மத்திய அரசின் பல்வேறு வரிகள் மீது, கல்விக்கான, "செஸ்' கட்டணம் வசூலிக்கப்படுவதால், இந்த தலைமுறை பெற்றோர், தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க முன்வர வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
அரசு பள்ளி மாணவர்களும், தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக கல்வி பெற, தமிழக அரசு சமச்சீர் கல்வி பாடத் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், சந்திரயான் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை என, அரசு பள்ளிகளில் படித்து வாழ்வில் சாதித்தோர் நம் நாட்டில் ஏராளம்.10ம் வகுப்பு, பிளஸ் 2 பொது தேர்வில் மாநில அளவில் சாதிப்போர் பட்டியலில், மாநகராட்சி பள்ளி மாணவர்களும் இடம்பிடித்துக் கொண்டு தான் உள்ளனர். ஆனால், இன்றும் நம் சமூகத்தில், நடுத்தர மற்றும் கீழ்த்தட்டு வர்க்கத்தினர் கூட தங்கள் பிள்ளைகளை, "கான்வென்ட்' பள்ளிகளில் படிக்க வைக்கத் தான் விரும்புகின்றனர்.சென்னை போன்ற பெருநகரங்களில் சில தனியார் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்க்க, விண்ணப்பம் வழங்கப்படும் குறிப்பிட்ட நாளின் முதல்நாள் இரவே, அப்பள்ளிகளின் வாசலில் தவம் கிடக்கவும் பெற்றோர் தயாராக உள்ளனர்.
பார்த்ததும் கவர்ந்திழுக்கும் சூழல், தங்கள் பிள்ளைகளின் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பிரதான பங்கு வகிக்கும் ஆங்கிலத்தில் பயிற்சி போன்ற காரணங்களால், தனியார் பள்ளிகளுக்கு பெற்றோர் முன்னுரிமை தருகின்றனர்.தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசு நிர்ணயித்த கல்வி கட்டணம் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. இந்நிலையில், கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக தனியார் பள்ளிகளின் நிர்வாகத்தைக் கண்டித்து, சென்னை உள்ளிட்ட இடங்களில், அவ்வப்போது பெற்றோர் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். இதிலும் பலர், தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் கருதி, பள்ளி நிர்வாகத்தை பகைத்துக் கொள்ள விரும்பாமல் மவுனம் காக்கின்றனர். இப்படி, தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, அவர்களின் கல்விக்காக அரசுக்கு கட்டணம் செலுத்துகிறோம் என்ற நிகழ்கால உண்மையை பெற்றோர் உணராமல் இருப்பது, அவர்களின் அறியாமையை காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் சாடுகின்றனர்.
வருமான வரி, கலால் வரி, சேவை வரி, சுங்க வரி ஆகிய மத்திய அரசின் வரி இனங்களின் மீது, 2005 - 06ம் நிதியாண்டு முதல் பள்ளிக் கல்விக்காக 2 சதவீதமும், 2008 - 09 நிதியாண்டு முதல் உயர்கல்விக்காக 1 சதவீதமும் செஸ் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.உதாரணமாக, 23 ரூபாய் சேவை வரி விதிக்கப்படும் ஒருவரின் மொபைல் போன் பில்லுக்கு, 69 பைசா செஸ் கட்டணமாக பெறப்படுகிறது. இந்த வரி வருவாய், அனைவருக்கும் கல்வி(சர்வ சிக்ஷா அபியான்), மதிய உணவு போன்ற கல்வி திட்டங்களுக்காக மத்திய அரசு செலவிடுகிறது. மத்திய பட்ஜெட்டில் கல்விக்காக ஒதுக்கப்படும் நிதியில் பெரும்பங்கு இவ்வரியின் மூலமே கிடைக்கிறது.
பொது பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறும்போது, "அரசு பள்ளிகளில் கல்வித்தரம் குறைவாக உள்ளதென்ற வாதம் தவறானது. அனைத்து பள்ளிகளிலும் திறமையான ஆசிரியர்கள் உள்ளனர். அரசு பள்ளிகள் குறித்த நம் சமூகத்தின் பார்வை மாற வேண்டும். நடப்பு நிதியாண்டில் மத்திய அரசு பட்ஜெட்டில், கல்விக்காக ஒதுக்கப்பட்ட 31 ஆயிரத்து 36 கோடி ரூபாயில், 20 ஆயிரம் கோடி ரூபாய் வரை, "செஸ்' கட்டணம் மூலமே அரசுக்கு கிடைத்துள்ளது' என்றார்.தங்கள் பிள்ளைகளின் கல்விக்காக அரசுக்கு கட்டணம் செலுத்திவிட்டு அவர்களை தனியார் பள்ளிகளில் சேர்ப்பதால், பெற்றோருக்கு இரட்டிப்பு செலவு ஏற்படுகிறது. கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக கூறி, பள்ளி நிர்வாகத்தை எதிர்த்து போராடவும் வேண்டியுள்ளது. இதற்கு பதிலாக, பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க இந்த தலைமுறை பெற்றோர் முன்வர வேண்டும். அப்போதுதான், தங்கள் காலத்தில் கல்லூரி படிப்புக்கு செலவு செய்த பணத்தை, தங்கள் பிள்ளைகளின் பள்ளி படிப்புக்கே செலவு செய்ய வேண்டியுள்ளது என்ற புலம்பலில் இருந்து அவர்கள் விடுபட முடியும். அரசு பள்ளிகளின் தரமும் மேலும் உயரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக