இயற்கையைச் சீரழிக்கும் நெகிழியின் (பிளாஸ்டிக்) தீமையும்-தீர்வும்
நாகரீகம்,
விஞ்ஞான வளர்ச்சி என்ற பெயரில் மனித இனம் பல்வேறு துறைகளில் புதுப்புது
வளர்ச்சியை அடைந்து வந்துள்ளது. ஏன் இன்னும் பல அபரிமிதமான வளர்ச்சியையும்
சமூகம் காணப்போகிறது. இதில் ஒரு பாதகமான செயல்பாடு எதுவென்றால் ஒவ்வொரு
பொருட்களின் கண்டுபிடிப்புகளுக்குப் பின்பும், அப்பொருளின்
பயன்பாட்டுக்குப் பின்பும் ஒரு தீய விளைவை மனித இனம் இந்த பூமிக்குக்
கொடுத்துக் கொண்டே வந்திருக்கிறது என்றால் அது மிகையாகாது. அந்த வகையில்
இன்று நாம் நெகிழி என்று தமிழில் அழைக்கப்படும் பிளாஸ்டிக் இல்லாத தினசரி
வாழ்க்கையை மக்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு இதனைப் பயன்படுத்தி
வருகிறோம்.
ஆனால் இதனை எதிர்த்து உலகெங்கும் ஒரு
எதிர்ப்புக்குரல் ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது. “பிளாஸ்டிக்கை ஒழிப்போம்”
என்று கூட்டம் போட்டுப் பேசுவதும் கொடி பிடித்து போராடுவதும் நூறு சதவீத
வெற்றியைத் தருகிறதா? என்றால் அது பெரும் கேள்விக்குறியே. இன்று நாம்
எழுதும் பேனா முதல் வானில் பறக்கும் விமானம் வரை நெகிழியின் ஆதிக்கமே
தலைத்தோங்கியுள்ளது.
இன்று
நாம் நெகிழிப் பைகளை ஒருமுறை மட்டுமே பயன்படுத்தித் தூக்கி எறியும்
செயலானது படுபாதகச் செயலாகும். ஏனென்றால் பொதுமக்கள் பொருட்களை வாங்கி
எடுத்துச் செல்லப் பயன்படுத்தும் நெகிழிப்பைகளின் சராசரி ஆயுட்காலம் வெறும்
12 நிமிடங்கள் மட்டுமே என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதாவது அதனைக்
கையில் வாங்குவதற்கும் குப்பையில் எரிவதற்கும் இடையே வெறும் 12 நிமிடங்கள்
மட்டுமே நெகிழிப்பை மனிதனுக்குப் பயன்படுகிறது. ஆனால் இந்தப் பை அழிவதற்கு
1000 ஆண்டுகள் ஆகுமாம். இப்பை காலகாலத்திற்கும் அழியாமல் இருந்து
சுற்றுச்சூழலைப் பாழ்படுத்தும்.
இன்று ஒருவர் தூக்கி எறியும் நெகிழிப்பை
அவரது பிள்ளைகள், பேரன், பேத்திகள் இவர்களின் பிள்ளைகள் எனப் பல
தலைமுறையினருக்கும் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும்.
உற்பத்தி:
இந்த
நெகிழி என்பது பெட்ரோலிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில் சுத்திகரிக்கும்
போது பாலி எத்திலின் என்ற துணை பொருளாகக் கிடைக்கிறது. நெகிழிப் பையைத்
தயாரிக்க ஆகும் எரிபொருளை விட 4 மடங்கு அதிக எரிபொருள் காகிதப்பையை
உருவாக்கப் பயன்படுகிறது. ஆகையால் நாம் முடிந்தளவு இருவிதமான பைகளையும்
பயன்படுத்துவதை தவிர்த்து முடிந்த வரை துணிப்பைகளைப் பயன்படுத்துவதே
இயற்கைக்கும், எதிர்கால சந்ததியினருக்கும் நாம் செய்யும் பெருந்தொண்டாகும்.
மக்கள் பயன்பாட்டில் நெகிழியின் பங்கு:
ஏதோ
ஒரு விதத்தில் தினமும் நெகிழியின் பயன்பாடு அல்லாது நாம் இருக்க முடியாது,
என்ற நிலை இங்கு உருவாகிவிட்டது. இதில் சூடான திரவ உணவு வகைகளான காபி,
பால், சாதம், சாம்பார், குருமா ஆகியவற்றைப் பாலித்தீன் பைகள் அல்லது
மெல்லிய பிளாஸ்டிக் டப்பாக்களில் சேமித்தால் நச்சுப் பொருட்கள் இந்த உணவில்
ஊடுருவும் திரவ உணவுப் பொருட்களைச் சேமித்தால் படிம நச்சாக மெது, மெதுவாக
உணவில் சேருகிறது. தவிர உப்பட்ட பொருட்களான ஊறுகாய்கள், புளிச்சத்து
நிறைந்த பழச்சாறு இவற்றில் பிளாஸ்டிக் கலக்கிறது.
பிஸ்கட்,
மிக்சர், காராச்சேவு, முறுக்கு போன்ற உலர்ந்த உணவுப் பொருட்கள்
போன்றவற்றில் இந்த பாலித்தீனின் நச்சு ஊடுறுவல் குறைவு, நீர் உணவைச்
சேமிக்கப் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பாட்டில்கள், டப்பாக்கள், பாலித்தீன்
பைகள் போன்றவை உணவுத்தரம் உள்ளவையா? என்று தெரிந்து கொண்டுதான் பயன்படுத்த
வேண்டும். நம் நாட்டில் நெடுந்தொலைவில் பேருந்து, புகைவண்டிப் பயணமோ?
அல்லது அதிக நேரம் நடைப்பயணமோ? மேற்கொள்ளும் போது நீர் குடுவைகள்,
குளிர்பான (ஜுஸ்) குடுவைகள் போன்றவற்றை வாங்கி உபயோகப்படுத்துவதோடு
மட்டுமில்லாமல் காலியான அந்தப் பாட்டில்களைக் கொண்டு வந்து வீட்டில்
மண்ணென்ணெய் வாங்கவும், சமையல் எண்ணெய் ஊற்றி வைக்கவும் இன்றி பிற
பயன்பாட்டுக்கும் உபயோகப்படுத்துகிறோம். இந்தப் பயணத்தில் காலிப் பாட்டிலை
லேசாக அமுக்கிப் பார்ப்போம். அது நசுங்கினால் தூக்கிப் போட்டு விடுவோம்.
கெட்டியாக இருந்தால் அதைப் பாதுகாத்து மறுபடியும் பயன்படுத்தும் பழக்கம்
இங்கே தலை விரித்தாடுகிறது.
நெகிழி உறைகள் சுற்றப்பட்டு வரும்
உணவுப்பொருட்களான சாக்லேட்டு, பால்கோவா போன்றவற்றில் நெகிழி
வேதிப்பொருட்களான, பென்சீன் வினைல் குளோரைடு கலந்து விடுகிறது. இதனால்
புற்றுநோய் ஏற்படக் காரணமாகிறது. மேலும் இயற்கையாக வாழை இலை போட்டு
உணவருந்தி வந்த மக்கள் தற்போது “கம்ப்யூட்டர் வாழை இலை” என்ற பெயரில்
பிளாஸ்டிக் வாழை இலைகளை, பல உணவு விடுதிகளும், வீட்டு விசேசங்களுக்கும்
மக்கள் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். இந்த இலையின் மேல் சூடான திட, திரவ
உணவுப் பொருட்களை வைக்கும்போது, வைத்த அந்த இடத்தில் உள்ள நெகிழியானது
இளகி, இதில் உள்ள நச்சுப்பொருட்கள் உணவுப்பொருட்களோடு கலந்து, உண்பவருக்கு
பல பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது.
நெகிழியின் தீமைகள்:
1.
நாம் நெகிழியைப் பயன்படுத்தி விட்டு வீதியில் எரியப்படும்
நெகிழிக்குப்பைகள் பெருமழை பெய்து நீரால் அடித்து ஆற்றில் கலக்கிறது.
ஆறுகள் அதைக்கொண்டு வந்து கடலில் சேர்ப்பதால் இந்த நெகிழிப்பைகளை உட்கொண்டு
ஒரு ஆண்டுக்கு பல லட்சம் திமிங்கலங்களும், சீல் போன்ற கடல்வாழ்
உயிரினங்களும் 10 லட்சம் பறவைகளும் இறப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
2.குளங்கள், ஏரிகள், ஆறுகள், நிலத்தடி
நீர் என எல்லா நீர் வளமும் இந்த நெகிழிப்பையால் கடுமையாக மாசடைந்துள்ளதால்
இந்நீரில் உள்ள நீர்வாழ் உயிரினங்களும், மனிதர்களும் கடும் பாதிப்பிற்கு
உள்ளாகிறார்கள்.
3.நெகிழிப்பை, சாக்கடையை அடைப்பதால்
சாக்கடைகள் தெருவழியே பிதுங்கி வழிந்து சாலையில் ஓடும்போது, அதன்மீது
நடக்கும் போதும், அதிலிருந்து வரும் காற்றை சுவாசிக்கும் போதும் பல தோற்று
நோய்களைத் தோற்றுவிக்கிறது.
4. சாலை ஓரங்களில் தேங்கிக்கிடக்கும்
நெகிழிக் குப்பைகள் அசுத்தத்தை ஏற்படுத்தி டெங்கு, மலேரியா என பற்பல
நோய்கள் தோன்றக் காரணமாகிறது. இதனால் மழைக்காலத்தில் சாலைகள் வெள்ளக்காடாக
மாறுவதற்கு இந்த நெகிழிக்குப்பையே முதற்காரணம்.
5.
இந்த நெகிழிக் குப்பையை எரிப்பதால் இதிலிருந்து டையாக்சின் வாயு
வெளியேறுகிறது. இது காலத்திற்கும் அழியாமல் இருந்து புற்றுநோயை
ஏற்படுத்தும் வாயுவாகும்.
6.மனிதர்கள் உண்டபின் கீழே போகும்
நெகிழிப் பொட்டலங்களைத் தின்னும் விலங்குகளின் உணவுக்குழாய்கள்
பாதிக்கப்பட்டு அவைகள் இறக்க நேரிடுகிறது.
7. மக்காத நெகிழிப் பொருட்கள் வேளாண்
நிலங்களில் தங்கி அதன் வளத்தைக் குறைத்து நஞ்சாக்குகிறது. மேலும்
பயிர்வளர்ச்சியையும் பாதிக்கிறது.
8.நெகிழிப் பொருட்கள் செய்யும்
தொழிற்சாலைகளில் மறுசுழற்சி செய்யும் போதும், உருகும் போதும் வெளியேறும்
வாயுக்கள் நச்சுத்தன்மை உடையதால் ஊழியர்கள், அருகில் வசிக்கும் மக்கள்
ஆகியோர் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதனால் தோல்நோய் முதல் புற்றுநோய்
வரை பல நோய்கள் வரக் காரணமாகிறது.
சிலருக்குத் தொட்டால் கூட ஒவ்வாமை என்ற
நோய் ஏற்படுகிறது. மேலும் மூச்சுக்குழல் பாதிப்பு, குடல் புண்,
செரிமானமின்மை, நரம்புத்தளர்ச்சி, ரத்தச் சிறுநீரகச் செயல்பாடு குறைபாடு,
நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவு போன்றவை ஏற்படக்கூடும் என ஆய்வுகள்
கூறுகின்றன.
நாம் செய்ய வேண்டியவை:
● மறுபயன்பாட்டுக்கு உரிய தரமான துணிப்பைகளைப் பயன்படுத்தலாம், இதன் மூலம் ஆயிரக்கணக்கான நெகிழிப்பைகளின் பயன்பாட்டைத் தடுக்கலாம்.
● எப்பொழுதெல்லாம் கடைக்குச்
செல்கிறீர்களோ அப்பொழுதெல்லாம் மறக்காமல் கையில் துணிப்பைகளை எடுத்துச்
செல்ல வேண்டும். குறைந்த பட்சம் நம்மிடம் உள்ள நெகிழிப்பைகளையாவது கடைக்கு
எடுத்துச் செல்ல வேண்டும்.
● பிளாஸ்டிக் குடுவைகள், டப்பாக்களில்
குடிநீர், சாறு, நீர் பை போன்ற அடைத்து வைத்த உணவுப் பொருட்களைத் தவிர்க்க
வேண்டும். இந்தப் பாட்டில்களின் அடியில் உள்ள எண்ணைக் கவனித்து அன்றாட
வீட்டு உபயோகத்திற்கு பாலி எதிலின் டெபலோட், அடல் பாலி எதிலின், பாரிஸ்
லடரின் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். பாலி கார்பனேட் பிசி(7) வகை
பிளாஸ்டிக்குகள் ஓரளவு பாதுகாப்பானவை.
● பிளாஸ்டிக் பைகள் மக்குவதற்கு ஆகும்
காலம் 1000 ஆண்டுகள். இதில் பிளாஸ்டிக் குடுவை எக்காலத்திலும் அழியாது.
எனவே பிளாஸ்டிக் பை, பிளாஸ்டிக் குடுவைகள் போன்றவற்றை வாங்கக் கூடாது.
ஏனென்றால் இந்தக் குப்பையை எந்த வகையிலும் உருமாற்றவோ, அழிக்கவோ முடியாது.
அதனால் இன்னும் 10, 20 ஆண்டுகளில் உலகம் கழிவு பிளாஸ்டிக்கால் நிரம்பி
வழியும் என்று நம்பப்படுகிறது.
● நெகிழிப்பைகளைக் கட்டுப்படுத்தும்
விதிமுறைகள் ஏற்கனவே இந்திய அரசால் அரசாணையாக வெளியிடப்பட்டுள்ளன. இந்தச்
சட்டப்பூர்வமான விதிமுறைகளைத் தமிழ்நாடு அரசும், மாநகராட்சிகளும்,
நகராட்சிகளும் முழுமையாக நிறைவேற்ற வேண்டும். இதற்கு பொதுமக்களாகிய நாம்
ஒத்துழைப்பும் தர வேண்டும்.
இப்படியாக
ஒருமுறை பயன்படுத்தித் தூக்கி எறியும் நெகிழிப்பைகள் மிகப்பெரும் கேடாகி
விட்டதை குறிப்பிடும் வகையில் “நெகிழிப்பைகள் அணுகுண்டை விட ஆபத்தானவை”
என்று இந்திய உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதனால் நம் நலத்தையம்,
எதிர்கால சந்ததியினர் நலத்தையும் கருத்தில் கொண்டு இனியாவது குப்பைகளைப்
பயன்படுத்துவதைத் தவிர்த்து வளமான, நலமான நோயற்ற சமூகம் நாம் செயல்பட
வேண்டும்.
thanks சித்திர சேனன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக