அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

வெள்ளி, 17 மே, 2013

மந்தகதியில்-நுகர்வோர்-பாதுகாப்புச்-சட்ட-செயல்பாடுகள்

மார்ச் 14: நுகர்வோர் பாதுகாப்புச் சட்டச் செயல்பாடுகளில் காலதாமதம் தவிர்க்கப்பட்டு, நுகர்வோருக்கு விரைந்து நீதி கிடைக்க வேண்டும் என நுகர்வோர் அமைப்பினர் வலியுறுத்துகின்றனர்.
உலக அளவில் நுகர்வோர் தின விழா ஆண்டுதோறும் மார்ச் 15-ம் தேதி கொண்டாடப்படுகிறது.
இந்தியாவில் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் அப்போதைய பிரதமராக இருந்த மறைந்த ராஜீவ் காந்தியால் 24.12.1986-ல் கொண்டு வரப்பட்டது.
இந்தச் சட்டத்தின் மூலம் நுகர்வோர் பொருள்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை, பொருள்களின் பயன்பாட்டில் பாதுகாப்புக்கான உரிமை, கருத்துகள், குறைகள் கேட்கப்படும் உரிமை, பொருள்கள், சேவைகள் குறித்த தகவல் பெறும் உரிமை, பாதிக்கப்பட்ட நுகர்வோர் நஷ்டஈடு அல்லது நிவாரணம் பெறும் உரிமை, தூய்மையான சுற்றுச்சூழலுக்கான உரிமை, நுகர்வோர் கல்வி பெறுவதற்கான உரிமை, அடிப்படைத் தேவைகளை அடைவதற்கான உரிமை என ஏராளமான உரிமைகளை நுகர்வோருக்கு இந்தச் சட்டம் வழங்கியுள்ளது.
பாதிக்கப்பட்ட நுகர்வோரின் குறைகளைத் தீர்க்கவும், இழப்பீடு அல்லது நிவாரணம் பெற்றுத் தரவும் மாவட்டந்தோறும் நுகர்வோர் குறைதீர் மன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது தவிர, மாநில அளவிலும், தேசிய அளவிலும் நுகர்வோர் குறைதீர் ஆணையங்கள் செயல்பட்டு வருகின்றன.
ஆயினும், இந்தக் குறைதீர் மன்றங்களின் தற்போதைய செயல்பாடுகள் நுகர்வோருக்கு போதிய அளவுக்கு பயனுள்ளதாக அமையவில்லை என்பதும் நுகர்வோர் அமைப்புகளின் கருத்தாக உள்ளது.
இதுகுறித்து
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு (ஃபெட்காட்) தலைவர் பிறை. அறிவழகன் கூறியது:
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் சாதாரண மக்களுக்கும் நீதி கிடைக்கும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள நுகர்வோர் குறைதீர் மன்றங்களில் எடுத்துக் கொள்ளப்படும் வழக்குகளை 90 நாள்களில் முடிக்க வேண்டுமென விதி உள்ளது. இங்கு முறையிட வழக்குரைஞர்களின் உதவி தேவையில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனாலும், நுகர்வோர் குறைதீர் மன்றங்களில் தற்போது வழக்குரைஞர்களின் ஆதிக்கம் அதிகமாகிவிட்டதால், வழக்குகளில் தொடர்ந்து வாய்தா வாங்கி, வழக்குகளை இழுத்தடிக்கும் போக்கு கவலையளிக்கிறது.
ஓய்வு பெற்ற நீதிபதிகளைத்தான் குறைதீர் மன்றங்களின் தலைவர்களாக அரசு நியமிக்கிறது. இதனால், வழக்கமான நீதிமன்றங்களில் உள்ள நடைமுறைகள் போன்று தான் குறைதீர் மன்றங்களிலும் வழக்கு நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன.
பல மாவட்டங்களில் குறைதீர் மன்றத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. உறுப்பினர் நியமனத்தில் அரசியல் தலையீடு இருக்கக் கூடாது என்றாலும், ஆளுங்கட்சிக்கு ஆதரவாக உள்ளவர்களை உறுப்பினர்களாக நியமிக்கும் போக்கும் உள்ளது என்றார் அவர்.
கிரியேட் அமைப்பின் செயல் இயக்குநர் ஆர். ஜயராமன் கூறியது:
பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு எளிமையாகவும், கால தாமதமின்றியும் நீதி கிடைக்க வேண்டும் என்பதுதான் நுகர்வோர் குறைதீர் மன்றங்களின் நோக்கம். ஆனால், அவை மற்ற நீதிமன்றங்களைப் போன்று வாய்தா மன்றங்களாகவே செயல்படுகின்றன. இதற்குப் பல உதாரணங்களைச் சொல்ல முடியும்.
குறிப்பாக, நாகை மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் 19.8.2010-ல் (வழக்கு எண்.47/2010) வழங்கப்பட்ட நுகர்வோருக்குச் சாதகமான ஒரு தீர்ப்பில், எதிர்தரப்பினர் மாநில குறைதீர் மன்றத்தில் (மேல்முறையீட்டு மனு எண். 292/2011) மேல்முறையீடு செய்தனர். எதிர்தரப்பினர் ஒரு முறைகூட ஆணையத்தின் முன் ஆஜராகாததால், மனுதாரர் இன்னும் தீர்ப்பு பெற முடியாமல் அலைந்து கொண்டிருக்கிறார்.
எந்த நோக்கத்துக்காக இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டதோ அதற்கு நேர்மாறாக, அதன் செயல்பாடுகள் இருப்பதால், நுகர்வோர் குறைதீர் மன்றங்களுக்குச் செல்லவே நுகர்வோர் அலுத்துக் கொள்ளும் நிலை தான் உருவாகியுள்ளது.
மேலும், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் மீதான நம்பிக்கையும் மக்களிடம் வெகுவாக குறைந்து வருகிறது என்றார் அவர்.
இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டு 25-ம் ஆண்டு வெள்ளி விழா கொண்டாடப்படும் நிலையில், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் செயல்படுத்தப்படுவதில் காலதாமதத்தைக் களைந்து, நுகர்வோருக்கு விரைந்து நீதி கிடைக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக