தமிழகத்தில் பள்ளிகள் ஜூன் 15 முதல் செயல்படத் தொடங்கிவிட்டன. சுமார் 20 நாள்கள் கடந்துவிட்ட நிலையில், தருமபுரி மாவட்ட ஆட்சியர் ஆர். லில்லி நடத்திய திடீர் ஆய்வின்போது தெரியவந்த அதிர்ச்சியான தகவல்: பள்ளிகளின் குடிநீர்த் தொட்டிகள் ஒன்றுகூட கழுவப்படவில்லை, பள்ளியின் கழிப்பறைகள் தண்ணீரே இல்லாமல் மோசமான நிலையில் காணப்பட்டன. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மாவட்ட ஆட்சியர், உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. ஆனால், தமிழகம் முழுவதிலும் உள்ள அரசுப் பள்ளிகள் அனைத்திலும் இதுதான் நிலைமை என்பதைச் சொல்லியாக வேண்டியிருக்கிறது. பள்ளி இறுதித் தேர்வு முடிந்தவுடன் விடுமுறையில் செல்லும் ஆசிரியர்கள், பள்ளி திறக்கப்பட்ட பிறகுதான் வருகிறார்கள். மிகச் சில நாள்களில் பள்ளிக்கு வர நேர்ந்தாலும் தலைமையாசிரியர் அறை மட்டுமே சுத்தப்படுத்தப்படுகிறது. பல பள்ளிகளுக்கு இரவுக் காவலர் பெயரளவுக்கு இருக்கிறார்கள். சில இடங்களில் அதற்கும்கூட ஆள் கிடையாது. விடுமுறை நாள்களிலும், இரவு நேரங்களிலும் மது அருந்திப் பொழுதுபோக்கும் இடமாகக்கூடப் பல அரசுப் பள்ளிகள் செயல்படுகின்றன என்பது விவரம் தெரிந்தவர்களுக்குத் தெரியும். இரண்டு மாதங்களுக்குப் பிறகு பள்ளி திறக்கப்படும்போது, வகுப்பறைகள் மட்டும் பெருக்கி தூய்மை செய்யப்படுகின்றன. ஆனால், குடிநீர்த் தொட்டிகளைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. கழிப்பறைகளைப் பற்றியும் யாரும் கவலைப்படுவதில்லை. தேசத் தந்தை காந்தி இந்தச் சூழ்நிலையில் என்ன செய்திருப்பார். அவரே ஒரு துடைப்பம், வாளியுடன் கழிப்பறையைச் சுத்தம் செய்யும் பணியில் இறங்கியிருப்பார். அவருடன் அவரது தொண்டர்களும், மாணவர்களும்கூட இறங்கியிருப்பர். ஆனால், இப்போது மாணவர்களை இதில் ஈடுபடுத்தினால் எதிர்ப்புகள் கிளம்பும். குழந்தைகளைப் படிக்க அனுப்புகிறோமா அல்லது கழிவறையைக் கழுவ அனுப்புகிறோமா என்று பெற்றோர்கள் கூச்சல் எழுப்புவர். அத்தகைய பெற்றோரிடம், இதுவும் ஒரு பாடம்தான் என்று திருப்பிச் சொல்லும் வலிமை இன்றைய ஆசிரியர்களிடமோ, அரசிடமோ இல்லை என்பதுதான் நமது பலவீனம். மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான சிறப்புப் பள்ளிகளில் அக்குழந்தைகளுக்குச் சொல்லித் தரும் அடிப்படைப் பயிற்சியே, இயற்கை அழைப்பு நேர்ந்ததும் அவர்களாகக் கழிவறைக்குச் செல்வதும், அவர்களாக முடிந்தவரை தண்ணீரைப் பயன்படுத்தி சுத்தப்படுத்திக் கொள்வதும்தான். பள்ளியில் கற்கும் இந்தப் பழக்கத்தை அக் குழந்தைகள் வீட்டில் நடைமுறைப்படுத்தி, பெற்றோருக்குச் சங்கடங்களைக் குறைக்கின்றன. மனவளர்ச்சி குறைந்த குழந்தைகளுக்குச் சொல்லித்தரும் நாம், பொதுப் பள்ளிகளில் நல்ல திறனுடன் வரும் மாணவர்களிடம் இதைச் சொல்லித் தருவதில்லை. அதனால்தான் பள்ளிக் கழிப்பறைகள் மோசமான நிலைக்கு இலக்காகின்றன. அந்த மாணவர்கள் வீட்டுக் கழிவறைகளையும்கூட, மோசமாகப் பயன்படுத்தும் வழக்கந்தான் நிலைக்கிறது. மனசாட்சியுடன் பெற்றோர்கள் இதை எண்ணிப் பார்த்தால் அவர்களுக்கே புரியும். தொடக்கப் பள்ளிகளில் சொல்லித் தர வேண்டியதை கல்லூரி வரையிலும்கூட கற்பிக்காததன் விளைவுதான் தெருவோரம் சிறுநீர் கழிக்கும் அநாகரிகம் என்பதைப் பெற்றோருக்குப் புரிய வைத்தால், தேசப்பிதா அண்ணல் காந்தியடிகள் ஏன் தானே கழிவறையைக் கழுவ முற்பட்டார் என்பதைப் புரிந்துகொள்வது எளிது. இந்தப் பணிகளுக்காகத் தனியாரை ஈடுபடுத்துவது குறித்து அதிகாரிகள் பரிந்துரை செய்தாலும், அவர்களும் இதே மெத்தனப் போக்கில் செயல்படுவதும், பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் முக்கிய நபர்களுக்கு வேண்டப்பட்ட அமைப்பாக அவை அமைந்துவிடுவதும் பணவிரயத்தை ஏற்படுத்துமேயல்லாமல், பயன் தராது. இதைப் பள்ளியில் உள்ள ஒவ்வொருவரின் பணியாக மாற்றுவதுதான் இதற்கான தீர்வாக இருக்க முடியும். இந்தச் செயலை மாணவர்கள் மட்டுமே செய்ய வேண்டும் என்பதுகூட அவசியமில்லை. எடுப்புக் கழிவறைகள் இன்றில்லை. அனைத்துமே நீர்ஊற்றுக் கழிவறைகளாக மாற்றப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் உள்ளாட்சியில் உள்ள துப்புரவுப் பணியாளர்களை அழைத்து வந்து அவர்கள் சுத்தம் செய்வதைக் கண்காணிக்கும் பொறுப்பை ஏற்றாலே போதுமானது. சுழற்சி அடிப்படையில் மாணவர்கள் இந்தக் கண்காணிக்கும் பணியை மேற்கொள்ளும்போது, கழிவறைத் தூய்மையின் இன்றியமையாமையை உணர்வார்கள். ஒவ்வொரு பள்ளியிலும் பசுமை மன்றம், நாட்டு நலப்பணித் திட்டம், சாரணர், தேசிய மாணவர் படை என பல்வேறு பிரிவுகள் இருக்கின்றன. இவர்களில் சூழல் அக்கறை கொண்ட மாணவர்களை இதற்கான கண்காணிப்பாளர்களாக நியமிக்கலாம். கழிவறைத் தூய்மைக்கு மிகவும் முக்கியமானது தண்ணீர். பெரும்பாலும் எல்லாப் பள்ளிகளில் இந்த வசதி இல்லை. தண்ணீர் வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதுதான் உள்ளாட்சிகளின் மிக முக்கியமான பொறுப்பு. இதைக் கண்காணித்து, அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டுசெல்வதும், அதன் மீது உடனடி நடவடிக்கையும் மிகமிக முக்கியம். இப்போதெல்லாம் 20, 30 குடியிருப்புகள் உள்ள வளாகத்துக்கு ஒரு மினி ஆர்.ஒ. பிளான்ட் (குடிநீர் சுத்திகரிப்பு கருவி) பொருத்தப்படுகிறது என்றால், இதைப் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் செய்வதில் என்ன தடை இருக்க முடியும்? பல ஆண்டுகளுக்கு முன்பே, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் தனக்கென சிறியதாக ஒரு குடிநீர் ஆலை அமைத்து, மாணவர்களுக்கு மிகக் குறைந்த விலையில் பாட்டில் குடிநீர் வழங்கியது. அரசு நினைத்தால், ஆயிரம் மாணவர்கள் படிக்கும் ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு சிறிய அளவில் குடிநீர் சுத்திகரிப்பு ஆலையை நிறுவி, மாணவர்களுக்குச் சுத்தமான குடிநீரை வழங்க முடியும். இதற்கெல்லாம் பெரிய நிதிஒதுக்கீடு தேவை இல்லை. நேரத்தை ஒதுக்கினால் போதும். கழிப்பறைத் தூய்மையும் கற்றலின் ஒரு பகுதி என்கிற மனம் இருந்தால் போதும். பள்ளிகளைச் சுத்தமாக்குங்கள். தேசத்தின் தெருக்கள் சுத்தமாகும். மாணவர்களைப் பண்படுத்துங்கள். பண்பாடு காப்பாற்றப்படும். இதையெல்லாம் அரசாங்கம் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு!
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக