குறுக்கு வழிகள் தவறுகளுக்கான காரணிகள் :தேயிலை வாரிய செயல் இயக்குனர் கருத்து
ஊட்டி:"குறுக்கு வழிகளை கையாளுவதே பல தவறுகளுக்கும் வழிவகை செய்கிறது.' என தெரிவிக்கப்பட்டது.கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மக்கள் மையம், ஊட்டி நகர மக்கள் விழிப்புணர்வு சங்கம் இணைந்து, ஊட்டி ஆக்ஸ்போர்ட் ஆசிரியர் பயிற்சி நிலையத்தில் நேதாஜியின் 115வது பிறந்த தினம் மற்றும் முதலாவது தேசிய வாக்காளர் தின கருத்தரங்கை நடத்தின. இதில், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற தேயிலை வாரிய தென் மண்டல செயல் இயக்குனர் அம்பலவாணன் பேசியதாவது:தற்போது வாக்காளர்கள் பெரும்பாலும் ஓட்டளிக்க விரும்புவதில்லை. மக்கள் ஓட்டுச்சாவடி சென்று ஓட்டு போட தயங்குகின்றனர். இதனால், ஒரு நல்ல நபரை தேர்வு செய்ய இயலாத நிலை உருவாகிறது. தேர்தலில் படித்த, நேர்மையான, தகுதிவாய்ந்த, திறமையான நபரை அடையாளங்கண்டு தேர்வு செய்ய வேண்டும்.தேர்தலில் பணம் புழங்குவது அதிகரித்து வருகிறது. இதனை மக்கள் தவிர்க்க வேண்டும்; இதனால், பல சமூக அக்கறை கொண்ட நபர்கள் தேர்தலில் போட்டியிட இயலாத நிலை உருவாகிறது. இந்தியாவில் உள்ளதை போல சுதந்திரம் எங்குமில்லை. ஆனால், நாம் அதனை தவறாக பயன்படுத்துகிறோம். சட்டம், விதிமுறைகளை பின்பற்றுவதில்லை. குறுக்கு வழிகளை கையாளுகிறோம். இதுவே பல தவறுகளுக்கும் வழிவகை செய்கிறது.அரசியல் என்றால் இளைஞர்கள் ஒதுங்குவதை தவிர்க்க வேண்டும். அரசியலில் தொண்டர்களாக பங்கேற்பதை தவிர்த்து குடிமக்களாக செயல்பட வேண்டும். நல்லவராகவும், சமூக சிந்தனை உடைய அக்கறை கொண்டவரையே தேர்வு செய்யும் நிலைக்கு வாக்காளர்கள் அனைவரும் முன்னேற வேண்டும். இளைஞர்களின் பங்கு தேர்தலில் அவசியம் அதிகரிக்க வேண்டும். இதன்மூலம் நல்ல மாற்றம் உண்டாகும். இவ்வாறு, அம்பலவாணன் பேசினார்.குன்னூர் தாசில்தார் ஜாபர்அலி பேசுகையில், ""18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என ஆய்வு செய்து சரிபடுத்தி கொள்ள வேண்டும். வாக்காளர் அடையாள அட்டை மிகவும் முக்கியமானது. இந்திய குடிமகன் என்பதற்கு இதுவே மிக முக்கிய அடையாளமாகும். கடைசி நேரத்தில் அவதிப்படாமல் எப்போதும் வாக்காளர்பட்டியல் திருத்தங்களை கவனத்தில் கொண்டு பயன்பெற வேண்டும்,'' என்றார்.ஊட்டி நகர மக்கள் விழிப்புணர்வு சங்க செயலாளர் ஜனார்தனன் பேசுகையில், ""ஓட்டுக்களை சரிவர பயன்படுத்தாமல் வாக்காளிக்காமல் இருப்பவர்கள் முகவரி அற்றவர்கள். இதனால், அரசியலில் தவறு செய்பவர்கள் சுரண்டல்வாதிகள் மீண்டும் பதவிக்கு வரும் சூழல் உருவாகிறது. 100 சதவீத ஓட்டுப்பதிவு நேர்மையான ஆட்சிக்கு உதவும்,'' என்றார்.நெஸ்ட் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சிவதாஸ் பேசுகையில், ""தேச விடுதலைக்கு பாடுபட்ட பல தலைவர்களின் வரிசையில் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் பங்கு மகத்தானது. ஜனநாயகம் காக்க வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும். மற்றவர்களை வாக்களிக்க உந்துதல் சக்தியாக இளைஞர்கள் பாதுபட வேண்டும்,''என்றார்.கூடலூர் நுகர்வோர் மைய தலைவர் பேசுகையில், "நல்லவர்களை தேர்வு செல்வது நமது கடமை. நமது உரிமையை முறைப்படி செய்ய வேண்டும். இலவசத்திற்கும் கவர்ச்சி திட்டத்திற்கும் ஆசைபட்டால் வளர்ச்சிக்கு வழி வகை இருக்காது. நல்லவர்கள் தேர்தலில் போட்டியிடவில்லை என்றால் 49(0)க்கு ஓட்டுப்பதிவுகளை செய்து கள்ள ஓட்டுகளை தவிர்க்க வேண்டும்,'' என்றார்.நிகழ்ச்சியில், ஆசிரியர் பயிற்சி பள்ளி ஆசிரியர் மூர்த்தி வரவேற்றார். பள்ளி முதல்வர் ராமசந்திரன் தலைமை வகித்தார். பயிற்சி நிலைய மாணவர்கள், சிறப்பு விருந்தினர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். ஆசிரியர் குமார் நன்றி கூறினார்.
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக