அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

திங்கள், 13 டிசம்பர், 2010

இன்று சர்வதேச மலைகள் தினம்

ஊட்டி:"அடுக்கு பாறைகளால் உருவாகி உள்ள மிகவும் பழமையான நீலகிரி மலையின் மீது, சூழல் பாதுகாப்பை அடிப்படையாக கொள்ளாத, திட்டமிடப்படாத வளர்ச்சி பணிகள் அதிகரித்து வருவது எதிர்காலத்தில் பெரும் அழிவை ஏற்படுத்தும்' என, எச்சரிக்கப்பட்டுள்ளது.நம் நாட்டில் இமயமலைக்கு அடுத்தபடியாக, மேற்கு தொடர்ச்சி மலையின் அங்கமாக உள்ள நீலகிரி மலை, பழமை வாய்ந்ததாக உள்ளது. இங்கு தொட்டபெட்டா, கொல்லரிபெட்டா, முக்கூர்த்தி, நீலகிரி பீக், ரங்கசாமி பீக் ஆகிய சிகரங்கள், இம்மலையின் கம்பீரத்தை பறைசாற்றுவதாக உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் வரும் "சர்வதேச மலைகளின் தினத்தில்' (டிச.,11) இங்குள்ள பல்வேறு சுற்றுச்சூழல் சங்கங்களும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் சிறிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவது வழக்கம்.ஆனால், நீலகிரி மாவட்டத்தின் சார்பில் ஒரு சிறிய நிகழ்ச்சி கூட நடத்தவில்லை. கடந்த காலங்களை ஒப்பிடும் போது, நீலகிரி மலைப்பகுதியில் கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு இயற்கை சீற்றங்கள், செயற்கை காரணங்களால் ஏற்பட்டுள்ளது. பாறைகளின் மீது அமைந்துள்ள இந்த மலையின் மீது, அமைந்துள்ள விதிமுறைகளை மீறிய பல அடுக்கு மாடி கட்டடங்களும், போதிய மழைநீர் வடிகால் அமைப்பு இல்லாத வளர்ச்சி திட்டங்களும் மழைகாலங்களில் பல உயிர்பலிகளை ஏற்படுத்தி வருகின்றன.அதேவேளையில், மலைகளையும், மலையை சார்ந்த வனங்களையும் தெய்வமாக வணங்கும் நீலகிரி வாழ் ஆதிவாசி மக்கள் வாழும் பகுதிகளில் இத்தகைய பாதிப்புகள் ஏற்படுவதில்லை. அவர்கள் குடிசைகளில் வாழ்ந்தாலும், இயற்கைக்கு சேதம் ஏற்படுத்தாத வகையில் தங்களின் வாழ்க்கை முறைகளை அமைத்து வாழ்கின்றனர்.அதேவேளையில், மறுபுறம் சுற்றுலா திட்டங்கள், மக்கள் தொகை அதிகரிப்பு இவற்றின் காரணத்தால், அரசு மற்றும் தனியார் சார்பில் நீலகிரி மலையை பாதிக்கும் பல்வேறு செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது சுற்றுச்சூழல் வாதிகளை கவலை கொள்ள செய்துள்ளது. சமவெளி பிரதேசங்களின் தண்ணீர் தொட்டி என்று வர்ணிக்கப்படும் இங்குள்ள வனங்களின் அழிவால், 1.40 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் கிடைக்காத அபாயம் உருவாகி வருகிறது.இத்தகைய சூழ்நிலையில்,வனங்களையும்,வன உயிரினங்களையும் காக்க நீலகிரியை அழிவின் பிடியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்பதே சுற்றுச்சூழல் வாதிகளின் கோஷமாக உள்ளது.சி.பி.ஆர்.,சுற்றுச்சூழல் கல்வி மைய அலுவலர் குமாரவேலு கூறுகையில்,"" நம் நாட்டில் தொன்று தொட்டு வாழும் மக்களின் மனங்களில் மலைகளை பற்றிய இரண்டு விஷயங்கள் தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகின்றன. மலைகளை புனித ஸ்தலமாகவும், உயிரினங்களின் வாழ்வாதாரமாகவும் கருதி வந்துள்ளனர். இதனடிப்படையில் தான் மலைகளை பாதுகாக்க வேண்டிய அவசியமும், இங்குள்ள அரிய பொக்கிஷங்களை அழிக்காமல் தடுக்க வேண்டிய கடமையும் நம் எல்லோருக்கும் உள்ளது. ""மேற்கு தொடர்ச்சி மலை தொடர்களின் அங்கமாக கருதப்படும் நீலகிரி மலை பகுதி பல்வேறு சிறப்பு அம்சங்களை உள்ளடக்கியது. இதன் தொன்மையையும், ஆச்சர்யங்களையும் அறியாமல் கொஞ்சம், கொஞ்சமாக இதனை அழிக்கும் செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இங்கு முன்பு இருந்ததை போல, சுத்தமான காலநிலை மாறி, மாசு கலந்த சூழ்நிலை அதிகரித்து வருகிறது.""உலகளவில் சமீபத்தில் எடுக்கப்பட்ட புதிய ஆய்வுகளின் படி, உலகில் உள்ள மிகவும் பழமையான மலைகளின் உயரம் நாளுக்கு, நாள் குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நீலகிரி மலைக்கும் பொருந்தும். நீல மலையை பொறுத்தவரை, அடுக்கு பாறைகளை கொண்டவையாகும். இதில்,சூழல் பாதுகாப்பை அடிப்படையாக கொள்ளாத, திட்டமிடப்படாத வளர்ச்சிப்பணிகள் அதிகரித்து வருவது எதிர்காலத்தில் பெரும் அழிவை ஏற்படுத்தும். நம் எதிர்கால சந்ததிகளின் வாழ்க்கைக்காவும், இந்த மலையை நம்பி வாழும் உயிரினங்கள், தண்ணீரை வழங்கி வரும் வனங்களுக்காவும் இதனை அழிவின் பாதையில் இருந்து காக்க ஒவ்வொருவரும் உறுதி மொழி ஏற்க வேண்டியது கடமையாகும்,'' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக