செயற்கையால் இயற்கையைக் கட்டுப்படுத்த முடியாது என்பது இயற்கை நியதி. அதை மீறினால் ஏதாவது விபரீதம் ஏற்படுவது நிச்சயம். கோவை மாவட்டம் பெரியநாயக்கம்பாளையம் வனச்சரகம் தடாகம் காப்புக் காட்டில் ஜூலை 9-ம் தேதி 20 வயது மதிக்கத்தக்க ஆண் யானை "ரேடியோ காலர்' பொருத்தும்போது துடிதுடித்து இறந்துள்ளது. இச்சம்பவம் நடப்பதற்கு 2 நாள்களுக்கு முன்பு இதே மாவட்டத்தில் போளுவாம்பட்டி வனச்சரகத்தில் 20 வயது மதிக்கத்தக்க பெண் யானைக்கு "ரேடியோ காலர்' பொருத்தப்பட்டது. யானைகள் வனத்தில் இருந்து வெளியேறி மனிதர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்துவதைத் தடுக்க இந்தியாவிலேயே முதல்முறையாக யானைக்கு "ரேடியோ காலர்' பொருத்திவிட்டோம் என பெருமைகொண்டது வனத்துறை. ஆனால், அடுத்த 2 நாள்களுக்குள் வனத்துறையினர் சாயம் வெளுத்துவிட்டது. "ரேடியோ காலர்' பொருத்தப்படுவது என்ற தகவல் கிடைத்த உடனேயே சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், வனவிலங்கு நல அமைப்புகளும் போர்க்கொடி தூக்கியிருந்தால் யானை இறப்பதை முன்கூட்டியே தடுத்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. அமெரிக்காவில் இந்திய மாணவர்களுக்கு கால்களில் "ரேடியோ காலர்' கருவி பொருத்தப்பட்டபோது உலகம் முழுவதும் இருந்து மனசாட்சியுள்ள பல மனித உரிமை அமைப்புகள் குரல் கொடுத்தன. யானைக்கு "ரேடியோ காலர்' பொருத்தப்படுகிறது அல்லது பொருத்தப்பட்டுவிட்டது என்ற செய்தியை அறிந்ததும் மனசாட்சியுள்ள சுற்றுச்சூழல் அமைப்புகள் வீதிக்கு வந்து போராடியிருக்க வேண்டும். தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம் ஆகிய மூன்று மாநிலங்களின் எல்லைகள் சந்திக்கும் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில்தான் ஆசியாவிலேயே அதிக யானைகள் உள்ளன. தோராயமாக 15,000 சதுர கிலோ மீட்டர் பரப்புள்ள இந்தப் பகுதியில் சுமார் 8,500 யானைகள் உள்ளதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இங்குதான் மனித-யானை மோதல்களும் அதிக அளவு நடக்கின்றன. வனத்தில் இருந்து யானைகள் வெளியே வருவதற்குப் பல்வேறு காரணங்கள் இருந்தாலும், யானைகளின் பாரம்பரியமான (பல ஆயிரம் ஆண்டுகள் பழமையான) வழித்தடங்களை மனிதர்கள் ஆக்கிரமித்ததுதான் பிரதான காரணம். தேயிலைத் தோட்டங்கள், காப்பித் தோட்டங்கள், ஆன்மிகக் குடில்கள், பொறியியல் கல்லூரிகள் என்ற வகையில் அரசியல்வாதிகளின் உதவியுடன் செல்வாக்குமிக்க தனிநபர்கள் யானை வழித்தடங்களை ஆக்கிரமித்துள்ளனர். சத்தியமங்கலம் வனப்பகுதியில் சில முன்னாள் அமைச்சர்கள், முன்னாள், இன்னாள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளின் பிடியில் சில ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் உள்ளன. யானைகள் ஒரே இடத்தில் வாழ்வதில்லை. அவை இனப்பெருக்கம் நடத்திக்கொண்டே, மேற்குத்தொடர்ச்சி மலையில் சுமார் 300 கிலோ மீட்டர் சுற்றுவட்டாரத்துக்குள் அங்கும், இங்கும் இடம்பெயர்ந்து கொண்டே வாழும். அதன் வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்படும்போது அவை வழிமாறி சமவெளிக்கு வருகின்றன. 2011-ம் ஆண்டில் கோவை மாவட்டத்தில் யானைகள் சுமார் 700 முறை விவசாய நிலங்களுக்குள் சென்றுள்ளன. 2010-ம் ஆண்டில் 844 முறையும், 2009-ம் ஆண்டில் 560 முறையும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. பிரதான பிரச்னையான யானைகள் வழித்தட ஆக்கிரமிப்பை அகற்ற வழிதேடாமல், யானைக்கு "ரேடியோ காலர்' பொருத்துவது, தும்பைவிட்டுவிட்டு, வாலைப் பிடிப்பதற்குச் சமமான செயல். அளவுக்கு அதிகமாக மயக்க மருந்து செலுத்தப்பட்டதால்தான் யானை இறந்தது என்கிறது வனத்துறை. மயக்க மருந்து கொடுக்க அல்ல; முதலில் "ரேடியோ காலர்' பொருத்த உங்களுக்கு அனுமதி கொடுத்தது யார்? அட்டவணைப் பட்டியலில் இருக்கும் விலங்குகளைக் காயப்படுத்தினாலோ அல்லது சாகடித்தாலோ, அதற்குக் காரணமானவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களைக் கைது செய்கிறது வனத்துறை. "ரேடியோ காலர்' பொருத்தும் பணியின்போது யானை இறந்த சம்பவத்தைப் பார்க்கும்போது அது கொலை செய்யப்பட்டதற்குச் சமம் என்பது தெளிவாகிறது. அட்டவணைப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் யானை கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு யார் பொறுப்பு? இனிமேலாது இதுபோன்ற தவறுகளுக்கு இடமளிக்காமல் வனத்துறையினர் சுதாரித்துக்கொண்டு அறிவுப்பூர்வமாகச் செயல்படுவது அவசியம். யானை-மனித மோதலைத் தடுக்க வனப்பகுதியில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றுவதுதான் முதல் நடவடிக்கையாக இருக்க வேண்டும். அதையும் மீறி வனத்தில் இருந்து வெளியேறும் யானைகளைக் கண்காணிக்க யானைகளுக்குப் பாதிப்பு ஏற்படாதபடி தொழில்நுட்ப ரீதியாக மாற்றுவழியைத் தேடலாம். யானைகளின் நடமாட்டத்தைச் சென்சார் கருவிகள் மூலம் கண்காணித்து வனத்தில் இருந்து வெளியேறும் யானைகள் குறித்து அந்தந்தப் பகுதியில் உள்ள வனச்சரகரின் செல்போனுக்குக் குறுந்தகவல் அனுப்பும் வகையிலான நவீன கருவியை கோவையில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் ஓராண்டுக்கு முன்பு கண்டுபிடித்தனர். அந்தக் கருவியைக் கண்டுபிடிக்கும் திட்டத்துக்கு வனத்துறைகூட நிதி ஒதுக்கியிருந்தது. அந்தத் திட்டம்கூட சிறந்த மாற்றாக இருக்கக்கூடும். இயற்கையோடு வாழுங்கள். முடியாவிடில், இயற்கையைவிட்டு ஒதுங்கி வாழுங்கள். இயற்கையைச் செயற்கையால் அடக்கி வாழலாம் என்றால் இயற்கையின் சீற்றத்தை யாராலும் கட்டுப்படுத்த இயலாது. கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக