"தவறான மின் கட்டண கணக்கெடுப்பு உள்ளிட்ட சேவைகள் தொடர்பான
குறைகளுக்கு, மின் நுகர்வோர், சம்பந்தப்பட்ட குறைதீர் மன்றத்தை மட்டுமே
அணுக வேண்டும்' என, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் செயலர்,
குணசேகரன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு, மின் நுகர்வோரிடம் இருந்து,
தவறான மின் கட்டண கணக்கெடுப்பு, புதிய மின் இணைப்பு வழங்குவதில் காலதாமதம்,
குறைபாடுடைய மின்சார மீட்டர், குறைபாடான மின் வழங்கல் போன்ற பல்வேறு
குறைபாடுகள் குறித்து, அதிக எண்ணிக்கையில் கடிதங்கள் வருகின்றன. ஆனால்,
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், இத்தகைய பொருட்கள் குறித்து,
நடவடிக்கை எடுக்க முடியாது.
எனவே, மின் நுகர்வோர், அத்தகைய முறையீடுகளை,
ஆணையத்திற்கு அனுப்ப வேண்டாம். அந்த மனுக்களை, வட்டார மின்சார அலுவலகத்தில்
உள்ள, மின் நுகர்வோர் குறைதீர் மன்றத்திற்கு அனுப்பும்படி, கேட்டுக்
கொள்ளப்படுகின்றனர்.
ஒவ்வொரு மின் வட்டத்திலும், மின் வட்டத்தின்
மேற்பார்வை பொறியாளரை தலைவராகக் கொண்ட, மின் நுகர்வோர் குறைதீர் மையம்
செயல்பட்டு வருகிறது. இதில், இரண்டு அலுவல் சாராத உறுப்பினர், மாவட்ட
கலெக்டரால் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும்
பகிர்மான கழகத்தின், சேவை தொடர்பான குறைகளுக்கு, மின் நுகர்வோர்,
சம்பந்தப்பட்ட மின் நுகர்வோருக்கான குறைதீர் மன்றத்தை அணுகலாம். அத்தகைய
மனுவை பெற்றதற்கான, ஒப்புகை அந்த மன்றத்தில் இருந்து, ஏழு பணி
நாட்களுக்குள் வழங்க வேண்டும். குறைதீர் மன்றம், இரண்டு மாதங்களுக்குள்
மனுக்கள் மீதான ஆணைகளை பிறப்பித்தல் வேண்டும்.
முறையீட்டாளர் மன்றத்தின்
தீர்ப்பில், திருப்தியடையவில்லை என்றால் அல்லது முறையீடு தாக்கல் செய்த,
இரண்டு நாளில் இருந்து, இரண்டு மாதங்களுக்குள் பதிலுரை எதையும் பெறவில்லை
என்றால், சென்னையில் உள்ள மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் அலுவலகத்தில்
அமைந்துள்ள, மின்குறை தீர்ப்பாளருக்கு மேல்முறையீடு செய்யலாம். இவ்வாறு,
அதில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக