“நேதாஜியை தாண்டி இன்னொரு வாழ்க்கை இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அதனால், இந்த வாழ்க்கையே போதும் என்று இருந்துவிட்டேன்’’ என்கிறார் மதுரையைச் சேர்ந்த ’ஜெய்ஹிந்த்’ சுவாமிநாதன்.
போன் போட்டால் மறுமுனையில், ’ஜெய்ஹிந்த்’ என்றுதான் ஆரம்பிக் கிறார் சுவாமிநாதன். அப்பா வேலுச்சாமி விமானப் படையில் இருந்தவர் என்பதால் அவரது தேசப்பற்று இவரையும் பற்றிக் கொண்டது. இவர் நேதாஜி பக்தராக மாறியது எப்படி? விவரிக்கிறார் சுவாமிநாதன்.
’’அப்பா விமானப் படையில் இருந்ததால் சின்ன வயதில் பல மாநிலங்களுக்குச் சென்றிருக் கிறேன். அப்போதிருந்தே எனக்குள் தேசபக்தி வளர்ந்தது. மதுரை கல்லூரியில் பி.ஏ. படிக்கும்போது நானும் நண்பர்களும் ஐ.ஏ.எஸ். படிக்க வேண்டும் என நினைத்தோம். அதற்கான அறிவை வளர்த்துக் கொள்வதற்காக எங்களுக்குள் அறிவுத் தேடல் வட்டம் ஒன்றை அமைத்துக் கொண்டோம். அந்த வட்டத்தில் இருப்பவர்கள் புத்தகங் களை வாங்கிப் படித்து தினமும் மற்றவர்களுக்கு பாடம் எடுக்க வேண்டும்.
கல்லூரி நாட்களில் அப்பாவும் அவரது நண்பர்களும் சாலையோ ரத்தில் இருக்கும் மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு உணவுப் பொருட்களை வாங்கித்தந்து உதவு வார்கள். அதேபோல் நாங்களும் பண்டிகை நாட்களில் எங்களுக்குத் தெரிந்த வீடுகளில் உணவுப் பொருட்களை கேட்டு வாங்கி அதை ஆதரவற்றோருக்கு கொடுத்து உதவுவோம். கல்லூரிப் படிப்பு முடிந்ததும் நண்பர்கள் ஆளுக்கொரு திசையில் பறந்துவிட்டோம்.
நான் சென்னையில் எம்.ஏ. படித்துக் கொண்டிருந்தபோது நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் இருந்த படை வீரர்கள் மதுரையில் இருக்கிறார்கள் என்ற தகவல் கிடைத்தது. தேடிப்போய் அவர்களை பார்த்து நட்பாக்கிக் கொண்டேன். 1992-ல் மதுரைக்கு திரும்பியதும் நேதாஜி படையின் இளைஞரணி தொண்டனாக என்னை மாற்றிக் கொண்டேன். அப்போது எனக்கு புதிய நண்பர்கள் கிடைத்தார்கள். ஐ.ஏ.எஸ். கனவு பகல்கனவாகிப் போனது. நண்பர்கள் 15 பேர் சேர்ந்து ’நேதாஜி தேசிய இயக்கத்தை’த் தொடங் கினோம்.
கூட்டு முயற்சியில், ’தேசியம்’ என்ற பத்திரிகையை 1992-ல் நேதாஜி பிறந்த தினத்தில் தொடங்கினோம். தலை தூக்காக தூக்கி பத்திரிகை விற்றோம். அப்படி பத்திரிகை விற்றதில் ஒருவர் இப்போது ஐ.ஐ.டி-யில் இருக்கிறார்.
இன்னொருவர் பேராசிரியராக இருக்கிறார். பத்திரிகை மூலம் தேசப்பற்றை விதைத்துக் கொண்டே எங்களால் ஆன சமூக சேவை களையும் செய்ய ஆரம்பித்தோம். இன்றைக்கு ரத்த தானம் என்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. நாங்கள் சேவை செய்ய ஆரம்பித்த காலத்தில் ரத்த தானம் அவ்வளவு எளிதான விஷயம் இல்லை.
ஆனால் அப்போதே, நேதாஜி பிறந்த நாளில் வருடத்துக்கு ஆயிரம் பேர் வரை ரத்த தானம் கொடுக்க வைத்தோம்.
2005-லிருந்து சுதந்திர தினத்துக்கும் குடியரசு தினத்துக்கும் லட்சக்கணக்கில் தேசியக் கொடிகளை பிரிண்ட் செய்து வழங்க ஆரம்பித்தோம்.
இந்த ஆண்டு 5 லட்சம் கொடிகளை வழங்கினோம். நேதாஜியின் பெயரால் நாங்கள் செய்த சேவைகளை கவுரவிக்கும் விதமாக மதுரையிலுள்ள ஞானபீட இலக்கியப் பேரவை எனக்கு ‘இளைய நேதாஜி’ என்ற விருதை வழங்கியது.
ஒரு கட்டத்துக்கு மேல் எங்க ளால் பத்திரிகையை தொடர்ந்து நடத்தமுடியவில்லை. என்னுடைய நண்பர்கள் அனைவரும் குடும்பம், வேலை என்ற வாழ்க்கை வட்டத் துக்குள் மாறிவிட்டார்கள். ஆனால், இயக்கம் தொடங்கியபோது, ‘இறுதி நபராக யார் இருக்கிறாரோ அவர் கடைசிவரை இந்த இயக்கத்தை நடத்த வேண்டும்’ என்று எங்களுக்குள் உறுதி எடுத்துக் கொண்டோம். அந்த இறுதி நபர் நானாகிவிட்டேன். அதனால், என்னால் வேலை, குடும்பம் இதைப் பற்றியெல்லாம் சிந்திக்க முடியவில்லை.
இறுதி மூச்சுவரை நேதாஜியை தவிர வேறெதையும் நான் நினைக்கப் போவதில்லை என்று ஜெய்ஹிந்த்’’ சொல்லி விடைபெற்றார் சுவாமி நாதன்.
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்
மக்கள் மையம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக