பந்தலுார்: 'மாணவ சமுதாயம் இயற்கையை பாதுகாக்க முன்வந்தால் மட்டுமே எதிர்கால சமுதாயம் வாழ இயலும்' என, தெரிவிக்கப்பட்டது.
பந்தலுார் அருகே அத்திக்குன்னா அரசு உயர்நிலைப் பள்ளி நிர்வாகம்; கூடலுார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் ஆகியவை இணைந்து, உலக சதுப்பு நில பாதுகாப்பு தின விழிப்புணர்வு கருத்தரங்கை நடத்தின.
பள்ளி ஆசிரியர் ரகுபதி வரவேற்றார்.
தலைமையாசிரியர்(பொ) பிரதீப் தலைமை வகித்து பேசுகையில்,“சதுப்பு நிலங்களை பாதுகாக்கும் வகையில் நடத்தப்படும் இந்த தினம் குறித்து மாணவர்கள், போதிய விழிப்புணர்வை பெற வேண்டும். அதனை மற்றவருக்கும் தெரிவிக்க வேண்டும்,”என்றார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுபிரமணியம் பேசுகையில்,“பள்ளிகளில் சுற்றுச்சூழல் மன்றங்கள் துவக்கப்பட்டு பசுமையை பாதுகாக்க, 16 வகையான தினங்கள் குறிப்பிடப்பட்டு, அந்த நாட்களில் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படுகிறது. சதுப்பு நிலங்கள் குறித்து அறிந்து, அதனை பாதுகாக்க மாணவர்கள் முன் வர வேண்டும்,” என்றார்.
தேவாலா ஜி.டி.ஆர். பள்ளி தலைமையாசிரியர் சமுத்திரபாண்டியன் பேசுகையில்,“இயற்கையை அழிக்கும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்பாட்டை தவிர்க்கவும், உலக வெப்பமயமாதலை தடுக்கவும் அனைவரும் ஒருங்கிணைய வேண்டும்,”என்றார்.
ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் சத்தியநேசன் பேசுகையில், “மரங்கள்அழிவு, நச்சுப்புகை அதிகரிப்பு, வனங்கள் அழிப்பு இவற்றால் நிலம், நீர், காற்று பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், இயற்கையை பாதுகாக்க, முழுமனதுடன் மாணவர்கள் முன்வரவேண்டும்,”என்றார்.
தொடர்ந்து, மருத்துவர் கணேசன், மைய ஆலோசகர் காளிமுத்து உள்ளிட்டோர் பேசினர்.
பல்வேறு போட்டிகளில் பங்கேற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
ஆசிரியர் ராமானுஜம் நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக