அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

சனி, 11 மே, 2013

ஜில்லுனு ஒரு டூர் : ஊட்டிக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்

சுட்டெரிக்கும் சூரியனின் உஷ்ணம் ஒரு புறம்... பாடாய்படுத்தும் மின்வெட்டு மறுபுறம்... என, கோடைகால "கொடுமை'யில் இருந்து, சிலநாள் விடுதலை பெற்று இளைப்பாற, கோடை வாசஸ்தலமான ஊட்டிக்கு படையெடுக்கத் துவங்கியுள்ளனர், சுற்றுலா பயணிகள்.

வெப்பக்காற்றை சுவாசித்து, வியர்வைக் குளியலுடன், ஊட்டி மலைப்பாதைக்குள் நுழையும் போது, உடலை வருடிச்செல்லும் "குளு,குளு' காலநிலையால், வியர்வை துளிகளுக்கு விடைகொடுத்து, வியந்து போகின்றனர் சுற்றுலா பயணிகள். ஊட்டிக்கு வந்து ஓய்வெடுத்து, மாலை நேரத்தில், "வாக்கிங்' செல்லும் போது, உடலை வருடிச் செல்லும் குளிர்தென்றல் காற்றில் சிலிர்த்து போகும் இவர்கள், முதல் வேளையாக, ஸ்வெட்டர், தொப்பிகளை வாங்கி, மாட்டிக் கொள்வதையும் பார்க்க முடிகிறது. குளு குளு ஊட்டிக்கு வருவோர், மலை மாவட்டத்தில் பார்த்து, ரசித்து, அனுபவிக்க வேண்டிய இடங்கள் குறித்த விபரம் இதோ:

ஊட்டி தாவரவியல் பூங்கா: கடந்த 1845ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட தாவரவியல் பூங்காவில், 120 குடும்பங்களைச் சேர்ந்த 3000 ரக தாவர இனங்கள் உள்ளன. 144 ரக பரணிச் செடிகள், 350 வகை ரோஜா, 60 ரக டேலியா, 30 ரக கிளாடியோலை, 150 ரக கள்ளிச்செடிகள், "டைனோசர்' கால "ஜிங்கோபைலபா' மரம் என, ஏராளமான மர வகைகள் உள்ளன. பூங்கா முகப்பில் உள்ள புல் தரை, லண்டன் "க்யூ' பூங்கா தரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. உங்களது பாதங்களை அதன் மீது பதித்தாலே, பஞ்சு மீது நடப்பதுபோன்ற உணர்வை பெறுவீர்கள். இங்கு, தினமும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்து, ரசித்துச் செல்கின்றனர். குட்டீஸ்கள் குதூகலத்துடன் ஓடியாடி விளையாடி மகிழ்கின்றனர்.

படகு இல்லம்:கடந்த 1823ல் உருவாக்கப்பட்ட ஊட்டி ஏரி, தமிழக சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் பராமரிப்பிலுள்ளது. 65 ஏக்கர் பரப்பில் உள்ள ஏரியில் படகு சவாரிக்காக, 318 படகுகள் உள்ளன. சிறுவர், சிறுமியரை கவர, ஏரிக்கரையில் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. ஏரியின் மறு கரையில் உள்ள தேனிலவு படகு இல்லத்திலும், சிறுவர் பூங்கா உட்பட வசதிகள் உள்ளன. குதிரை சவாரி மேற்கொள்ள ஏதுவாக, தனியார் சார்பில் குதிரைகளும் உள்ளன. ஏரிசாலையை ஒட்டி, வனத்துறை சார்பில் பராமரிக்கப்படும் மான் பூங்காவில் கடமான், வரையாடுகளை கட்டணமின்றி பார்க்க முடியும். ஊட்டிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள், இங்கு வராமல் போவதில்லை. ஊட்டிக்கு வந்துவிட்டு, படகுப்பயணமின்றி ஊர் திரும்பினால், சுற்றுலா அனுபவம் முற்றுப்பெறாது என்பதை, பயணித்துப்பார்த்தவர்கள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள். இதனால், இங்கு கூட்டம் அலைமோதுகிறது.

தொட்டபெட்டா சிகரம்:கடல் மட்டத்திலிருந்து 2,623 மீட்டர் உயரத்தில், "தென்னிந்தியாவின் உயர்ந்த சிகரம்' என்ற பெருமையை பெற்ற தொட்டபெட்டா சிகரம், பார்வையாளர்களுக்கு பரவசம் தரக்கூடிய காட்சி முனை. இங்கு, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள "டெலஸ்கோப்' மூலம், ஊட்டி, குன்னூர், வெலிங்டன், குந்தா, கோவை, கர்நாடகா, கேரளா பகுதிகளை கண்டு வியக்கலாம்.

பைக்காரா ஏரி:பைக்காரா அணையில் திறந்து விடப்படும் நீர், இங்குள்ள பாறைகளில் தவழ்ந்து செல்லும் போது, அருவியை போன்று ரம்மியமாக காட்சியளிக்கிறது. நீர்வீழ்ச்சியை அடுத்த ஒரு கி.மீ., தூரத்தில் பைக்காரா ஏரி உள்ளது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில், படகு சவாரி விடப்படுகிறது. நீரை கிழித்து கொண்டு, மின்னல் வேகத்தில் செல்லும், "ஸ்பீடு போட்' (அதிவிரைவு படகு) இந்த ஏரியில் மட்டுமே உள்ளது, என்பது, சுற்றுலா பயணிகளுக்கு குஷியான தகவல்.

சிம்ஸ் பூங்கா:குன்னூரில், கடந்த 1874ல் உருவாக்கப்பட்ட சிம்ஸ்பூங்கா, 1,200க்கும் மேற்பட்ட அரிய வகை மரங்களின் புகலிடமாக இப்பூங்கா உள்ளது. கற்பூர மரங்களில் மட்டும் 27 வகைகள் உள்ளன. 104 ஆண்டு பழமை வாய்ந்த யானைக்கால் மரம், ருத்ராட்சை, காகிதம், டர்பன்டைன், ஜெகரன்டா, கெமேலியா, அகேசியா, மரதாகை மரங்கள் என, காணக் கிடைக்காத, மிகப்பழமையான மரங்கள் இப்பூங்காவில் உள்ளன. இடையிடையே அழகிய மலர்களின் அணிவகுப்பை, சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்துச் செல்கின்றனர்

"டால்பின்ஸ் நோஸ்' காட்சிமுனை:சிம்ஸ்பூங்காவில் இருந்து 5 கி.மீ., தொலைவில் உள்ள லேம்ஸ் ராக், அங்கிருந்த 2 கி.மீ., தூரத்தில் உள்ள டால்பின்ஸ் நோஸ் காட்சி முனைகளில் இருந்து தெரியும், 6,000 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கு காட்சிகள், பார்வையாளர்களுக்கு "திரில்' அனுபவத்தை தருகின்றன.

கோடநாடு காட்சி முனை:கோத்தகிரியில் உள்ள கோடநாடு காட்சிமுனை உச்சியில் அமைக்கப்பட்டுள்ள கோபுரத்தில் இருந்து பார்த்தால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வனங்கள், வயல் வெளிகள், பார்வைக்கு விருந்தாக அமையும். அங்குள்ள "பைனாகுலர்' மூலம் வரலாற்று சிறப்பு மிக்க சுஜல் கோட்டை, அல்லிராணி கோட்டையை பார்க்க முடியும்; தெங்குமரஹாடா கிராமத்தின் அழகையும் ரசிக்கலாம். நீலகிரி மலையில் உருவாகி பவானிசாகர் அணையில் கலக்கும் "மாயாறு' ஆற்றின் பயணத்தையும் பார்வையில் "படம்' பிடிக்கலாம்.

கோத்தகிரி நேரு பூங்கா:கோத்தகிரியில் உள்ள கேத்ரீன் நீர் வீழ்ச்சி, பசுமையான தேயிலை தோட்டங்கள், அழகிய மலை முகடுகளின் வழியே வழிந்து, பாறைகளை ஈரமாக்கி, சுற்றுலாபயணிகளின் மனதை இதமாக்குகிறது. கோத்தகிரியின் மையப்பகுதியில், காமராஜர் சதுக்கத்தில் அமைந்துள்ளது நேரு பூங்கா. பல அரிய வகை மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டு மலர்கள் மலர்ந்துள்ளன. அழகிய புல்வெளி, கோத்தரின மக்களின் கோவில் பூங்காவின் சிறப்பு அம்சம்.

பஸ் இருக்கு... ஜாலியா போகலாம்!* ஊட்டியில் இருந்து, தாவரவியல் பூங்கா, படகு இல்லம், ரோஜா பூங்கா, தொட்டபெட்டா செல்ல, அரசு போக்குவரத்து கழகம் சார்பில் "சர்கியூட்' பஸ்கள் விடப்பட்டுள்ளன. மரவியல் பூங்காவுக்கு, ஊட்டி பஸ் நிலையத்தில் இருந்து நடந்தே செல்லலாம்.
* ஊட்டியிலிருந்து கூடலூர் செல்லும் வழியில் உள்ள பைக்காரா நீர் வீழ்ச்சிக்கு, தனியார் வாடகை வாகனங்கள், அரசு பஸ்கள் மூலம் செல்லலாம்.
*கோத்தகிரி - கோடநாடுக்கு செல்ல காலை 6.30 மணியில் இருந்து இரவு 7.30 மணி வரை அரசு பஸ்களும், கேத்ரீன் நீர்வீழ்ச்சிக்கு செல்ல, காலை 9.00 மணியிலிருந்து இரவு 7.30 வரை மினி பஸ்களும் இயக்கப்படுகின்றன.
* கோத்தகிரி பஸ் ஸ்டாண்ட், டானிங்டன், ராம்சந்த் பகுதிகளில் இருந்து, நடந்து செல்லும் தூரத்தில் தான் நேரு பூங்கா உள்ளது.
* குன்னூர் பஸ் ஸ்டாண்டிலிருந்து சிம்ஸ்பூங்காவுக்கு, மினி, அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. குன்னூர் டால்பின்'ஸ் நோஸ், லேம்ஸ்'ராக் காட்சி முனைக்கு, பஸ் வசதி குறைவு என்பதால், தனியார் வாகனங்களே சிறந்தது.

த்ரில் சவாரி...:முதுமலை புலிகள் காப்பகத்தில், வனத்துறை வாகனம், வளர்ப்பு யானைகள் மூலம், வனப்பகுதிக்குள் சவாரி செய்யலாம். வாகன சவாரி, தெப்பக்காடு வரவேற்பு மையத்திலிருந்து, தினமும் காலை 7:00 மணி முதல் 9:00 மணி வரை, பிற்பகல் 3:00 மணி முதல் 5:30 மணி வரை நடத்தப்படுகிறது.
யானை சவாரி, தினமும் காலை 7:00 மணி முதல் 8:30 மணி வரையும், மாலை 4:00 மணி முதல் 5:30 வரை உண்டு.
* முதுமலை தெப்பக்காடுக்கு, ஊட்டியிலிருந்து மைசூரு, பெங்களூரு குண்டல்பேட்டை பகுதிக்கு இயக்கப்படும்
தமிழக, கர்நாடக பஸ்கள் மூலமும், கூடலூரிலிருந்து அரசு பஸ், தனியார் வாகனங்கள் மூலமும் செல்ல முடியும்.
ஊசிமலை காட்சி முனைஊட்டி - கூடலூர் சாலையில், 40 கி.மீ., தொலைவில் உள்ள ஊசிமலை காட்சி கோபுரத்தில் இருந்து, கூடலூர், சிங்காரா, நடுவட்டம் மற்றும் முதுமலை வனப்பகுதியை ரசிக்க முடியும்.
*அவலாஞ்சி, முக்கூர்த்திஊட்டி அருகே 20 கி.மீ., தூரத்தில் உள்ள அவலாஞ்சி பகுதிக்கு செல்ல, வனத்துறை அனுமதியுடன், சுற்றுலா வாகனங்கள் இயக்கப்படுகின்றன. அங்கு செல்லும் சுற்றுலா பயணிகள், அங்குள்ள பவானியம்மன் கோவில், புல்வெளி காடுகள், வரையாடு உட்பட இயற்கை காட்சிகளை ரசிக்கலாம். இதை தவிர, முக்கூர்த்தி காட்சி முனை பகுதிக்கு
"டிரக்கிங்' செல்ல வேண்டும்மெனில், வனத்துறையில் முறையான அனுமதி பெற்று செல்லலாம்.

இந்தாண்டு இது புதுசு:ஊட்டி - குன்னூர் சாலையில், வெலிங்டன் எம்.ஆர்.சி., ராணுவ முகாம் பகுதியில், 3 ஏக்கர் பரப்பளவில், செயற்கை ஏரியும், ஏரிக் கரையில், சிறுவர் பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளது. தவிர, மாவட்டத்தில் முதன் முறையாக, ஏரியின் ஒரு பகுதியில், இசையின் பின்னணியில், மின்னொளியில் "நடனமாடும்' நீர் வீழ்ச்சி அமைக்கப்பட்டுள்ளது; "அனுமதி இலவசம்' என்பது, கூடுதல் தகவல்.

என்ன வாங்கலாம்எங்கே வாங்கலாம்:சீசனை மையப்படுத்தி ஊட்டியில் அனைத்து விதமான விளையாட்டு பொருட்கள்; உடைகள்; உணவு பொருட்கள் சமவெளிப்பகுதிகளில் இருந்து கொண்டு வந்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஆனால், மலை மாவட்டத்துக்கு உரித்தான, நீலகிரி தைலம், கல்தேரியா, ஜெரோனியா எண்ணெய், தேயிலை, ஹோம் மேட் சாக்லெட், வர்க்கி ஆகியவற்றை வாங்கி செல்லலாம். தரமான பொருட்கள் வாங்க அரசு சார்பில் நடத்தப் படும் கூட்டுறவு அங்காடிகள். பழமையான பேக்கரிகளை விசாரித்து வாங்கினால் பயன் தரும்.

ரோஜா பூங்கா : கடல் மட்டத்தில் இருந்து 2,200 மீட்டர் உயரத்தில், ஊட்டி ரோஜா பூங்கா அமைந்துள்ளது. நான்கு ஹெக்டர் பரப்பளவில், 5 அடுக்குகளை கொண்டு, 3,300 வகையைச் சேர்ந்த, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள்நாட்டு, வெளிநாட்டு ரோஜா செடிகளின் அணிவகுப்பில், வாசம் வீசிக் கொண்டிருக்கிறது இப்பூங்கா, ஆசியாவின் மிகப்பெரிய ரோஜா பூங்காக்களில் ஒன்று, என்பது கூடுதல் தகவல்.

மரவியல் பூங்கா:ஊட்டி பஸ் ஸ்டாண்டில் இருந்து ஒரு கி.மீட்டர் தூரத்தில் உள்ள பர்ன்ஹில் சாலையில் உள்ள மரவியல் பூங்காவில், 100க்கும் மேற்பட்ட சோலை மரங்கள், 60க்கும் மேற்பட்ட அரிய வகை மரங்கள் உள்ளன. பூங்காவை ஒட்டியுள்ள சதுப்பு நிலத்தில், மாலை நேரங்களில் பறவைகளின் "கிரீச்' ஒலி காதுக்கு இனிமை சேர்க்கின்றன.

ஜான் சலிவன் நினைவிடம் : கோத்தகிரி கன்னேரிமுக்கு கிராமத்தில், நீலகிரி மாவட்டம் உருவாக காரணமாக இருந்த ஆங்கிலேயர் "ஜான் சலிவன்' நினைவிடம் உள்ளது. இங்கு, நீலகிரி மாவட்டத்தின் பாரம்பரியம், கலாசாரம், எல்லை கோடுகள் என முக்கிய தகவல்கள் பராமரிக்கப்பட்டு வருவதால், ஆராய்ச்சி மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

நுழைவு கட்டண விபரம்:ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ்பூங்கா, கோத்தகிரி நேரு பூங்காவில், நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு 30 ரூபாய், சிறியவர்களுக்கு 15 ரூபாய். ஸ்டில் கேமரா கொண்டு செல்ல50 ரூபாய், வீடியோ கேமரா கொண்டு செல்ல 100 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. ஊட்டி படகு இல்லத்தில், 5 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், நுழைவு கட்டணமாக5 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக