பூவின் மொழி... நிறமா... மணமா...? ஊட்டிக்கு வந்தால் 'இதம்' புரியும்
கோடை சீசன்... ஊட்டியின் சுற்றுலா மையங்கள் உட்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் 'கால் வைக்க' முடியாத அளவுக்கு கூட்டம். சமவெளியில் 'சுடும் வெயிலால்' உண்டான உஷ்ணத்தை தணிக்க எண்ணும் மக்கள், இதமான குளிர் காற்றை தேடி அடைக்கலமாக வரும் ஊட்டியில்,பசுமை கொஞ்சும் இயற்கை அழகும், வண்ண மலர்களோடு 'ரீங்காரம்' பாடும் வண்டுகளும் அவர்களை வரவேற்க காத்து கிடக்கின்றன.
இந்த பூக்களை சுமந்த மலையரசியின் மகுடத்திலா சில மாதங்களுக்கு முன் 'உடைசல்' ஏற்பட்டது;வியப்பூட்டும் 'பட்டு போர்வையின்' பசுமைக்குள்ளா நிலம் சரிந்த பெரும் சோகங்கள் நிகழ்தன; இதமான தென்றல் தவழும் 'அமைதி' பள்ளதாக்கிலா 51 உயிர்கள் மூச்சு முட்டி ஜீவ சமாதியாகின என்ற கேள்விகள் ஒவ்வொரு சுற்றுலா பயணிகள் மனதிலும் எழும் அளவுக்கு, 'ஏழைகளின் சுவிட்சர்லாந்து' என்றழைக்கப்படும் 'ஊட்டி' தனது அழகை மெருகூட்டியுள்ளது. கடந்த நவம்பர் மாத பாதிப்புகளின் சுவடே தெரியாத அளவுக்கு பொலிவாக்கப்பட்டுள்ள இந்த 'சொர்க்கபூமிக்கு' நீங்கள் வருவதற்கு முன், உங்களை வழிநடத்தி செல்லும் சில முக்கிய தகவல்கள் இதோ...!
ஊட்டி தாவரவியல் பூங்கா: ஆங்கிலேயர் ஆட்சியில் அவர்களின் தேவைக்காக அமைக்கப்பட்ட காய்கறி தோட்டம் பராமரிக்காமல் விடப்பட்டதால், அப்பகுதியில் ஒரு பூங்காவை துவக்க, ஊட்டியில் வசித்து வந்த ஆங்கிலேயர்கள் நன்கொடை மற்றும் சந்தா வசூலித்தனர். இதில், 1847ம் ஆண்டில் மெட்ராஸ் கவர்னராக இருந்த டூவிடேல் என்பவர், பூங்கா மேம்பாட்டுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கினார். இதனை தொடர்ந்து,பூங்காவை பொலிவாக்கும் வகையில், லண்டனில் உள்ள 'க்யூ' பூங்காவில் பணிபுரிந்த அனுபவத்தை பெற்றிருந்த தோட்டக்கலை நிபுணர் ஐவர் என்பவர் பூங்கா கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார். பூங்காவின் சிறிய பகுதி காய்கறி தோட்டமாகவும், பெரும்பாலான பகுதி சோலையாகவும், முட்புதர் சூழ்ந்தும் இருந்ததை மாற்றி,10 ஆண்டுகள் போராடி லண்டன் 'க்யூ' பூங்காவை போல அழகிய புல்தரைகள் மற்றும் பூந்தோட்டமாக, ஊட்டி தாவரவியல் பூங்காவை மாற்றினார்.
இதை தவிர, தோட்டக்கலை துறையின் மூலம் ஆராய்ச்சிக்கான தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டது. தற்போது, 117 குடும்பங்களை சேர்ந்த 2,000 ரக தாவரங்கள் உள்ளன. இது மட்டுமல்லாமல், 144 ரக பெரணிகள், 350 வகை ரோஜாக்கள், 60 ரக டேலியா, 30 ரக கிளாடியோலை, 150 ரக கள்ளிகள், டைனோசர் காலத்தில் இருந்த 'ஜிங்கோபைலபா', முதன் முதலில் பேப்பர் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட 'போஜ்பத்தர்' என்ற மரம் உட்பட ஏராளமான மர வகைகள் தற்போதும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. ஊட்டி பஸ் ஸ்டாண்டில் இருந்து 2 கி.மீ., தொலைவில் உள்ளது.
மான் பூங்கா: ஊட்டி ஏரியின் மறு கரையில் வனத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள மான் பூங்கா 20 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இங்கு 22 கடமான்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. புதிய படகு இல்ல சாலை வழியாக இங்கு செல்லலாம். புதிய வரவாக இரண்டு மான் குட்டிகள் 'துள்ளி திரிந்து' வருகின்றன.
தொட்டபெட்டா சிகரம்: தென்னிந்தியாவின் உயரமான சிகரமாக கருதப்படும் தொட்டபெட்டா சிகரம் கடல் மட்டத்திலிருந்து 2,623 மீ., உயரத்தில் உள்ளது. நீலகிரியில் வசிக்கும் பழங்குடியினர் மொழியில், தொட்டபெட்டா என்றால் 'உயரமான மலை' என்று பொருள். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தினரால் காட்சிமுனை அமைக்கப்பட்டு, 'டெலஸ்கோப்'பில் இருந்து ஊட்டி நகரம், குன்னூர், வெலிங்டன், குந்தா, கோவை, கர்நாடகா, கேரளா பகுதிகளை ரசிக்கலாம். ஊட்டி பஸ் ஸ்டாண்டில் இருந்து 10 கி.மீ., தூரத்தில் உள்ளது.
குன்னூர் சிம்ஸ்பூங்கா: ஜே.டி.சிம் என்ற ஆங்கிலேயரால், 1874ல் உருவாக்கப்பட்ட சிம்ஸ் பூங்காவில், 1,200க்கும் மேற்பட்ட அரிய வகை மரங்கள் உள்ளன. 27 வகையான கற்பூர மரங்கள், 104 ஆண்டு பழமை வாய்ந்த யானைக்கால் மரம், ருத்ராட்சை, காகிதம், டர்பன்டைன், ஜெகரன்டா, கெமேலியா, அகேசியா, மரதாகை, யுஜிநாய்டஸ் உட்பட பல வகையான பழமை வாய்ந்த மரங்கள் அலங்கரிக்கின்றன. படகு இல்லம், சிறுவர் பூங்காவின் இடையிடையே அழகிய மலர்களின் அணிவகுப்பு, 150க்கும் மேற்பட்ட வெளிநாட்டு மலர் செடிகள் பூத்து குலுங்குவது கண்கொள்ளா காட்சியாகும். குன்னூர் பஸ் ஸ்டாண்டிலிருந்து 2 கி.மீ., தொலைவில் சிம்ஸ்பூங்கா உள்ளது
கோத்தகிரி நேரு பூங்கா: கோத்தகிரியின் மையப்பகுதியில், காமராஜர் சதுக்கத்தில் உள்ள நேரு பூங்காவில் பல அரிய வகை மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டு மலர்கள் மலர்ந்துள்ளன. அழகிய புல்வெளி, கோத்தரின மக்களின் கோவில் ஆகியவையும் இங்கு உள்ளன. கோத்தகிரி பஸ் ஸ்டாண்ட், டானிங்டன், ராம்சந்த் ஆகிய பகுதிகளில் இருந்து பூங்காவிற்கு நடந்தே செல்லலாம்.
கல்லட்டி நீர்வீழ்ச்சி: ஊட்டி-முதுமலை சாலையில் 13 கி.மீ., தொலைவில் உள்ள கல்லட்டி நீர்வீழ்ச்சிக்கு செல்ல வேண்டிய காலம் செப்டம்பர் முதல் நவம்பர் வரை கண்கொள்ளா காட்சியாக இருக்கும். இதனை சுற்றியுள்ள பகுதிகளில் வனங்களில் காணப்படும் அரிய வகை பூக்களும் பூத்திருப்பதை பார்க்க கிடைப்பது பயணிகளுக்கு வரப்பிரசாதம்தான்.
லேம்ஸ்ராக்: சிம்ஸ் பூங்காவில் இருந்து 5 கி.மீ., தொலைவில் உள்ள லேம்ஸ்ராக் காட்சி முனைக்கு செல்லும் சாலையின் இருபுறமும் அடர்ந்த வனங்களும், தேயிலை தோட்டங்களும் நிறைந்துள்ளது. காட்சி முனையில் இருந்து பல ஆயிரம் அடி ஆழமுள்ள பள்ளதாக்கு காட்சிகளை காண்பதும்; பள்ளதாக்கில் கொட்டி கிடக்கும் இயற்கை காட்சிகள் மனதுக்கு இதம் தரும்.
டால்பின்ஸ் நோஸ்: லேம்ஸ்ராக்கில் இருந்து 5 கி.மீ., தொலைவில் உள்ள டால்பின்ஸ் நோஸ் காட்சி முனையில் டெலஸ்கோப் உள்ளது. பள்ளத்தாக்கு காட்சி முனையில் இருந்து 6,000 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கு காட்சிகள், கோத்தகிரியில் உள்ள கேத்ரின் நீர்வீழ்ச்சி, மேட்டுப்பாளையம் பகுதி ஆகியவற்றை இங்கிருந்து ரசிக்கலாம். மரங்கள் சூழ்ந்த அடர்ந்த வனப்பகுதிக்குள் அமைந்துள்ள இக்காட்சி முனைக்கு செல்லும் போதே அதன் குளிர்ச்சியின் குதூகலம் பயணிகளை வரவேற்கும்.
கேத்ரீன் நீர்வீழ்ச்சி: பசுமையான தேயிலை தோட்டங்கள், அழகிய மலை முகடுகள், பாறைகள் வழியாக வரும் கேத்ரீன் நீர்வீழ்ச்சி, காட்சி கோபுரம் கோத்தகிரி அரவேணு பகுதியில் இருந்து 3 கி.மீ., தொலைவில் உள்ளது. பாசி படிந்த பாறைகள், அழகான நீர்வீழ்ச்சி 'போட்டோ' எடுக்க சிறந்த இடம்.
கோடநாடு காட்சிமுனை: கோடநாடு காட்சிமுனையில் இருந்து பார்த்தால், கண்ணுக்கு எட்டிய தூரம் வனங்கள் மட்டுமே காட்சி கோபுரத்தில் உள்ள 'பைனாகுலர்' மூலம் வரலாற்று சிறப்பு மிக்க சுஜ்ஜல் கோட்டை, அல்லிராணி கோட்டையை காண்பது இதன் சிறப்பம்சம். தெங்குமரஹாடா கிராமத்தின் அழகையும் இங்கிருந்தே ரசிக்கலாம். நீலகிரி மலையில் உருவாகி பவானிசாகர் அணையில் கலக்கும் 'மாயாறு' ஆறு வரையுள்ள அழகிய வயல்வெளிகள், அடர்ந்த வனங்கள், யானைகளின் வழித்தடங்கள், ரங்கசாமி கோவில் மலை உட்பட மலை முகடுகள் அனைத்தையும் இங்கிருந்தே பார்க்கலாம்.
பைக்காரா படகு இல்லம்: பைக்காரா அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரானது, இங்குள்ள பாறைகளில் தவழ்ந்து செல்லும் போது இங்குள்ள அருவி ரம்மியத்தை ஏற்படுத்தும். நீர்வீழ்ச்சியை அடுத்து ஒரு கி.மீ., தொலைவில் பைக்காரா ஏரி உள்ளது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தால் அமைக்கப்பட்ட படகு இல்லம் கண்கொள்ளா காட்சியாகவும், சவாரி செய்யவும் விரும்புகின்றனர். இங்கு புதிதாக விடப்பட்டுள்ள 'அட்வென்சர்' படகு இளைய பட்டாளங்களின் வேகத்துக்கு சவால் விடும். பைக்காரா செல்லும் வழியில் பைன் பாரஸ்ட், ஸ்கூல் மந்து, ஷூட்டிங் பாய்ன்ட் சுற்றுலா தலங்கள் உள்ளன. இந்தபகுதிகள் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதால், குப்பை கொட்டினாலோ, இயற்கையை சேதப்படுத்தினாலோ அபராதம் தான். ஊட்டியில் இருந்து 22 கி.மீ., தொலைவில் உள்ளது.
முதுமலை புலிகள் காப்பகம்: கூடலூர் ஒட்டி அமைந்துள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில், மான், யானை, காட்டெருமை, புலி, சிறுத்தை, கரடி உட்பட விலங்கினங்கள், மயில் உட்பட பறவையினங்கள் வசிக்கின்றன. முதுமலை புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த பகுதியில் இந்தியா மட்டுமன்றி, உலக நாடுகளை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் பலர், ஆண்டுதோறும் வந்து செல்கின்றனர். இவர்கள், வனத்துறை வாகனங்கள் மூலமும், யானைகள் மூலமும் சவாரிக்கு அழைத்து செல்லப்படுகின்றனர். தற்போது கோடையில் வனத்தீ ஏற்பட்டு வருவதால் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு செல்ல அனுமதி கிடையாது. வனத்துறையினர் தேதி அறிவிக்கும் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. கூடலூரில் இருந்து 17 கி.மீ., தூரத்தில் உள்ளது.
ஊசிமலை: ஊட்டி - கூடலூர் சாலையில், 40 கி.மீ., தொலைவில் உள்ளது ஊசிமலை காட்சி கோபுரம். இங்கிருந்து, கூடலூர், சிங்காரா, நடுவட்டம் மற்றும் முதுமலை வனப்பகுதியை ரசிக்க முடியும்.
ரோஜா மலரே ராஜகுமாரி...: ஊட்டி தாவரவியல் பூங்கா தோற்றுவிக்கப்பட்டு நூற்றாண்டை கொண்டாடும் வகையில், 1996ம் ஆண்டில் அப்போதைய அ.தி.மு.க., ஆட்சியின்போது, ஊட்டி விஜயநகரப் பகுதி ரோஜா பூங்கா உருவாக்கப்பட்டு, 'நூற்றாண்டு ரோஜா பூங்கா' உருவாக்கப்பட்டது. தோட்டக்கலைத் துறைக்கு சொந்தமான இடத்தில் 5 எக்டேர் பரப்பில் 6 தளங்களில் பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. 4,000 ரக ரோஜாக்களில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செடிகளில் ரோஜாக்கள் மலர்ந்து வருகின்றன. 2006ம் ஆண்டு ஜப்பானில் நடந்த சர்வதேச ரோஜா கருத்தரங்கில் 'கார்டன் ஆப் தி எக்ஸ்சலன்ஸ்' விருது சர்வதேச ரோஜா சங்கத்தின் சார்பில் வழங்கப்பட்டது நீலகிரிக்கே பெருமையை சேர்த்துள்ளது. ஆசியாவில் அதிகபட்ச ரோஜா ரகங்களை கொண்ட பூங்கா என்ற பெருமையும் இதற்கு உண்டு.
'இலவசமா' ஒரு பூங்கா...! மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட நிதியில் 14 லட்சம் ரூபாய் மதிப்பில், ஊட்டி - பர்ன்ஹில் சாலையில், மூன்று ஆண்டுகளுக்கு முன் தோட்டக்கலை துறையால் மரவியல் பூங்கா உருவாக்கப்பட்டது. ஊட்டி பஸ் ஸ்டாண்டிலிருந்து ஒரு கி.மீ., தூரம் உள்ள இப்பூங்காவில், அல்னஸ் நெப்லென்சிஸ், கேலிஸ்டோமன், கூப்ரசுஸ், மேக்ரோகார்பா உட்பட 100க்கும் மேற்பட்ட மரங்கள் உள்ளன. இதில், 60க்கும் மேற்பட்ட அரிய வகை மரங்களும் முக்கியத்துவம் வாய்ந்தவை. 'கிரிக்கெட்' பேட் தயாரிக்க பயன்படும் 'வில்லோ' மரமும் இங்குண்டு. பூங்காவை ஒட்டி சதுப்பு நிலம் உள்ளதால், மாலை நேரங்களில் 30க்கும் மேற்பட்ட நீலகிரி வாழ் பறவை இனங்களின் 'இலவச இசை' அனைவரின் மனதுக்கும் இதமளிக்கும். அமைதியான சூழலில் 'புத்தகம்' படிக்க விரும்புபவர்கள் இங்கு வரலாம்.
சவாரிக்கு புதிய படகு இல்லம்...: ஊட்டி நகரின் மத்திய பகுதியில் தற்போதைய ரேஸ்கோர்ஸ் முதல் காந்தல் வரையுள்ள பகுதி முழுவதும், பல நூற்றாண்டுகளுக்கு முன்பு மிகப்பெரிய நீர்தேக்கமாக இருந்தது. 1823ம் ஆண்டு அப்போதைய கோவை கலெக்டர் ஜான் சலீவனால், படகு சவாரிக்கும், மீன் பிடிக்கவும் ஏரி உருவாக்கப்பட்டது. 2.75 கி.மீ., நீளமும், 100 முதல் 140 மீட்டர் அகலமும் கொண்டிருந்தது. 1877ம் ஆண்டு வரை இந்த ஏரி நீர் குடிநீராக பயன்பட்டு வந்த நிலையில், ஊட்டி நகரிலிருந்து வெளியேறும் கழிவுகள் ஏரியில் கலந்ததால் குடிநீருக்கு பயனற்று போனது. தற்போது தமிழக சுற்றுலா வளர்ச்சி கழக பராமரிப்பில், 65 ஏக்கர் பரப்பில் உள்ள ஏரியில் படகு சவாரிக்காக, 100க்கும் மேற்பட்ட படகுகள் இயக்கப்படுகின்றன. ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஏரியின் மறு கரையில் உருவாக்கப்பட்ட புதிய படகு இல்லம் தற்போது புதிய பொலிவை பெற்றுள்ளது.
'தைய்ய, தைய்யா...' பயணத்தில் குஷி: பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப் பட்ட ஊட்டி மலை ரயில் குழந் தைகளின் மொழியில் டாய் டிரெயின் என அன்புடன் அழைக்கப்படுகிறது. ஊட்டியில் கடந்த நவம்பர் மாதம் பெய்த மழையின் காரணமாக மேட்டுப்பாளையம் - குன்னூர் மலைரயில் நிறுத்தப்பட்டுள்ளது. வரும் 20ம் தேதி முதல் இந்த வழித்தடத்தில் மீண்டும் ரயில் இயக்கம் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், குன்னூர் - ஊட்டி இடையே மலை ரயிலில் சுற்றுலா பயணிகள் பயணிக்கலாம். தற்போது, இதற்கான பயண சீட்டு கிடைப்பதில் சிக்கல் ஏற்படுவதால், பயணம் செய்ய விருப்பமுள்ளவர்கள் சற்று முன்னதாகவே ரயில் நிலையத்துக்கு வந்து விட்டால், ஏமாற்றம் இருக்காது. ஊட்டி முதல் குன்னூர் வரை மட்டுமே பயணம் இருந்தாலும் மழையால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளை பார்வையிடலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக