அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

புதன், 14 ஆகஸ்ட், 2013

கேபிள் "டிவி'களை கட்டுப்படுத்த புதிய சட்டம்

கேபிள் ஆபரேட்டர் அலுவலகங்களில் ரெய்டு என்பது தான், அனைத்துப் பகுதிகளில் இருந்தும் வரும் தலைப்புச் செய்தி. கேபிள் "டிவி'கள் எப்படி இயங்குகின்றன? தவறு எங்கே நடக்கிறது?
முதலாவதாக, கேபிள் "டிவி' என்பதே முழுக்க முழுக்க மத்திய அரசு சமாச்சாரம். மாநில அரசின் பங்களிப்பு எதுவும் கிடையாது. எல்லாமே, "இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்' எனப்படும், "டிராய்'ன் வழிநடத்துதலில் வருபவை. சேவை வரி தான் விதிக்கப்படுகிறது என்பதால், அதுவும் டில்லிக்கு போய்விடுகிறது. அடிப்படையில், கேபிள் தொழிலை மூன்று பிரிவாக பிரிக்கலாம். முதலாவது, எம்.எஸ்.ஓ.,க்கள் (மல்ட்டி சிஸ்டம் ஆபரேட்டர்). அடுத்தது, ஆபரேட்டர்கள். மூன்றாவது, உள்ளூர் சேனல்கள். இந்த மூன்றுமே, ஒரு பெட்டிக்கடை துவக்குவதை விட மிகச் சுலபம். அருகாமையில் உள்ள தலைமை தபால் அலுவலகத்தில், "போஸ்ட் மாஸ்டரை' பார்த்து, அதற்கென உள்ள விண்ணப்பத்தை (பாரம் 1) பூர்த்தி செய்து, வெறும் 500 ரூபாய் கட்டினால் போதும்; நீங்கள் எம்.எஸ்.ஓ.,வாகவோ, ஆபரேட்டராகவோ, உள்ளூர் சேனல் அதிபராகவோ அவதாரம் எடுத்துவிடலாம்.
விண்ணப்பங்களை ஏற்பதற்கும், நிராகரிப்பதற்கும், தலைமை தபால் அலுவலவருக்கு முழு அதிகாரம் உண்டு. முறையான பதிவு இன்றி, இந்த மூன்று பிரிவினருமே இயங்க முடியாது. நிராகரித்ததற்கான காரணத்தை, தலைமை தபால் அலுவலர், எழுத்து மூலம் தெரிவித்துவிடுவார் (பாரம் 4). பதிவு செய்யப்பட்டால், அதற்குரிய சான்றிதழ் (பாரம் 3) வழங்கப்படும். இந்தப் பதிவு, அடுத்த 12 மாதங்களுக்கு மட்டுமே செல்லும். ஒவ்வொரு ஆண்டும் கேபிள் மும்மூர்த்திகள், இப்பதிவுகளை புதுப்பித்துக்கொள்ள வேண்டும்.
மத்திய அரசால் இயற்றப்பட்ட, "கேபிள் டிவி ஒழுங்குமுறைச் சட்டம் 1995' இந்த மூன்று பிரிவினரையும் கட்டுப்படுத்துகிறது. செயற்கைக்கோள் சேனல்களுக்கு உள்ள ஒளிபரப்பு விதிமுறை, விளம்பர கட்டுப்பாடுகள் (முறையான அனுமதி, ஆபாசம், வன்முறை, தேசவிரோதம் உள்ளிட்டவை) உள்ளூர் சேனல்களுக்கும் பொருந்தும். ஒவ்வொரு உள்ளூர் சேனல் நிறுவனமும், தங்கள் சேனலில் என்ன நிகழ்ச்சி, எத்தனை மணிக்கு, எவ்வளவு நேரம், யாரால் வழங்கப்பட்டது என்பது உள்ளிட்ட அத்தனை விவரங்களையும், ஒரு பதிவேட்டில் (பாரம் 5) குறித்து வைக்க வேண்டியது அவசியம். சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி ஒளிபரப்பாகி ஓராண்டு வரை, அந்த பதிவேடு பாதுகாக்கப்பட வேண்டும்.
கேபிள் ஆபரேட்டர்களைப் பொறுத்தவரை, எம்.எஸ்.ஓ.,க்கள் கொடுக்கும் அத்தனை சேனல்களையும் ஒளிபரப்பிக் கொள்ளலாம். குறைந்தபட்சம், ஏதேனும் இரண்டு தூர்தர்ஷன் சேனல்களையாவது ஒளிபரப்பியே ஆகவேண்டும். கேபிள் ஆபரேட்டர்களின் எந்த செயல்பாடும், இயக்கமும், அதிகாரப்பூர்வ தொலைத் தொடர்பு அமைப்புகளில் குறுக்கிடக் கூடாது. மேற்சொன்ன விதிமுறைகளில் ஏதேனும் குறைபாடுகள் காணப்பட்டால், ஒளிபரப்புக்குரிய பொருட்களையும், சாதனங்களையும் பறிமுதல் செய்ய முடியும். அதற்கான அதிகாரம், மத்திய அரசின், "ஏ' பிரிவு அதிகாரிகளுக்கு மட்டும் தான் இருக்கிறது. பறிமுதல் செய்யப்பட்ட சாதனங்களை, பத்து நாட்களுக்கும் மேலாக அதிகாரியே வைத்திருப்பதானால், சம்பந்தப்பட்ட மாவட்ட நீதிபதியிடம் அனுமதி வாங்க வேண்டும்.
பறிமுதல் செய்வதற்கு முன், அதற்கான காரணத்தை கேபிள் ஆபரேட்டருக்கு விளக்க வேண்டும். ஏன் பறிமுதல் செய்யக் கூடாது என்பதற்கான பதிலை அளிக்க அவருக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும். இருதரப்புக்கும் இடையில் தகராறு என்றால், நீதிமன்ற கதவுகளைத் தட்ட வேண்டியது தான்.
"கேபிள் டிவி ஒழுங்குமுறைச் சட்டம் 1995'ஐ மீறி எம்.எஸ்.ஓ.,வோ, ஆபரேட்டரோ, உள்ளூர் சேனலோ செயல்பட்டால், முதல் முறை குற்றத்துக்கு இரண்டாண்டு வரை சிறை தண்டனையோ, ஆயிரம் ரூபாய் அபராதமோ அல்லது இரண்டும் சேர்த்தோ வழங்கப்படலாம். தொடர்ந்து விதி மீறுவதையே தொழிலாகக் கொண்டால், ஐந்தாண்டுகள் வரை சிறைத் தண்டனையோ, 5,000 ரூபாய் அபராதமோ விதிக்கப்படலாம்.
இது தான் கேபிள் தொழிலைப் பற்றிய சட்டத்தின் பார்வை.

கேபிள் "டிவி'யின் கதை : அந்தக் காலத்தில், "டிவி' என்றாலே தூர்தர்ஷன் மட்டும் தான். வெள்ளிக்கிழமை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பப்படும், "ஒளியும் ஒலியும்' (சினிமா பாடல்கள் நிகழ்ச்சி) பார்ப்பதற்கு, பெரிய அடிதடியே நடக்கும். சனிக்கிழமைகளில், மாநில மொழிப் படங்களும், ஞாயிறு மாலைப் பொழுதுகளில் தமிழ்ப் படமும் ஒளிபரப்பினர். அது ஒரு வசந்த காலம். இருபது ஆண்டுகளுக்கு முன், செயற்கைக்கோள் சேனல்கள் அறிமுகமாகின. அவற்றிடமிருந்து, "டிஷ்' மூலம், சிக்னல்களைப் பெற்று, தத்தம் சத்துக்கு ஏற்றவாறு, கேபிள் இணைப்பு வழியாக, வீடுகளுக்கு வழங்கிக் கொண்டிருந்தனர். இந்த கேபிள் ஆபரேட்டர் பணியை, பெரும்பாலும் வேலையில்லா பட்டதாரிகள் தான் மேற்கொண்டனர். சேனல்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, ஒவ்வொரு சேனலுக்கும் ஒரு, "டிஷ்' வைக்க வேண்டியதாயிற்று. கட்டமைப்புப் பணிகளுக்கான செலவும் அதிகரித்தது. இதற்கிடையில், அதுவரை "ஓசி'யில் ஒளிபரப்பிக் கொண்டிருந்த அத்தனை சேனல்களும், தங்களை கட்டணச் சேனல்களாக அறிவித்தன. அவற்றிடமிருந்து பணம் கட்டி சிக்னல் வாங்குவது, சிறிய அளவில் இயங்கிக் கொண்டிருந்த கேபிள் ஆபரேட்டர்களுக்கு இயலாத காரியமாக இருந்தது. அப்போது பிறந்தது தான் எம்.எஸ்.ஓ., அமைப்பு. இவர்கள், இரண்டு மூன்று மாவட்டங்களுக்கு ஒன்று என்ற அடிப்படையில் இயங்கிக் கொண்டிருக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள், கேபிள் ஆபரேட்டர்களாக இருந்தவர்கள். எனவே, அந்தத் தொழிலையும் தொடர்ந்தனர். எம்.எஸ்.ஓ.,க்களின் வேலை, செயற்கைக்கோள் சேனல்களிடம் பணம் கட்டி, அவற்றை வாங்கி, கேபிள் ஆபரேட்டர்களுக்கு வினியோகிப்பது. சேனல்களுக்கு, எம்.எஸ்.ஓ.,க்கள் எவ்வளவு தர வேண்டும் என்ற கட்டணத்தை, "டிராய்' தான் நிர்ணயிக்கிறது. எம்.எஸ்.ஓ.,க்களிடமிருந்து, "சிக்னல்' பெறும் கேபிள் ஆபரேட்டர்கள், தங்கள் வசமுள்ள ஒவ்வொரு இணைப்புக்கும் 70 முதல் 80 ரூபாய் வரை கட்டணமாக, எம்.எஸ்.ஓ.,க்களுக்கு கொடுப்பர். எவருமே உண்மையான இணைப்பு எண்ணிக்கையைச் சொல்ல மாட்டர் என்பது சிறப்பம்சம்.

அவசரச் சட்டம் அவசியம் : உள்ளூர் சேனல்களை, பெரும்பாலும் கேபிள் ஆபரேட்டர்களும், எம்.எஸ்.ஓ.,க்களும் தான் இயக்கி வருகின்றனர். சில இடங்களில், எம்.எஸ்.ஓ.,க்களுக்கு பணம் கட்டி, வேலையில்லா பட்டதாரிகள், தொழில் சுகம் கண்டவர்கள், தனிப்பட்ட முறையில் நடத்துவதும் உண்டு. இவ்வாறு தமிழகம் முழுவதும் 250க்கும் மேற்பட்ட சேனல்கள் இருக்கும் என கருதப்படுகிறது.
இவர்கள், சினிமா, பாடல்கள், நகைச்சுவை காட்சி உள்ளிட்டவற்றை ஒளிபரப்புகின்றனர். சில முன்னேறிய உள்ளூர் சேனல்கள், நேயர் விருப்பம், தொலைபேசி உரையாடல் போன்ற நிகழ்ச்சிகளை, நேரலையாகவே ஒளிபரப்பவும் செய்கின்றனர். இவர்களில் யாருக்கும், சினிமா காட்சிகளை ஒளிபரப்புவதற்கான உரிமை கிடையாது. ஆனால், அத்தகைய உரிமைகளை வைத்துள்ள செயற்கைக்கோள் சேனல்களிடம் இருந்து, உள்குத்தகைக்கு வாங்கி, அவற்றை ஒளிபரப்புவர். இதற்கு, மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை அவர்கள், தனி கட்டணமாக செலுத்த வேண்டும். இப்படி ஒரு சேனல் நடத்துவதற்கு, தபால் அலுவலகச் சான்றிதழ் தவிர வேறு எந்த அனுமதியும் தேவையில்லை என்பது மிகப் பெரிய சோகம். உள்ளூர் சேனல்களில், செய்தி ஒளிபரப்புவதற்கு அனுமதி இல்லை என்பது அடுத்த விஷயம். அவர்கள் வாங்கும் விளம்பரங்களுக்கு முறையாக கணக்கு காட்டுவதில்லை என்பது தனி கதை. இத்தனையும் மீறி, உள்ளூர் சேனல்கள் இயங்கிக்கொண்டிருக்கின்றன. ஒரு செயற்கைக்கோள் சேனல் துவங்க வேண்டும் என்றால், அதைத் தொடங்க விரும்புவர்களின் ஜாதகத்தையே கேட்கிறது மத்திய அரசு. மத்திய அரசின் ஐந்து துறைகள், இதற்கான அனுமதி வழங்குவதில் தொடர்புடையதாக இருக்கின்றன. 

அவ்வளவு ஏன்? எப்.எம்., ரேடியோக்களில் செய்தி ஒலிபரப்புவதற்கு கூட, ஆயிரத்தெட்டு நடைமுறைகள் இருக்கின்றன. ஆனால், எந்தச் சம்பிரதாயமும் இல்லாமல், சாதாரணமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன உள்ளூர் சேனல்கள். இவர்கள் செய்தி ஒளிபரப்பும்போது, அதில், தங்கள் எண்ணத்தைத் திணிக்கும் வாய்ப்பும், ஒரு சாராருக்கு சாதகமாக செயல்படும் வாய்ப்பும் அதிகம். கலவர சமயங்களில், இரண்டு வார்த்தை தப்பாக ஒளிபரப்பிவிட்டால், பிரச்னை பற்றி எரிவதற்கு, அதுவே காரணமாகிவிட முடியும். ஆனால், இதை எல்லாம் கண்காணிக்க எந்த அமைப்புமே இல்லை என்பது தான் அதிர்ச்சிக்குரிய உண்மை. பத்திரிகைகளை வழிநடத்த, "பிரஸ் கவுன்சில்' இருக்கிறது. ஆனால், உள்ளூர் கேபிள் சேனல்களை வழிநடத்த, கவுன்சிலர்கள் கூட இல்லை.
இதைக் கட்டுப்படுத்த, மாநில அரசின் தலையீடு, அவசர அவசியமாக இருக்கிறது. மத்திய அரசின் சட்ட திட்டங்களுக்கு குந்தகம் விளைவிக்காத வகையில், மாநில அரசின் அதிகாரத்தை நிலைநாட்டும் வகையில், உள்ளூர் கேபிள் சேனல்களை நெறிப்படுத்த, ஒரு சட்டம் அவசியம்.


 கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக