3.போலி நிறுவனங்களை கண்டறிந்தால்... மாணவர்களின் பணம் காலியாகாது
ஊட்டி: 'போலி கல்வி நிறுவனங்களை கண்டறிந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என வலியுறுத்தப்பட்டுள்ளது.
கூடலூர் நுகர்வோர் மனித உரிமை சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் - மக்கள் மையம் தலைவர் சிவசுப்ரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கை: தற்போது பிளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளும், மற்ற மாணவர்களுக்கு தேர்வுகளும் முடிந்து பள்ளி விடுமுறை காலம் நெருங்கி விட்டது. பல மாணவர்கள் விடுமுறை காலத்தை பயனுள்ளதாக கழிக்க துணை கல்வியாக கம்ப்யூட்டர் பயிற்சி, தட்டச்சு பயிற்சி பெற செல்கின்றனர்.
இதேபோல 10ம் வகுப்பு, பிளஸ் 2 கல்வி முடித்தவர்கள் மேல் கல்விக்காக ஆசிரியர் பயிற்சி, கம்ப்யூட்டர் பயிற்சி, தொழில்நுட்ப பயிற்சி உள்ளிட்ட பல பயிற்சிகளை சேர்கின்றனர். இவர்கள் சேரும் கல்வி நிறுவனங்கள் பல்வேறு கவர்ச்சி கரமான திட்டங்கள், பயிற்சிகள் என அறிவித்து மாணவர்களை கவர்ந்திழுக்கின்றனர். நன்கொடை இல்லை, தரமான கல்வி, பல்கலை கழக சான்று, அரசு அங்கீகாரம் என பல நிலைகளில் விளம்பரப்படுத்துகின்றனர். சில கம்ப்யூட்டர் நிறுவனங்கள் 'ஸ்காலர்ஷிப்' என்ற பெயரிலும் ஏமாற்றுகின்றனர். இதுபோன்ற பயிற்சிகள், மேல்படிப்புகள் சேர விரும்பும் மாணவர்கள், அந்நிறுவனங்கள் அங்கீகரிக்கப்பட்டவையா என அறிவது அவசியம். கம்ப்யூட்டர் பயிற்சி எங்கு வேண்டுமானாலும் பயிலலாம். ஆனால், முறையான சான்றிதழ் வேண்டுமெனில் தொழில்நுட்ப கல்வித்துறை, தமிழ்நாடு அரசு சான்று அல்லது பல்கலை கழக சான்று மட்டுமே பயனளிக்க கூடியதாக அமையும். பல கம்ப்யூட்டர் நிறுவனங்கள் தங்களை சில பல்கலை கழகங்களின் கீழ் செயல்படுவதாக அறிவித்து பயிற்சி அளித்து பின்னர் உரிய கட்டணங்கள் பெற்று பல்கலை கழக சான்று அளிக்காமல் இழுத்தடிப்பு செய்வதாக புகார்கள் வருகின்றன. இதே போல போலி சான்றிதழ்களும் வழங்கியுள்ளனர். மாணவர்கள் தேர்வுக்கு செல்லும் போதுதான் இதன் உண்மை நிலை தெரியும்.
அப்போது ஏமாற்றப்பட்டதை எண்ணி வேதனைப்படுவதும், போராட்டம் நடத்துவதும், வழக்குப்போடுவதும் இழந்ததை மீட்டு தராது. எனவே, கல்வி நிலையம் எந்த பல்கலைக் கழகத்துடன் இணைந்துள்ளது; எந்தெந்த பாட பிரிவுகளுக்கு அனுமதி பெற்றுள்ளது என்பன உள்ளிட்ட தகவல்களை உறுதிபடுத்தி மாணவர்கள் சேர வேண்டும்;
இதுபோன்ற மோசடிகளில் ஈடுபடும் கல்வி நிறுவனங்களை சம்மந்தப்பட்ட துறையினர் ஜூன் மாதம் அல்லது கல்வி துவங்கும் காலத்திற்கு முன்னர் உரிய ஆய்வுகள் மேற்கொண்டு அவர்களை கண்காணிப்பது அவசியம். இதன்மூலம் போலி கல்வி நிறுவனங்கள் துவங்காமல் இருக்கவும் அவை கட்டுப்படுத்த முடியும். இதுபோன்ற நேர்மையற்ற வணிக நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, சிவசுப்ரமணியம் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக