"ஸ்பெக்ட்ரம் ஊழலை விட மிகப் பெரியது எதுவும் இல்லை; எனவே, இது தொடர்பான விசாரணைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்' என சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதிலிருந்து, நம்மூர் அரசியல்வாதிகளை நீதிபதிகள் குறைவாக மதிப்பிட்டிருப்பது தெளிவாகிறது. அவர்களின் ஊழலுக்கு எந்த ஒரு எல்லையோ, வரையறையோ கிடையாது என்பது, பாவம், நீதிபதிகளுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. சுடுகாட்டுக் கூரையில் இருந்து, ஸ்பெக்ட்ரம் வரை அவர்கள் கை வைக்காத துறையே கிடையாது.
ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி தான் ஊழலின் உச்சகட்டம் என உலகமே நினைத்துக் கொண்டிருந்த வேளையில், அதையும் தாண்டிய அசகாய சாதனையாக, இரண்டு லட்சம் கோடி ரூபாய், "இஸ்ரோ' ஊழல் அம்பலத்துக்கு வந்துள்ளது. இதோடு முடிந்தது என, யாரும் இறுமாந்து இருந்திட வேண்டாம். இதையும் பின்தள்ளி புதிய ஊழல் சரித்திரம் படைக்கும் தி, நம் தலைகளுக்கு இருக்கிறது.
"இஸ்ரோ'வின் எஸ் பாண்டு அலைவரிசை ஒதுக்கீட்டு ஊழலின் மூலம், மத்திய அரசுக்கு இரண்டு லட்சம் கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட செயற்கைக்கோள்களை சுமந்து செல்லும் ராக்கெட்களே இன்னும் விண்ணில் ஏவப்படவில்லை. அதற்குள், அதில் உள்குத்து வேலைகள் எல்லாம் செய்து, ஒப்பந்தம் எல்லாம் போட்டு, முன்பணம் வரை வாங்கிவிட்டார்கள்.
இத்தனைக்கும் காரணமாகவும், பின்னணியிலும் இருப்பது, ஏதோ ஒன்றையணா அமைச்சர் இல்லை. திருவாளர் பரிசுத்தம் எனப் பெயர் வாங்கியுள்ள சாட்சாத் பிரதமரின் நேரடி மேற்பார்வையில் இருக்கும் துறை தான், "இஸ்ரோ.' இந்த, "எஸ் பாண்ட்' ஒப்பந்தம் பற்றி, "இஸ்ரோ' முடிவெடுத்து, பிரதமருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, அமைச்சரவையில் ஒப்புதல் பெறப்பட்டு, அத்தனையும் கனகச்சிதமாக முடிந்திருக்கிறது.
இருந்தாலும், எனக்கு எதுவுமே தெரியாது என சத்தியம் செய்கிறார் பிரதமர். "செயற்கைக்கோள் இன்னும் ஏவப்படாததால், இதில் ஊழல் எதுவும் இல்லை' என பிரதமர் அலுவலகமும் மறுத்திருக்கிறது. பணம் கைமாறும் முன்னமே கண்டுபிடித்துவிட்டதில் அவர்களுக்கு ஏக கடுப்பு போலும்.
சர்ச்சையில் சிக்கிய தேவாஸ் நிறுவனத்தின் பெரும்பாலான நிர்வாகிகள், "இஸ்ரோ'வில் ஏற்கனவே வேலை பார்த்தவர்கள். உலக நாடுகள் எல்லாம் விஞ்ஞானிகளுக்கு டாலர்களை அள்ளிக் கொடுக்கும்போது, நம் நாடு மட்டும் ரூபாய் நோட்டைக் கூட கிள்ளித் தான் கொடுக்கிறது. அந்த வகையில், "இஸ்ரோ'வில் பணிபுரியும் / பணிபுரிந்த விஞ்ஞானிகள் அனைவரும் பாதம் தொட்டுப் பாராட்டப்பட வேண்டியவர்களே.
ஆனால், அவர்களிலேயே ஒரு சிலர், அரசு பணத்தை கமுக்கமாக அமுக்க முயன்றது கவலையளிக்கிறது. முன்னாள் விஞ்ஞானிகளுக்கு லாபம் கிடைக்கும் வகையில், தேவாஸ் நிறுவனத்துக்கே அலைவரிசை ஒதுக்கியதில் தப்பேதும் இல்லை. ஆனால், சந்தை மதிப்பை சட்டை செய்யாமல், பல லட்சம் கோடிகளைப் பதுக்கியதில் தான் நியாயம் இல்லை.
அவர்களைச் சொல்லி குற்றமில்லை. எல்லாம் தெரிந்தும், எதுவும் தெரியாதவர்கள் போல நாடகமாடுகிறார்களே நம்முடைய ஓட்டு சுரண்டிகள்; அவர்களைச் சொல்ல வேண்டும். "பானைக்குள் கை விட்டவன் பதம் பார்க்காமல் இருக்க மாட்டான்' என்ற பக்குவம் பெற்றுவிட்டனர் பொதுமக்கள். ஆனால் இவர்கள், பானையையே அபேஸ் செய்ய முயல்வது தான் பயம் தருகிறது.
குறிப்பாக, கடந்த இரண்டு ஆண்டுகளில், ஆதர்ஷ் குடியிருப்பு; காமன்வெல்த்; ஸ்விஸ் வங்கி; ஸ்பெக்ட்ரம்; இஸ்ரோ என, அடுத்தடுத்து கேள்விப்படும் ஊழல்களின் எண்ணிக்கை, ஏதோ மெகா சீரியல் போல நீண்டுகொண்டே செல்கிறது.
அதிலும், இந்த வெளிநாட்டில் கறுப்புப் பண விவகாரம் எவ்வளவு பெரியது என யூகிக்க கூட முடியவில்லை. சையத் முகமத் ஹசன் அலி கான் (56) என்ற, புனேவைச் சேர்ந்த ஒரே ஒரு தொழிலதிபர் மட்டும், வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்திருக்கும் கறுப்பு பணத்துக்காக, 50 ஆயிரம் கோடி ரூபாய் வரி கட்ட வேண்டும் என, வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. வரியே 50 ஆயிரம் கோடி என்றால், பதுக்கல் எவ்வளவு என சிந்தித்தாலே தலை சுற்றுகிறது.
வரி மட்டும் கேட்கும் அரசு, "அசல் எப்படி வந்தது' என அவரிடம் கேட்காதது ஏன்? அதை பறிமுதல் செய்ய முயற்சிக்காதது ஏன் என்பதும் மில்லியன் டாலர் கேள்விகள். சுப்ரீம் கோர்ட் கிடுக்கிப்பிடி போட்டாலும், கூச்சமே படாமல் மென்று முழுங்குகிறது மத்திய அரசு. "அவரை வெளிநாட்டுக்கு தப்பிக்க விட்டுவிடாதே' என எச்சரிக்கின்றனர் நீதிபதிகள். குவாட்ரோச்சி வழக்கின் அனுபவம் அவர்களுக்கு இருக்கிறது.
அப்படி காப்பாற்றப்பட்டே ஆக வேண்டும் என மொத்த அரசு இயந்திரமும் கருதும் நபர், ஆளுங்கட்சி மே(லி)டத்துக்கு வேண்டப்பட்டவராகத் தான் இருப்பார் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. எங்கு சுத்தியும், கடைசியில் அவர்களிடம் தான் வந்து முடிகிறது விவகாரம்.
"இந்த ஊழல் போதுமா; இன்னும் கொஞ்சம் வேணுமா' என்று, தேர்தல் அறிக்கையில் அவர்கள் கேட்காதது தான் பாக்கி. யார் கண்டது...? நமக்குத் தெரியாமல் இவர்கள் இந்நேரம், இந்தியாவையே விற்றிருந்தாலும் வியப்பதற்கில்லை!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக