பந்தலுார்: பந்தலுார் அருகே, தேவாலா மூச்சிக்குன்னு கிராமத்தில் சாலை உட்பட அடிப்படை வசதிகள் இல்லாததால், நோயால் பாதிக்கப்பட்டவரை தொட்டில் கட்டி, துாக்கி வரவேண்டிய அவல நிலை தொடர்கிறது.
நெல்லியாளம் நகராட்சியின், 9வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் மூச்சிக்குன்னு கிராமம் அமைந்துள்ளது. பள்ளத்தாக்கு பகுதியான இங்கு, பழங்குடியினத்தை சேர்ந்த,40 குடும்பங்கள்; பிற சமுதாயத்தை சேர்ந்த, 43 குடும்பங்கள் வசித்து வருகின்றன.
மூன்று தலைமுறைகளாக இங்கு வாழும் மக்களுக்கு, சாலை, சுகாதாரமான குடிநீர் உட்பட எவ்வித அடிப்படை வசதிகளும் முழுமையாக சென்றடையவில்லை. இவர்களுக்காக, கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் கட்டித்தரப்பட்ட தொகுப்பு வீடுகள், விரிசலடைந்து, விழும் அபாயத்தில் உள்ளன.
குறிப்பாக, இந்த கிராமத்துக்கு வாகனங்கள் செல்ல போதிய சாலை வசதி இல்லை. இதனால், மக்கள் 'மெயின்' ரோட்டில் இருந்து, 3 கி.மீ., துாரம் நடந்து செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. வீடுக்கு வேண்டிய பொருட்கள்; தேயிலை உட்பட விவசாய விளை பொருட்கள் தலை சுமையாக தான் கொண்டுவரப்படுகிறது.
நோயாளிகளுக்கு தொட்டில்
இந்த கிராமத்தின் நோயாளிகள்; கர்ப்பிணி பெண்களை, மருத்துவ மனைக்கு தொட்டில் கட்டி துாக்கி வர வேண்டிய கட்டாயம் தொடர்ந்து வருகிறது. இதில், இரவு நேரங்களில் உயிருக்கு போராடும் நோயாளிகள் இறந்த சம்பவங்களும் ஏற்பட்டுள்ளன. இந்த கிராமத்துக்கு சாலை வசதி கேட்டு, பழங்குடியின மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியும், எவ்வித பயனும் ஏற்படவில்லை.
'தற்போது அளிக்கப்பட்டு வரும், மாவோயிஸ்ட் சிறப்பு நிதியில் இப்பகுதிக்கு சாலை உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்' என, முன்னாள் கவுன்சிலர் விஜயகுமார் வலியுறுத்தியதை அடுத்து, நிதி ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.வனத்துறையால் தடைஆனால், இப்பகுதிக்கு நிதி ஒதுக்கினாலும், வனத்துறையின் தடை நீடிப்பதால், பணி துவங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இப்பகுதியை சேர்ந்த செல்வகுமார் கூறுகையில்,“கடந்த, 47 ஆண்டுகளாக இங்கு வசித்து வருகிறோம். சாலை வசதி இல்லாததால், கர்ப்பிணிகள்; நோயால் பாதிக்கப்பட்ட மக்களை, தொட்டில் கட்டி துாக்கி வருகிறோம். இந்த நிலை எப்போது மாறும் என தெரியவில்லை,” என்றார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம் கூறுகையில்,“மாநில எல்லையில் உள்ள பழங்குடியின மக்களுக்கு, போலீசார்; தன்னார்வ தொண்டு நிறுவனத்தார், அடிப்படை வசதிகளை செய்து தர முன்வந்தபோது, சில பிரச்னைகளால், தடை ஏற்படுகிறது. இதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார்.
தேவாலா டி.எஸ்.பி., சக்தி வேல் கூறுகையில்,“அனைத்து பழங்குடியின கிராமங்களுக்கும், மாவோயிஸ்ட் சிறப்பு நிதியில் இருந்து வளர்ச்சி பணிகளை நாங்கள் பரிந்துரைத்துள்ளோம். உள்ளாட்சிகள் மூலம் நிதி ஒதுக்கீடும் செய்யப்படுகிறது. இந்த கிராமத்துக்கு சாலை வசதி ஏற்படுத்த, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசப்படும்,” என்றார்.
http://www.dinamalar.com/news_detail.asp?id=1649804
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக