"எதிர்கால சமுதாயத்தை வழிநடத்தும் மாணவ, மாணவியர், கல்வி அறிவுடன், சட்ட அறிவையும் பெற வேண்டியது அவசியம்' என, அறிவுறுத்தப்பட்டது.
ஊட்டி நகர மக்கள் விழிப்புணர்வு சங்கம், கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், பள்ளியின் என்.எஸ்.எஸ்., திட்டம் சார்பில், ஊட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில், இந்திய சட்டம் தினம் நடந்தது.
என்.எஸ்.எஸ்., அலுவலர் ராமசந்திரன் வரவேற்றார்.
பள்ளி தலைமை ஆசிரியர் மூர்த்தி தலைமை வகித்தார். நாட்டு நலப்பணித்திட்ட மாவட்ட அலுவலர் இளமுருகன், கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையத் தலைவர் சிவசுப்ரமணியம் முன்னிலை வகித்தனர்.
தேயிலை வாரிய செயல் இயக்குனர் அம்பலவாணன், சிறப்பு அழைப்பாளராக பேசியதாவது: இந்திய அரசியமைப்பு சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்ட தினம், சட்ட தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த சட்டத்தை பயன்படுத்தியே, மத்திய, மாநில அரசுகள், அலுவலகங்கள் செயல்படுகின்றன. அனைத்து சட்டங்களையும், ஒவ்வொரு குடிமகனும் அறிந்துக் கொள்ள வேண்டும்; அப்போது தான், அதன் வழியாக நம் செயல்பட முடியும். எதிர்கால சமுதாயத்தை வழி நடத்தும் மாணவ, மாணவியர், கல்வி அறிவுடன், சட்ட அறிவையும் பெற்றுக் கொள்ள வேண்டியது அவசியம். குழந்தைகள் குறித்த பல பிரச்னைகள், சமீபகாலங்களாக அதிகரித்துள்ளதற்கு, சட்டங்களை அறியாததும் முக்கிய காரணம். அனைவருக்கும் சம உரிமை உண்டு என, அரசியலமைப்பு சட்டம் தெரிவிக்கிறது; இதையடைய கல்வியறிவு அவசியம். பொழுது போக்கு அம்சங்களில் அதிகளவில் ஈடுபட்டு, மாணவர் பருவத்தை வீணடிக்காமல், பொறுப்புணர்வுடன் செயல்பட்டு முன்னேற வேண்டும். நமது உரிமைகளை அடுத்தவர் பறிக்காத வகையில் பயன்படுத்த வேண்டும். எதை செய்யக் கூடாது என்பதை அறிந்து, அதன்படி செயல்பட வேண்டும்.இவ்வாறு, அம்பலவாணன் பேசினார்.
வட்டாரப் போக்குவரத்து அலுவலர் வெங்கட்ராமன் பேசுகையில், ""சாலை விதிகளை முறையாக பின்பற்றினால், விபத்துகளை குறைக்கலாம். 1985ம் ஆண்டின் போக்குவரத்து சட்டத்தில், வாகனங்களின் செயல்பாடு குறித்து கூறப்பட்டுள்ளது. 18 வயதுக்கு உட்பட்டவர்கள், வாகனங்களை இயக்குவது தவறு; இந்த வயதினர், வாகனங்களை கட்டுப்படுத்தும் திறனைப் பெறுவதில்லை. வாகனங்களை இயக்கும் போது மொபைல் போன்களை பயன்படுத்துவது, விதிமீறிய செயல்; இதனால் விபத்து ஏற்படும். விதிமுறைகளை உணர்ந்து மாணவர்கள் செயல்பட வேண்டும்,''
என்றார். ஊட்டி நகர மக்கள் விழிப்புணர்வு சங்க செயலாளர் ஜனார்தனன் பேசுகையில், ""பள்ளி மாணவர்கள், போலீஸ் ஸ்டேஷன் செயல்பாடுகள், நீதிமன்ற செயல்பாடுகளை அறியும் வகையில், நடவடிக்கை எடுக்க வேண்டும். நம் சட்டங்களை மாணவர்கள் அறிந்தால், தவறான பாதைகளில் செல்வதை தடுக்கலாம். சட்டங்களை அலட்சியப் படுத்தாமல் பின்பற்றினால் பயன் கிடைக்கும்,'' என்றார்.
"கவா' அறக்கட்டளை இயக்குனர் வக்கீல் சுப்ரமணி பேசுகையில், ""கிராமப்புற வளர்ச்சிக்காக, மத்திய, மாநில அரசுகளால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் முறையாக செயல்படுகிறதா? என்பதை அறிய, தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்த வேண்டும். ஊழல் மற்றும் முறைகேடுகளை தடுக்க, தகவல் அறியும் உரிமை சட்டம் மிகவும் பயனுள்ளதாக அமைகிறது,'' என்றார். இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் உறுதிமொழிகள் எடுக்கப்பட்டன.
பள்ளி ஆசிரியர் சுரேஷ் நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக