மின்சாரத்தை சிக்கனப்படுத்தும் தரமான சாதனங்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தகவல்பதிவு செய்த நேரம்:2013-12-14 10:27:47
EPP Group Urges Governments to Use ...
ஊட்டி, : தரமான மின் சாதனங்களை வாங்கி பயன்படுத்துவதன் மூலம் மின்சாரத்தை சிக்கனப்படுத்த முடியும் என மின் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுசூழல் பாதுகாப்பு மையம், கூடலூர் மின்சார வாரியம், பள்ளி குடிமக்கள் மன்றம் ஆகியவை சார்பில் மின்சார சிக்கனம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். கூடலூர் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் முத்து, உதவி மண்வள பாதுகாப்பு அலுவலர் சுந்தரலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மின்சார வாரிய உதவி பொறியாளர் செம்புலிங்கம் பேசுகையில், தற்போது அத்யாவசிய தேவையாக உள்ள மின்சாரம் காற்று, நீர், அனல், அணு மற்றும் சூரிய சக்தி ஆகியவற்றில் இருந்து தயாரிக்கப்படுகிறது. நாம் மின்சாரத்தினை சிக்கனமாக பயன்படுத்த பல வழிகள் உண்டு. குண்டு பல்புகள் அதிக மின் செலவை தரும். அதற்கு பதிலாக சி.எப்.எல்., பல்புகள், எல்.ஈ.டி., பல்புகள் பயன்படுத்துவதால் 70 சதவீத மின் செலவை குறைக்க முடியும். மின் விசிறி, பல்புகள் மற்றும் நாம் பயன்படுத்தும் மின் சாதனங்களை அடிக்கடி சுத்தப்படுத்தி பயன்படுத்தினால் தேவையற்ற மின் செலவினை தவிர்க்கலாம். மின்சாரத்தை பயன்படுத்திய பின் சுவிட்ச்களை ஆப் செய்வது, தரமான மின் சாதனங்கள் வாங்கி பயன்படுத்துவது போன்றவை மின் சிக்கன வழிகள் ஆகும். மின்சாரத்தினை சிக்கனப்படுத்துவதன் மூலம் மின் செலவினை குறைக்க முடியும் என்றார். மின்சார வாரிய உதவி பொறியாளர் அப்துல் மஜீத் பேசுகையில், ஆசியாவிலேயே நீர் மூலம் அதிகம் மின்சாரம் தயாரிக்கும் இடம் நீலகிரி ஆகும். இங்கு மின்சாரம் தயாரிக்க பயன்படுத்தும் நீர் பல இடங்களில் மின்சாரம் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. மின் கம்பிகள் அறுந்து கிடந்தலோ சுவிட்ச் உடைந்து இருந்தாலோ மின் வாரியத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மின்சார தூண்கள் மற்றும் ஸ்டே கம்பிககளில் ஆடு, மாடுகளை கட்டுவது, குழந்தைகளை விளையாட விடுவது, துணி காயவைப்பது போன்றவை மின் விபத்திற்கு வழிவகுக்கும் இது போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என்றார். உதவி பொறியாளர் பாலாஜி பேசுகையில், மின்சார கட்டணம் செலுத்த ஆன்லைன் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அஞ்சலகங்கள், வங்கிகள், இணையதள மையங்கள் மூலமாகவும் மின் கட்டணம் செலுத்தலாம். மின் நுகர்வோர்கள் தங்கள் செல்போன் எண்களை மின்வாரியத்தில் பதிவு செய்து கொண்டால் மின் கட்டணம் குறித்த தகவல்கள் குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவிக்கப்படும். முன்வைப்பு தொகையாகவும் மின் கட்டணம் செலுத்தலாம் என்றார். தொடர்ந்து மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர் ராபர்ட், ஆசிரியர் காந்திமதி மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் லிசீனா நன்றி கூறினார். |
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்
மக்கள் மையம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக