்டிருக்கிறது. அதனுடைய பக்க விளைவுகள் என்னென்ன?÷பொதுவாக, பொது நூலகத்துறை இயக்குநர் பணி என்பது, ஆண்டுதோறும் ஜனவரி மாதம் பதிப்பாளர்களிடம் அச்சிட்ட நூல்களின் மாதிரிப்படிகளைப் பெற்று அதில் தேர்ந்தெடுத்து (எந்த வகையில்?) ஆறு மாதம் கழித்து, மாவட்ட நூலகங்களுக்கு நூல்களை வழங்க ஆணையிட்டு, அதன்பின் நான்கு மாதம் கழித்து அதற்குரிய தொகையை அனுப்ப ஏற்பாடு செய்வதுதான் தங்கள் தலையாய, வசதியான பணி என்ற நிலையை உருவாக்கிவிட்டார்கள். அந்தப் பணிகூட சென்ற இரண்டு, ஆண்டுகளாக நடைபெறவில்லை!÷இந்திய நூலகத் தந்தை டாக்டர் எஸ்.ஆர்.ரங்கநாதனின் முழு உழைப்பின் பலனாக ஆண்டுக்கு ரூ.150 கோடிக்கு மேல் பொதுமக்களிடம் நேரடியாக நூலகவரி வசூல் செய்யப்படுகிறது. இந்தத் தொகை ஆண்டுக்கு ஆண்டு அதிகமாக வசூல் ஆகிறது. ஆனால் அந்தத் தொகை நூலகங்கள் செம்மையாகச் செயல்பட செலவழிக்கப்படுகிறதா?÷நூலகத்துறை ஜனநாயக முறைப்படி இயங்க, ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட நூலக ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டு, தலைவர் மற்றும் உறுப்பினர்களுடன் செயல்பட வேண்டுமென, பொது நூலகச் சட்டம் கூறுகிறது. அதன்படி செயல்பட்டதால்தான் தமிழ்நாட்டின் முக்கிய மாவட்டங்களில், மாவட்ட மைய நூலகங்கள் நகரின் மையப் பகுதிகளில் சொந்தக் கட்டடங்களில், செயல்பட்டு வருகின்றன.÷ஆனால், இன்று சென்னை மாவட்டம் தவிர மற்ற மாவட்டங்களில் ஜனநாயக முறைப்படி, சட்ட விதிகளின்படி மாவட்ட நூலக ஆணைக்குழுக்கள் நியமிக்கப்படவில்லை.சென்ற 20 ஆண்டுகளாகப் பள்ளிக்கல்வி இயக்ககத்திலிருந்து வந்து செயல்பட்ட பொது நூலகத்துறை இயக்குநர்களின் நிர்வாகச் சாதனை, சென்னை மாவட்ட நூலக ஆணைக்குழு, நூலக மேம்பாட்டுக்குச் செலவிடாமல் சேமித்து வைத்து வட்டிக்குவிட்டு சேர்த்து வைத்திருந்த தொகை ரூ.80 கோடிக்கும் மேலாகும். அந்தத் தொகை முழுவதும் தற்போது கோட்டூர்புரத்தில் உருவாகிவரும் அண்ணா நூற்றாண்டு நூலகம் கட்டப் பயன்படுத்தப்படுகிறது. நல்லகாரியம்! இந்த வகையிலாவது நமது நூலக வரிப்பணம் பயன்படுகிறது என்பதுவரை மகிழ்ச்சி.÷இந்த ஆண்டு சென்னை மாநகராட்சி வசூல் செய்த நூலகவரி ரூ.35 கோடிக்கு மேலாகும். ஆனால் நகரில் இயங்கும் 134 கிளை நூலகங்களில் 60-க்கும் மேற்பட்ட நூலகங்களில் நூலகர்கள் நியமிக்கப்படவில்லை. வாய்ப்புக் கிடைத்தால், தியாகராயநகர் கிளை நூலகம், குப்பை வண்டிகள் சூழ, அஸ்பெஸ்டாஸ் ஓட்டுக் கூரை, தகரக்கதவுடன் செயல்படுவதைக் கண்டு வாருங்கள்! நகரின் முக்கிய பகுதி கிளை நூலகத்தின் நிலை இது!÷பொது நூலகத்துறையின் கீழ் பணியாற்றும் 5000-க்கும் மேற்பட்ட பலநிலை நூலகர்களுக்குச் சென்ற 15 ஆண்டுகளாகப் பதவி உயர்வே தரப்படவில்லை. அவர்களில் பெரும்பாலோர் நூலகவியலில் பி.எல்.ஐ.எஸ், எம்.எல்.ஐ.எஸ், எம்.பில். மற்றும் சில பேர் முனைவர் பட்டம் கூட பெற்றிருக்கிறார்கள்.÷ஆண்டுதோறும் பொதுமக்கள் கோடிக்கணக்காக நூலக வரி செலுத்தினாலும், ஆயிரக்கணக்கான மூன்றாம் நிலை நூலகர் பதவிகள் காலியாகவே வைக்கப்பட்டுள்ளன. நூலகங்களுக்குச் சொந்தக் கட்டடங்கள் கட்டவோ, தேவைப்படும் மேஜை, நாற்காலிகள் வாங்கிப் போடவோ ஏற்பாடு செய்யப்படவில்லை.÷தமிழ்நாட்டில் சென்னை மாவட்டம் தவிர மற்ற 29 மாவட்டங்களில் நூலக ஆணைக்குழுவுக்குத் தலைவர்களோ, உறுப்பினர்களோ நியமனம் செய்யப்படவில்லை.÷ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு மாவட்ட நூலக அலுவலர் நியமிக்கப்பட வேண்டும். ஆனால், தற்போது 30 மாவட்டங்களுக்கும், ஆறு மாவட்ட நூலக அலுவலர்கள் தான் இருக்கிறார்கள். இந்த நிலையில் மாவட்ட நூலக நிர்வாகம் எப்படி நடைபெற்றுக் கொண்டிருக்கும் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்!÷பதிப்பாளர்கள் 2007-ல் அனுப்பிய நூல்களுக்கு இன்னும் முழுமையாகப் பணம் வந்து சேரவில்லை. 2008-ல் கொடுக்கப்பட்ட மாதிரி நூல்களுக்கு இன்னும் நூல்கள் வழங்க உத்தரவு வரவில்லை. 2009-ல் பதிப்பிக்கப்பட்ட நூல்களை மாதிரிக்குத்தர இன்னும் அனுமதிக்கப்படவில்லை.÷கோட்டூர்புரத்தில் உலகத் தரத்திலான நூலகம் கட்டினால் ஆயிற்றா? முதலில், நூலகத்துறை முறையாகச் செயல்படாமல், நூலகவியல் படித்தவர்கள் நூலகத்துறையை நிர்வாகம் செய்யாமல் உலகத்தரம் எவ்வாறு உறுதி செய்யப்படும்?

வியாழன், 20 மே, 2010

தியாகிகள் பகத்சிங். சுகதேவ். ராஜகுரு

Tuesday, March 23, 2010

தியாகிகள் பகத்சிங். சுகதேவ். ராஜகுருவிற்கு வீரவணக்கம்


இந்திய விடுதலைப் போராட்டத்தில் வெள்ளையர்களை எதிர்த்து தீவிரமாக போராடியவர்களில் குறிப்பிடத்தக்கவர் பகத்சிங். 1907 ஆம் ஆண்டு பிறந்த பகத்சிங், தனது பள்ளி, கல்லூரி நாட்களிலேயே சுதந்திர வேட்கையுடன் செயல்பட்டார்.

இந்திய விடுதலைக்காக தனது இளமையை அர்ப்பணித்து உயிர்த் தியாகம் செய்த அந்த மாவீரர்களின் நினைவுநாள் இன்று.


அந்த வீரனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்திய விடுதலைப் போராட்டத்தில் அவர்கள் வகித்த பங்கை இங்கு அளித்துள்ளோம்.

விடுதலைப் புரட்சியாளர்கள் பகத்சிங், ராகுரு, சுகதேவ் (1919 - 1937)

1919 ஆம் ஆண்டு நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலையால் உந்தப்பட்டு இந்திய விடுதலைப் போராட்டத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட பல்லாயிரக்கணக்கான இளைஞர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ்.

நமது நாட்டை அடிமைப்படுத்திய வெள்ளையரை ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் விரட்ட வேண்டும் என்று உறுதியுடன் முடிவெடுத்த இந்த இளைஞர்கள், 1924 ஆம் ஆண்டு சச்சின்தரா நாத் சன்யால் என்ற தேச பற்றாளர் துவக்கிய இந்துஸ்தான் விடுதலை அமைப்பில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

இந்த அமைப்பைச் சேர்ந்த ராம்விகார் ராம் பிரசாத் மிஸ்மில், ராஜேந்திரநாத் லஹரி, அஷ்பஹூல்லா கான், மன்மந்த்நாத் குப்தா, சந்திரசேகர் ஆசாத் ஆகியோர் 1925 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9 ஆம் தேதி காக்வோரி ரயில் நிலையத்திற்கு வந்த ரயிலை நிறுத்தி அரசு கஜானாவிற்கு கொண்டு செல்லப்பட்ட பணத்தைக் கொள்ளையடித்தனர். இச்சம்பவம் வெள்ளைய அரசிற்கு பெரும் தலைக் குனிவையும், சவாலையும் ஏற்படுத்தியது.
இதில் ஈடுபட்டவர்களில் சந்திரசேகர ஆசாத் தவிர, மற்ற அனைவரும் பிடிபட்டனர். இதனால் அந்த இயக்கம் முடங்கிவிட்ட நிலையில், நவ ஜவான் பாரத் சபா என்ற அமைப்பை பகத்சிங், பகவதி சரண் வோரா, சுகதேவ், யாஷ்பால் ஆகியோர் 1926ல் லாகூரில் துவக்கினர். மக்களிடையே விடுதலை உணர்வைத் தூண்டும் பொதுக் கூட்டங்களை இவ்வமைப்பு நடத்தியது.

இதற்காக ராஜ துரோக குற்றம் சாற்றப்பட்ட ராம்பிரசாத் பிஸ்மில், ராஜேந்திரநாத் லஹரி, அஷ்பகுல்லா கான் ஆகியோர் 1927ல் தூக்கிலிடப்பட்டனர்.

சாண்டர்ஸை சுட்டுக் கொன்ற பகத் சிங் (1928)

1928 ஆம் ஆண்டு சைமன் கமிஷனை எதிர்த்து காங்கிரஸ் போராட்டம் அறிவித்த போது அதில் பகத்சிங்கின் நவ ஜவான் பாரத் அமைப்பும் ஈடுபட்டது. அந்த ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதியன்று சைமன் கமிஷனைக் கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பஞ்சாப சிங்கம் லாலா லஜபதிராய் கலந்துகொண்டார். ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தினர். இதில் இந்திய விடுதலைப் போராட்டத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான லாலா லஜபதிராய் படுகாயமுற்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் நவமபர் 17 ஆம் தேதி மரணமடைந்தார். இச்சம்பவம் நாட்டில் பெரும் கொந்தளிப்பை உருவக்கியது.

லாலா லஜபதிராய் மீது தடியடி நடத்திய வெள்ளைய காவல் அதிகாரியான சாண்டர்ஸ், காவல் கண்காணிப்பாளரான ஸ்காட் ஆகியோர் மீது பகத் சிங்கும் அவருடைய தோழர்களும் குறிவைத்தனர். லஜபதிராய் இறந்து சரியாக ஒரு மாதம் கழித்து, டிசம்பர் 17 ஆம் தேதியன்று பகத்சிங்கும், ராஜகுருவும் சாண்டர்ஸை சுட்டுக் கொன்றனர்.

சாண்டர்ஸை ஏன் கொன்றோம் என்பதனை விளக்கி லாகூர் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது. பகத்சிங்கும், ராஜகுருவும் தலைமறைவாயினர்.
லாகூர் சதி வழக்கு!

இந்த காலகட்டத்தில் தொழிலாளர்களும் வெள்ளைய அரசின் அடக்குமுறை நடவடிக்கைகளையும், சட்டங்களையும் எதிர்த்து தீவிரமாகப் போராடினர். அவர்களை ஒடுக்க தொழில் தகராறு சட்ட வரைவு ஆங்கில அரசு கொண்டு வந்தது.

இச்சட்ட வரைவு நிறைவேற்றப்படும் நாளில் டெல்லி மத்திய சபையில் குண்டு வீசுவது என்று பகத்சிங் கூறிய திட்டம் ஏற்கப்பட்டு 1929 ஆம் ஆண்டு ஏப்ரல் 8 ஆம் தேதி தொழில் தகராறு சட்ட வரைவு நிறைவேறியதை அறிவிக்க ஜென்ரல் சுஸ்டர் என்ற வெள்ளைய அதிகாரி எழுந்தபோது, பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்த பகத்சிங்கும், பி.கே. தத்தும், உறுப்பினர்கள் யாரும் அற்ற இருக்கைகளை நோக்கி குண்டுகளை வீசினர். செவிடர்களை கேட்கச் செய்வதற்காக நாங்கள் குண்டு வீசுகின்றோம் என்று எழுதப்பட்ட கைப்பிரதிகளையும் வீசினர்.

பகத்சிங்கும், தத்தும், ராஜகுருவும் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. பிறகு சாண்டர்ஸ் கொலை வழக்கில் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

1931 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் தேதி இவர்கள் மூவரும் தூக்கிலிடப்பட்டனர்.

உயிர் துறந்த அவர்களின் உடல்களைக் கூட உறவினர்களிடம் ஒப்படைக்காமல் சட்லஜ் நதிக்கரையில் எரித்தனர். பகத்சிங்கும் அவரது தோழர்களும் மூட்டிய விடுதலைத் தீ நாடு முழுவதும் பற்றி எரிந்தது.

தங்களது இன்னுயிரை ஈந்து அவர்கள் மூட்டிய விடுதலைத் தீ நாட்டிற்கு சுதந்திரம் பெற்றுத் தந்தது. சுதந்திர இயக்கத்திற்கு இன்னுயிரை ஈந்து உந்து சக்தியாகத் திகழ்ந்த அம்மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவோம்.

தமிழ்நாடு மகளிர் ஆணையம்


தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தின் தலைவர் கு.மா.இராமாத்தாள் அவர்களுடனான நேர்காணல்)
தமிழ்நாடு மகளிர் ஆணையம் எப்போது, எந்த நோக்கத்திற்காகத் தோற்றுவிக்கப்பட்டது?
இந்த ஆணையம் 1993இல் ஏற்படுத்தப்பட்டது. நான் பதவியேற்று ஓராண்டாகிறது. பெண்களின் பாதுகாப்புக்கு வகை செய்கின்ற விதத்தில் 33 சட்டங்கள் உள்ளன. இந்த பாதுகாப்புச் சட்டங்களைப் பற்றி பெண்களுக்குத் தெரியப்படுத்துவது, அச்சட்டங்களைப் பயன்படுத்துவதற்கான விழிப்புணர்வினை ஏற்படுத்துவது, அதற்கான சட்ட உதவிகளைப் பெற வழிகாட்டுவது ஆகியன இவ்வாணையத்தின் முக்கியமான நோக்கங்கள். இதனை மையமாகக் கொண்டு எங்கள் செயல்பாடுகளை முன்னெடுத்துச் செல்கிறோம்.
இப்போழுது இந்த ஆணையத்தின் செயல்பாடுகள் என்னவாக இருக்கின்றன?
இதற்கு முன் மூன்று ஆண்டுகள் இந்த ஆணையம் முடக்கிவைக்கப்பட்டிருந்தது எல்லோருக்கும் தெரியும். நான் பதவியேற்ற பிறகு ஆணையத்தின் செயல்பாடுகளைத் தீவிரப்படுத்தி வருகிறேன். சுற்றுச்சூழல் துறை, சுகாதாரத்துறை, காவல்துறை போன்ற பிற துறைகளின் ஒத்துழைப்புடன் திட்டங்களைச் செயல்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அடுத்த மாதம் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துடன் இணைந்து, விழிப்புணர்வுக் கருத்தரங்கம் ஒன்றினை நடத்த இருக்கிறோம். மல்லிகா அக்காவிடம் கேளுங்கள் என்ற சட்ட விழிப்புணர்வு நூல், குடும்ப வன்முறையில் இருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம் 2005 என்ற சிறு கையேடு ஆகியவற்றை வெளியிட்டிருக்கிறோம். அதோடு இதனை 18 மாவட்டங்களில் கிராமப்புற மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில் கருத்தரங்குகள், பயிற்சி பட்டறைகள், விழிப்புணர்வு முகாம்கள் நடத்தியிருக்கிறோம். இதற்குப் பெண்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பிற மாவட்டங்களுக்கும் எடுத்துச் செல்லத் திட்டமிட்டிருக்கிறோம்.
பெண்களுக்கான சட்டங்களைப் பற்றி எடுத்துச் சொல்லுகின்ற அதே நேரத்தில், அவர்களுக்கெதிரான சமூக அடக்குமுறைகள் பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்கும், அவற்றைத் தடுப்பதற்கும் என்ன நடவடிக்கைகள் எடுத்து வருகிறீர்கள்?
வந்தபின் பரிதவிப்பதை விட, வரும்முன் காத்துக் கொள்வது சிறப்பல்லவா! அந்த அடிப்படையில் பள்ளி, கல்லூரிகளில் கலந்தாய்வுக் கூட்டங்கள், கருத்தரங்குகள் நடத்துவது என்று முடிவு செய்துள்ளோம். முதற்கட்டமாக சென்னையில் கல்லூரி மாணவர்களை (ஆண், பெண் இருபாலரையும்) ஒருங்கிணைத்து கருத்தரங்கு ஒன்றினை நடத்தினோம். இதற்கு மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதே போன்ற கருத்தரங்குகளை மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலுமுள்ள கல்லூரிகளிலும் நடத்த இருக்கிறோம். பணியிடங்களில் பாலியல் வன்கொடுமைகளைத் தவிர்க்க அனைத்து நிறுவனங்களிலும் புகார் குழு ஒன்று உருவாக்க அறிவுறுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதன் தலைமைப் பொறுப்பில் ஒரு பெண் நியமிக்கப்படுவார். உறுப்பினர்களில் பாதிப்பேர் பெண்களாக இருப்பார்கள். இவர்களுடன், அமைப்புசாரா தொண்டு நிறுவனமோ அல்லது என்.ஜி.ஓ. வோ சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். நாம் என்னதான் சட்டப் பாதுகாப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தாலும், பெண்களின் மனநிலையில் மாற்றங்கள் வராமல் முழுமையான பெண்கள் முன்னேற்றம், விடுதலை என்பது கடினமாகத்தான் இருக்கும்.
இந்த ஆணையத்தின் அதிகாரங்கள் எவை?
எங்களுக்கு இதுவரையிலும் சட்டப்பூர்வமான அங்கீகாரத்தைத் தமிழக அரசு அளிக்கவில்லை. ஆனால் ஆணையத்தின் தலைவருக்கென்று வரையறுக்கப்பட்ட சில அதிகாரங்கள் உள்ளன. அதாவது யாராவது மனு கொடுத்தார்கள் என்றால், எதிர் மனுதாரருக்குச் சம்மன் அனுப்பி, அவர்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தவும், உரிய துறைகளுக்கு மனுவை அனுப்பி தகுந்த நடவடிக்கைகளை எடுக்க பரிந்துரை செய்யவும் அதிகாரம் உண்டு. பெண்களுக்கான பாதுகாப்பு சட்டங்களில் அவர்களுக்கு பாதகமான அம்சங்கள் ஏதேனும் இருக்குமானால் அதில் திருத்தங்கள் செய்யும்படி பரிந்துரைக்கவும் இவ்வாணையத்திற்கு அதிகாரம் உண்டு. ஆனால் அந்தப் பிரச்சினைக்கு அதிகாரப்பூர்வமான தண்டனையோ, தீர்ப்போ சொல்லுகின்ற அதிகாரம் எங்களுக்கு இல்லை. வரையறைகளுக்குள் அடங்கிய அதிகாரங்களாகவேதான் இருக்கின்றன.
பெண்கள் தங்களுடைய பிரச்சினைகளுக்கு, எந்த நிலையில் இவ்வாணையத்தை அணுகலாம்?
ஆரம்ப நிலையிலேயே எங்கள் ஆணையத்தை அணுகலாம். பிரச்சினை வரக்கூடும் என்ற சூழ்நிலையில் முன்கூட்டியே பாதுகாப்பு கருதியும் எங்கள் உதவியை நாடலாம். பெரும்பாலான பெண்கள் புகார் கொடுக்கத் தயங்குகின்ற ஒரு நிலைதான் காணப்படுகிறது. காரணம் அதனால் தனக்கு அல்லது தன் குடும்ப வாழ்க்கைக்கு ஏதாவது பிரச்சினைகள் வந்துவிடுமோ, தன்னுடைய மாமியாரோ, கணவனோ தன்னைத் தவறாகப் புரிந்துகொள்வார்களோ என்ற அச்சம் பெண்களுக்கு இருக்கிறது. நீ ஒழுங்காக இருந்திருந்தால் இந்த மாதிரியான நிகழ்வு நடந்திருக்குமா என்று பெண்ணின் மீதே குற்றம் சுமத்துகின்ற மோசமான கண்ணோட்டம் மாறுகின்ற வரையில் இந்தத் தயக்கங்கள் நீடிக்கத்தான் செய்யும். வேலை செய்துதான் ஆக வேண்டும் என்ற குடும்பச் சூழல், வேலை உயர்வு தடுக்கப்படும் என்ற உயரதிகாரிகளின் மிரட்டல்கள் பெண்களை வாய்மூடி ஊமைகளாக்கிவிடுகின்றன. இந்நிலை மாறி, தங்களது உரிமைகளை எல்லா இடங்களிலும் நிலைநாட்டுகின்ற துணிச்சலைப் பெண்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
உங்களிடம் எந்த மாதிரியான பிரச்சினைகள் அதிகமாக வருகின்றன?
பெரும்பாலும் வரதட்சணை தொடர்பான வழக்குகளே அதிகமாக வருகின்றன. இன்று மட்டும் 20 மனுக்கள் வந்துள்ளன. நீங்கள் உள்ளே வரும்போது, ஒரு குடும்பத்தினர் என் அறையிலிருந்து வெளியே சென்றார்களே, அவர்களுடைய வழக்கு வித்தியாசமானது. பிள்ளைகளுக்கெல்லாம் திருமணம் முடிந்துவிட்டது. இப்போது பெற்றோர்கள் தங்களுடைய வரதட்சணை பிரச்சினைக்காக வந்திருக்கிறார்கள். மேலும் அதிகம் படித்து, பெரிய பதவிகளில் இருப்பவர்களும் இந்தக் கொடுமைகளைச் செய்வதுதான் அதிர்ச்சியாக உள்ளது. தந்தை பெரியார் அவர்கள் சொன்னதைப் போல, முதலில் பெண்கள் நகைகள் மீதான மோகத்தை விட்டொழிக்க வேண்டும். உடைகளையும், நகைகளையும் பற்றிப் பேசுவதை விட்டுவிட்டு, உலக நடப்பையும், நாட்டு நடப்பையும் அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்ட வேண்டும். அதேபோல், இளைஞர்களும், திருமணச் சந்தையில், தாங்கள் விற்பனைப் பொருளாக்கப்படுவதை அவமானமான இழிவான செயல் என்பதை உணர வேண்டும். சுயமரியாதையும், தன்மானமும் உள்ளவர்கள், வரதட்சணை கொடுக்கவோ, வாங்கவோ கூடாது.
அடுத்தது, மணவிலக்கு தொடர்பான வழக்குகளும் வருகின்றன. எங்கோ ஒன்றிரண்டு என்றிருந்த நிலைமாறி தொட்டதெற்கெல்லாம் மணவிலக்குக் கோரும் நிலை வந்துவிட்டது. காரணம் நல்ல மனப்பக்குவம் இல்லாதது, வீட்டுப் பெரியவர்களின் வழிகாட்டலின் கீழ் நடக்க விரும்பாத தலைமுறை இடைவெளி போன்றவைதான். கணவன், மனைவி, வீட்டுப் பெரியவர்கள் அனைவருமே விட்டுக் கொடுத்து வாழப் பழகிக் கொண்டால், பிரச்சினைகள் உருவாவதைத் தவிர்க்க முடியும்.
அரவானிகளுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று அண்மையில் பேசியிருந்தீர்கள், அதைப் பற்றிச் சொல்லுங்களேன்?
அவர்களும் நம்மைப் போன்ற மனிதர்கள் என்ற உண்மையை மறந்து, காரணமே இல்லாமல் அவர்களைத் தள்ளிவைத்து வேடிக்கைப் பொருளாக்கி விட்டோம். வீட்டில் வளர்க்கின்ற ஆடு, மாடு, நாய், பூனை இவற்றைக்கூடப் பெயர் சொல்லிக் கூப்பிடுகிறவர்கள் இவர்களைக் கண்டால் மட்டும் ஒம்போது என்று கேலி செய்கிறார்கள். இப்படிப் பிறந்தது இவர்களின் தவறல்ல. குரோமோசோம்களின் இணைவில் இயற்கை செய்த தவறு. சமுதாயம் மட்டுமல்ல, சொந்த வீட்டினரே புறக்கணிக்கின்ற இவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற உந்துதல் எனக்குள் நீண்ட காலமாகவே இருந்து வந்தது. பெரும்பாலும் அவர்கள் தங்களைப் பெண்களாக அங்கீகரிப்பதையே விரும்புகிறார்கள். இவர்கள் மீதான சமூகத்தின் தவறான பார்வையை மாற்ற வேண்டுமானால், இவர்களுக்கு சரியான வேலைவாய்ப்புகளைத் தர வேண்டும். இட ஒதுக்கீடு என்ற முன்னுரிமையால்-சலுகையால் மட்டுமே இது சாத்தியப்படும். இதனை விவாதிப்பதற்காக நடத்தப்பட்ட பொது விசாரணைக் கூட்டத்தில் 300க்கும் மேற்பட்ட அரவானிகள் கலந்து கொண்டனர். தாங்கள் சந்திக்கின்ற இடர்ப்பாடுகளையும் கூறினார்கள். இவர்களின் பிரச்சனைகளை கவனிக்க நான்கு பேர் அடங்கிய புகார் குழுவையும் அமைத்துள்ளோம்.
இவர்களுக்கு குடும்ப அட்டை வழங்கவும் ஏற்பாடு செய்துள்ளோம். உணவுத்துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் உடனே சென்னையில் 28 பேருக்கும், விழுப்புரத்தில் 17 பேருக்கும், மேலும் பலருக்கும் குடும்ப அட்டை வழங்க உத்தரவிட்டுள்ளார்கள். அவருக்கு நேரில் எங்கள் நன்றியைத் தெரிவித்தோம். அடுத்த கட்டமாக இவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டைகள் கிடைக்கச் செய்யும் முயற்சியில் இருக்கிறோம். அதேபோல், கல்வியில் எங்கே தடைகள் ஏற்படுகிறதோ, அதை எங்களுக்குத் தெரிவித்தால், சம்பந்தப்பட்ட துறைத் தலைவர்களிடம் பேசித் தடைகளை நீக்கி, கல்வி தொடர நடவடிக்கை எடுப்பதாகவும் கூறியிருக்கிறோம். இவர்களுக்கான எங்களின் பணி உறுதியுடன் தொடரும். அரசிடமும் இதற்கான சில பரிந்துரைகளை முன்வைத்திருக்கிறோம். தேவைகளை முன்உணர்ந்து மக்கள் நலத் திட்டங்களை தீட்டிவரும் நமது முதல்வர் அவர்கள் அரவானிகளுக்கு தனி நல வாரியம் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார். அதற்காக மகளிர் ஆணையத்தின் சார்பில் முதல்வர் அவர்களுக்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மனித உரிமை ஆணையத்தைப் பற்றி பொதுமக்கள் அறிந்துள்ள அளவிற்கு, மகளிர் ஆணையம் குறித்துப் பெண்களே அறிந்திருக்கவில்லையே ஏன்?
இடையில் மூன்று ஆண்டுகள் இந்த ஆணையம் செயல்படவில்லை. பழைய வரவு-செலவு திட்டங்களே செயல்படுத்தப்பட்டுள்ளது. நான் பதவியேற்ற பிறகு செயல்பாடுகளை அதிகப்படுத்தியுள்ளேன். போதுமான நிதி இல்லாததால், எனது சொந்த முயற்சியில் சமூக அக்கறையுள்ள நண்பர்களின் உதவியுடன் கருத்தரங்குகள், விழிப்புணர்வுக் கூட்டங்கள் போன்றவற்றை நடத்தி வருகிறோம். அடுத்தது, சட்டப்பூர்வமான அங்கீகாரமோ, அதிகாரமோ இல்லை. இந்த காரணங்களால், ஆணையத்தின் செயல்பாடுகளை மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தீவிரமாக எங்களால் செயல்படுத்த முடியவில்லை. எனவேதான், மகளிர் ஆணையம் பற்றி பொதுமக்கள் நன்கு அறிந்து கொள்ள முடியாமல் போய்விட்டது. வரும் காலங்களில் இந்நிலை மாறும்.
ஆணையத்தின் சிறப்பான செயல்பாட்டிறகு இப்போதுள்ள அதிகாரங்கள் போதுமென்று கருதுகிறீர்களா? கூடுதலான அதிகாரங்களைப் பெற என்ன முயற்சிகள் மேற்கொண்டு வருகிறீர்கள்?
இல்லை. இப்போதுள்ள அதிகாரங்கள் போதாது என்பதுதான் உண்மை. கூடுதல் அதிகாரம் பெறுவதற்கான எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம். சட்ட வடிவ அங்கீகாரம் பெறவதற்கான வரைவு (டிராப்ட்) அரசுக்கு அனுப்பியிருக்கிறோம். அரசு தரப்பில் கேட்கப்பட்ட விளக்கங்கள் அனைத்தையும் அளித்திருக்கிறோம். இதற்கான முயற்சி முழுமையான வடிவத்திற்கு வந்துள்ளது. கண்டிப்பாக அரசு, மகளிர் ஆணையத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்கும் என்று எதிர்பார்க்கிறோம். அய்யா பெரியார் வழி வந்த முதல்வர் கலைஞர் அவர்கள்தான் இதற்கு ஒரு விடிவினைத் தரமுடியும் என்று நம்புகிறோம்.
அண்மைக் காலமாக, பெண்கள் மீதான அதிலும் குறிப்பாகப் பள்ளிப் பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருவதைப் பற்றி?
குழந்தைகள் மீதான பெற்றோரின் கவனிப்பு குறைந்து வருகிறது. வேலைக்குப் போகிற பெற்றோர்கள், குழந்தைகளுடன் பொறுமையாக நேரத்தைச் செலவிடுவதில்லை. அவர்கள் தங்களுக்கு நேர்ந்த சிறுசிறு பாலியல் சீண்டல்களைச் சொல்ல வரும்போது காது கொடுத்துக் கேட்பதில்லை. அப்படியே கேட்க நேர்ந்தாலும் குழந்தைகளைத்தான் அதட்டுகிறார்கள். ஆரம்பத்திலேயே அதில் கவனம் செலுத்தியிருந்தால் பெரிய அளவில் விபரீதங்கள் நடக்காமல் தடுக்க முடிந்திருக்கும், மேலும், எந்தக் குழந்தையாக இருந்தாலும், உடற்கூறுகளைப் பற்றி அவர்களிடம் பெற்றோர்கள் பக்குவமாகப் பேச வேண்டும். உங்கள் உடல்மீது ஆதிக்கம் செலுத்துகின்ற உரிமை யாருக்கும் கிடையாது என்ற துணிவான புரிதலை குழந்தைகளிடம் ஏற்படுத்த வேண்டும். நல்ல தொடுதல் எது, தவறான தொடுதல் எது என்பதனைப் பெண்பிள்ளைகளுக்குச் சொல்லித் தரவேண்டும். அப்போதுதான் அவர்கள் தற்காத்துக் கொள்ள முடியும். அனைத்துக்கும் மேலாகத் தந்தை பெரியார் அவர்கள் கூறியதைப் போல, பெண்பிள்ளைகளுக்கு, தற்காப்புக் கலைகளைக் கற்றுக் கொடுக்க வேண்டும். குற்றங்கள் குறைந்து, குறையில்லாத சமுதாயம் மலரும்

செவ்வாய், 11 மே, 2010

ஆரம்ப சுகாதார நிலையத்தில் கண் பரிசோதனை முகாம்



1.ஆரம்ப சுகாதார நலையத்தில் கண் பரிசோதனை முகாம்

ஊட்டி, மே மசினகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடத்தப்பட்ட இலவச கண் பரிசோதனை முகாமில், 100க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர். கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மக்கள் மையம், தமிழ்நாடு அறக்கட்டளை, நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், நீலகிரி மாவட்ட நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு, மசினகுடி சமுதாய நல அறக்கட்டளை சார்பில், மசினகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. 


சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் விஷ்ணு சங்கர் தலைமை வகித்தார். கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மக்கள் மைய தலைவர் சிவசுப்ரமணியம், பார்வை இழப்பு தடுப்பு சங்க திட்ட ஒருங்கிணைப்பாளர் மங்கை சுப்ரமணியம், சமுதாய  நல அறக்கட்டளை ஜெர்மினா முன்னிலை வகித்தனர். ஊட்டி அரசு கண் மருத்துவ அலுவலர் ஜெயராமன் தலைமையில், கண் மருத்துவ உதவியாளர்கள் முத்துராஜ், நாகூர் கனி, ஸ்ரீதர் உட்பட குழுவினர், பங்கேற்ற 128 பேருக்கு பரிசோதித்தனர்.
கண்பார்வை, கண்ணழுத்தம், கண்புரை, கண்ணில் நீர் வடிதல் உட்பட பார்வை குறைபாடுகளுக்கு சிகிச்சை, ஆலோசனை வழங்கினர்; கண்புரை அறுவை சிகிச்சைக்கு 15 பேர் தேர்வு செய்யப்பட்டு, ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு அறுவை சிகிச்சை, மருத்துவம், மருந்துகள் இலவசமாக வழங்க முடிவு செய்யப்பட்டது
eye camp at masinakudi

ஆரம்ப சுகாதார நலையத்தில் கண் பரிசோதனை முகாம்

1.ஆரம்ப சுகாதார நலையத்தில் கண் பரிசோதனை முகாம்

ஊட்டி, மே மசினகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடத்தப்பட்ட இலவச கண் பரிசோதனை முகாமில், 100க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர். கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மக்கள் மையம், தமிழ்நாடு அறக்கட்டளை, நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், நீலகிரி மாவட்ட நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு, மசினகுடி சமுதாய நல அறக்கட்டளை சார்பில், மசினகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் விஷ்ணு சங்கர் தலைமை வகித்தார். கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மக்கள் மைய தலைவர் சிவசுப்ரமணியம், பார்வை இழப்பு தடுப்பு சங்க திட்ட ஒருங்கிணைப்பாளர் மங்கை சுப்ரமணியம், சமுதாய  நல அறக்கட்டளை ஜெர்மினா முன்னிலை வகித்தனர். ஊட்டி அரசு கண் மருத்துவ அலுவலர் ஜெயராமன் தலைமையில், கண் மருத்துவ உதவியாளர்கள் முத்துராஜ், நாகூர் கனி, ஸ்ரீதர் உட்பட குழுவினர், பங்கேற்ற 128 பேருக்கு பரிசோதித்தனர்.
கண்பார்வை, கண்ணழுத்தம், கண்புரை, கண்ணில் நீர் வடிதல் உட்பட பார்வை குறைபாடுகளுக்கு சிகிச்சை, ஆலோசனை வழங்கினர்; கண்புரை அறுவை சிகிச்சைக்கு 15 பேர் தேர்வு செய்யப்பட்டு, ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு அறுவை சிகிச்சை, மருத்துவம், மருந்துகள் இலவசமாக வழங்க முடிவு செய்யப்பட்டது.

செவ்வாய், 4 மே, 2010

காலாவதி மருந்துகள் குறித்த விழிப்புணர்வு டாக்டரின் ஆலோசனையின் படி தான் மருந்து வாங்க வேண்டும்

'டாக்டரின் ஆலோசனையின் படி தான் மருந்து வாங்க வேண்டும்'

ஊட்டி: 'டாக்டரின் ஆலோசனையின் படி தான் மருந்து வாங்க வேண்டும்' என அறிவுறுத்தப்பட்டது. நீலகிரி மாவட்ட நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு, மாவட்ட மக்கள் மையம், கிராம நுகர்வோர் மன்றங்கள் சார்பில், காலாவதி மருந்துகள் குறித்த விழிப்புணர்வு பிரசாரம் ஊட்டியில் நடத்தப்பட்டது.

கடந்த சில வாரங்களுக்கு முன், காலாவதியான மருந்துகள் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது, தமிழகத்தை பரபரப்பாக்கியது. சுதாரித்துக் கொண்ட சுகாதாரத் துறை அதிகாரிகள், தமிழகத்தின் பல இடங்களில் உள்ள மருந்து குடோன்கள், மருந்துக் கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். வழக்கில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. ஊட்டியிலும், காலாவதியான மருந்துகள், கால்வாயில் கொட்டப்பட்டிருந்தன. இந்நிலையில், காலாவதி மருந்துகள் குறித்த விழிப்புணர்வு பிரசாரம், ஊட்டியில் நடத்தப் பட்டது.

       மாவட்ட கூட்டமைப்பு பெருந்தலைவர் கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். கூடலூர் நுகர்வோர் மனித உரிமை சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்- மக்கள் மையத் தலைவர் சிவசுப்ரமணியம், பொதுச் செயலர் வீரபாண்டியன் முன்னிலை வகித்தனர். 

   மாவட்ட மக்கள் மைய ஒருங்கிணைப்பாளர் மாரிமுத்து வரவேற்றார். கலாவதி மருந்துகள் குறித்த துண்டு பிரசுரங்கள், பொதுமக்களிடம் வினியோகிக்கப்பட்டன. பிரசாரத்தில், 'முடிந்தவரை நம்பகமான, தெரிந்த மருந்துக் கடைகளிலேயே மருந்துகள் வாங்க வேண்டும்; டாக்டரின் ஆலோசனையின் படி தான் மருந்து வாங்க வேண்டும்; ஒருவருக்கு வழங்கும் மருந்தை மற்றவர்கள் உபயோகப்படுத்தக் கூடாது; மருந்துகளை வாங்கும் போது, தயாரிப்பு மற்றும் முடியும் தேதியை பார்த்து வாங்க வேண்டும். மருந்துக்கான ரசீதை கண்டிப்பாக வாங்க வேண்டும்;

       மருந்தின் நிறம், தோற்றம் இவைகளில் சந்தேகம் ஏற்படும் பட்சத்தில், 'மருந்து ஆய்வாளர் (டிரக் இன்ஸ்பெக்டர்) அல்லது மருந்து கட்டுப்பாடு அதிகாரி, தேனாம்பேட்டை, சென்னை-18' என்ற முகவரிக்கு தொடர்பு கொள்ள வேண்டும்; போலி மருந்துகள் என தெரியவந்தால், மாநில மருந்து கட்டுப்பாட்டாளருக்கு தெரியப்படுத்த வேண்டும்; விபரங்களுக்கு, நீலகிரி மாவட்ட நுகர்வோர் குழுக்கள் கூட்டமைப்பு கிளைத் தலைவர் 93451 - 15337, மாவட்ட பொதுச் செயலர் 93453 - 98085, 94425 - 30533, 94885 - 20800, 94880 - 94501 என்ற எண்களில் தொடர்பு கொண்டு பயன் பெற வேண்டும்' என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

       நிர்வாகிகள் வனிதா, சுப்ரமணி, விஜயகுமார், கிராம நுகர்வோர் மன்ற நிர்வாகிகள் மஞ்சு சிவா, ஜெயபிரகாஷ், மோகன், கோகிலா, ராஜேந்திரன், சுரேஷ், கணேசன், ராஜா, சந்திரன், பாபு, கூட்டமைப்பு கிளை நிர்வாகிகள் கிப்சன், டேவிட், ராஜரத்தினம், மக்கள் மைய நிர்வாகிகள் செல்வராஜ், சுப்ரமணி, பாண்டியன் உட்பட பலர் பங்கேற்றனர்.