குன்னூரில் இருந்து, கோவை உட்பட சமவெளிப் பிரதேசங்களுக்கு, மாட்டு கொழுப்பு கொண்டு செல்வது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது; நெய் போன்ற உணவுப் பொருட்களில் கலப்படம் செய்ய பயன்படுத்துவது தெரியவந்ததால், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் டி.டி.கே., சாலையில், குன்னூர் நகராட்சிக்கு சொந்தமாக, ஆடு, மாடு வதை செய்யும் இடம் உள்ளது. வதை செய்யப்பட்ட பின், ஆடு, மாடுகளின் கொழுப்புகளை தனியாக எடுத்து, சட்டத்துக்கு விரோதமாக விற்கப்படுவதாக, குன்னூர் நகராட்சிக்கு தகவல் கிடைத்தது. நகராட்சி தலைவர் கோபால கிருஷ்ணன் ஒப்புதலின் பேரில், சுகாதார ஆய்வாளர் மால்முருகன் மற்றும் சுகாதார ஊழியர்கள் நேற்று முன்தினம் இரவு, அதிரடி ஆய்வு நடத்தினர். அப்துல் ஹமீது என்பவரின் கடையில் சோதனை செய்தபோது, காய்ச்சப்பட்ட கொழுப்பு 20 கிலோ வீதம், 29 டின்களில் அடைத்து வைத்திருப்பதும், உலர்ந்த கொழுப்பு 4 மூட்டைகளில் 15 கிலோ இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றை பறிமுதல் செய்த சுகாதாரத்துறை அதிகாரிகள், குன்னூர் போலீசில் அப்துல் ஹமீது மீது புகார் கொடுத்தனர். விசாரணையில், கொழுப்புகள், கோவை உட்பட சமவெளிப் பகுதிகளுக்கு அனுப்பப்படுவதும், அங்கு தயாரிக்கப்படும் நெய்யில் கலப்படம் செய்யப்படுவதும் தெரியவந்தது. சுகாதார ஆய்வாளர் மால்முருகன் கூறுகையில், ""இறைச்சிக்காக கொண்டு வரப்படும் மாடுகளின் கொழுப்பை தனியாக காய்ச்சி எடுத்து, நெய் போன்ற பொருட்களுக்கு கலப்படம் செய்வதற்கு அனுப்பி வைப்பது, உணவு கலப்பட தடுப்பு சட்டத்தின் படி குற்றமாகும். இது போன்ற குற்றத்தில் ஈடுபடுபவர்கள் மீது காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டு, அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படும்,'' என்றார். நெய் போன்ற பொருட்களில் கொழுப்புகளை பயன்படுத்துவது, உடல் ரீதியாக பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்துவதுடன், சில சமயங்களில் உயிரிழப்புகள் கூட ஏற்பட வாய்ப்புள்ளதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். பொதுவாக, கோவில்களில் அதிகளவில் நெய் பயன்படுத்தி வரும் நிலையில், பக்தர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள், இது தொடர்பாக நேரடியாக முழு ஆய்வு நடத்தி விசாரணை நடத்தினால், உணவுப் பொருட்களில் கலப்படம் செய்வது கண்டுபிடிக்கப்பட்டு தடுக்க முடியும்.
thanks to dinamalar nilgiris
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக