அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

வியாழன், 2 அக்டோபர், 2014

தலைவர்களுடன் காமராஜர்!

பெருந்தலைவர் காமராஜர் எளிமையாக, பெருந்தன்மையாக, யதார்த்தமாக வாழ்ந்தவர். அவர் மனதில் மக்கள் நலனைத் தவிர வேறு எந்த ஒரு விஷயத்துக்காகவும், யார் மீதும் போட்டியோ - பொறாமையோ கொண்டது இல்லை. 

அதனால்தான் மகாத்மாகாந்தி உள்பட எல்லாக் கட்சித் தலைவர்களிடமும் அவரால் மிக, மிக இயல்பாக சகஜமாக பேசி பழக முடிந்தது. காமராஜரை பல தடவை ராஜாஜி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். ஆனால் அவரை "பெரியவர்'' என்றே எப்போதும் காமராஜர் அழைத்தார். 

தன்னை எதிர்த்த சக காங்கிரஸ் தலைவர்கள் அனைவரையும் அவர் அரவணைத்தார். அவர்களுக்கு உரிய பதவிகளையும் கொடுத்து அழகு பார்த்தார். இது அவரை மற்ற தலைவர்களிடம் இருந்து வித்தியாசப்படுத்தி காட்டியது. தந்தை பெரியாருடன் காமராஜர் வைத்திருந்த அன்பும், நட்பும் பிரமிப்பூட்டுவதாக இருந்தது. 

அது போல அறிஞர் அண்ணாவிடமும் காமராஜர் ஆத்மார்த்தமாக பழக்கம் வைத்திருந்தார். அகில இந்திய காங்கிரஸ் தலைவராக அவர் இருந்த போது நேரு, சர்தார்படேல் போன்றவர்களிடம் அன்புடன் பழகி கவர்ந்தார். மாநில காங்கிரஸ் தலைவர்கள் எல்லாருமே காமராஜரின் பாசத்தில் கட்டுப்பட்டுக் கிடந்தனர். 

எந்த கருத்து வேறுபாடும் இல்லாமல், எல்லாரிடமும் அவர் பழகிய விதம் இன்று வரலாறாக உள்ளது. அந்த வரலாற்று நிகழ்வுகளைப் படிக்க, படிக்க ஒருமனிதரால் எப்படி இப்படியெல்லாம் வாழ முடிந்தது என்ற ஆச்சரியம்தான் எல்லாரது மனதிலும் மேலோங்குகிறது. அத்தகைய வரலாற்று நிகழ்வுகளில் சிலவற்றை வரும் பக்கங்களில் காணலாம். 

அண்ணாவுக்கு சொன்ன ஆலோசனை: 

1967-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆளுங்கட்சியானது. அண்ணா முதல்வரானார். அப்பொது பெருந்தலைவர் காமராஜரை சந்தித்து அவரைக் கவுரவிக்கவும், ஆலோசனை பெறவும் அண்ணா அவரது இல்லம் சென்றார். 

பெருந்தலைவரிடம் அண்ணா, நாங்கள் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம் என்று நினைக்கவில்லை. வந்து விட்டோம். நீங்கள் தான் எங்களுக்கு ஆதரவும், ஆலோசனையும் வழங்க வேண்டும்' என்றார். அதற்குப் பெருந்தலைவர், `அதைப் பற்றி நீங்கள் ஒன்றும் கவலைப்பட வேண்டாம். 

நீங்கள் மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதை உங்கள் உதவியாளரிடம் சொல்லுங்கள். அந்தக் காரியங்களை இலாகா செயலாளர்களிடம் கூறி செயல்படுத்தச் சொல்லுங்கள். முதலில் உங்களுக்கு ஓட்டுப் போட்ட மக்களுக்கு நன்றி சொல்லுங்கள். அவர்கள் உங்களிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள்' என்றார். 

அண்ணா மீது பாசம்:

ஒருநாள் அண்ணாதுரையைப் பார்க்க ஆஸ்பத் திரிக்குப்போயிருந்தார். உடல் மெலிந்து, கண்கள் ஒளி இழந்து, உணவை விழுங்கக்கூட முடியாமல் கிள்ளிக்கிள்ளி எடுத்து வாயில் போட்டு மிகுந்த சிரமத்துடன் விழுங்க முடியாமல் திணறினார் அண்ணா. இதைப்பார்த்த காமராஜருக்கு மனம் பொறுக்கவில்லை. 

"அவரு உடம்புக்கு என்னென்னே இன்னமும் கண்டு பிடிக்கலியா? ரொம்ப லட்சணமாயிருக்கு. நீங்கள்ளாம் நெறைய படிச்சது எதுக்கய்யா? உங்கள்ளே யாரு முக்கியம்கிறது பெரிசில்லை. இவருயாரு தெரியுமில்லே. முதல்-அமைச்சர். இவருதான் இப்ப முக்கியம். டாக்டர்கள் அவங்க அவங்களுக்குண்டான பொறுப்பை எடுத்துகிட்டு டீம் ஒர்க் பண்ணுங்க. 

கவனமாய் பாருங்கண்ணுதானே சொல்றேன். கவர்ன் மென்ட்லே பண்றமாதிரி பேப்பர்ங்களே மேலேயும் கீழேயும் அனுப்பிகிட்டு இருக்காதீங்க. எதை செய்தா இவருக்கு நல்லதோ அதை உடனே செய்யுங்க. எது வேணுமோ அதைக் கேட்டு வாங்குங்க. 

தயங்காதீங்க... பயப்படாதீங்க..'' என்று உரக்கக் கட்டடமே அதிரதன் கோபத்தையும் ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தினார். இதன் பின்னரே அண்ணாதுரை அடையாறு புற்று நோய் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அதற்கென உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. அமெரிக்க நிபுணர்களின் சிகிச்சையும் பெறப்பட்டது. 

காமராஜரை விட்டு விடாதீர்கள்!: 

பெரியார்தன் இறுதி மூச்சுள்ள வரை காமராஜர் ஆட்சிக்கு அரணாகத் திகழ்ந்தார். அதற்கென தொண்டர்களும் ஆதரவாளர்களும் காங்கிரசில் சேர ஊக்குவித்தார். "தோழர்களே, எனக்கோ 82 வயதாகிறது. நான் எந்த நேரத்திலும் இறந்துவிடலாம். ஆயினும் நீங்கள் இருப்பீர்கள். உங்களைவிட முதிர்ந்த நான், மரண வாக்குமூலம் போன்ற ஒன்றைக் கூறுகிறேன். 

மரண வாக்குமூலம் என்று கூறவேண்டிய நிலையில் உள்ளவன் பொய் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இன்றைய காமராஜர் ஆட்சியில் நமது நாடு அடைந்துள்ள முன்னேற்றம் இரண்டாயிரம் மூவாயிரம் ஆண்டுகளில் என்றுமே நடந்ததில்லை. 

நமது மூவேந்தர் ஆட்சி காலத்தில் அகட்டும் அடுத்து நாயக்க மன்னர்கள், மராட்டிய மன்னர்கள், முஸ்லிம்கள், வெள்ளைக்காரர்கள் இவர்கள் ஆட்சியில் எல்லாம் நமது கல்விக்கு வகை செய்யப்படவில்லை. தோழர்களே! என் சொல்லை நம்புங்கள். 

இந்த நாடு உருப்பட வேண்டுமானால் இன்னும் 10 ஆண்டுகளுக்காவது காமராஜரை விட்டுவிடாமல் பிடித்து வைத்துக் கொள்ளுங்கள். அவரது ஆட்சி மூலம் சுகமடையுங்கள். 

காமராஜரை நாம் பயன்படுத்திக்கொள்ளத்தவறிவிட்டால் தமிழர்களுக்கு வாழ்வளிக்க வேறு ஆளே, சிக்காது'' (18-7-1961 தேவகோட்டையில் பெரியார் பேச்சு) பின்னாலே ஆட்சி பீடத்தைக் கைப்பற்றிய அண்ணாதுரை படியேறி வந்தபோது பெரியார் பண்பின் காரணமாக வாழ்த்துக் கூறி அனுப்பினாரே தவிர ஆதரிக்கவில்லை. அரசியலைய அருவருப்பானதாக நினைத்த பெரியார் ஆயுட்காலத்தில் ஆதரித்தது காமராஜர் ஆட்சியை மட்டுமே.

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக