நான் எதிர்த்ததால்தான் என் பெயர் சேர்க்கப்பட்டது -II
10092008
எனது காலத்தில் ஓர் அமைச்சரிடமிருந்து மற்றொரு அமைச்சருக்கு துறைகள் மாற்றம் செய்யப்பட்டு வந்தன. நான் எப்போதுமே ஒதுக்கப்பட்டே வந்தேன். பல அமைச்சர்களிடம் இரண்டு அல்லது மூன்று துறைகள் கொடுக்கப்பட்டன. என்னைப் போன்றே மற்றவர்களும் கடும் பணிகளை செய்யக் காத்திருந்தனர். யாரேனும் ஓர் அமைச்சர் சில நாட்களுக்கு வெளிநாடு சென்றிருக்கும்போது, அவரது துறை தற்காலிகமாகக் கூட எனக்குத் தரப்படுவதில்லை, அரசாங்கப் பணிகளை அமைச்சர்களிடம் பகிர்ந்தளிப்பதில் என்ன அடிப்படைக் கோட்பாட்டை பிரதமர் பின்பற்றுகிறார் என்பதைப் புரிந்து கொள்வதே எனக்கு கடினமாக இருந்தது. அது திறமையா? நம்பிக்கையா? நட்பு முறையா? செல்வாக்கா? வெளியுறவுத்துறைக் குழு அல்லது பாதுகாப்புத் துறைக் குழு போன்ற அமைச்சரவையின் முக்கியமான குழுக்களில் ஓர் உறுப்பினராகக்கூட நான் நியமிக்கப்படவில்லை.
பொருளாதார விவகாரக் குழு அமைக்கப்பட்ட போது பொருளாதாரம் மற்றும் நிதித் துறைகளில் நான் குறிப்பாகப் பெரிதும் தேர்ச்சிப் பெற்றவன் என்ற கண்ணோட்டத்தில், இக்குழுவில் எனக்குப் பணி தரப்பட்டு அமர்த்தப்படுவேன் என்று எதிர்பார்த்தேன். ஆனால் நான் பின்னுக்குத் தள்ளப்பட்டேன். பிரதமர் இங்கிலாந்திற்குச் சென்றிருந்தபோதுதான் நான் அப்பணியில் அமைச்சரவையில் அமர்த்தப்பட்டேன். ஆனால் அவர் திரும்பி வந்தபோது, அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டது. அதில் அவர் என்னைத் தவிர்த்துவிட்டார். இதற்குப் பின்னர் நடைபெற்ற புனரமைப்பில் எனது பெயரும் சேர்க்கப்பட்டது. ஆனால் அதுவும் நான் எதிர்த்ததால்தான் கிடைத்தது.
இது தொடர்பாக நான் ஒருபோதும் பிரதமரிடம் புகார் எதையும் கொடுக்கவில்லை என்பதை அவரே ஒப்புக் கொள்வார் என்று உறுதியாக நம்புகிறேன். அமைச்சரவைக்குள் நடைபெறும் அரசியல் அதிகாரப் போட்டிகளிலோ, காலி இடங்கள் ஏற்படும்போது அத்துறைகளை அபகரித்துக் கொள்ளும் விளையாட்டிலோ நான் ஒருபோதும் ஈடுபட்டதில்லை. எனினும் ஒரு விஷயத்தை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். அதாவது இந்த விஷயத்தில் எனக்கு தவறு இழைக்கப்பட்டிருக்கிறது என்பதை நான் உணராதிருப்பது, மனிதத் தன்மையற்றதாக இருந்திருக்கும்.
அரசாங்கத்தின் மீது அதிருப்தி கொள்ளச் செய்த மற்றொரு விஷயத்தை இப்போது குறிப்பிட விரும்புகிறேன். அது, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பட்டியல் சாதியினருக்கு இழைக்கப்பட்ட கொடுமை தொடர்பானதாகும். பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்காக எந்தவிதப் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் அரசியல் சாசனம் முன்வைக்கவில்லை என்பது கண்டு மிகவும் வருத்தமடைந்தேன். குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படவுள்ள ஓர் ஆணையத்தின் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு நிர்வாக அரசாங்க சாசனத்தை நாம் அங்கீகரித்து ஓராண்டிற்கு மேல் ஆகிவிட்டது. ஆனால், அரசாங்கமோ ஓர் ஆணையம் அமைப்பது குறித்து சிந்தித்துப் பார்க்கக்கூட இல்லை. நான் பதவியிலிருந்து வெளியேறிய 1946ஆம் ஆண்டு எனக்கும், பட்டியல் சாதியினரிலே தலைமையை ஏற்றிருந்த உறுப்பினர்களுக்கும் மிகப் பெரிய கவலையை அளித்த ஓர் ஆண்டாக அது இருந்தது.
பட்டியல் சாதியினருக்கான அரசியல் சட்ட ரீதியான பாதுகாப்புகள் குறித்த விஷயத்தில், தாங்கள் ஏற்றுக் கொண்ட பொறுப்புகளிலிருந்து பிரிட்டிஷார் பின்வாங்கி விட்டனர். மேலும் தங்களுக்காக அரசியல் நிர்ணய சபை என்ன செய்யும் என்பது பற்றி பட்டியல் சாதியினர் எதையும் அறிந்திருக்கவில்லை. கவலையளித்த இக்காலகட்டத்தில் அய்க்கிய நாடுகள் அவைக்கு வழங்குவதற்காக, பட்டியல் சாதியினரின் நிலை குறித்து ஓர் அறிக்கையை நான் தயாரித்திருந்தேன். ஆனால் அதை நான் அய்.நா. அவையில் சமர்ப்பிக்கவில்லை. அரசியல் நிர்ணய சபையும் வருங்கால நாடாளுமன்றமும் இந்த விஷயம் குறித்து ஒரு முடிவுக்கு வரும் வரை காத்திருப்பது உகந்தது என்று நான் உணர்ந்தேன்.
பட்டியல் சாதியினரின் நிலையைப் பாதுகாப்பதற்காக அரசமைப்புச் சட்டத்தில் செய்யப்பட்டிருந்த வழிவகை ஏற்பாடுகள் எனக்கு நிறைவளிக்கவில்லை. இருப்பினும் அரசாங்கம் அவற்றை பயனுறுதியுடையதாக்க ஓரளவு முயற்சி செய்யும் என்ற நம்பிக்கையில் அவற்றை நான் ஏற்றுக் கொண்டேன். பட்டியல் சாதியின் நிலை இன்றைக்கு எப்படி இருக்கிறது? எனக்குத் தெரிந்தவரை அது பழைய நிலையிலேயே இருக்கிறது. அதே பழைய கொடுங்கோன்மை, அதே பழைய கொடுமை, பாரபட்சம் காட்டும் அதே பழைய நிலை ஆகியவை முன்பு இருந்தது போலவே, இன்றளவும் இருந்து வருகின்றன. டில்லி மற்றும் பக்கத்திலுள்ள இடங்களைச் சுற்றியுள்ள தாழ்த்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த மக்கள் என்னிடம் வந்து, சாதி இந்துக்கள் தங்களுக்கு இழைத்து வரும் கொடூரங்கள், இது தொடர்பான தங்களது புகார்களைப் பதிவு செய்ய மறுத்து வரும் காவல் துறையினரின் விபரீத போக்கு குறித்தும் உள்ளம் உருக்கும் சோகக் கதைகளைக் கூறினர். இத்தகைய நூற்றுக்கணக்கான நிகழ்ச்சிகளை என்னால் கூற முடியும்.
- தொடரும்
பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு: 14(2), பக்கம்: 1318
பின்னூட்டங்கள் : Leave a Comment »
பிரிவுகள் : துறைகள் மாற்றம்
வெளியுறவுத்துறை கொள்கையே நம்மை தனிமைப்படுத்திவிட்டது – III
10092008
இந்தியாவில் உள்ள பட்டியல் சாதியினர் போல் கடும் வேதனைக்கு ஆட்படும் மக்கள் உலகில் வேறு எங்கேனும் உள்ளனரா என்று நான் ஆச்சரியத்துடன் நோக்கினேன். வேறு எவரையும் நான் காண முடியவில்லை. இருந்தும் கூட பட்டியல் சாதியினருக்கு உதவிகள் எதுவும் ஏன் வழங்கப்படவில்லை? முஸ்லிம்களைப் பாதுகாப்பது குறித்து அரசு காட்டிவரும் அக்கறையை இதனுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். பிரதமரின் முழு நேரமும் கவனமும் முஸ்லிம்களின் பாதுகாப்புக்காகவே ஒதுக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எங்கெல்லாம் எவ்வெப்போதெல்லாம் பாதுகாப்பு தேவைப்படுகிறதோ, அப்போதெல்லாம் அதனை அவர்களுக்கு வழங்க வேண்டும் என்ற விருப்பத்தில் நான் யாருக்கும், பிரதமருக்கும் கூடப் பின்தங்கியவனில்லை.
ஆனால் நான் அறிந்து கொள்ள விரும்புவது என்னவெனில், பாதுகாப்பு தேவைப்படும் ஒரே பிரிவு மக்கள் முஸ்லிம்கள் மட்டும் தானா? பட்டியல் சாதியினர், பழங்குடியினர் மற்றும் இந்தியக் கிறித்துவர்கள் ஆகியோருக்கு பாதுகாப்பு தேவை இல்லையா? இந்த சமூகங்களைக் காக்க பிரதமர் எத்தகைய அக்கறையைக் காட்டினார்? இதுவரை நான் எதையும் காணவில்லை. உண்மையில் முஸ்லிம்களைவிடக் கூடுதல் அக்கறையும் கவனமும் தேவைப்படும் மக்கள் இவர்களேயாவர்.
அரசாங்கத்தினால் பட்டியல் சாதியினர் புறக்கணிக்கப்படுவது குறித்து எனது கடுஞ்சினத்தை, உள்ளக் கொதிப்பை என் மனதிற்குள்ளேயே அடக்கி வைக்க என்னால் முடியவில்லை. பட்டியல் சாதியினரின் பொதுக்கூட்டம் ஒன்றில் எனது உணர்வுகளை வெளிப்படையாகக் கூறினேன். அவர்களுக்கு 12.5 சதவிகிதப் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்த சட்டத்தினால், பட்டியல் சாதியினர் பலனடையவில்லை என்ற எனது குற்றச்சாட்டு உண்மையா என மாண்புமிகு உள்துறை அமைச்சர் கேட்டார். அக்கேள்விக்கான பதிலில் மாண்புமிகு உள்துறை அமைச்சர் எனது குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்றும் கூறினார். அதைத் தொடர்ந்து, அரசுப் பணிகளில் அண்மையில் பட்டியல் சாதியினரின் பிரதிநிதிகள் எத்தனை பேர் தேர்வு செய்யப்பட்டனர் என்று, இந்திய அரசின் பல்வேறு துறைகளுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பினார். அதற்கு பல துறைகள் ‘இல்லை’ என்ற பதிலை அனுப்பியது என்று என்னிடம் கூறப்பட்டது.
எனக்குக் கிடைத்த தகவல் சரியாக இருக்குமேயானால், மாண்புமிகு உள்துறை அமைச்சர் கொடுத்த பதில் குறித்து நான் எந்தவிதக் கருத்தையும் கூறத் தேவையில்லை. எந்த மக்களிடையே நான் பிறந்தேனோ அந்த பட்டியல் சாதியினரின் மேம்பட்ட நிலைக்காக, சிறுவயது முதலே நான் என்னை அர்ப்பணித்துக் கொண்டேன். என் மனதில் வேறு எந்த உணர்வுகளும் இல்லை என்பதல்ல; எனது சொந்த நலன்களை மட்டும் நான் கருத்தில் கொண்டிருந்திருப்பேனேயானால், நான் விரும்பியதைப் பெற்றிருப்பேன்; காங்கிரசில் நான் சேர்ந்திருந்தால், அந்த அமைப்பின் மிக உயர்ந்த பதவியையும் பெற்றிருப்பேன். ஆனால் நான் கூறியதுபோல, பட்டியல் சாதியினர் மேம்பாட்டிற்காக நான் என்னை அர்ப்பணித்துக் கொண்டேன். எந்த நோக்கத்தை அடைய வேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்களோ, அதில் குறுகிய மனச் சிந்தனையுடன் இருப்பது நல்லது என்ற முதுமொழியை நான் பின்பற்றியிருக்கிறேன். ஆகவே, பட்டியல் சாதி மக்களின் லட்சியம் எவ்வளவு கீழ் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது என்பதைக் காணும்போது, என் மனம் எவ்வளவு வேதனைப்பட்டிருக்கும் என்பதை நீங்கள் நன்கு புரிந்து கொள்ள முடியும்.
எனது உணர்வைத் தூண்டிய மூன்றாவது விஷயம் எனக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது மட்டுமல்ல; உண்மையில் பெரும் துன்பத்தையும் கவலையையும் கூட அது ஏற்படுத்தியது. நமது நாட்டின் வெளியுறவுக் கொள்கையையும் அத்துடன் இந்தியாவின் பால் பிற நாடுகள் கொண்டிருக்கும் அணுகுமுறையையும் தொடர்ந்து கவனித்து வருபவர்கள், நம்மால் அவர்கள் கொண்டுள்ள போக்கில் திடீர் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதை உணராதிருக்க முடியாது. 1947 ஆகஸ்டு 15 அன்று ஒரு சுதந்திர நாடாக நாம் வாழ்வைத் தொடங்கிய போது, எந்நாடும் நமக்குத் தீங்கு செய்ய வேண்டும் என்று எண்ணவில்லை. உலகின் ஒவ்வொரு நாடும் நமது நண்பனாகத் தான் இருந்தது. நான்காண்டுகளுக்குப் பின்னர் இன்றோ நமது நண்பர்கள் அனைவரும் நம்மை கைவிட்டுவிட்டனர். நமக்கென நண்பர்கள் யாரும் இல்லை. நாமும் நம்மைத் தனிமைப்படுத்திக் கொண்டோம்; தன்னந்தனியாகப் போய்க் கொண்டிருக்கிறோம். அய்க்கிய நாடுகள் அவையில் நமது தீர்மானங்களை ஆதரிக்க எவரும் இல்லை.
நமது வெளியுறவுத் துறை கொள்கையை நினைக்கும் போது பிஸ்மார்க்கும் பெர்னார்ட் ஷாவும் கூறியதை நான் நினைத்துப் பார்க்கிறேன். “அரசியல் என்பது லட்சியத்தை அடைவதற்கான பந்தய ஆட்டமல்ல; மாறாக அரசியல் என்பது சாத்தியக் கூறுகளை எய்தும் பந்தய ஆட்டமாகும்” என்று பிஸ்மார்க் கூறியுள்ளார். “நல்ல குறிக்கோள்கள் சிறந்தவைதான். ஆனால் அவை மிகவும் நல்லவையாக இருப்பது, பல நேரங்களில் ஆபத்தானவையாக இருக்கும் என்பதை எவரும் மறந்துவிடக்கூடாது’ என்று அண்மையில் பெர்னார்ட் ஷா கூறினார். உலகின் இரு பெரும் மேதைகள் கூறிய இந்த விவேகமிக்க கருத்துகளுக்கு முற்றிலும் எதிரானவையாக நமதுவெளியுறவுக் கொள்கை உள்ளது.
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக