"ஒருவருக்கு பாதிப்பு ஏற்படும் போது, அதை கண்டுக்கொள்ளாமல் இருப்பது தவறுக்கு துணை போவதற்கு சமம்' என, மனித உரிமை தின முகாமில் தெரிவிக்கப்பட்டது.
மசினகுடி புலிகள் காப்பகத்தில், ஹேமந்திரா பவுண்டேஷன், கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், ஊட்டி நகர மக்கள் விழிப்புணர்வு சங்கம் சார்பில், உலக மனித உரிமை தின முகாம் நடந்தது.
பயிற்சி மைய ஆசிரியர் நவீன்குமார் வரவேற்றார். முதுமலை புலிகள் காப்பக மசினகுடி வனவர் வில்லியம் ஜேம்ஸ் துவக்கி வைத்தார்.
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மக்கள் மையத் தலைவர் சிவசுப்ரமணியம் பேசுகையில், ""ஐ.நா. சபை, மனித உரிமை பிரகடனத்தில் 30 உரிமைகளை வழங்கி உள்ளது. சுதந்திரம், வாழ்வு, பேச்சு, சொத்து, கல்வி, சுகாதாரத்தில் நீதி பெறுவது, மானுட அங்கீகாரம் என பல வகைகளில் உரிமை வழங்கப்பட்டுள்ளன. உடன்படிக்கையில் மத்திய அரசும் கையெழுத்திட்டு, "93ல், மனித உரிமை பாதுகாப்பு சட்டத்தை இயற்றியுள்ளது. இச்சட்டத்தின் படியும், இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் படியும் வாழ்வு நிலை, சமத்துவ உரிமை, சுதந்திர உரிமை, மாண்புரிமை என்பன அடிப்படையில் உரிமை வழங்கப்பட்டுள்ளது. நமக்காக உருவாக்கப்பட்ட சமூகத்தை அறிந்துக் கொள்ள வேண்டும்,'' என்றார்.
மசினகுடி சமூக ஆர்வலர் ஜெர்மினா பேசுகையில், ""குழந்தைகளின் பாதுகாப்பு, வாழ்வு, பங்கேற்பு, முன்னேற்றம் உட்பட உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்,'' என்றார்.
மசினகுடி ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் இந்திராணி பேசுகையில், ""மனித உரிமை மீறல்களின் முதல் பாதுகாப்பு நடவடிக்கை துறையாக, காவல் துறை உள்ளது. ஒருவர், மற்றவர் உரிமையை மீறும்போது உரிமைப் பிரச்னை ஏற்படுகிறது. ஒருவருக்கு பாதிப்பு ஏற்படும் போது, அதை கண்டுக்கொள்ளாமல் இருப்பது தவறுக்கு துணை போவதற்கு சமம். தவறுகளை சுட்டிக்காட்ட வேண்டும். அதற்காக தான், போலீசார், மக்களுடன் இணைந்து செயல்படும் வகையில், கிராம கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள், மனித உரிமை மீறல்களை களைய, மகளிர் போலீஸ் ஸ்டேஷன்கள் செயல்படுகின்றன. குடும்ப வன்முறை, பிரச்னைகளில் பாதிக்கப்பட்டால், சமூக நலத்துறையில் புகார் கொடுத்தும் நிவாரணம் பெறலாம். பெற்றோருக்கு ஆதரவளிக்க மறுப்பவர்கள் மீது, சட்டம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். நமக்காக உருவாக்கப்பட்ட சட்டத்தை, அனைவரும் மதிக்க வேண்டும்,'' என்றார்.
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய பொறுப்பாளர் முருகன் பேசுகையில், ""மனித உரிமைகள் மீறப்படும் போது, நாம் நிவாரணம் பெற, மனித உரிமை ஆணையங்கள் உதவுகின்றன. பல்வேறு வழக்குகள், மனித உரிமை மூலம் நிவாரணம் பெறப்பட்டுள்ளன. கல்வி உரிமை சட்டம், தொழிலாளர்கள் சட்டம், குழந்தை தொழிலாளர்கள் தடுப்பு சட்டம், பெண்களுக்கு எதிரான வன்முறை தடுப்பு சட்டங்கள், உரிமை பாதுகாப்புக்கு உருவாக்கப்பட்டுள்ளன,'' என்றார்.
ஊட்டி நகர மக்கள் விழிப்புணர்வு சங்க செயலாளர் ஜனார்தனன், மசினகுடி எஸ்.ஐ., ராமகிருஷ்ணன், மசினகுடி, வாழைத்தோட்ட பழங்குடியின பயிற்சி மாணவர்கள் பங்கேற்றனர்.
பயிற்சியாளர் சந்தோஷ் நன்றி கூறினார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக