கூடலூர்: "போலி விளம்பரங்களை பார்த்து பொருட்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும்' என, நுகர்வோருக்கு அறிவுரை வழங்கப்பட்டது.
முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காட்டில், வனத்துறை மற்றும் "ஹேமந்திரா கோத்தாடா பவுண்டேசன்' சார்பில் நடந்து வரும் ஆதிவாசி மாணவர்களுக்கான கம்ப்யூட்டர் பயிற்சி மையத்தில்,
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில், நுகர்வோர் விழிப்புணர்வு பயிற்சி முகாம், நேற்றுமுன்தினம் நடந்தது.
பயிற்றுனர் அபுதாகிர் வரவேற்றார்.
ஒருங்கிணைப்பாளர் சசிதரன் தலைமை வகித்தார்.
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையத் தலைவர் சிவசுப்ரமணி பேசுகையில், ""நுகர்வோர், தங்களுக்கான உரிமைகளை அறியாததால், பல நிலைகளில் ஏமாற்றப்படுகின்றனர். நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், 1986ம் ஆண்டு உருவாக்கப்பட்டு, 1990ம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது. தரமற்றப் பொருட்கள், போலி பொருட்கள் வாங்குவதிலிருந்து பாதுகாப்பு பெற, பொருட்களின் தகவல் கேட்டு பெறுவது, தேவையான சேவை அல்லது பொருட்களை தேர்வு செய்ய உரிமை உள்ளது. விளம்பரங்கள் பார்த்து பொருட்கள் வாங்கி பயன்படுத்துவதை, சிலர் கவுரவமாக கருதுகின்றனர். நுகர்வோர், போலி விளம்பரங்களை நம்பி ஏமாறக் கூடாது. நிதி நிறுவனம், நில விற்பனை உட்பட அனைத்து தகவல்களையும் தெரிந்துக் கொண்டு விழிப்புடன் இருந்தால், ஏமாற்றப்படுவதை தவிர்க்க முடியும்,'' என்றார்.
நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் கூடலூர் பொறுப்பாளர் முருகன் பேசுகையில், ""உணவுப் பொருட்களில் கலப்படம் அதிகரித்துள்ளது. கலப்பட உணவுப் பொருட்களை பயன்படுத்துவதால், உடலில் நோய் ஏற்பட காரணமாகிறது. தர முத்திரைகளை கொண்ட தரமான உணவுப் பொருட்களை வாங்கிப் பயன்படுத்த வேண்டும்,'' என்றார்.
நுகர்வோர் பாதுகாப்பு குறித்து கையேடு வழங்கப்பட்டது. மாணவி கேத்தி நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக