தமிழக முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றவுடன், திருட்டு வழிப்பறிச் சம்பவங்களில் ஈடுபடுகிறவர்கள் ஆந்திர மாநிலத்துக்குத் தப்பிச்சென்றுவிட்டனர்; மக்கள் நிம்மதியாக வாழலாம் என்றார். வெளி மாநிலங்களுக்குத் தப்பிச் சென்றவர்களின் பட்டியலில் கந்துவட்டி தாதாக்களும் உள்ளனர். கந்து வட்டிக் கும்பல்களால் கொலைகள் மட்டுமன்றி தற்கொலைகளும் அதிகமாக நடைபெற்று வருகின்றன என சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாகக் குரல் எழுப்பியபோது, சட்டப்பேரவையில் கடந்த 2009-ம் ஆண்டு ஜூலை 21-ம் தேதி பேசிய அப்போதைய முதல்வர் கருணாநிதி கந்து வட்டி, கட்டப்பஞ்சாயத்தை ஒழிக்க அரசு தீவிர முயற்சி எடுக்கும் என்றார். இதன்பிறகுதான் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் கந்துவட்டி கும்பலால் சீரழிக்கப்பட்ட இளம்பெண்ணுக்குப் பாதுகாப்புக் கேட்டு போராடிய மார்க்சிஸ்ட் கட்சியின் கிளைச் செயலர் வேலுச்சாமி படுகொலை செய்யப்பட்டார். நடிகை சுலக்சனா கந்து வட்டிக்கும்பல் தன்னை மிரட்டுவதாக சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தார். நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் பணிபுரிந்த ஊழியர் செல்லப்பாண்டியன் கந்து வட்டிக் கும்பலின் கொடுமையால் தற்கொலை செய்து கொண்டார். அப்போதைய முதல்வர் கருணாநிதி சட்டப்பேரவையில் பேசியதற்குப் பின் நடைபெற்ற சம்பவங்கள் இவை. இதுபோன்று ஏராளமான குற்றச்சம்பவங்கள் கடந்த ஆட்சிக்காலத்தில் நடைபெற்றுள்ளது. பள்ளிபாளையம் பகுதியில் மட்டும் சுமார் 150-க்கும் மேற்பட்ட வட்டிக்கடைகள் உள்ளன. தினவட்டி, மணி நேர வட்டி, மீட்டர் வட்டி, தண்டல் போன்ற வரன்முறை இல்லா வட்டி, ரன் வட்டி என பல பெயர்களில் கந்துவட்டி வசூலிக்கப்படுகிறது. இதில் அக்ரஹாரம் பகுதியில் உள்ள கந்து வட்டிக்கடைகளில் ஆயிரம் ரூபாய்க்கு 200 ரூபாய் என அநியாய வட்டி வசூலிக்கப்படுகிறது. அன்றாடக்கூலிகளான நெசவாளர்களைக் குறிவைத்து இறங்கிய கந்து வட்டிக்கும்பலிடம் 2 ஆயிரம் ரூபாய் வட்டிக்கு வாங்கி அந்தப் பாக்கியை வாராவாரம் செலுத்தி வந்த பெண்ணின் மகள், பணம் கொடுக்கச் சென்றபோதுதான் அக்கும்பலின் தூண்டுதலால் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, அதைச் செல்போன் மூலம் படமெடுத்து இணையத்தில் வெளியிட்டனர். எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற குறுக்குப்புத்தி உள்ளவர்களின் தொழில் பெரும்பாலும், கந்துவட்டியாகத்தான் இருக்கிறது. பணம் கொழிக்கும் தொழிலாக விளங்கும் கந்து வட்டியால், தங்களுடைய வசதிகளைப் பெருக்கிக் கொள்ளும் நபர்கள், குற்ற நடவடிக்கைகளையும் பெருக்கிக் கொள்கிறார்கள். சிறுதொழில்களில் தொடங்கி ரியல் எஸ்டேட், சினிமா என முதலீட்டை வேறுபாதைக்கும் திருப்பிவிடுகின்றனர். ஆனாலும், அங்கும் இருப்பது கந்துவட்டிதான். தனியார் நிறுவனமோ, தனியாரோ வட்டிக்குப் பணம் கொடுத்து வாங்குவது பற்றி, வரைவுச்சட்டம் ஏற்கெனவே அமலில் உள்ளது. அதன்படி, சொத்துப் பத்திரங்களைக் கொடுத்துக் கடன் பெற்றால், ஆண்டுக்கு 9 சத வட்டி வசூலித்துக் கொள்ளலாம். சொத்துப்பத்திரங்கள் கொடுக்காமல், நம்பிக்கையின் அடிப்படையில் கடன் பெற்றால், ஆண்டுக்கு 12 சத வட்டி வசூலித்துக் கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி கூறுகிறது. வட்டிக்குப் பணம் கொடுப்பவர், இந்த நடைமுறைகளைப் பின்பற்றினால், மிகவும் குறைவான லாபம் கிடைக்கும். அதனால், அநியாய வட்டி வசூலிக்கின்றனர். காவல்துறையில் புகார் கொடுத்து விசாரிக்கும்போது, இந்த தில்லு முல்லு வெளியாகி வழக்குப்பதிவு வரை செல்கிறது எனவும் ரிசர்வ் வங்கியின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1957-ம் ஆண்டு தமிழ்நாடு கடன் கொடுப்போர் சட்டத்தில் எது எவ்வாறு இருப்பினும் எவரொருவர் பிரிவு 3-ன் கீழ் உத்தரவாதத்தை மீறுவாராயின் அல்லது கடன் தொகையை வசூல் செய்ய எவரேனும் கடனாளியைத் தொந்தரவு அல்லது தொந்தரவு செய்ய உடந்தையாக இருப்பாராயின், 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையுடன் ரூ.30 ஆயிரம்வரை அபராதமும் விதிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 2001-2006-ம் ஆண்டில் முதல்வராக ஜெயலலிதா இருந்த காலத்தில்தான் கந்துவட்டி தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டது.இதன்பிறகே கந்துவட்டிக் கொடுமை குறைந்தது. கிராமங்களில் ஒவ்வொரு நாளும் அதிகாலையில் கடன் வாங்கியவர்களை எழுப்பும் கந்து வட்டிக் கும்பலின் அட்டகாசத்துக்கு முடிவு கட்டப்பட்டது. கந்து வட்டிக் கொடுமையால் பாதிக்கப்பட்ட அன்றாடம் தொழில் செய்து பிழைப்பு நடத்திவந்த ஏழை மக்களுக்கு கூட்டுறவு வங்கிகளில் சிறு தொழில் கடன் வழங்கப்பட்டது. இதன்பிறகு ஆட்சிக்கு வந்த திமுக, அதிமுக அரசு கொண்டுவந்த கந்துவட்டித் தடைச் சட்டத்தையும், கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் வழங்கும் திட்டத்தையும் கிடப்பில்போட்டது. இதனால் அப்போது ஆளும் கட்சியின் ஆதரவுடனயே கந்து வட்டித் தொழில் உச்சத்தை அடைந்தது. இப்போது மீண்டும் ஜெயலலிதா முதல்வராகப் பொறுப்பேற்றவுடன், கந்துவட்டித் தொழிலில் ஈடுபட்டுள்ள பலரும், தங்கள் தொழிலுக்கு அடிப்படையாக உள்ள ஆந்திர மாநிலத்துக்குச் சென்றுவிட்டனர். கடந்த 1 மாத காலத்தில் கந்துவட்டி குறித்து குறிப்பிடும்படி எங்கும் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை.ஊடகங்களிலும் இதுகுறித்த எந்தச் செய்தியும் இல்லை. இதனால் திருட்டு பயம் நீங்கியுள்ளதோடு, கந்துவட்டிக் கொடுமைக்காரர்களிடம் சிக்கித்தவித்த ஏழை மக்களுக்கு இப்போது விடுதலை கிடைத்துள்ளது.
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக