கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்
மக்கள் மையம்
அண்ணே ஒரு ஹான்ஸ் கொடுங்க, அப்படியே ஒரு சிகரெட் கொடுங்க’ கேட்டதை கடைக்காரர் பவ்யமாக எடுத்துக்கொடுக்கும் காட்சிகளையும் பஸ், ரயில் நிலையங்களில் வாயில் கொள்ளிக்கட்டையுடன் புகையை மேல்நோக்கியும், பக்கவாட்டிலும் விட்டு, மிகுந்த திருப்தியில் உலா வருபவர்களையும் நாம் பார்க்கிறோம். புகைப்பழக்கம், புகைப்பவர்களை மட்டுமல்லாமல் அருகிலிருக்கும் புகைப்பிடிக்காதவர்களின் உடல் நலத்தையும் கெடுக்கிறது. இத்தனைக்கும் பொது இடங்களில் புகைப்பிடிக்க தடை உள்ளது. மீறினால் தண்டனையும், அபராதமும் உண்டு. இதனை எவரும் பின்பற்றுவது இல்லை. நடவடிக்கை எடுக்க வேண்டியவர்களும் கவலைப்படுவதில்லை. இந்தியாவில் இப்போதுள்ள கணக்குப்படி ஆண்டுக்கு 10 லட்சம் பேர் புகையிலை பழக்கத்தால் செத்து மடிகின்றனர். அதாவது ஒவ்வொரு பத்தாண்டிலும் புகையிலைக்கு ஒருகோடி பேர் பலியாகிறார்கள். புகையிலை பழக்கத்தால் ஏற்படும் கடும் நோய்களால் பல லட்சம் பேர் பாதிக்கப்படுகிறார்கள். உலகம் முழுவதும் புகையிலை பழக்கத்தால் ஆண்டுக்கு 5 கோடி இந்தியர்கள் பாதிக்கப்படுகின்றனர். உலகில் புகையிலை உபயோகிப்பவர்களால் இறப்பவர்களின் எண்ணிக்கையில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.
நம் நாட்டில் சிகரெட், புகையிலை, போதைப்பாக்கு என பல்வேறு வடிவங்களில் புகையிலையை பயன்படுத்துவோர் 27 கோடியே 50 லட்சம் பேர். ஆனால் புகைப்பழக்கமே இல்லாவிட்டாலும் பிறர் பயன்படுத்துவதால் அருகில் உள்ளவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி, அதில் பாதிக்கப்படுவதாக விபரங்கள் தெரிவிக்கிறது. கணவன் புகைப்பிடிப்பதால் மனைவியும், குழந்தைகளும், பொது இடங்களில் புகைப்பிடிப்பதால் அருகில் உள்ளவர்களும் புகையை சுவாசிப்பதால் புகையிலை பாதிப்புக்கு ஆளாகின்றனர். இவர்களின் எண்ணிக்கை சுமார் 7 கோடி. இது புகையிலை பயன்படுத்துவோர்களின் எண்ணிக்கையில் சுமார் 25 சதவீதம். எந்த தப்பும் செய்யாமலே இவர்களும் புற்றுநோய், ரத்த அழுத்தம், மாரடைப்பு போன்ற உயிர்க்கொல்லி நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். இது ஒருபுறம் இருக்க, புகைப்பழக்கம் உள்ளவர்களில் 15 சதவீதம் பேர், 15 வயதுக்கும் கீழே உள்ளவர்கள் என்பது இன்னொரு அதிர்ச்சியான தகவல். 15 முதல் 17 வயது உடையவர்களில் 25 சதவீதம் பேர் புகையிலைக்கு அடிமையாக உள்ளனர். 18 முதல் 19 வயது உடையவர்களில் 19 சதவீதம் பேர் புகையிலை அடிமைகள். இப்படி புள்ளிவிபரங்களை அள்ளித்தருவது வேறு யாருமல்ல. இந்த விபரீதங்களை கட்டுப்படுத்தி களையெடுக்கும் இடத்தில் இருக்கக்கூடிய மத்திய அரசுதான். இதில் இன்னொரு கொடுமையான புள்ளிவிபரத் தகவல், 34 வயதுக்குட்பட்ட புகையிலை பழக்கம் உள்ள ஒருவர் 18 ஆண்டுகள் தொடர்ச்சியாக தினமும் உடலில் நிக்கோடினை ஏற்றினால் எப்படி இருக்குமோ அந்த அளவுக்கு அவரது உடலில் நிக்கோடின் இருக்கிறது என்பதுதான். புகையிலை பழக்கத்தை விட்டால் சுவாசமண்டலம் சீராகும்.
ஒருவாரம் விட்டால் ரத்தத்தில் நிக்கோடின் அளவு குறையும். ஒருமாதம் புகையிலையை விட்டால் உடல் புதுப்பொலிவு பெறும் என்று மருத்துவ உலகம் சொல்கிறது. ஆனால் 18 வருடம் உடலில் நிக்கோடின் சேர்ந்தால் உடல்என்னவாகும் என்பதை புகைப்பவர்கள் எண்ணிப்பார்ப்ப தில்லை. புகையிலைக்கு எதிராகவும், புகைப்பழக்கத்திற்கு எதிராகவும் அரசு விளம்பரங்களை செய்து வருகிறது. இது வெறும் சம்பிரதாயத்திற்கு செய்து வருவதால் எவ்வித பயனும் ஏற்படவில்லை. பொது இடங்களில் புகைப்பிடிப்போர்களை அரசு கடுமையாக தண்டிக்க வேண்டும்.
பொது இடங்களில் புகையிலை சார்ந்த பொருட்களின் விற்பனையை அடியோடு தடை செய்ய வேண்டும். எய்ட்ஸ், மலேரியா போன்ற நோய்களால் இறப்பவர்களை விடவும் புகையிலை பழக்கத்தால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகம். இந்தியாவில் புகையிலைக்கு பலியாவோர் என்பதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. உலகத்தில் இன்று வளர்ந்த நாடுகள் பலவற்றில் புகையிலை சார்ந்த தொழில் நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுவிட்டது. இதனால் அந்த நாடுகளைச் சார்ந்த பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு தங்கள் வர்த்தகத்தை இடம் மாற்றிக்கொண்டுவிட்டன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக