அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

புதன், 31 அக்டோபர், 2012

தீபாவளி நெரிசலை தவிர்க்க கூடுதல் பஸ்கள் இயக்க கோரி...




தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சமவெளி பகுதிகளில் இருந்து சொந்த ஊர் வரும் பயணிகளின் நலன் கருதி கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என கூடலூர் நுகர்வோர் மையம் வலியுறுத்தியுள்ளது.

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் அரசு போக்குவரத்து கழக கோவை கோட்ட மேலாண்மை இயக்குநருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது,

நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் பொதுமக்களில் பலர் திருப்பூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு சமவெளி பகுதிகளில் தொழில்களுக்காக சென்றுள்ளனர். இவர்கள் முக்கிய பண்டிகை காலங் களில் சொந்த ஊர்களுக்கு வருகை புரிவார்கள். இதே போல் சுற்றுலா பயணிகளும் விடுமுறையை கொண்டாட நீலகிரிக்கு வருவார்கள். மேலும் சிறுதொழில் புரிவோர், வியாபாரிகளும் பொருட்கள் விற்பனைக்காக அடிக்கடி நீலகிரிக்கு வருகின்றனர். அவர்களின் வசதிக்காக பண்டிகை சமயங்களில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டியது அவசியமாகின்றது.

இந்நிலையில், விரைவில் தீபாவளி பண்டிகை வர உள்ள நிலையில் வெளியூர்களின் பணிபுரிபவர்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் வியாபாரிகள் அதிகளவு நீலகிரி மாவட்டத்திற்கு வரத் துவங்கியுள்ளனர்.

மேலும் நீலகிரி மாவட்டத்தில் இயக்கப்படும் பஸ்கள் அனைத்தும் சமவெளி பகுதிகளில் ஒடி தேய்ந்த பஸ்களாகும். இவைகள் அடிக்கடி பழுதடைந்து விடுகின்றன. எனவே வரும் தீபாவளி பண்டிகையின் போது பயணிகளின் நலன் கருதி பழுது ஆகாத கூடுதல் பஸ்களை இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

தனியார் வாகன கட்டணங்கள் உயர்வு:ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

பந்தலூர் : "அதிகரிக்கும் தனியார் டாக்சி, ஆட்டோ கட்டண உயர்வு குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,' வலியுறுத்தப்பட்டுள்ளது
.கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம் ஆலோசனை கூட்டம் பந்தலூரில்நடந்தது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

 ரேஷன் கடைகளில் வழங்கப்படும் கெரசின் ஒதுக்கீட்டை முழுமைப்படுத்திட வேண்டும்; 

மளிகை கடைகளில் விலைப்பட்டியல் வைக்காதது குறித்தும், மளிகை மற்றும் பெட்டி கடைகளில் உரிய முகவரி, தேதி இல்லாமல் தரமற்ற முறையில் விற்பனை செய்யப்படுவதையும் கண்காணிக்க வேண்டும்; 

ரேஷன் கார்டு கோரி விண்ணப்பித்தவர்களுக்கு உரிய பதில் தெரிவிக்க வேண்டும்;

 உள்ளூர் கிராமப்புறங்களுக்கு போதிய பஸ் வசதியும், தீபாவளி சீசன் காலங்களில் கூடுதல் பஸ் இயக்கவும் வேண்டும். 

மாவட்டத்தில் டாக்சி வாகனங்கள், ஆட்டோக்களின் திடீர் கட்டண உயர்வு குறித்து ஆய்வு செய்ய வேண்டும்; 

பந்தலூர் அரசு மருத்துவமனையில் போதிய டாக்டர்கள் இருந்தும் உதவியாளர்கள் இல்லாதது குறித்தும், 

மாவட்டத்தில் மருந்து கட்டுப்பாட்டு அலுவலர் உரிய பணியை மேற்கொண்டு, தடை செய்யப்பட்ட மருந்துகள் விற்பனையை தடுக்கவும் வேண்டும் 

என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 தலைவர் சிவசுப்ரமணியம் தலைமை வகித்தார்.

 பொது செயலாளர் கணேசன், இணைசெயலாளர்கள் செல்வராஜ், ஜெயச்சந்திரன் முன்னிலை வகித்தனர்
.தனிஸ்லாஸ் வரவேற்றார். 
நௌசாத் நன்றி கூறினார்.

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

நுகர்வோர் மைய ஆலோசனை கூட்டம்



கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்று சூழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையத்தின் ஆலோசனைக்கூட்டம் பந்தலூரில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் தலைமை வகித்தார். 

பொது செயலாளர் பொன் கணேசன், இணைச்செயலாளர்கள் செல்வராஜ், ஜெயசந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 பந்தலூர் வட்டார பொறுப்பாளர் தனிஸ்லாஸ் வரவேற்றார்.

இதில், நியாய விலைக்கடையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட மண்ணெண்ணெய் அளவு குறைவாக உள்ளதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
கூடுதலாக மண்ணெண்ணை ஒதுக்கீடு செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாவட்டத்திலுள்ள ஓட்டல்களில் விலையுயர்ந்து வருவதால் மக்கள் பெரும் இக்கட்டான சூழல்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதையும் மாவட்ட விலை கண்காணிப்பு குழு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 மாவட்டத்தில் தனியார் வாகனங்கள் மற்றும் ஆட்டோக்களில் அரசு விதித்த கட்டணங்களை பின்பற்றாமல் தன்னிச்சையாக கட்டணங்களை நிர்ணயித்து வசூலித்து வருவதால் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பந்தலூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இருந்தும் போதிய மருத்துவ உதவியாளர்கள் இல்லாததால் உள் நோய்யாளிகளை அதிக அளவில் அனுமதிப்பது இல்லை. உடனே கூடுதல் உதவியாளர்களை நியமிக்க வேண்டும். மேலும் பிணவறை திறக்கப்படாமல் உள்ளது திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பல மருந்தங்களில் காலவாதியான, தடை செய்யப்பட்ட மருந்துகள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. எனவே மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளர்கள் அனைத்து கடைகளிலும் உரிய ஆய்வு மேற்கொள் வேண்டும்.

அரசு பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்களின் கல்வி கேள்வி குறியாகி உள்ளது. கூடலூர் கல்வி மாவட்டத்திற்கு கூடுதல் கல்வி ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் நுகர்வோர் மன்ற நிர்வாகிகள் கனகலிங்கம் இந்திராணி தேவதாசு, கதிரேசன் ,சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இறுதியில் நவ்சாத் நன்றி கூறினார்.

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

புதன், 24 அக்டோபர், 2012

அரசு கேபிள் டிவி கார்பரேஷன் சார்பில் ரசீது வழங்க நடவடிக்கை

கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதி அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்கள், வாடிக்கையாளர்களிடம் ரூ.100 வசூலிப்பதாக, கூடலூர் நுகர்வோர் மனித வள பாதுகாப்பு மையம் புகார் தெரிவித்துள்ளது.
நுகர்வோர் பாதுகாப்பு மையத் தலைவர் சு. சிவசுப்பிரமணியம், மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள புகார் மனுவில் கூறியிருப்பது:
குறைந்த கட்டணத்தில் சேவை வழங்க கேபிள் டிவியை அரசு ஆரம்பித்தது. இந் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டபோதே உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்களை அழைத்து விதிமுறைகளை அறிவித்தது. இந்த நடைமுறைகளுக்கு கட்டுப்பட்டவர்களை மட்டுமே அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் இணைத்துக் கொண்டது.
மாதந்தோறும் வாடிக்கையாளர்களிடமிருந்து ரூ.70 வசூலிக்க வேண்டும் என்றும், அதில் ரூ.20-ஐ அரசுக்குச் செலுத்த வேண்டும் என்றும் அறிவித்திருந்தது. இதற்கு ஒப்புக்கொண்ட ஆபரேட்டர்கள், இப்போது பல பகுதியிலும் ரூ.100 வசூலிக்கின்றனர்.
கூடுதல் பணம் தர மறுப்பவர்களின் இணைப்புகள் துண்டிக்கப்படுவதாகப் புகார்கள் வந்துள்ளன.
மேலும், அரசு நிபந்தனைக்கு மாறாக 40 முதல் 50 சேனல்கள் மட்டுமே ஒளிபரப்பப்படுகின்றன. அதிலும், பெரும்பாலான சேனல்கள் தெளிவாகத் தெரிவதில்லை.
ஆபரேட்டர்கள் வசூலிக்கும் தொகைக்கு அரசு கேபிள் டிவி கார்பரேஷன் சார்பில் ரசீது வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.


கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

"வீட்டுக்கு ஒரு மரம் வளருங்கள்,

""வீட்டுக்கு ஒரு மரம் வளருங்கள், அது நாட்டுக்கு நல்லது'' என்ற வாசகங்களை நிறைய இடங்களில் பார்த்திருப்போம் அல்லது வாசித்திருப்போம். "மரம் வளர்த்தால் மழை கிட்டும்'. இதெல்லாம் சரிதான், ஆனால் இவற்றைச் சொன்னபடி யாராவது செய்கிறார்களா?  மக்கள்தான் செய்யவில்லை. ஆளும் அரசுகள் செய்கின்றனவா என்பதே நம் கேள்வி.
 அண்மையில் தில்லி மெட்ரோ ரயில் திட்டத்தின் மூன்றாவது கட்ட விரிவாக்கப் பணிக்காக 14,300 மரங்கள் வெட்டப்படும் என்று தில்லி மெட்ரோ கூறியுள்ளதாக மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 அப்படி வெட்டப்படும் மரங்களுக்கு இணையாக புதிய  மரக்கன்றுகளை நடுவதற்கு தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் இழப்பீட்டுத் தொகை வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 பல கிராமங்களில் மரக்கன்றுகள் நடும் விழா, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, கிராமங்களில் பசுமை இயக்கம் இப்படியெல்லாம் நடந்தேறி வருகிறது. இது நல்ல விஷயம்தானே, இதில் என்ன தவறு இருக்கிறது என்று கேள்வி எழுவது இயற்கைதான்.
 பலன்தரும் மரங்களை நடாமல் வெறும் நிழலுக்காகவும் வண்ணவண்ண பூக்களுக்காகவும் மரங்கள் நடப்படுகின்றன; சாலையின் இருபுறமும் நூல் பிடித்தாற்போல காட்சி தரவும், கிளைகள் படர்ந்து வீடுகளைத் தொடாமல் விண் நோக்கி மட்டுமே வளரும் வகையிலும் (அவென்யு ட்ரீஸ்) கன்றுகள் தேர்வு செய்யப்படுகின்றன.
 அப்படியல்லாமல், மக்களுக்குத் தேவைப்படும் மலர்கள், காய்கள், கனிகள் போன்றவை கிடைக்கும் வகையிலான மரங்களை நடவேண்டும். மாமரம், புளியமரம், பலா மரம், புங்கன், பூவரசு, அத்தி, ஆலமரம், வேம்பு, மலைவேம்பு, இலுப்பை என்று விதவிதமாக மரங்களைத் தேர்வு செய்து நடவேண்டும். கொய்யா, சப்போட்டா,பப்பாளி, நெல்லி, இலந்தை போன்ற மரங்களைக்கூட இடத்துக்கேற்ப நட்டு வளர்க்கலாம்.
  வேளாண் துறையிலோ வனத்துறையிலோ கையிருப்பில் இருக்கிறது என்பதற்காகவோ, நர்சரியில் இதுதான் கிடைத்தது என்றோ கடனுக்கு நடுவது யாருக்கும் பயனின்றி வீணாகும். சில மாதங்களிலேயே அந்த மரக்கன்றுகள் பராமரிப்பின்றியும் வாடிவதங்கிவிடும்.
 இன்று பல்வேறு நிறுவனங்கள் மரக்கன்றுகளை நடுவதற்காக போட்டி போட்டுக் கொண்டு விழாக்களை நடத்துவதற்கு பின்னால் பெரிய பின்னணி இருக்கிறது. எந்த ஆலையால் சுற்றுச் சூழல் மாசுபடுகிறதோ அந்த ஆலைகள்தான் மரக்கன்றுகளை நட உதவுகின்றன.
 ஆலைகளின் உள்புறத்தை வெளியிலிருந்து யாரும் காணாதபடிக்கும் மரங்களை வளர்க்கின்றனர். காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சும் தைல மரங்கள் போன்றவையும் பல தொழிற்சாலை வளாகங்களில் நடப்படுகின்றன.
 மரக் கன்றுகளை நல்லவிதமாக நட்டு பராமரித்தால் 10ஆம் ஆண்டிலிருந்து நல்ல பலன்கள் கிடைக்கத் தொடங்கிவிடும்.
 மரக்கன்று வளர்த்தல், தோட்டம் அமைத்தல் இன்று அத்தியாவசியமானதாகி விட்டது. ஏனென்றால் மழை, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு இது அவசியம். மழைநீர் சேகரிப்புக்கு அரசு கட்டாயச் சட்டம் கொண்டுவந்ததுபோல அனைவரும் மரக்கன்று நட வேண்டும் என்ற சட்டம் கொண்டுவர வேண்டும்.
 தனியார் ஆலைகளைப் பொருத்தவரை அதிகமாக மரங்கள்,  தோட்டங்கள் அமைக்க வேண்டும் என்ற விதியே உள்ளது.
அப்படிச் செய்வதால் ஆலைகளிலிருந்து வெளியாகும் "கார்பன்-டை-ஆக்ûஸடு' போன்றவற்றை மரங்கள் உறிஞ்சுவதும், ஆக்ஸிஜனை வெளியிடுவதும் நடைபெறுகிறது. இதை ஒருவகையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்று ஒப்புக்கொள்ளலாம்.
 பாலங்கள், கட்டடங்கள். சாலைகள் புதிதாக அமைக்கப்படும்போது பிரம்மாண்ட மரங்கள் வெட்டப்படுவதைத் தடுக்க வேண்டும். வாய்ப்பிருந்தால் வேறு இடங்களில் வேருடன் நட முயற்சி செய்ய வேண்டும்.
 ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கில் தென்னை போன்ற மரங்கள் அழிக்கப்பட்டால் கிராமப் பொருளாதாரமே சீரழியும்.
 வனவளமும் இன்று பெருமளவில் அழிக்கப்பட்டு வருகிறது. இதற்குக் காரணம் விஷமிகள் கடத்தலில் ஈடுபடுவதுதான். இவர்கள் வனத்தில் சட்டவிரோத செயல்களில் இறங்கி, பின்னர் மரங்களை தீவைத்துக் கொளுத்துகின்றனர். இது அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகளாகிவிட்டன.
 இதுபோன்ற செயல்களைத் தடுக்க கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும். மரக்கன்றுகளை வளர்ப்பதிலும் வனவளத்தைப் பாதுகாப்பதிலும் அனைவருமே அக்கறை செலுத்த வேண்டும்.

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

ஞாயிறு, 21 அக்டோபர், 2012

நடுவட்டம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச் சூழல் பாதுகாப்பு மையம
 
கூடலூர்  அருகே நடுவட்டம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச் சூழல் பாதுகாப்பு மையம்-மக்கள் மையம், நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம்,  
ரீப் மினிஸ்ட்ரிஸ்  ஷாலோம் சாரிட்டபிள் டிரஸ்ட்,  ஆகியன  சார்பில்,
நடுவட்டம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்
இலவச கண் சிகிச்சைமுகாம் நடந்தது.
முகாமுக்கு கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையத் தலைவர் சிவசுப்ரமணியம் தலைமை வகித்தார்

நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க திட்ட மேலாளரும் உதகை அரசு மருத்துவமனை மருத்துவருமான  அமராவதி ராஜன்
தலைமையிலான குழுவினர், பார்வை குறைபாடு உடையவர்களை பரிசோதித்து ஆலோசனை வழங்கினர்
முகாமில்  நடுவட்டம் டி ஆர் பஜார் ஊக்கர் டெரஸ் உள்ளிட்ட பல்வேறு  கிராம பகுதிகளை சேர்ந்த  70க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கண் புரை அறுவை சிகிச்சைக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 5 பேர், ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.  
நிகழ்ச்சிக்கான  எற்பாடுகளை  கூடலூர் நுகர்வோர் மைய நிர்வாகிகள் சூரியகுமார் வேலு பிள்ளை நடுவட்டம் தன்ராஜ்  செய்திருந்தனர்
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

செவ்வாய், 2 அக்டோபர், 2012

கூடுதல் பேருந்துகளை முறைப்படுத்தி இயக்க பொதுமக்கள் எதிர்பார்ப்பு

ஜீப் கட்டண உயர்வு எதிரொலி
கூடுதல் பேருந்துகளை முறைப்படுத்தி இயக்க பொதுமக்கள் எதிர்பார்ப்பு
கூடலூர், அக்.1:
கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதிகளில் டீசல் விலை உயர்வு காரணமாக பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் ஜீப் கட்டணம் அடுத்தடுத்து உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் தினமும் வாகனங்களில் பயணிப்போர், தொழிலாளர்கள், ஊழியர்கள், பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
பேருந்து கட்டணம் உயர்வதற்கு முன்னதாகவே ஜீப்களில் பல முறை கட்ட ணம் உயர்த்தப்பட்டது. தொடர்ந்து பேருந்து கட்டணம் உயர்ந்ததை அடுத்து அதன் அடிப்படையில் மீண்டும் ஒரு முறை கட்டணம் உயர்த்தப்பட் டது. டீசல் விலை உயர்வு காரணம் காட்டி 2 முறை ஜீப் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதுபோன்ற கட்டண உயர்வு காரணமாக பாதிக்கப்படும் பொதுமக் களை பாதுகாக்கும் வகை யில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இங்குள்ள வழி தடத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வழி தடத்தி லும், பேருந்து கட்டணத்தை விட ரூ.7 முதல் ரூ.8 வரை ஜீப் கட்டணம் அதிகமாக உள்ளது. பேருந்துகள் சில சமயங்களில் உரிய நேரத்தில் இயக்கப்படாததாலும், ஒரு நேரத்தில் ஒரே வழி தடத்தில் 2, 3 பேருந்துகள் அடுத்தடுத்து செல்வதாலும், அடுத்து வரும் பேருந்துக்காக மணி கணக்கில் காத்து கிடக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, பொதுமக்கள் ஜீப்களை நாட வேண்டியுள்ளது.
இது குறித்து கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மைய நிர்வாகி சிவசுப்ரமணியம் கூறுகையில், “கூடலூர், பந்தலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நகர பேருந்துகளை இயக்க வேண்டும் என்று கடந்த சில ஆண்டுகளாக வே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தொடர்ச்சியாக மனுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஆனால் இதற்கான நடவடிக்கை தாமதமாகி வருகிறது. உள்ளூர் பேருந்துகளை போதிய அளவில் இயக்க வேண்டும். சரியான நேரத்தில் முறைப்படுத்தி பேருந்துகளை வழிதடத்தில் இயக்கும் வகையில் நிர்வா கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒரே நேரத்தில் ஒரே வழி தடத்தில் அடுத்தடுத்து செல்லும் பேருந்துகளின் நேரத்தை மாற்றி அமைத்து சீரான இடைவெளியில் பேருந்துகளை இயக்க வேண்டும்.
கூடலூரில் இருந்து பந்தலூருக்கு வரும் வழியில் நிறுத்தங்கள் அதிகளவில் உள்ளது.
காலை, மாலை நேரங்களில் இப்பகுதியில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும்.
இதற்கான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம், போக்குவரத்து கழகம் எடுக்க வேண்டும்,� என்றார்.

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

பரவும் கொலைவெறி காதல் தடம் மாறும் மாணவ பருவம்


பரவும் கொலைவெறி காதல் தடம் மாறும் மாணவ பருவம்
காதல்
காதல் காதல்...காதல் போயின், சாதல்...சாதல்...சாதல் & இப்படி சொல்லி விட்டுப் போய் விட்டார் பாரதி. காதலுக்காக உயிரையும் விடுவான் என்ற பொருளில் அந்த கவி சொன்னது...
இன்று வேறு வகையில் இளைஞர்களிடம் பரவி விட்டது. காதல்...கொலை வெறி வரை கொண்டு போய்விட்டுள்ளது.
தன்னுடன் படித்து வந்த சுருதிமேனனை காதலித்து திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்பது அஜிம் அயூப்பின் விருப்பம். அபிநயா மீதும் வேணுகோபாலுக்கு ஏற்பட்டது காதல் தான்.
ஆனால் சுருதிமேனனும், அபிநயாவும் காதலை ஏற்றுக்கொள்ள மறுத்ததால் கொலை செய்து விட்டு தங்களை மாய்த்துக்கொள்ளும் முடிவை அஜிம் அயூப்பும், வேணுகோபாலும் எடுத்துள்ளனர்.
கொலை சம்பவங்களில் ஈடுபடுவதற்கு முன்பு வரை இவ்விரு இளைஞர்களும் தங்கள் பெற்றோரிடமும், நண்பர்களிடமும் பரம சாதுவாக தான் இருந்தனர். “அஜிம் இப்படி ஒரு காரியத்தில் இறங்குவான் என்று நாங்கள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. வகுப்பறையில் இருந்தால் எங்களுடன் எப்போதும் அரட்டை கச்சேரிக்கு பஞ்சமிருக்காது. ஆனால் கடைசி வரையில் இப்படி ஒரு கொடூரமான முடிவை எடுக்கக்கூடும் என்று நாங்கள் எதிர்பார்க்கவேயில்லை என்கின்றனர் நான்கு ஆண்டுக்கு மேலாக அவருடன் படித்து வந்த நண்பர்கள்.
இதே நிலை தான் வேணுகோபாலுக்கும். தனது பெற்றோரின் குடும்ப சுமையை குறைப்பதற்காக 16 வயதிலேயே வேலைக்கு சென்றார். சமீபத்தில் தான் எஸ்எஸ்எல்சி தேர்வு எழுதவேண்டும் என்ற எண்ணமே வந்து அதற்காக தயாராகி வந்தது தெரியவந்துள்ளது.
இரு சம்பவங்களும் அடுத்தடுத்து ஒரே நகரில் நடந்ததால் தற்போது பூதாகரமாகியுள்ளது. ஆனால் இதுபோல் குறைந்தபட்சம் வாரத்திற்கு ஒரு சம்பவமாவது நாட்டின் ஏதாவது ஒரு இடத்தில் நடந்து வருகிறது.
கொலைகள் குறைவே:
தமிழகத்தில் கடந்த 2011ல் நடந்த வன்குற்றங்களில்(வயலன்ட் கிரைம்) 1877 பேர் கொலை செய்யப்பட்டவர்களில் காதல் விவகாரத்தினால் மட்டும் 15.8 சதவீத கொலைகள் நடந்துள்ளன. அதாவது 297 பேர் காதல் பிரச்னையால் கொல்லப்பட்ட பெண்கள். இதில் 220 பேர் 20 வயதுக்குட்பட்டவர்கள் என்பது தான் திகைப்பூட்டுவதாக உள்ளது.
அதேபோல் காதல் தோல்வியால் தற்கொலை செய்பவர் எண்ணிக்கையும் மிக அதிகம். தமிழகத்தில் கடந்த ஆண்டு நடந்த தற்கொலையில் 32 சதவீதம் காதல் தோல்வியால் நடந்துள்ளது. இதில் பெரும்பாலானோர் 25 வயதுக்குட்பட்ட ஆண், பெண் இருபாலருமே அடங்குவர்.
தற்போதைய பொருளாதார சூழலில், நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த ஒவ்வொரு குடும்பத்திலும் கணவனுடன் மனைவியும் சேர்ந்து உழைத்தால் மட்டுமே குடும்பத்தை ஓரளவேனும் கவுரவமாக நடத்தமுடியும் என்பது எதார்த்த நிலை. ஆனால் இதுபோன்ற கொடூர சம்பவங்கள் பெண் பிள்ளைகளை வளர்க்கும் பெற்றோருக்கு ஒவ்வொரு நாளும் தவிப்பு தான். பள்ளிக்கும், கல்லூரிக்கும் செல்லும் தன் குழந்தை பாதுகாப்பாக வீடு வந்து சேரும் வரை கவலை நீடிக்கவே செய்கிறது.
இதற்கு பிரதான காரணங்கள் கலாச்சார மாற்றமும், பெருகி வரும் நவீன தொழில்நுட்பங்களும் தான் என்று சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.
என்ன செய்யலாம்:
வீட்டுக்கு வெளியே குழந்தைகள் நடவடிக்கையை பெற்றோர் கண்காணிக்கவேண்டும். பள்ளி அல்லது கல்லூரிக்கு சென்று திரும்பும் தனது குழந்தை காலதாமதமாக வந்தாலோ அல்லது மனரீதியாக பாதிக்கப்பட்டிருந்தாலோ அதற்கான காரணங்களை பெற்றோர் அறிந்து கொள்ள முன்வரவேண்டும். இளம் பருவத்து பிள்ளைகளிடம் கண்டிப்பு காட்டும் பெற்றோராக இருப்பதை காட்டிலும் நண்பர்களாக இருந்து நல்வழிப்படுத்துவது தான் சிறந்த வழி. பெரும்பா லும் கல்லூரி பருவத்து மாணவ, மாணவிகளிடம் ஏற்படும் பெரிய பாதிப்புகள் காதல் விவகாரம் அல்லது தீய பழக்க வழக்கங்களுக்கு ஆளாகுதல் மட்டுமே.
மாறி விட்டது போக்கு:
பள்ளி, கல்லூரிகளில் முன்பு ஆசிரியர்&மாணவரிடையே தூய்மையான உறவு இருந்தது. கண்டிக்கவேண்டிய நேரத்தில் கண்டிப்பு காட்டிய ஆசிரியர்கள், பலர் தங்கள் மாணவர்களின் எதிர்காலத்திலும் கவனம் செலுத்தினர். ஆனால் இப்போது ஆசிரியர்&மாணவரிடையே இடைவெளி ஏற்பட்டுள்ளது.
இது கல்வி வணிகமயமாகிப்போனதன் விளைவு. தவறு செய்யும் மாணவனை கண்டிக்க முனையும்போது பெற்றோரிடமிருந்து வரும் எதிர்மறையான விளைவு ஏற்படுகிறது. இதனால் சமூக அக்கறை கொண்ட ஆசிரியர்கள் கூட ஒதுங்கி செல்கின்றனர் என்கிறார் ஆசிரியர் சந்திரசேகர்.
அதேபோல் வணிக நோக்கத்துடன் நடத்தப்படும் சில கல்வி நிறுவனங்களில், பணம் கறக்கும் பசுவாக தான் மாணவர்கள் பார்க்கப்படுகின்றனர். அவர்களது நடவடிக்கை தவறாக தெரிந்தால் கூட கண்டித்து திருத்துவதை காட்டிலும், அதன் மூலம் காசு பார்ப்பதில் தான் குறியாக உள்ளனர். ஒரு வகுப்பறையில் மாணவ& மாணவியரி டையே தோழமை இருப்பது தவறில்லை. ஆனால் வரம்பு மீறும் நடவடிக்கைகள் கல்லூரிக்கு வெளியில் நடந்தால் கூட அதை கண்டிக்கும் மனப்பக்குவம் கல்லூரி நிர்வாகங்களுக்கும் ஏற்படவேண்டும்.இதுபோன்ற பிரச்னைகளை களைந்தாலே கொலைவெறி சம்பவங்களுக்கு முடிவு கட்டமுடியும்.
வன்முறை அதிகரிக்கும் பின்னணி 
கோவையில்
பிரபல தனியார் கல்லூரியில் முதுகலை வணிகம் படித்து வந்த 20 வயது நிரம்பிய மாணவி சுருதிமேனன். கடந்த 22ம் தேதி மாலை கோவை வடவள்ளியில் வீட்டில் இருந்தபோது அங்கு வந்த சக வகுப்பு தோழர் அஜிம் அயூப் கத்தியால் கொடூரமாக குத்தி கொலை செய்யப்பட்டார்.
கண் எதிரில் மகள் கொல்லப்படுவதை தடுக்க முயன்ற சுருதிமேனன் தாய் லதாவையும் ஆத்திரம் தீர கத்தியால் குத்தினான் அஜிம் அயூப். அதன் பின்னர் கையில் கொண்டு வந்திருந்த அமிலத்தையும், மண்ணெண்ணெய்யையும் தலையில் ஊற்றி தீ வைத்துக்கொண்டு சுருதிமேனன் மீது விழுந்து இறந்து தற்கொலை செய்து கொண்டான்.

இந்த சம்பவம் நடப்பதற்கு சரியாக 24 மணி நேரத்திற்கு முன்பு கோவையில் 14 வயதே நிரம்பிய அபிநயாவும் கொடூரமாக கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார். இதை செய்தது, அபிநயா வீட்டுக்கு எதிரில் வசித்து வந்த 21 வயது நிரம்பிய வேணுகோபால். அபிநயாவை கொலை செய்த கையோடு தானும் கழுத்தை அறுத்துக்கொண்டு இரண்டு நாள் போராட்டத்திற்கு பின் உயிரிழந்தான்.
பெண் குழந்தைகளை வைத்துள்ள பெரும்பாலான பெற்றோரை பதற வைத்த இவ்விரு சம்பவத்திற்கும் பின்னணி காரணம் காதல் மட்டுமே.
இந்த பயங்கர சம்பவங்களின் வடு இன்னும் மறையவில்லை; கோவை மக்களிடம் பீதி இன்னும் விலகவில்லை.
“ பெரும்பாலான பெற்றோர் தங்கள் குழந்தைகள் காதலில் விழுந்தால் அதை ஒரு பெருங்குற்றமாகவே பார்க்கின்றனர். காதல் மீது தங்களுக்குள்ள தவறான மனோபாவத்தை கை விட்டு, காதலின் உண்மையை அவர்களுக்கு உணர்த்தவேண்டும்.
பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்காக நேரத்தை ஒதுக்க வேண்டும். பெற்றோர் & பிள்ளைகளிடையே ஒருங்கிணைப்பு இருந்தாலே 95 சதவீத பிரச்னைகள் தீர்ந்து விடும். மாணவ, மாணவிகள் தங்கள் மனதில் ஏற்படும் பிரச்னைகளை உடனடியாக தங்களது பெற்றோரிடம் தெரிவித்தால் உடனடி தீர்வு ஏற்படும்.
இதை மாணவர்கள் உணர வேண்டும். பயிற்றுநர்கள், பெற்றோர்கள் மாணவர்களிடம் நெருங்கி பழகுவதன் மூலம் மாணவர்களின் தவறான எண்ணங்களை கண்டறிந்து உடனடியாக தீர்க்கலாம் என்கிறார் கோவையை சேர்ந்த மனநல நிபுணர் மோனி.

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

மானியங்களுக்கு வே ட் டு

மானியங்கள்...இது தான் இப்போது ஹாட்டான சப்ஜெக்ட். இதை படிப்படியாக குறைத்து வந்தாலே நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வழி காண முடியும் என்ற நம்பிய மத்திய அரசு இப்போது இந்த ஆயுதத்தை கையில் எடுத்துள்ளது.
டீசல் விலையை லிட்டருக்கு ரூ.5 உயர்த்தி மத்திய அரசு சமீபத்தில் உத்தரவிட்டது; சமையல் எரிவாயு சிலிண்டருக்கு கட்டுப்பாடு கொண்டு வந்தது. இதை எதிர்த்து என்ன தான் பந்த் , போராட்டங்களை எதிர்கட்சிகள் நடத்தினாலும், மசியவில்லை ; மடங்கவும் இல்லை அரசு.
நாட்டு மக்களிடம் டிவியில் பேசிய பிரதமர் மன்மோகன், எல்லாவற்றுக்கும் காரணம், மானியங்கள் தான். கெரசின் தவிர, மற்ற எல்லாவற்றுக்கும் தரப்படும் மானியத்தை ஒழிக்காமல் விடாது அரசு என்று சூளுரைத்தார்.
ரேஷன் சர்க்கரையில் முதலில் மத்திய அரசு கைவைக்கப்போகிறது என்ற தகவல் கசிந்துள்ளது. போகப்போக ரேஷன் பொருட்கள் எல்லாமே கசக்கும் என்று தெரிகிறது.
தமிழக நிலைமை:
தமிழகத்தில் பொது விநியோகத்திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் வழியாக குறைந்த விலைக்கு பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. கார்டு தாரர்களுக்கு இலவசமாக 20 கிலோ அரிசி வழங்கப்படுகிறது. அந்தியோதயா திட்ட கார்டுதாரர்களுக்கு 35 கிலோ அரிசி வழங்கப்படுகிறது சர்க்கரை ரூ.13.50 க்கும், கோதுமை ரூ.7.50 க்கும், மண்ணெண்ணெய் ரூ.13.75 க்கும், துவரம்பருப்பு ரூ.30க்கும் உளுத்தம்பருப்பு ரூ.30 க்குமு பாமாயில் லிட்டர் ரூ.25 க்கும் வழங்கப்படுகிறது.
இவ்வாறு குறைந்த விலைக்கு பொருட்கள் வழங்குவதில் மத்திய அரசின் மானியமும் உள்ளது. உதாரணத்துக்கு ரேசன் கடைகளில் சர்க்கரை ரூ.13.50 க்கு விற்கப்படுகிறது. இந்த சர்க்கரை, ஆலைகளில் ரூ.19.50 க்கு பெறப்பட்டு ரூ.13.50க்கு விற்கப்படுகிறது. இடைப்பட்ட தொகையை மானியமாக மத்திய அரசு வழங்கி வருகிறது. அதே போல அரிசிக்கும், அரிசி அரைப்பதற்காக அரவைக்கும், நெல்கொள்முதலுக்கும் மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது. அதே போல வெளிச்சந்தை கொள்முதல் ரேசன் பொருள் விநியோகத்துக்கு மாநில அரசும் தன் பங்குக்கு மானியம் வழங்கி வருகிறது.
தற்போது மானியங்கள் வழங்குவதால் நிதிச்சுமை அதிகரித்துள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலையை ஏற்றினால் மானிய சுமையிலிருந்து மத்திய அரசு தப்பிக்கும். எனவே அத்தியாவசிய பொருட்கள் விலையை உயர்த்தலாம்.
உதாரணத்துக்கு சர்க்கரை விலையை ரூ.13.50 லிருந்து ரூ.25.50 ஆக உயர்த்தினால் மானியமே வழங்க வேண்டியதில்லை. இதே போலவே ஒவ்வொரு பொருளின் விலையையும் உயர்த்தும் பட்சத்தில் மத்திய அரசுக்கு மானிய சுமை இருக்காது என்று மத்திய அரசின் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சகம், மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கியது.
தொடர்ந்து ரேசன் பொருட்களின் விலையை உயர்த்தலாம் என்ற முடிவுக்கு வந்த மத்திய அரசு, 25 ம் தேதியன்று பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சக ஆலோசனைக்கூட்டத்தை நடத்தி, முடிவு செய்யலாம் என்ற நிலையில் இருந்தது.
பண்டிகை காலம் என்பதால், டிசம்பர் வரை ரேஷன் பொருட்களின் விலையை மாற்றுவதில்லை என்ற நிலைப்பாட்டை அரசு மேற்கொண்டுள்ளது. என்றாலும் மானியங்கள் மீது கை வைக்கும் எண்ணத்திலிருந்து அரசு பின்வாங்கவில்லை.
அரிசி வருவது எங்கே:
அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்துக்கான மத்திய தொகுப்பிலிருந்து மாதம் ஒன்றுக்கு 65 ஆயிரத்த 262 மெட்ரிக் டன் அரிசி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்த அரிசிக்கு இந்திய உணவுக்கழகம் விற்பனை விலையாக ரூ.3 நிர்ணயித்துள்ளது. ஆனால் தமிழகத்தில் இலவசமாக வழங்கப்படுகிறது. வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கான திட்டத்தின் கீழ் மொத்தம் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 936 மெட்ரிக் டன் அரிசி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதன் விலை கிலோ ரூ.5.65. 
இலவசமாக வழங்கப்படுகிறது.
வறுமைக்கோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்காக ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 255 மெட்ரிக் டன் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதன் விலை கிலோ ரூ.8.30 இவ்வாறு கூடுதல் விலைக்கு கொள்முதல் செய்யப்படும் அரிசி, இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கான இடைப்பட்ட தொகையை மத்திய மாநில அரசுகள் தருகின்றன. தமிழகத்தின் பொது விநியோகத்திட்டத்துக்கு மாதம் 3.82 லட்சம் மெட்ரிக் டன் அரிசி தேவையாகும். தற்போதைய மாதாந்திர நுகர்வு 3.14 லட்சம் மெட்ரிக் டன். மத்திய அரசின் மாதாந்திர ஒதுக்கீடு 2.96 லட்சம் டன்.
சர்க்கரை கசக்கும்:
மத்திய அரசின் மாதாந்திர லெவி சர்க்கரை ஒதுக்கீடு 10,833.5 மெட்ரிக் டன்னாகும். ஆனால் இந்த ஒதுக்கீடு போதுமானதாக இல்லை. எனவே தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் லெவி அல்லாத சர்க்கரையை வெளிச்சந்தையில் கொள்முதல் செய்கிறது.
வெளிச்சந்தையில் கொள்முதல் செய்யப்படும் சர்க்கரை விலைக்கும் ரேசன் கடையில் விற்பனை விலைக்கும் இடையே உள்ள வித்தியாச தொகையை மாநில அரசின் உணவு மானியத்தில் சரி செய்யப்படுகிறது. இவ்வாறு லெவி அல்லாத சர்க்கரை வாங்கிய வகையில் தமிழக அரசு ரூ.538 கோடியை மானியமாக வழங்கியுள்ளது மத்திய அரசு முடிவால், மாநில அரசுகளுக்கு மானிய சுமை அதிகரிக்கும். வேறு வழியில்லாமல் மாநில அரசுகளும் பொது விநியோகத்திட்ட பொருட்களை விலையேற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்படும். இதனால் பல்வேறு எதிர்விளைவுகள் ஏற்படும் என்பதும் பொதுமக்களின் ஒட்டுமொத்த கோபத்துக்கு மத்திய மாநில அரசுகள் ஆளாக நேரிடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழக ரேஷன் கடைகள்  ஒரு கண்ணோட்டம்
தமிழகத்தில் மொத்தம் 33,222 ரேஷன்கடைகள் உள்ளன. இவற்றில் 31,232 கடைகள் கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படுகின்றன. 1394 கடைகள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தால் நடத்தப்படுகிறது. 596 கடைகள் மகளிர் சுய உதவிக்குழுக்கள் நடத்துகின்றன. மொத்தம் உள்ள கடைகளில் 25,049 கடைகள் முழு நேர கடைகள். 8,173 கடைகள் பகுதி நேர கடைகள். 14 கடைகள் நடமாடும் கடைகள்.
மானியம் எவ்வளவு?
மண்ணெண்ணெய்: தமிழகத்தில் மாதாந்திர தேவை 65 ஆயிரத்து 140 கிலோ லிட்டர். தற்போது 39 ஆயிரத்து 429 கிலோ லிட்டரை மட்டுமே மத்திய அரசு ஒதுக்கீடு செய்து வருகிறது.
உணவு மானியம், ஆண்டு ஒன்றுக்கு அரிசிக்கு ரூ,3266.78 கோடியும், சர்க்கரைக்கு ரூ.538 கோடியும், மண்ணெண்ணெய்க்கு ரூ.42 கோடியும், சிறப்பு பொது விநியோகத்திட்டத்துக்கு ரூ.1053.22 கோடியும் ஆக மொத்தம் ரூ.4 ஆயிரத்து 900 கோடியை மானியமாக அரசு தருகிறது.
 சிறப்பு பொது விநியோகத்திட்டத்தின் கீழ் உளுத்தம்பருப்புக்கு மானில அரசின் மானியமாக ரூ. 251.81 கோடி வழங்கப்படுகிறது. பாமாயிலுக்காக ரூ.449.20 கோடி மாநில அரசின்  மானியமாக வழங்கப்படுகிறது. துவரம்பருப்பு கிலோ ரூ.30க்கு விற்கப்படுகிறது. இதற்காக ஆண்டு ஒன்றுக்கு மாநில அரசின் மானியமாக ரூ.314 கோடி வழங்கப்படுகிறது.



நன்றி தினகரன் கோவை   30.09.2012

அன்புடன்
சு. சிவசுப்பிரமணியம் தலைவர் 
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் 
மக்கள் மையம்
பந்தலூர்