நுகர்வோர் கூட்டங்களை முறையாக கூட்ட வேண்டும்
ஊட்டி, மார்ச் 27:
நீலகிரி மாவட்டத்தில் நுகர்வோர் ஆலோசனை கூட்டங்களை முறையாக கூட்ட மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் வலியுறுத்தி உள்ளது.
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுசூழல் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளுடன் மாவட்ட நிர்வாகம் சார்பில் கூட்டப்படும் கூட்டங்கள் முறை யாக கூட்டப்படவில்லை. அரசாணைகளில் காலாண்டிற்கு ஒருமுறை நுகர்வோர் அமைப்புகளுடனான ஆலோசனை கூட்டம், மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு குழு கூட்டம் ஆண்டிற்கு இரண்டிற்கு குறையாமல் நடத்தப்பட வேண்டும். மேலும் பொது விநியோக திட்ட ஆலோசனை கூட்டம் இரு மாதங்களுக்கு ஒரு முறைகூட்டப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. இக்கூட்டங்களில் ஆண்டிற்கு 4 கூட்டங்கள் மட்டுமே தற்போது கூட்டப்படுகின்றது. மற்ற கூட்டங்களும் முறையாக கூட்டப்பட வேண்டும். எனவே நுகர்வோர் ஆலோசனை கூட்டம் முறையாக நடத்தப்பட வேண்டும்.
அதுபோல எரிவாயு நிறுவன மண்டல அலுவலர்களுடன் நடத்தப்பட வேண்டிய கூட்டங்கள் கடந்த 5 ஆண்டுகளாக நீலகிரியில் கூட்டப்படவில்லை.
எனவே எரிவாயு குறைதீர் கூட்டத்தினை விரைவில் கூட்ட வேண்டும். தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளுடன் கூட்டம் நடத்தப்படும் போது கூட்டத்தில் பங்கேற்கும் அலுவல்சாரா தன்னார்வ நுகர்வோர் பிரதிநிதிகளுக்கு போக்குவரத்து செலவு தரப்பட வேண்டும் என அராசாணையில் கூறப்பட்டுள்ளது.
எனவே நீலகிரி மாவட்டத்தில் நடைபெறும் கூட்டங்களில் கலந்து கொள்ளும் நுகர்வோர் பிரதிநிதிகளுக்கு போக்குவரத்து செலவு வழங்க வேண்டும்.
மளிகை கடைகள், நகை கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகளில் உரிய ரசீது வழங்கப்படுவதில்லை. இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும்.
பல்வேறு உணவகங்கள் மற்றும் மளிகைகடைகள், பெட்டிகடைகளில் கலாவதி உணவு பொருட்கள் முறையான தகவல் பொட்டலமிட்ட தேதி போன்ற முக்கிய தகவல்கள் அச்சிடப்படாமலே விற்பனை செய்யப்படுகின்றன.
இது போன்ற கடைகளில் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக