நமக்கு சேவைக் குறைபாடு நிகழ்ந்ததாக உணர்ந்தால் எத்தகைய நிறுவனத்தின் மீதும் நாம் வழக்கு தொடர முடியும்
இந்தத் தொடரில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு துறை தொடர்பான நுகர்வோர் குறைபாடுகள் என்ன என்பது பற்றியும், அது தொடர்பான வழக்குகள் சிலவற்றையும் பார்த்து வந்தோம். இந்த வாரம் மேலும் சில துறைகளின் முக்கிய வழக்குகள் குறித்துப் பார்க்கலாம்.
கல்வி நிறுவனங்கள்
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ஜெயகிருஷ்ணன், நாமக்கலில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.இ. படித்து வந்தார். அவருக்கு கல்லூரியின் சூழ்நிலை சரிப்பட்டு வராததால் ஓராண்டுக்குப் பின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கல்லூரியில் சேர முடிவு செய்து, டி.சி. கேட்டுள்ளார். ஆனால், கல்லூரி நிர்வாகம் இழுத்தடித்து, ஆறு மாதம் கழித்து டி.சி.யை வழங்கியுள்ளது. இதனால், ஜெயகிருஷ்ணனுக்கு ஓராண்டு படிப்பு வீணானது. இதனால், மன உளைச்சலடைந்த அவர் நாமக்கல் நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் கல்லூரி நிர்வாகத்தின் மீது புகாரளித்தார். வழக்கை விசாரித்த குறைதீர்மன்றம் பாதிக்கப்பட்ட மாணவருக்கு மன உளைச்சலுக்கு 50,000 ரூபாய் வழங்கவும், வழக்குச் செலவுக்கு 2,000 ரூபாய் வழங்கவும் கல்லூரி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது.
பெரம்பூரைச் சேர்ந்த மாணவி ஒருவர் ரஷ்யாவுக்குச் சென்று எம்.பி.பி.எஸ். படிப்பதற்கு நுங்கம்பாக்கத்திலுள்ள தனியார் கல்வி ஆலோசனை நிறுவனத்திடம் மூன்று லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் கட்டியிருந்தார். விமானப் பயணச் சீட்டுக்கென்று தனியாக ஒரு லட்சம் ரூபாய் கட்டியிருந்தார்.
‘பாடங்கள் ஆங்கிலத்தில்தான் கற்றுத் தரப்படும். புத்தகங்களுக்குக் கட்டணம் இல்லை. நல்ல வசதியான தங்கும் விடுதி. சலுகைக் கட்டணத்தில் உணவு போன்றவை அந்தப் பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும். ரஷ்யப் பல்கலைக்கழகத்திற்கு அழைத்துச் செல்ல பாதுகாவலர் ஒருவர் சென்னையில் இருந்து உடன் வருவார்’ என்று வாக்குறுதி அளித்திருக்கிறது அந்தத் தனியார் கல்வி ஆலோசனை நிறுவனம். ஆனால், குறிப்பிட்ட தேதியில் அந்தப் பெண்ணை அழைத்துச் செல்ல யாரும் இல்லை. உணவுக்காக வாரம் ஐந்தாயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்டது. பாடங்கள் ரஷ்ய மொழியில் கற்றுத் தரப்பட்டது. எனவே ஆறாவது நாளிலேயே சென்னை திரும்பிய மாணவி அந்நிறுவனத்தின் மீது, காவல் துறையில் புகார் செய்ய... 86,750 ரூபாயை அந்நிறுவனம் கொடுத்தது. மீதிப் பணம் தராமல் ஏமாற்றியதால் மாநில நுகர்வோர் ஆணையத்தில் புகாரளித்தார். ஆணையம் மாணவிக்கு மீதிப் பணம் 2,13,300 ரூபாய் தரவும், மன உளைச்சலுக்காக 3 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்றும் கூறியது.
இதுபோல நாகப்பட்டினத்தைச் சேர்ந்த எம்.பி.ஏ. மாணவருக்கு 18 மாதங்களாகியும் கல்விக் கடன் வழங்க மறுத்த வங்கிக்கு அபராதம் விதித்து, ஆறு வாரங்களுக்குள் கல்விக் கடன் வழங்க வேண்டும் என்று வங்கி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டதுடன் மன உளைச்சலுக்கு 10,000 ரூபாய், வழக்குச் செலவுக்கு 2,000 ரூபாய் வழங்க வேண்டுமென கூறியது நுகர்வோர் குறைதீர் மன்றம்.
ரியல் எஸ்டேட்
ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் மாதத் தவணையில் பணம் கட்டி வீட்டுமனை வாங்கும் பலரும் அது தொடர்பான சேவைக் குறைபாட்டுக்கு நுகர்வோர் குறைதீர் மன்றத்தை அணுகலாம். கரூரைச் சேர்ந்த சேதுராஜ் என்பவர் அவரது மகன் பெயரில் கரூர் ரியல் எஸ்டேட் ஒன்றில் மாதந்தோறும் 250 ரூபாய் வீதம் 40 மாதங்கள் தவணை செலுத்திய பிறகு, பதிவு செய்வதற்கு 3,000 ரூபாய் பணம் கட்டினார். ஆனால், ரியல் எஸ்டேட் நிறுவனத்தினர் ‘பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள், மனை வழங்க முடியாது’ என்று கூறிவிட்டனர். இதனால் மன உளைச்சலடைந்த அவர் நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் புகாரளித்தார். நுகர்வோர் குறைதீர் மன்றம் சேதுராஜ்க்கு ஒதுக்கப்பட்ட மனையை வழங்க உத்தரவிட்டதுடன் மன உளைச்சலுக்காக 30,000 ரூபாயும் வழக்குச் செலவுக்கு 3,000 ரூபாயும் தீர்ப்பு வழங்கப்பட்ட 60 நாட்களுக்குள் வழங்க வேண்டும் எனவும் கூறியது.
ரியல் எஸ்டேட் நிறுவனம் வாக்களித்த வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்காமல் இருந்தாலோ, குறிப்பிட்ட நாட்களுக்குள் வழங்குவோம் என உத்தரவாதம் கொடுத்து அந்தக் கெடுவுக்குள் முடித்துக் கொடுக்காவிட்டாலோ, தற்காலிக விலையேற்றத்தால், குறிப்பிட்ட ஃப்ளாட் ஒதுக்கிவிட்டு, வேறு காரணங்களால் மாற்றிக் கொடுத்தாலோ இதுபோல் இன்னும் வேறு ஏதேனும் குறைபாடு ஏற்பட்டாலோ தாராளமாக நுகர்வோர் குறைதீர் மன்றத்தைத் தகுந்த ஆதாரங்களுடன் அணுகலாம்.
தங்க நகை
தங்க நகை தொடர்பான புகார்களுக்கும் நுகர்வோர் குறைதீர் மன்றத்தை அணுகலாம். நாகர்கோவிலைச் சேர்ந்த ராமலட்சுமி என்பவர் அங்குள்ள நகைக்கடையொன்றில் தங்க செயின் ஒன்று வாங்கியுள்ளார். அந்த நகையை அணியும்போது, கழுத்தில் குத்தல் ஏற்படவே அதைச் சரி செய்யவும், அழுக்கு எடுத்துத் தரவும் அந்த நகைக் கடைக்கு மீண்டும் சென்று நகையைக் கொடுத்துள்ளார். அதற்கு அவர்கள் பில் கொடுக்காமல் துண்டுச் சீட்டில் எழுதிக் கொடுத்துள்ளனர். பின்னர், அந்த நகையை வாங்கிப் பார்த்தபோது 260 மில்லிகிராம் எடை குறைந்துள்ளது. சரியான எடையில் புதிய நகை வேண்டுமென்று கேட்டபோது, சேதாரம் பிடித்தம் செய்வோம் என நகைக் கடைக்காரர் தெரிவித்துள்ளார். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கடைக்காரர் நகையைக் கொடுக்காமல் திருப்பி அனுப்பி விட்டார். இதனால் மனவேதனை அடைந்த அவர் நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் புகாரளித்தார். நுகர்வோர் குறைதீர் மன்றம் நகைக் கடையின் சேவைக் குறைபாட்டை சுட்டிக்காட்டி பாதிக்கப்பட்ட ராமலட்சுமிக்கு தங்க நகையைத் திருப்பி வழங்கவும், மன உளைச்சலுக்கு 3,000 ரூபாய் வழங்கவும், 3,000 ரூபாய் வழக்குச் செலவுக்கும், 260 மில்லிகிராம் எடைக்குறைவுக்கு. 750 ரூபாயும் இரண்டு மாதங்களுக்குள் வழங்க உத்தரவிட்டது.
இதுபோல எந்த நுகர்வோர் சம்பந்தப்பட்ட குறைபாடுகளுக்கும் நாம் புகாரளிக்கலாம். மின்சாரம் தொடர்பான மின்சார ஆணையம் நிர்ணயித்திருக்கும் விதிகளுக்கு புறம்பாக மின்சார வாரியம் செயல்பட்டால், நிர்ணயிக்கப்பட்டதை விட கூடுதலாக மின்சாரக் கட்டணம் வசூலிக்கப்பட்டால், உரிய காரணமின்றி அறிவிக்கப்படாத மின்வெட்டு இருந்தால், உரிய நாட்களுக்குள் புதிய மின் இணைப்பு வழங்க மறுத்தால் நுகர்வோர் மன்றத்தை நாடி தீர்வு பெறலாம். மின்சார வாரியம் தொடர்பான புகார்களுக்கு தமிழ்நாடு ஒழுங்குமுறை ஆணையத்தில் புகாரளித்தும் தீர்வு பெறலாம். மின்சாரக் குறைதீர்ப்பாளர், தமிழ்நாடு ஒழுங்குமுறை ஆணையம், 19 - ஏ, ருக்மணி லட்சுமிபதி சாலை, எக்மோர், சென்னை - 600 018 044-28411376,28411378,28411379 tnerc@nic.in என்ற முகவரியில் புகாரளிக்கலாம்.
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக