கூடலூர்:கூடலூர் அரசு மருத்துவமனையில், அனைத்து வசதிகளுடன் கூடிய "பிரசவ பிரிவு' துவங்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டுள்ளது.கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம், தமிழக முதல்வருக்கு அனுப்பிய மனு:
கூடலூர் பந்தலூர் பகுதியில் 2 லட்சத்துக்கு மேற்பட்ட கூலி தொழிலாளர்கள், சிறு மற்றும் குறு விவசாயிகள் வசித்து வருகின்றனர். இங்கு வாழ்வோர் தனியார் மருத்துவமனைகள் போதுமானதாக இல்லாததால், மருத்துவ தேவைகளுக்கு, கூடலூர் அரசு மருத்துவமனையையே நம்பியுள்ளனர். இங்கு, நோயாளிகள் சிறப்பான சிகிச்சையை பெற்று பயனடைந்து வருகின்றனர். எனினும், ஆபத்தான அவசர சிகிச்சைக்கு, ஊட்டி, கேரளா மாநிலம் கல்பட்டா, சுல்தான்பத்தேரிக்கு பரிந்துரை செய்வதால், நோயாளிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவத்துக்கு முன் மற்றும் பின் கால பரிசோதனை சிறப்பாக உள்ளது.
ஆனால், பிரசவ நேரத்தில் அவசர சிகிச்சைக்கான வசதி இல்லாததால், 50 கி.மீ., தொலைவிலுள்ள ஊட்டி அரசு சேட் தாய் சேய் மருத்துவ மனைக்கு செல்ல வேண்டியுள்ளது. அங்கு கொண்டு செல்லும் பொது அசம்பாவிதங்கள் நடை பெறும் ஆபத்து உள்ளது. ஊட்டி அரசு சேட் தாய் சேய் மருத்துவ மனையில் பெரும்பாலும் கூடலூர் பகுதி மக்கள் பிரசவத்திற்க அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். சேட் தாய் சேய் மருத்துவ மனையிலும் போதிய கட்டில் வசதி இல்லாமல் ஒரு கட்டிலில் இரு நபர்கள் தாங்கும் நிலையும் உள்ளது
எனவே கூடலூர் அரசு மருத்துவமனையில் சிசேரியன் பிரிவு, குழந்தைகள் பாதுகாப்புக்கான தனி பிரிவு உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கூடிய "பிரசவ பிரிவு' துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதுபோல இங்கு கட்டி முடிக்கப்பட்ட நிலுவையில் உள்ள ரத்த வங்கியை உடனடியாக திறக்க வேண்டும்
"எக்ஸ்ரே' பிரிவுக்கு தற்போது வாரம் இருமுறை மட்டுமே எடுக்க படுகிறது இதற்க்கு நிரந்த ஊழியரை நியமிக்கவும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கூடலூர் நகரின் முக்கிய பகுதியான பழைய பேருந்து நிலையத்தில் ஒரு டாக்டருடன் செயல்படும் கூடலூர் நகர அரசு மருந்தகத்தில், சிகிச்சைக்காக தினமும் 200 முதல் 300 நோயாளிகள் வந்து செல்கின்றனர். நோயாளிகள் விரைவில் எளிதில் சிகிச்சை பெற இந்த மருந்தகம் உதவுகிறது எனவே நோயாளிகளின் சிரமத்தை போக்க, கூடுதல் டாக்டரை நியமிக்க வேண்டும்.
இவ்வாறு சிவசுப்ரமணியம் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக