அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

வியாழன், 5 மே, 2011

49 "ஓ' வைப் பயன்படுத்திய பழங்குடிகள்!


முன்னெப்போதையும் விட இந்தத் தேர்தலின் போதுதான் வாக்காளர்கள் 49 "ஓ' வைப் பயன்படுத்தியுள்ளனர். தேர்தல் ஆணையமும் அதற்கொரு காரணமாக அமைந்தது. மற்றெல்லா மாவட்டங்களையும் விட நீலகிரி மாவட்டத்தில் குறிப்பாக மசினகுடி, மாயார் போன்ற வனப்பகுதிகளில் வசிக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் 49 "ஓ' வைப்பயன்படுத்தியது வியப்புக்குரியதாகத் தோன்றியிருக்கலாம்.

ஆனால், மிக நீண்டகாலமாக இப்பகுதிவாழ் மக்கள் விரக்தியின் விளிம்பில்தான் வாழ்ந்து வருகின்றனர். நீலகிரி மாவட்டம் கூடலூர் சட்டமன்றத் தொகுதியில் கர்நாடக எல்லையோரம் அமைந்துள்ள கிராமம் தான் மசினகுடி ஊராட்சி. இங்கு வசிப்பவர்களில் பெரும்பான்மையோர் பழங்குடியின மற்றும் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த மக்கள்.

பழங்குடி மக்கள் பரம்பரை பரம்பரையாகக் காடுகளுக்குள் வாழ்கின்றவர்கள். வெள்ளையர் ஆட்சிக்காலத்தில்தான் வனத்துறை உருவாக்கப்பட்டது. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், வனத்துறை உருவாக்கப்பட்டதன் காரணம் வனங்களைக் காப்பதற்காக அல்ல. மாறாக மரங்கள் வெட்டப்படுவதை ஒழுங்கமைத்து காலனி அரசின் வருவாயைப் பெருக்கிக் கொள்வதற்காகத்தான்.

வனத்துறையும் சட்டமும் உருவாக்கப்படுவதற்கு முன்னர் காடுகள் பழங்குடி மக்களுடையதாகவே இருந்தன. காடுகளுக்குள் வாழ்ந்தார்கள். மரம்வெட்டப்படவில்லை. கடத்தப்படவில்லை. காட்டில் விளையும் கிழங்கு வகைகளையும் தேன், நெல்லிக்காய் போன்றவைகளையும் உட்கொண்டு தங்களது மொழி பேசி, இசைத்து, நடனமாடி காடு சார்ந்த இயற்கை வழிபாடு நடத்தி மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள்.

யாரையும் ஏமாற்றாமல், ஏய்த்துப் பிழைக்காமல், சுரண்டாமல், இலவசங்களுக்குக் கையேந்தாமல், ஏற்றத்தாழ்வு பார்க்காமல் மிக உன்னதமான பண்பாட்டுத் தளத்தில் அவர்கள் வாழ்ந்து வந்தனர்.

தவறான அணுகுமுறைகளையும் குணங்களையும் கொண்ட நாம் அவர்களைக் "காட்டுமிராண்டிகள்' என அழைத்தோம். நாகரிக உலகின் மாயவெளிச்சத்துக்கு அவர்களைக் கொண்டு வந்தே தீருவது என முடிவெடுத்தோம். அதன் மூலம் அவர்களது பண்பாடும் மொழியும் சிதைக்கப்பட்டது. நவநாகரிக ஆடைகள் திணிக்கப்பட்டன. அரசுகள் கோடிக்கணக்கான பணம் செலவழித்து அவர்களை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதாக முரசறைந்தனர். கணக்கின்றி செலவிடப்பட்ட பணம் யாருடைய சட்டைப் பையிலோ பதுங்கிக் கொண்டது.

பழங்குடி மக்களோ தங்கள் தாய்மடியான காடுகளை இழந்து பண்பாட்டைப் பறிகொடுத்து, "சுயம்' இழந்து அன்னியமாயினர். இதற்கிடையில் பழங்குடி மக்களுக்குச் சேவை செய்கிறோம் பேர்வழி என இடை வழிகளில் காளான்களைப்போல் முளைத்த தொண்டு நிறுவனங்கள், வெளிநாடுகளிலிருந்து நன்கொடையாக டாலர்களை வாங்கித் தங்கள் சொந்த வாழ்க்கையை மேம்படுத்திக் கொண்டன.

பழங்குடி மக்களிடம் காடுகள் இருந்தபோது மரங்கள் வெட்டப்படவில்லை. யானை வழித்தடம் மறிக்கப்படவில்லை. எந்த விலங்கும், எந்தப் பறவையும் துன்புறுத்தப்படவில்லை. அரிய மூலிகைகளின் பயன்பாட்டை அறிந்து வைத்திருந்த அந்த மக்கள், எல்லா நோய்களுக்குமான மருத்துவத்தையும் அறிந்து வைத்திருந்தார்கள்.

இதுவரை யானை மிதித்து எந்தப் பழங்குடியின மக்களும் உயிரிழக்கவில்லை.

இப்போது என்ன நடக்கிறது?

மசினகுடி உள்ளிட்ட பகுதி முதுமலை வனவிலங்கு சரணாலயமாக உருவாகி, பின்னர் புலிகள் காப்பகமாகப் பெயர் மாற்றம் பெற்றுள்ளது. பழங்குடி மக்களிடமிருந்து காட்டின் அதிகாரம் வனத்துறைக்கு மாறிவிட்டது.

வனத்துறையின் கட்டுப்பாட்டில் வந்தபிறகுதான் பழங்குடி மக்கள் தெய்வமாக வழிபட்ட விலை உயர்ந்த மரங்கள் லாரி லாரியாக வெட்டிக் கடத்தப்பட்டன. அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் அதற்குத் துணை நின்று, தங்கள் பங்கை வாங்கி பத்திரப்படுத்திக் கொண்டனர்.

காடுகளுக்குள் பழங்குடி மக்கள் வாழ்க்கை நடத்தும் அதே வேளையில் தாழ்த்தப்பட்ட மக்கள் காடுகளுக்கு வெளியே மாடு மேய்த்தும், சாணி எரு தயாரித்து விற்றும், ராகி போன்றவை பயிரிட்டும் வாழ்ந்து வந்தனர்.

புலிகள் காப்பகமாக இப்பகுதி அறிவிக்கப்பட்ட பிறகு, பழங்குடி மக்களின் மிச்சமிருந்த உரிமைகளும் பறிக்கப்பட்டுவிட்டன. இதற்கெதிராகத்தான் இந்த மக்கள் போராடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாகத்தான் 49 "ஓ' வாக்கு முறையைப் பயன்படுத்தியுள்ளனர்.

அதே வேளையில், இம்மக்களை முன்னிறுத்தி பின்னணியில் ஒரு மாஃபியா கும்பல் செயல்பட்டு வருகிறது. ஏராளமான நிலத்தை வளைத்துப் போட்டுள்ளவர்களில் பலர் அரசியல் தலைவர்களின் பினாமிகள். அத்துடன் சுற்றுலாப் பயணிகளை இரையாக்கி பணம் கறக்கும் ரிசார்ட் உரிமையாளர்கள். சில ரிசார்ட்டுகளில் விபசாரம் உள்ளிட்ட சமூக விரோதச் செயல்களும் நடைபெறுகின்றன.

உண்மையில், அரசுக்குத் தெளிவான கொள்கை கிடையாது. வனத்தைப் பாதுகாப்பதும் சுற்றுலாவை மேம்படுத்துவதும் இரண்டும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட திட்டங்கள். வனப்பகுதிக்குள் சுற்றுலா என்பது வனத்தை அழிக்கும். காட்டு விலங்குகளின், பறவைகளின் இயல்பான நடமாட்டத்தை அவை தடுக்கும். சுற்றுச்சூழல் சங்கிலியின் கண்ணி அதன் மூலம் உடைபடும். அரசு ஒருபக்கம் வனத்தைப் பாதுகாப்பதற்காக வரைமுறையற்ற விதத்தில் பணத்தைச் செலவு செய்துகொண்டே, இன்னொரு புறம் சுற்றுலாவையும் ஊக்கப்படுத்துகிறது.

மிருகங்களையும் பறவைகளையும் ஆய்வு செய்ய வரும் சுற்றுலாப் பயணிகளால் அநேகமாக எந்தப் பிரச்னையும் எழுவதில்லை. நமது சமவெளிப் பகுதிகளிலும் அண்டை மாநிலங்களிலும் வட மாநிலங்களிலும் திடீர்ப் பணக்காரர்கள் தலையெடுத்துள்ளனர். தாராளமயக் கொள்கைக்குப் பிறகு திகைப்பூட்டும் அளவுக்கு இவர்களது கரங்களில் பணம் புரள்கிறது. பணம் மனிதனின் அடிப்படைப் பயன்பாடுகளையே புரட்டிப் போடுகின்றன என்பதற்கு இவர்களே நிகழ்காலச் சாட்சிகள்.

மதுவும் போதையும் கேளிக்கையும் மட்டுமே லட்சியமாகிவிட்ட இவர்களது "அற்பனின் அர்த்தராத்திரி சேஷ்டைகளால்' வன தேவதை வனப்பிழந்து நிற்கிறாள். இயற்கையை ரசிப்பதாக இவர்கள் அடிக்கும் லூட்டிகளால் வன வாழ்க்கையின் சுருதி தப்பிவிடுகிறது. கோடிகளைக் கொட்டி எழுப்பிய இவர்களது கனவு இல்லங்களில் காட்சிக்குக் கூட மண்முற்றம் இருக்காது. சிமெண்டாலோ பளிங்குக் கற்களாலோ நிலத்தடி நீருக்குக் கல்லறை கட்டிவிட்டு எந்த இயற்கையை ரசிக்க இவர்கள் புறப்பட்டு வருகிறார்கள்?

இதற்கெல்லாம் முற்றுப்புள்ளிவைக்க அரசு கீழ்கண்ட நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

அறிவிக்கப்பட்ட வனப்பகுதியில் மட்டுமன்றி, குறிப்பிட்ட சுற்றுவட்டப் பகுதிகளிலும் சுற்றுலாவைத் தடைசெய்ய வேண்டும். ரிசார்ட்டுகள் அனைத்தும் அகற்றப்பட வேண்டும்.

ஜார்க்கண்ட், உத்தரகண்ட் பகுதிகளில் உள்ளதுபோல பழங்குடி மக்களைப் பாதுகாப்பதற்காக அவர்களுக்கு அதிகாரம் வழங்கும் வன உரிமைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும். காடுகளைப் பாதுகாக்கும் பொறுப்பில் இருந்து வனத்துறை விடுவிக்கப்பட்டு பழங்குடி மக்களால் தேர்வு செய்யப்படும் ஊர் குழுக்களிடம் அப்பொறுப்பு வழங்கப்பட வேண்டும்.

வனத்துறையினர் மற்றும் சுற்றுச்சூழல் வல்லுநர்களைக்கொண்ட கண்காணிப்புக்குழு அமைக்க வேண்டும்.

வனப்பகுதிக்கு வெளியே உள்ள 5 ஏக்கருக்கு மேல் உள்ள தனியார் தோட்டங்களை அரசு கையகப்படுத்த வேண்டும்.

இப்பகுதியில் வாழும் நிலமற்ற ஏழை மக்களுக்கு மூன்று ஏக்கர் விவசாய நிலமும் ஒரு ஏக்கர் வீதம் மேய்ச்சல் நிலமும் வழங்க வேண்டும்.

அரசு இதனைச் செயல்படுத்தும் விதத்தில் இப்பகுதியில் உள்ள அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் மற்றும் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தையைத் தொடங்கலாம்.

49 "ஓ' என்பது இப்போதைய எதிர்ப்பை ஜனநாயக வழியில் பதிவுசெய்வது. இன்னும் தாமதப்படுத்துவது என்பது அரசே மக்களை ஜனநாயகத்துக்கு வெளியே உள்ள வழிகளைத் தேர்வு செய்யத் தூண்டுவது போலாகும்.

நன்றி தினமணி 5.5.11

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக