அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

புதன், 2 மார்ச், 2011

கட்டுரைகள் அனைவருக்கும் ஆரம்பக் கல்வி: சாத்தியமாவது எப்போது?

1944-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட சார்ஜென்ட் அறிக்கையில் ஆரம்பக் கல்வி பற்றி பல்வேறு பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளன. 3 முதல் 6 வயதுக் குழந்தைகளுக்கு ஆரம்பக் கல்வி, 6 முதல் 14 வயது வரையிலான அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவச அடிப்படைக் கல்வி போன்றவை இதன் முக்கிய பரிந்துரைகளில் சிலவாகும்.ஆனால் சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளுக்கு மேலாகியும் அனைவருக்கும் ஆரம்பக் கல்வி கிடைப்பதில் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. சுதந்திரத்துக்குப் பின்னர், அதிகப்படியான பள்ளிகள் தொடங்கப்பட்டு, அடிப்படை வசதிகள் பெருகியுள்ள நிலையிலும் ஏன் இந்த நிலை என்று சிந்திக்க வேண்டியுள்ளது.நம் நாடு சுதந்திரமடைந்த பின்னர், 1951-ல் நடந்த மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்போது மொத்த மக்கள்தொகையில் 18.33 சதவீதத்தினர் (ஆண்கள் 27.16 சதவீதம், பெண்கள் 8.86 சதவீதம்) எழுத்தறிவு பெற்றவர்களாக இருந்தனர். அதன் பின்னர் கல்வியறிவில் இந்தியா முன்னேறினாலும் அபரிமிதமான வளர்ச்சியை எட்டவில்லை.2001 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்போது, எழுத்தறிவு பெற்றோர் 64 சதவீதமாக உயர்ந்துள்ளது. தமிழகத்தின் எழுத்தறிவு 2001-ல் நகரங்களில் 82 சதவீதமாகவும், கிராமப்புறங்களில் 66 சதவீதமாகவும் இருந்தது.இது 2004-ல் 73.42 சதவீதமாக உயர்ந்துள்ளது. அனைவருக்கும் ஆரம்பக் கல்வி கிடைக்க வேண்டும் என்று 1998-ல் நடந்த மாநிலக் கல்வி அமைச்சர்கள் மாநாட்டில் பரிந்துரை செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் அனைவருக்கும் கல்வித் திட்டம் 2001 முதல் செயல்படத் தொடங்கியது. இத்திட்டத்தின் பலனை இன்னும் முழுமையான அளவில் எட்டவில்லை என்பதுதான் உண்மை நிலை.இன்று கிராமங்கள் தொடங்கி நகரங்கள் வரையில் தங்கள் குழந்தைகளைப் படிக்கவைக்க வேண்டும் என்ற எண்ணம் பெற்றோர் மத்தியில் உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. பள்ளி செல்லும் வசதி இல்லை என்று கூற முடியாத நிலை இருந்தும், பல்வேறு காரணங்களால் முழுமையான இலக்கை எட்ட முடியவில்லை.இந்தியாவில் 42 சதவீத மக்கள்தொகையினர் 18 வயதுக்கு உள்பட்டவர்கள். இது உலகில் உள்ள குழந்தைகளின் மக்கள்தொகையில் 20 சதவீதமாகும். அனைவருக்கும் கல்வித் திட்டம் தொடர்பான யுனெஸ்கோ அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், உலகம் முழுவதும் 75.9 கோடி மக்கள் படிப்பறிவு இல்லாதவர்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், இந்த அறிக்கையில் இந்தியாவில் ஆரம்பக் கல்வி படிக்க வேண்டிய வயதில் உள்ள சிறுவர்களில் 7.2 கோடிப் பேர் பள்ளிக்குச் செல்லாமல் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் ஆண் குழந்தைகளைக் காட்டிலும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாகும்.இடப் பெயர்வு, கல்வியறிவு பற்றிய விழிப்புணர்வு இல்லாமை, பொருளாதாரச் சூழ்நிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் உள்ளன. இதனால் பல்வேறு முயற்சிகளுக்கு மத்தியிலும் ஆண்டுதோறும் கல்வியை இடையில் நிறுத்தும் மாணவ, மாணவியர் எண்ணிக்கை குறைவான அளவிலாவது அதிகரித்து வருகிறது.விவசாயத்தை மட்டுமே நம்பியிருப்போர் விவசாயம் பொய்த்துப் போகும் வேளையில் வேலை தேடி அருகில் உள்ள நகரங்கள் அல்லது அண்டை மாநிலங்களுக்குச் செல்கின்றனர். இவ்வாறு செல்வோர் பெரும்பாலும் தங்கள் குழந்தைகளையும் உடன் அழைத்துச் செல்கின்றனர்.இவர்கள் நகரங்களில் கட்டட வேலை மற்றும் குழாய்கள் பதிக்கக் குழிதோண்டுவது போன்ற வேலைகளுக்கே செல்கின்றனர். இருக்க இடமின்றிக் கட்டப்படும் கட்டடங்களையும், சாலையோரங்களையும் மட்டுமே நம்பிச் செல்லும் இவர்கள், அங்கு தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பும் மனநிலையில் இருப்பதில்லை.மேலும் கிராமங்களில் உள்ளவர்கள், பள்ளி விடுமுறை நாள்களில் தங்களோடு தங்கள் குழந்தைகளையும் குறிப்பிட்ட சில விவசாய வேலைக்கு அழைத்துச் செல்கின்றனர். நாளடைவில் வருமானத்தின் மீதான ஆர்வம் காரணமாக பள்ளிக்கு அனுப்பாமல் தொடர்ந்து வேலைக்கு அழைத்துச் செல்லும் நிலை இன்றும் கிராமங்களில் நடந்து வருகிறது.ஒரு கல்வியாண்டில் முதல் வகுப்பில் சேரும் மாணவ, மாணவியர் எண்ணிக்கையை ஐந்து ஆண்டுகள் கழித்து மாணவ, மாணவியர் எண்ணிக்கையுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, மிகப்பெரிய ஏற்றத்தாழ்வு இருப்பதைக் காண முடியும். உள்ளூரில் ஐந்தாம் வகுப்பு வரையில் படித்துவிட்டு, ஆறாம் வகுப்புக்கு வெளியூர் செல்ல வேண்டிய சூழ்நிலையில் பெற்றோர் தங்கள் குழந்தைகளை அனுப்பத் தயக்கம் காட்டுகின்றனர்.இத்தகைய நிலைக்கு ஆண் குழந்தைகளைக் காட்டிலும் பெண் குழந்தைகள்தான் அதிகம் ஆளாகின்றனர். இன்றும் கிராமங்கள், பெருநகரங்களில் பள்ளி செல்லும் வயதில் உள்ள பெண் குழந்தைகள் வேலைக்குச் செல்வதைக் காண முடிகிறது.இந்நிலைக்கு அடித்தட்டு வகுப்பைச் சார்ந்தவர்களும், கிராமங்களில் வசிப்பவர்களுமே ஆளாகின்றனர். இவர்களைப் பொறுத்தமட்டில் பொருளாதாரச் சூழ்நிலை, விழிப்புணர்வு இல்லாத நிலை மட்டுமன்றி இன்றைய கல்வி முறையும் இவர்களைக் கவர்வதாக இல்லை என்பதும் ஒரு காரணமாகும்.இதுபோன்று பல்வேறு காரணங்களால் நிகழும் இடைநிற்றல் தான் ஆரம்பக் கல்விக்கான மிகப்பெரும் சவாலாக உள்ளது. இடைநிற்றலில் மாணவர்களைக் காட்டிலும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.இதனாலேயே தேர்வு முடிவுகளில் அதிகப்படியான மாணவிகள் தேர்ச்சி பெறும் நிலையிலும் எழுத்தறிவு பெற்ற ஆண்களைக் காட்டிலும் பெண்கள் குறைவாகவே உள்ளனர். கடந்த காலங்களோடு ஒப்பிடுகையில் இடைநிற்றல் குறைந்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.அனைவருக்கும் இலவசக் கல்வி அளிக்கும் பொருட்டு இலவசச் சீருடை, பாடப்புத்தகங்கள், மதிய உணவு என வழங்கியபோதும் இலக்கை எட்ட முடியாத நிலையே இன்னும் தொடர்கிறது. இதற்கு ஒருசாராரை மட்டும் குறை கூறுவதற்கில்லை. ஆசிரியர்களுக்கு அடுத்து கிராம சமூகத்துக்கும் குறிப்பாகப் பெற்றோர்களுக்கும் இதில் பெரும் பங்கு உண்டு.கிராமப்புறப் பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கழகம் இல்லாத நிலையே உள்ளது. இருக்கின்ற பள்ளிகளிலும் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் மற்றும் உள்ளூர் அரசியல் கட்சிப் பிரமுகர்களின் தலையீடு அதிகமாக உள்ளது. இதனால் சேர்க்கை மற்றும் அவர்களைத் தக்க வைப்பதில் இலக்கை எட்ட முடிவதில்லை.கல்வி பற்றிய விழிப்புணர்வு நடவடிக்கைகளும் மந்தகதியிலேயே நடைபெறுகின்றன. பள்ளிக்கு வெளியே இருந்தவர்கள் கண்டறியப்பட்டு மீண்டும் அவர்களைப் பள்ளியில் சேர்ப்பதோடு கடமை முடிந்து விடுவதில்லை. அவர்கள் தொடர்ந்து கற்கிறார்களா என்பதைக் கண்காணிக்க வேண்டும்.கிராமப்புறப் பள்ளிகளில் மாணவ, மாணவியர் சேர்க்கையை அதிகரிக்க உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகளை ஈடுபடுத்த வேண்டும். "அனைவருக்கும் கல்வி'த் திட்டத்தில் கிராமக் கல்விக் குழு அமைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தாலும், அதன் செயல்பாடுகள் என்ன என்பது எவருக்கும் தெரியவில்லை. அதனால் இதுதொடர்பாக உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகள் மத்தியிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கல்வி தொடர்பாக அமைக்கப்பட்ட குழுக்கள் செயல்படும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மத்திய அரசின் கள விளம்பரத் துறை மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் வாயிலாக கல்வி பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும். இவையெல்லாவற்றுக்கும் மேலாக இடம்பெயர்தலைத் தவிர்ப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர வேண்டும்.அதிகப்படியான நிதி ஒதுக்கீடு செய்வதன் மூலம் ஆரம்பக் கல்வியை அனைவருக்கும் கிடைக்கச் செய்ய முடியாது. அதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவதும், சமூக அக்கறையுடன் மேற்கொள்வதுமே இதற்கான தீர்வாகும். இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போதுதான் அனைவருக்கும் ஆரம்பக் கல்வி என்பது சாத்தியமான ஒன்றாகும்.அதன் மூலமே "இருண்ட இந்தியா' என்ற நிலையில் இருந்து "ஒளிரும் இந்தியா' என்ற நிலையை அடைய முடியும். இதற்கு ஒருசாரார் மட்டுமன்றி ஒட்டுமொத்தமாக அனைவரது மத்தியிலும் கல்வி பற்றிய விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்.கட்டுரையாளர்:அரியலூர் அண்ணாமலைப் பல்கலைக்கழகப் படிப்பு மையத்தின் இளநிலை உதவியாளர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக