நீலகிரி
ஊட்டியில் மலிவு விலை உணவகம் அமைக்க வேண்டும்
ஊட்டி. டிச. 25:
மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு குழு கூட்டம் ஊட்டியில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு குழு தலைவரும், மாவட்ட கலெக்டருமான சங்கர் தலைமை தாங்கினார். மாவட்ட வழங்கல் அலுவலர் நல்லசாமி முன்னிலை வகித்தார்.
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம் பேசுகையில், நீலகிரி மாவட்டத்தில் பல துறைகளில் பலமுறை வலியுறுத்தும் இதுவரை காலாண்டு நுகர்வோர் கூட்டங்கள் நடத்தப்படவில்லை. இதுமிகவும் வருந்தத்தக்கது. இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீலகிரி மாவட்டத்திற்கு கூடுதல் மண்ணெண்ணெய் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தரமற்ற மின்சாதன பொருட்கள் விற்பனை குறித்து ஆய்வு செய்ய வேண்டும். சுற்றுலா நகரமான ஊட்டியில் உணவு பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும். மக்கள் பயன்பெறும் வகையில் ஊட்டியில் மலிவு விலை உணவகம் அமைக்க வேண்டும். சேரம்பாடி உயர் நிலை பள்ளிக்கான இடம் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பல நியாய விலை கடைகளில் கடுகு, வெந்தயம் போன்ற பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றது. பொட்டலங்களில் அச்சிட்டு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அனைத்து கடைகளிலும் உள்ள காலாவதி தேதி குறித்த தகவல் இல்லாத பொருட்களை திரும்ப பெற வேண்டும். கூடலூர் & தேவர்சோலை & நெலாக்கோட்டை& பொன்னானி வழியாக காலைவேளையில் பஸ் இயக்க வேண்டும்.
பந்தலூர் பகுதியில் பஸ் இயக்கத்தினை முறைப்படுத்த நேர காப்பாளர் நியமிக்க வேண்டும். ஊட்டி, கூடலூர், பந்தலூர் அரசு மருத்துவமனைகளில் தினசரி ஸ்கேன் எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது ஸ்கேன் எடுக்கும் நாள் என தனியாக நிர்ணயித்து, அந்நாளில் ஸ்கேன் எடுக்க வேண்டும்.
பந்தலூர் அரசு மருத்துவமனையில் முழுநேர உள்நோயாளிகள் சிகிச்சை பெற அனுமதிக்க வேண்டும். தேவாலா நீர்மட்டம் பகுதி, உப்பட்டி புஞ்சவயல் போன்ற பகுதிகளில் கொட்டப்படும் கோழி கழிவுகளால் துர்நாற்றம் வீசுகிறது.
பொது இடங்களில் கோழிகழிவுகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். முக்கிய இடங்களில் இலவச கழிப்பிடங்கள் அமைக்க வேண்டும், என்றார்.
மாவட்ட கலெக்டர் சங்கர் பேசுகையில், “அனைத்து துறைகளும் விரைவில் காலாண்டு நுகர்வோர் கூட்டங்கள் நடத்தி நுகர்வோர்களின் குறைகளை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும். வருவாய்த்துறை சான்றுகளுக்கு எவ்வளவு கோர்ட் பீஸ் ஸ்டாம்ப் ஒட்ட வேண்டும் என்ற தகவலை அலுவலகங்களில் ஒட்டி வைக்க வேண்டும். மக்களை தேடி திட்டத்தின்மூலம் நீலகிரியில் சுமார் 40 ஆயிரம் பேருக்கு வருவாய்த்துறை சான்றுகள் உடனுக்குடன் வழங்கப்பட்டுள்ளது. தரமற்ற பொருட்கள் விற்பனை குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். பந்தலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தடுப்பு சுவர் கட்ட ஆய்வுகள் செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
சுகாதார நடவடிக்கைகளுக்கு உள்ளாட்சி அமைப்புகள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். தற்போது ஊட்டியில் நம்ம கழிப்பிடம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனை பொதுமக்கள் பயன்படுத்துவதோடு சுத்தமாகவும் வைத்து கொள்ள வேண்டும் என்றார். இதில் பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நுகர்வோர் குழு கூட்டத்தில் வலியுறுத்தல்கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்