நீலகிரியில் உள்ள சுற்றுலா ஸ்தலங்களை பார்வையிட
செல்லும் சுற்றுலா பயணிகள்,
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம் இந்த தகவல் பக்கத்தை வைத்து கொண்டால் குழப்பம் இல்லாமல்
உங்கள் பயணத்தை மகிழ்ச்சியுடன் நிறைவு செய்யலாம்.
ஊட்டி தாவரவியல் பூங்கா:
கடந்த
1845ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், ஊட்டியில் காய்கறி தோட்டம்
உருவாக்கப்பட்டு "தாவரவியல் பூங்கா' என அழைக்கப்பட்டது. இதில், காய்கறிகளை
விளைவித்து, தங்கள் தேவைக்கு அறுவடைக்கு செய்து வந்தனர். காலப்போக்கில்,
காய்கறி தோட்டம் பராமரிக்காமல் விடப்பட்டது. இதையடுத்து, ஊட்டியில் வசித்து
வந்த ஆங்கிலேய மக்களிடம் நன்கொடை மற்றும் சந்தா மூலமாக வசூலிக்கப்பட்ட
தொகை மூலம், இப்பகுதியில் ஒரு தோட்டக்கலை அமைப்பை ஏற்படுத்தி, பொது
பூங்காவாக துவங்க முடிவு செய்யப்பட்டது. கடந்த 1847ம் ஆண்டு அப்போதைய
மெட்ராஸ் கவர்னராக இருந்த டூவிடேல் என்பவர், தனது சொந்த ஆர்வத்தில், பூங்கா
மேம்பாட்டுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கியுள்ளார். பூங்காவை பொலிவாக்கும்
வகையில், தோட்டக்கலை அமைப்பில் பிரசித்தி பெற்ற தோட்டக்கலை நிபுணர் ஐவர்
என்பவர், பூங்காவின் கண்காணிப்பாளராக 1848ம் ஆண்டு
நியமிக்கப்பட்டார்.பூங்காவின் பொறுப்பை ஐவர் ஏற்றுக் கொண்ட போது,
பூங்காவின் சிறிய பகுதி காய்கறி தோட்டமாகவும், பெரும்பாலான பகுதி
சோலையாகவும், முட்புதர் சூழ்ந்தும் காணப்பட்டன. லண்டனில் உள்ள "க்யூ'
பூங்காவில் பணிபுரிந்த அனுபவத்தை ஐவர் பெற்றிருந்ததால், 10 ஆண்டுகள் போராடி
லண்டன் "க்யூ' பூங்காவை போல அழகிய புல்தரைகள் மற்றும் பூந்தோட்டமாக, ஊட்டி
தாவரவியல் பூங்காவை மாற்றினார்.தோட்டக்கலை துறை மூலம், ஆராய்ச்சிக்காக
தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்ட பின், ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர்
செடிகள் வளர்க்கப்பட்டு சுற்றுலாப் பயணிகளை மகிழ்வித்து வருகிறது. தற்போது,
117 குடும்பங்களை சேர்ந்த 2,000 ரக தாவரங்கள் உள்ளன. இது மட்டுமல்லாமல்,
144 ரக பரணிகள், 350 வகை ரோஜாக்கள், 60 ரக டேலியா, 30 ரக கிளாடியோலை, 150
ரக கள்ளிகள், டைனோசர் காலத்தில் இருந்த "ஜிங்கோபைலபா' என்ற மரம் உட்பட
ஏராளமான மர வகைகள் தற்போதும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
* ஊட்டி பஸ்
ஸ்டாண்டிலிருந்து 2 கி.மீ., தொலைவில் தாவரவியல் பூங்கா உள்ளது. கோடை சீசன்
காலங்களில் அரசு "சர்கில்' பஸ்கள் இயக்கப்படுகின்றன; தனியார் வாகனங்களிலும்
செல்லலாம்.
ஊட்டி படகு இல்லம்:
படகு
சவாரிக்கும், மீன் பிடிக்கவும், 1823ம் ஆண்டு அப்போதைய கோவை கலெக்டர் ஜான்
சலீவனால், ஊட்டி நகரின் மத்தியில் ஏரி உருவாக்கப்பட்டது; 2.75 கி.மீ.,
நீளமும், 100 முதல் 140 மீட்டர் அகலமும் கொண்டிருந்தது. 1877ம் ஆண்டு வரை
இந்த ஏரியின் நீர், குடிநீராக பயன்பட்டு வந்தது. இதற்கு பின், ஊட்டி
நகரிலிருந்து வெளியேறும் கழிவுகள், ஏரியில் கலந்ததால், குடிக்க பயனற்று
போனது. சுதந்திரத்துக்கு பின், இந்த படகு இல்லம் ஊட்டியில் முக்கிய
சுற்றுலா தலமாக மாறியது.தமிழக சுற்றுலா வளர்ச்சி கழக பராமரிப்பில், 65
ஏக்கர் பரப்பில் உள்ள ஏரியில் படகு சவாரிக்காக, 100க்கும் மேற்பட்ட படகுகள்
இயக்கப்படுகின்றன. சிறுவர்களை கவர, ஏரியின் கரையில் சிறுவர் பூங்கா
அமைக்கப்பட்டுள்ளது; இங்குள்ள மினி ரயிலில் பயணம் செய்து இயற்கையை ரசிக்க
முடியும்.படகு இல்லத்தில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், இரு
ஆண்டுகளுக்கு முன் ஏரியின் மறு கரையில் 55 லட்சம் மதிப்பில் புதிய படகு
இல்லம் உருவாக்கப்பட்டது. படகு சவாரி முடிந்தவுடன், குதிரை சவாரி மேற்கொள்ள
ஏதுவாக, தனியார் சார்பில் குதிரைகள் தயாராக நிறுத்தப்பட்டுள்ளன. படகு
இல்லத்துக்குள் நுழைய சிறுவர்களுக்கு 5 ரூபாய், பெரியவர்களுக்கு 10, வீடியோ
காமிராவுக்கு 75, புகைப்பட காமிராவுக்கு 30 ரூபாய் கட்டணம்
வசூலிக்கப்படுகிறது. ஏரியின் மறு கரையில் வனத்துறை சார்பில் மான் பூங்கா
அமைக்கப்பட்டுள்ளது; பூங்காவில் கடமான்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
*
ஊட்டி பஸ் ஸ்டாண்டிலிருந்து 1 கிலோ மீட்டர் தூரம் உள்ள படகு இல்லத்துக்கு
செல்ல, அரசு மினி பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆட்டோக்கள் மூலமும் செல்ல
முடியும்.
தொட்டபெட்டா சிகரம்:
கடல்
மட்டத்திலிருந்து 2,623 மீ., உயரத்தில் தொட்டபெட்டா சிகரம் உள்ளது;
தென்னிந்தியாவின் உயரமான சிகரமாகவும் கருதப்படுகிறது. நீலகிரியில்
வசிக்கும் பழங்குடியினர் மொழியில், தொட்டபெட்டா என்றால் "உயரமான சிகரம்'
என்று பொருள்.வனத்துறையின் கட்டுப்பாட்டில் இப்பகுதி உள்ளதால்,
சிகரத்துக்கு செல்லும் வாகனங்களுக்கு வனத்துறை சார்பில் நுழைவு வரி
வசூலிக்கப்படுகிறது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில்
காட்சிமுனை அமைக்கப்பட்டு, "டெலஸ்கோப்' நிறுவப்பட்டுள்ளன; ஊட்டி நகரம்,
குன்னூர், வெலிங்டன், குந்தா, கோவை, கர்நாடகா, கேரளா பகுதிகளை கண்டு
ரசிக்கலாம்
* ஊட்டி - கோத்தகிரி சாலையில், ஊட்டி பஸ் ஸ்டாண்டிலிருந்து
10 கி.மீ., தொலைவில் தொட்டபெட்டா சிகரம் உள்ளது. கோடை சீசன் காலங்களில்,
அரசுப் பஸ்கள் இயக்கப்படுகின்றன. மற்ற நேரங்களில், கோத்தகிரி பஸ்களில்
சென்று தொட்டபெட்டா சந்திப்பில் இறங்கி தனியார் வாகனங்கள் மூலம் செல்லலாம்.
இந்த சந்திப்பிலிருந்து தொட்டபெட்டா சிகரம் செல்ல 3 கி.மீ., தூரம்
உள்ளதால் வாகனங்களில் செல்வது சிறந்தது. "டிரக்கிங்' விரும்புபவர்கள், இந்த
சந்திப்பிலிருந்து நடந்து சென்றால், புது அனுபவமாக இருக்கும்.
ரோஜா பூங்கா:
ஊட்டி தாவரவியல்
பூங்கா தோற்றுவிக்கப்பட்டு நூற்றாண்டு கடந்ததை கொண்டாடும் வகையில், 1996ம்
ஆண்டு, அப்போதைய அ.தி.மு.க., ஆட்சியில், ஊட்டி விஜயநகரப் பகுதியில் ரோஜா
பூங்கா உருவாக்கப்பட்டு, "நூற்றாண்டு ரோஜா பூங்கா' என பெயரிடப்பட்டது.
தோட்டக்கலைத் துறைக்கு சொந்தமான இடத்தில் 10 எக்டேர் பரப்பில் 5 தளங்களில்
பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செடிகளில், 4,000
ரக ரோஜாக்கள் உள்ளன. ஆசியாவிலேயே அதிக ரோஜா ரகங்கள் கொண்ட பூங்காவாக, ரோஜா
பூங்கா திகழ்ந்து வருவதால், சர்வதேச ரோஜா சங்கத்தின் சார்பில், 2006ம்
ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டு, ஜப்பானில் நடந்த சர்வதேச ரோஜா கருத்தரங்கில்
"கார்டன் ஆப் தி எக்ஸ்சலன்ஸ்' விருது வழங்கப்பட்டது. தற்போது, இதன் பரப்பு
விரிவாக்கப்பட்டு புதிய பூங்கா உருவாக்கும் பணி நடந்து வருகிறது
* ஊட்டி
பஸ் ஸ்டாண்டிலிருந்து ஒரு கி.மீ., தூரம் உள்ள ரோஜா பூங்கா, இரு
புறங்களிலும் சாலையால் இணைக்கப்பட்டுள்ளது. செங்குத்தான பகுதியில் பூங்கா
உள்ளதால், பஸ்கள் இயக்கப்படுவதில்லை. நடந்தோ அல்லது ஆட்டோவிலோ தான் செல்ல
வேண்டும்.
மரவியல் பூங்கா:
நீலகிரி
மாவட்ட தோட்டக்கலைத் துறை சார்பில், மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட நிதியான
14 லட்சம் மதிப்பில், ஊட்டி பர்ன்ஹில் சாலையில், இரு ஆண்டுகளுக்கு முன்
மரவியல் பூங்கா உருவாக்கப்பட்டது. ஊட்டி பஸ் ஸ்டாண்டிலிருந்து ஒரு கி.மீ.,
தூரம் உள்ள இப்பூங்கா, மர வகைகளுக்காக பிரத்யேகமாக
உருவாக்கப்பட்டது.பூங்காவில், 100க்கும் மேற்பட்ட பல்வேறு சோலை மரங்களும்,
60க்கும் மேற்பட்ட அரிய வகை மரங்களும் உள்ளன. பூங்காவை ஒட்டி சதுப்பு நிலம்
உள்ளதால், மாலை நேரங்களில் 30க்கும் மேற்பட்ட நீலகிரி வாழ் பறவை இனங்களும்
முகாமிட்டு வருகின்றன.
* ஊட்டி பஸ் நிலையத்தில் அருகில் உள்ளதால், 5
நிமிடத்தில் நடந்து செல்லலாம்.
பைக்காரா
படகு இல்லம், நீர்வீழ்ச்சி:
பைக்காரா நீர்வீழ்ச்சி, சினிமா
படப்பிடிப்பில் பிரபலமானது. பைக்காரா அணையில் இருந்து திறந்து விடப்படும்
நீரானது, இங்குள்ள பாறைகளில் தவழ்ந்து செல்லும் போது அருவியை போன்று
ரம்மியமாக காட்சியளிக்கிறது. நீர்வீழ்ச்சியை அடுத்து ஒரு கி.மீ., தொலைவில்
பைக்காரா ஏரி உள்ளது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில், இங்கு
படகு இல்லம் அமைக்கப்பட்டுள்ளது; ஊட்டிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள்
பலர், இந்த படகு இல்லத்தில் சவாரி செய்ய விரும்புகின்றனர். ஊட்டியிலிருந்து
பைக்காரா செல்லும் வழியில் பைன் பாரஸ்ட், ஸ்கூல் மந்து மற்றும் ஷூட்டிங்
பாய்ன்ட் ஆகிய சுற்றுலா தலங்கள் உள்ளன. இப்பகுதிகளில் அதிகமான சினிமா
படப்பிடிப்புகள் நடந்துள்ளதால், சுற்றுலாப் பயணிகள் இந்த இடங்களை காண
ஆர்வம் காட்டுகின்றனர். வனத்துறையின் கட்டுப்பாட்டில் இப்பகுதி உள்ளதால்,
குப்பை கொட்டினாலோ, இயற்கையை சேதப்படுத்தினாலோ அபராதம் விதிக்கப்படும்.
*
ஊட்டியிலிருந்து கூடலூர் செல்லும் வழியில் 22 கி.மீ., தொலைவில் பைக்காரா
நீர் வீழ்ச்சி. தனியார் வாடகை வாகனங்கள் மூலமும், அரசு பஸ்கள் மூலமும்
பைக்காரா பகுதிக்கு செல்லலாம்.
உயிலட்டி
நீர்வீழ்ச்சி:
சுற்றுலா மையத்தால் இந்த நீர்வீழ்ச்சி
அங்கீகரிக்கப்படாமல் இருந்தாலும், இதை ரசிக்க வரும் சுற்றுலாப் பயணிகளின்
எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நீர் வீழ்ச்சியும், கேத்ரீன் நீர்
வீழ்ச்சியை போன்று பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சியளிக்கிறது. இப்பகுதியின்
அருகே உள்ள கன்னேரிமுக்கு கிராமத்தில், நீலகிரியின் உருவாக்கத்துக்கு
காரணமாக இருந்த ஆங்கிலேயர் "ஜான் சலீவன்' நினைவிடம் உள்ளது. இதில், நீலகிரி
மாவட்டத்தின் பாரம்பரியம், கலாச்சாரம், எல்லை கோடுகள் என முக்கிய தகவல்கள்
உள்ளதால், ஆராய்ச்சி மாணவர்களுக்கு பயனாக உள்ளது.
* உயிலட்டி நீர்
வீழ்ச்சிக்கு,கோத்தகிரியில் இருந்து அரசு மற்றும் மினி பஸ்கள் என, காலை
6.00 மணியில் இருந்து இரவு 8.30 மணி வரை 15 நிமிட இடைவெளியில்
இயக்கப்படுகின்றன.
கோடநாடு
காட்சிமுனை:
கோடநாடு காட்சிமுனையின் அழகிய கோபுரத்தில் இருந்து
பார்த்தால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வனங்கள் தெரியும். கோபுரத்தில்
உள்ள "பைனாகுலர்' மூலம் வரலாற்று சிறப்பு மிக்க சுஜ்ஜல் கோட்டை, அல்லிராணி
கோட்டையை காணலாம். நீலகிரி தொகுதிக்கு உட்பட தெங்குமரஹாடா கிராமத்தின்
அழகையும் ரசிக்கலாம்.நீலகிரி மலையில் உருவாகி பவானிசாகர் அணையில் கலக்கும்
"மாயாறு' ஆற்றின் பயணம், கண்களை விரிவடைய செய்யும் அழகிய வயல்வெளிகள்,
அடர்ந்த வனங்கள், யானைகளின் வழித்தடங்கள், ரங்கசாமி கோவில் மலை உட்பட மலை
முகடுகள், உள்ளத்தை கபளீகரம் செய்யும். கோத்தகிரியிலிருந்து கோடநாடுக்கு
செல்லும் போது, சாலையின் இருபுறம் பசுமையாக காணப்படும் தேயிலை தோட்டம்,
பார்வையாளர்களை பரவசப்படுத்துகின்றன.
* கோத்தகிரி - கோடநாடுக்கு செல்ல
காலை 6.30 மணியில் இருந்து இரவு 7.30 மணி வரை 12 முறை அரசு பஸ்கள்
இயக்கப்படுகின்றன. கேத்ரீன் நீர்வீழ்ச்சிக்கு செல்ல, காலை 9.00
மணியிலிருந்து இரவு 7.30 வரை மினி பஸ்கள் இயக்கப்படுகின்றன.
கேத்ரின் நீர் வீழ்ச்சி:
பசுமையான
தேயிலை தோட்டங்கள், அழகிய மலை முகடுகளின் வழியே வழிந்து, பாறைகளை நனைத்து,
பார்வையாளர்களின் மனதையும் நனைக்கிறது கேத்ரீன் நீர்வீழ்ச்சி. காட்சி
கோபுரத்தில் இருந்து சற்று தொலைவில் உள்ள நீர் வீழ்ச்சிக்கு செல்பவர்கள்,
தண்ணீரில் விளையாடும் போது கவனமாக இருக்க வேண்டும். சற்று கவனம்
சிதறினாலும் பாசி படிந்திருக்கும் பாறைகள், காலை வாரி விடும். காட்சிக்
கோபுரம் அருகே அமைக்கப்பட்டுள்ள தடுப்பை தாண்டினாலும், விபத்து அபாயம்
ஏற்படும். நீர் வீழ்ச்சியை ரசிக்க செல்பவர்கள் இதை கடைபிடித்தால், இனிமையான
சுற்றுலாவாக இருக்கும்.
* கோத்தகிரி- மேட்டுப்பாளையம் சாலையில்
அரவேணுவில் இருந்து 2.5.கி.மீ., தொலைவில் உள்ளது.
நேரு பூங்கா:
கோத்தகிரியின்
மையப்பகுதியில், காமராஜர் சதுக்கத்தில் உள்ளது நேரு பூங்கா. இங்கு, பல அரிய
வகை மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டு மலர்கள் மலர்ந்துள்ளன. அழகிய
புல்வெளி, கோத்தரின மக்களின் கோவில் ஆகியவை சுற்றுலாப் பயணிகளை
பரவசப்படுத்தும்.
* கோத்தகிரி பஸ் ஸ்டாண்ட், டானிங்டன், ராம்சந்த் ஆகிய
பகுதிகளில் நடந்து செல்லும் தொலைவில் தான் நேரு பூங்கா உள்ளது.
சிம்ஸ் பூங்கா :
ஜே.டி.சிம் என்ற
ஆங்கிலேயரால், 1874ல் உருவாக்கப்பட்ட சிம்ஸ்பூங்கா, இயற்கையின் அற்புத
படைப்பு; பூங்காவில், 1,200க்கும் மேற்பட்ட அரிய வகை மரங்கள் உள்ளன. கற்பூர
மரங்களில் மட்டும் 27 வகைகள் உள்ளன. யுஜிநாய்டஸ், 104 ஆண்டு பழமை வாய்ந்த
யானைக்கால் மரம், ருத்ராட்சை, காகிதம், டர்பன்டைன், ஜெகரன்டா, கெமேலியா,
அகேசியா, மரதாகை உட்பட பல வகையான பழமை வாய்ந்த மரங்கள் பூங்காவை
அலங்கரிக்கின்றன.சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க, படகு இல்லம், சிறுவர்
பூங்காவும் உள்ளன. பூங்காவின் இடையிடையே அழகிய மலர்களின் அணிவகுப்பையும்
காண முடியும்; 150க்கும் மேற்பட்ட வெளிநாட்டு மலர் செடிகள் பூத்து
குலுங்குகின்றன.
* குன்னூர் பஸ் ஸ்டாண்டிலிருந்து 2 கி.மீ., தொலைவில்
சிம்ஸ்பூங்கா உள்ளது; குன்னூர் பஸ் ஸ்டாண்டில் இருந்து மினி மற்றும் அரசு
பஸ்கள் உள்ளன; குன்னூர் - கோத்தகிரி செல்லும் பஸ்களிலும் பூங்காவுக்கு
செல்லலாம்.
லேம்ஸ்ராக்:
சிம்ஸ்பூங்காவில்
இருந்து 5 கி.மீ., தொலைவில் உள்ள லேம்ஸ்ராக் காட்சி முனை, பயணிகளுக்கு
"திரில்' அனுபவம் என்று தான் சொல்ல வேண்டும்; காட்சி முனைக்கு செல்லும்
சாலையின் இருபுறமும் அடர்ந்த வனங்களும், தேயிலை தோட்டங்களும்
நிறைந்துள்ளதால், புதிய அனுபவத்தை சுற்றுலாப் பயணிகள் பெறுகின்றனர். காட்சி
முனையில் இருந்து பல ஆயிரம் அடி ஆழமுள்ள பள்ளதாக்கு காட்சி முனைகளை கண்டு
ரசிக்க முடியும்; பள்ளதாக்கில் கொட்டிக் கிடக்கும் இயற்கை காட்சிகள்
மனதுக்கு இதம் தரும்.
* குன்னூரில் இருந்து 12 கி.மீ., தொலைவில் உள்ளது.
ஒரு சில அரசு பஸ்கள் மட்டுமே செல்வதால், தனியார் வாகனங்களில் செல்வது
நல்லது.
டால்பின்ஸ் நோஸ்:
டால்பின்ஸ்
நோஸ் காட்சி முனையும், பள்ளதாக்கு காட்சி முனை தான்; லேம்ஸ்ராக் காட்சி
முனைக்கு செல்லும் சாலை வழியாகத் தான், டால்பின்ஸ் நோஸ் காட்சி முனைக்கும்
செல்ல வேண்டும். குதிரை சவாரி, டெலஸ்கோப் போன்றவை இங்குள்ளன; பள்ளத்தாக்கு
காட்சி முனையில் இருந்து 6,000 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கு காட்சிகளை கண்டு
ரசிக்கலாம். கோத்தகிரியில் உள்ள கேத்ரின் நீர்வீழ்ச்சி, மேட்டுப்பாளையம்
பகுதி ஆகியவற்றை, இக்காட்சி முனையில் இருந்து ரசிக்கலாம். மரங்கள் சூழ்ந்த
அடர்ந்த வனப்பகுதிக்குள் அமைந்துள்ள இக்காட்சி முனை, சுற்றுலாப்
பயணிகளுக்கு "குளுகுளு' அனுபவத்தை குறைவில்லாமல் தரும்.
*
சிம்ஸ்பூங்காவில் இருந்து 10 கி.மீ., தொலைவில் உள்ளது. பஸ்கள், தனியார்
வாகனங்களில் செல்லலாம்.
முதுமலை
புலிகள் காப்பகம்:
கூடலூர் ஒட்டி அமைந்துள்ள முதுமலை புலிகள்
காப்பகத்தில், மான், யானை, காட்டெருமை, புலி, சிறுத்தை, கரடி உட்பட
விலங்கினங்கள், மயில் உட்பட பறவையினங்கள் வசிக்கின்றன. தவிர, யானைகள்
முகாம், மியூசியம் உள்ளன. இந்தியா மட்டுமன்றி, உலக நாடுகளை சேர்ந்த
சுற்றுலாப் பயணிகள் பலர், ஆண்டுதோறும் வந்து செல்கின்றனர்; இவர்கள்,
வனத்துறை வாகனங்கள் மூலமும், யானைகள் மூலமும் சவாரிக்கு அழைத்து
செல்லப்படுகின்றனர். தெப்பக்காடு வரவேற்பு மையத்திலிருந்து, வாகனங்கள்
மூலம், தினமும் காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரையும், பிற்பகல் 3.00 மணி
முதல் 5.30 மணி வரையும் சவாரி நடத்தப்படுகிறது; ஒருவருக்கு 35 ரூபாய்
கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.யானைகள் மூலம், தினமும் காலை 7.00 மணி முதல்
8.30 மணி வரையும், மாலை 4.00 மணி முதல் 5.30 வரையும் சுற்றுலாப் பயணிகள்
அழைத்து செல்லப்படுகின்றனர். நான்கு பேர் செல்லும் யானை சவாரிக்கு கட்டணம்
வசூலிக்கப்படுகிறது.
* முதுமலை தெப்பக்காடுக்கு, ஊட்டியிலிருந்து
மைசூர், பெங்களூரு குண்டல்பேட்டை பகுதிக்கு இயக்கப்படும் தமிழக கர்நாடக
பஸ்கள் மூலமும், கூடலூரிலிருந்து அரசு பஸ், தனியார் வாகனங்கள் மூலமும்
செல்ல முடியும்.
ஊசிமலை: ஊட்டி - கூடலூர் சாலையில், 40 கி.மீ., தொலைவில்
உள்ளது ஊசிமலை காட்சி கோபுரம். இங்கிருந்து, கூடலூர், சிங்காரா, நடுவட்டம்
மற்றும் முதுமலை வனப்பகுதியை ரசிக்க முடியும்.