புதுடில்லி:"இந்தியாவில் 2030ம் ஆண்டில் தண்ணீர் மற்றும் உணவு பற்றாக்குறை ஏற்படும்' என, சர்வதேச தண்ணீர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சர்வதேச தண்ணீர் மேலாண்மை நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில், "உலக தட்பவெப்ப மாற்றம் மற்றும் உள்நாட்டு மக்கள் தொகை பெருக்கம் ஆகிய காரணங்களால் இந்தியா தண்ணீர் பற்றாக்குறையை சந்திக்கும். இது, அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய மற்றும் எதிர்பாராத அளவிற்கு உணவு பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டிய நிலையை ஏற்படுத்தும்.இந்தியாவிற்கு 700 பில்லியன் கியூபிக் மீட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. இதில், 85 சதவீதம் உணவு உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இந்த தேவை 2030ம் ஆண்டில், மக்கள் தொகை அதிகரிப்பால், இரண்டு மடங்காக அதிகரிக்கும். 2030ம் ஆண்டில், இந்தியாவின் மக்கள் தொகை, 120 கோடியில் இருந்து 160 கோடி அல்லது 170 கோடியாக அதிகரிக்கும். அதேபோல், தண்ணீர் தேவையும், இருமடங்கு, அதாவது 1,498 பில்லியன் கியூபிக் மீட்டராக அதிகரிக்கும். ஆனால், தண்ணீர் அளிப்பு 744 மில்லியன் கியூபிக் லிட்டர்களாக இருக்கும். தேவையில் பாதியளவு பற்றாக்குறையாக இருக்கும்' என்பது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து இந்நிறுவனத்தின் இயக்குநர் ஜெனரல் கோலின் சார்டிரஸ் கூறுகையில், "தற்போதைய நிலை நீடித்தால், மத்திய கிழக்கு நாடுகளை போல, தண்ணீர் நெருக்கடி நாடாக இந்தியா உருவெடுக்கும். பெரும்பாலான தண்ணீர் உணவு உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது. தண்ணீர் பற்றாக்குறை, உணவு பற்றாக்குறையிலும் எதிரொலிக்கும். தண்ணீர் இறக்குமதிக்கு பதில், இந்தியா உணவு பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டியது ஏற்படும். உலகளவில் மக்கள் தொகை 250 கோடி அதிகரிக்கும் போது, உணவு இறக்குமதியும் எளிதானது அல்ல. தற்போது இருப்பதை விட, அதிக வெப்பம், குறைந்த தண்ணீர் என்ற நிலைமை உலகளவில் நிலவும்' என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் நிலத்தடி நீர் ஏற்கனவே கீழே போய்விட்டது. இந்தியா அதிகளவில் விவசாயத்தை நம்பி உள்ளது. தண்ணீர் பற்றாக்குறை, பெரிய அளவில், விவசாய உற்பத்தியை பாதிக்கும். நாட்டின், வடக்கில் ஏற்கனவே விவசாயிகள் அதிகளவில் நிலத்தடி நீரை பயன்படுத்திவிட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன."இந்தியாவின் தண்ணீர் தேவை தற்போது 634 மில்லியன் கியூபிக் லிட்டராக உள்ளது. இது, 1,123 மில்லியன் கியூபிக் லிட்டராக அதிகரிக்கும்' என்று மத்திய நீர்வள கமிஷன் கணித்துள்ளது.
"இந்தியாவின் தண்ணீர் தேவை 2025ல், 1,093 மில்லியன் கியூபிக் லிட்டராக இருக்கும்' என்று நிர்வளத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இப்படி, மதிப்பீடுகள் வித்தியாசப்பட்டாலும், தண்ணீர் பற்றாக்குறை நாட்டை அச்சுறுத்தி வருகிறது என்பது தெளிவாகிறது.எனவே, நாட்டில் கிடைக்கும் தண்ணீர் வரத்து குறித்து ஆய்வு நடத்த, முன்னாள் திட்ட கமிஷன் உறுப்பினர் ஏ. வைத்தியநாதன் தலைமையில் ஒரு குழுவை மத்திய திட்ட கமிஷன் அமைக்க உள்ளது. இவர்கள் நாட்டின் தண்ணீர் ஆதாரத்திற்கான மூலம் மற்றும் குளம், குட்டை, ஏரி, அணை, ஆறு ஆகியவை குறித்து, மதிப்பீடு செய்து, அறிக்கை தயாரிப்பார்கள். "நாட்டின் விவசாயத்திற்கு 80 சதவீத தண்ணீர் தேவைப்படுகிறது. எனவே, கிராமங்களில் தண்ணீர் வீணாக்கப்படுவதை தடுக்கும் வகையில், ரேஷனில் மின்சாரம் மற்றும் தண்ணீர் வழங்குவது, இதற்கு கட்டணம் விதிப்பது என்று திட்ட குழு ஆலோசனை வழங்கி உள்ளது.
கடந்த மாதம், பிரதமர் மன்மோகன் சிங்கிடம், திட்ட கமிஷன் உறுப்பினர் மிகிர் ஷா தண்ணீர் மேலாண்மை தொடர்பான அறிக்கை சமர்பித்தார். அதில், ஆந்திரபிரதேசம் உள்பட மிகவும் வறட்சியால் பாதிக்கப்பட்ட ஏழு மாநிலங்களில், தண்ணீர் மேலாண்மை ஆலோசனை எந்தளவிற்கு வெற்றி பெற்றுள்ளது என்று தெரிவித்துள்ளார்.ஆந்திராவில், விவசாயிகள் குழு அமைத்து, கிடைக்கும் தண்ணீரை இவர்கள் அனைவரும் பகிர்ந்து கொள்ள ஆலோசனை வழங்கப்பட்டது. இத்திட்டம், அம்மாநிலத்தில் வெற்றி பெற்றுள்ளது. மாவட்ட அளவில் தண்ணீர் பயன்படுத்துவது குறைந்து, பற்றாக்குறையும் குறைந்துள்ளது. மாநிலத்தின் மற்ற பகுதிகளில், இதேபோன்ற திட்டத்தை கொண்டு வர, மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்துக்கு திட்ட கமிஷன் ஆலோசனை வழங்கலாம்.
"இந்தியாவின் தட்பவெப்பம் ஒன்று முதல் இரண்டு டிகிரி அதிகரிக்கும்' என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், அதிகளவில் தண்ணீர் சேமிப்பு செய்ய வேண்டும். மழை நீர் சேமிப்பிற்கு, இந்தியா, அதிகளவில் முதலீடு செய்ய வேண்டும். குளம், ஏரி, அணை போன்வற்றை அதிகளவில் ஏற்படுத்தி நீர்வள ஆதாரத்தை பெருக்க வேண்டும். விவசாய நிலங்களை ஒட்டி குளம், ஏரி ஏற்படுத்துவது பயனளிப்பதாக இருக்கும் என்ற கருத்துக்கள் எழுந்துள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக