அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

சனி, 13 செப்டம்பர், 2014

கடன் தள்ளுபடி

தன்னுடைய வாரிசுகளுக்கு தேவைக்கு அதிகமாகவே சொத்துகளை உயில் எழுதி வைத்த பிறகும் பிரச்னை தீராத மனிதனின் நிலை போல, ஆந்திர முதல்வர் என்.சந்திரபாபு நாயுடுவும், தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவும் இக்கட்டான சூழ்நிலையில் உள்ளனர்.
"உன் வாரிசுகளுக்கு எதுவும் கொடுக்க முடியவில்லையே என்ற கவலையில் ஆழ்ந்திருக்கிறாயா' என்று ஒரு மனிதனிடம் அவனது நண்பர் கேட்டார். அதற்கு அவன் பதில் கூறினான்: "அந்தக் கவலை எனக்கில்லை. நகரின் பிரதான பகுதியில் உள்ள கட்டடங்கள், வீட்டுமனைகள் என கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துகளை எனது நான்கு குழந்தைகளுக்கும் எழுதிவைத்துவிட்டேன்'.
அடுத்தவர் பிரச்னையில் அதீத ஆர்வம்காட்டும் அந்த நண்பர் மீண்டும் கேட்டார்: "அப்புறம் என்ன கவலை?' நண்பர் பதிலளித்தார்: "இப்போதோ நான் பிச்சைக்காரன் போல உள்ளேன். என்னிடம் ஒரு ரூபாய் கூட இல்லை' என்றாராம்.
இந்த நகைச்சுவை துணுக்கை அண்மையில் ஒருவர் என்னிடம் கூறினார்.
உத்தேசமாக ரூ.45 ஆயிரம் கோடி விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்வோம் என்று ஆந்திர முதல்வரும், ரூ.19 ஆயிரம் கோடி விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்வோம் என்று தெலங்கானா முதல்வரும் தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது என்பது நகைச்சுவையான விஷயம் அல்ல.
தங்களின் தேர்தல் நேர வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று இரு முதல்வர்களுக்கும் நெருக்கடி அதிகரித்தபோது, வழிகாட்டு நெறிமுறைகளை இருவரும் அறிவித்தார்கள். ஆனால், அதற்கான நிதி ஆதாரம் குறித்து அவர்கள் மூச்சு விடவே இல்லை. ஒரு ரூபாய்கூட இல்லாதவன் எப்படி கோடிக்கணக்கான சொத்துகளை கற்பனையிலேயே உயில் எழுதிவைத்தானோ, அதுபோலவே உள்ளது இவர்களது அறிவிப்புகளும்.
ஆந்திரத்தில் ஒவ்வொரு விவசாயக் குடும்பத்துக்கும் ரூ.1.5 லட்சம் வரையிலும், தெலங்கானாவில் ரூ.1 லட்சம் வரையிலும் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்துள்ளனர்.
தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு, அந்த நேரத்தில் தேர்தல் நடத்தை நெறிமுறைகளைப் பற்றி கவலைப்படாமல், கடன் தள்ளுபடி குறித்த வாக்குறுதிகளை இருவரும் அள்ளி வீசிவிட்டனர்.
தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள நடத்தை நெறிமுறைகள் தொடர்பான குறிப்பு பின்வருமாறு கூறுகிறது: போட்டியிடுபவர்கள் அனைவருக்கும் சம வாய்ப்பு, வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்பதற்காகவும், வாக்குறுதிகள் நம்பகத்தன்மை நிறைந்ததாக இருக்க வேண்டும் என்பதற்காகவும், வாக்குறுதிகள் செயல்படுத்தத்தக்கதாகவும், அதற்கான நிதி ஆதாரம் குறித்தும் பொதுவான வகையில் குறிப்பிடப்பட வேண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
எந்தெந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியுமோ, அத்தகைய வாக்குறுதிகளை மட்டுமே அளித்து வாக்காளர்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளிக்கும்போது, அதை உண்மையிலேயே செயல்படுத்த முடியும் என்ற நம்பிக்கையை மக்களிடம் ஏற்படுத்த அரசியல்வாதிகள் முயற்சிக்கின்றனர். ஆனால், தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பிறகு, அதற்கான நிதி ஆதாரத்தைத் திரட்டுவதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். அப்போது, மக்களின் கோபத்தை திசை திருப்புவதற்காக, தங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு வர்த்தக வங்கிகளும், ரிசர்வ் வங்கியும் வில்லன்களாக இருப்பதாகக் குற்றம்சாட்டுகின்றனர்.
கொடுத்த கடன்களைத் திருப்பி வசூலிப்பதில் நீக்குபோக்குடன் நடந்து கொள்ளுமாறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்த வேண்டும் என்று முதல்வர்கள் எதிர்பார்க்கிறார்கள். அதன் மூலம் அடுத்தடுத்த நிதிநிலை அறிக்கைகளில், நிதி ஒதுக்கீடு செய்ய முடியும் என்று நம்புகிறார்கள்.
இந்த விவகாரத்தில் ரிசர்வ் வங்கியையும், வர்த்தக வங்கிகளையும் குறை சொல்வது நியாயமற்றதாகும். பொது மக்களிடம் இருந்து வைப்புத் தொகைகளைப் பெறும் வர்த்தக வங்கிகள், பணம் தேவைப்படுவோருக்கு அதில் இருந்து கடன் அளிக்கின்றன. பெறப்படும் வைப்புத் தொகைக்கும், அளிக்கப்படும் கடன் தொகைக்கான வட்டிக்கும் உள்ள வித்தியாச தொகையே வங்கிகளின் நிர்வாகச் செலவு, லாபமாக உள்ளது.
வங்கிகளில் கடன் பெறுபவர்கள் கடனைத் திருப்பிச் செலுத்தாவிட்டால், வைப்புத் தொகை செலுத்துபவர்களின் தேவைகளை வங்கிகளால் பூர்த்தி செய்ய முடியாது. எனவே, கடன்களைத் தள்ளுபடி செய்வது என்பது வங்கிகளால் முடியாதது. அந்தக் கடன்களுக்கான உத்தரவாதத்தை அரசு ஏற்றால், வங்கிகள் எதிர்ப்பு தெரிவிக்கப் போவதில்லை.
வகுக்கப்பட்ட விதிமுறைகளுக்கு எதிராகக் கடன்களைத் தள்ளுபடி செய்யவோ, மறுசீரமைப்பு செய்யவோ வங்கிகளை ரிசர்வ் வங்கி கேட்டுக் கொள்ள முடியாது. விவசாய உற்பத்தி, வழக்கத்தை விட 50 சதவீதம் குறைவாக இருந்தால் மட்டுமே விவசாயக் கடன்களை மறு சீரமைப்பு செய்ய வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி ஆலோசனை வழங்க முடியும்.
கடன் மறுசீரமைப்பு விதிமுறைகளுக்கு உள்பட்டுள்ளதால், ஆந்திரத்தில் மொத்தம் உள்ள 653 மண்டலங்களில் 120-லும் (ஊராட்சி ஒன்றியம்), தெலங்கானாவில் 475 மண்டலங்களில் 100-லும் கடன் மறுசீரமைப்பு செய்ய ரிசர்வ் வங்கி ஒப்புக் கொண்டுள்ளது.
எனவே, அரசின் திட்டங்களுக்கு ரிசர்வ் வங்கி ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என்று குற்றம்சாட்ட முடியாது. கடன் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதி அளிக்கும்படி அரசியல்வாதிகளிடம் ரிசர்வ் வங்கி எப்போதும் கூறியதில்லை.
விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்யக் கூடாது என்பதற்காக இவற்றைக் கூறவில்லை. இந்தத் திட்டங்கள் முறையாக சிந்தித்து அறிவிக்கப்படவில்லை என்பதற்காகவும், விவசாயிகளுக்கு குறைந்த அளவே நன்மை தரக் கூடியது என்பதற்காகவுமே இவை சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.
முதலாவதாக, இப்போதைய கடன் தள்ளுபடியுடன் சேர்த்து, இனி எப்போதுமே விவசாயிகள் கடன் தள்ளுபடி தேவை என்று கோரிக்கை விடுக்காத வண்ணம் விவசாயத்தை மேம்படுத்த, இந்த இரண்டு மாநிலங்களிலுமே தெளிவான திட்டம் வகுக்கப்படவில்லை.
இரண்டாவதாக, இந்தக் கடன் தள்ளுபடித் திட்டம் அங்கீகரிக்கப்பட்ட (வங்கிகள் போல) நிதி நிறுவனங்களிடம் கடன் பெறும் விவசாயிகளுக்கு மட்டுமே பொருந்தும். 73 சதவீத விவசாயிகள் தனியாரிடமிருந்தே கடன் பெறுவதால், அவர்களுக்கு இந்தத் திட்டத்தால் எந்தப் பயனும் இல்லை.
மூன்றாவதாக, ஒரு மாநிலத்தில் ரூ.1 லட்சம் கடன் தள்ளுபடி என்றும், மற்றொரு மாநிலத்தில் ரூ.1.5 லட்சம் கடன் தள்ளுபடி என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், இது எந்த அறிவியல்பூர்வ அடிப்படையிலும் நிர்ணயிக்கப்படவில்லை.
இறுதியாக, இந்தத் திட்டத்துக்கு நிதி ஆதாரத்தைக் கண்டுபிடித்தால் கூட, இதை அமல்படுத்துவதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன. ஒரு விவசாயி ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிகளில் கடன் பெற்றிருந்தால், கடன் தள்ளுபடி என்பது சிக்கலாகிவிடும்.
இந்த இரு மாநிலங்களிலும், கடன் தள்ளுபடி என்ற அறிவிப்பு விவசாயிகளுக்கு நன்மை செய்வதைவிட தீங்காகவே ஆகியுள்ளது. கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற நம்பிக்கையில், கடன் பெற்ற விவசாயிகள் கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை.
கரீப் பருவம் கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில், விவசாயிகள் கடனைத் திருப்பிச் செலுத்தாததால் வங்கிகள் புதுக் கடன்களை வழங்க மறுத்துவிட்டன. இதனால், கரீப் பருவ சாகுபடிக்கு தனியார் நிறுவனங்களிடம் கடன் பெறும் நிலை அல்லது கரீப் பருவ சாகுபடியைக் கைவிட வேண்டிய நிலை விவசாயிகளுக்கு ஏற்பட்டது.
இந்த இரு மாநிலங்களிலும் கிடைத்த அனுபவம் இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு ஒரு படிப்பினையாக அமைய வேண்டும்.
தேர்தலை மட்டுமே மனத்தில் கொள்ளாமல், நலிவுற்ற விவசாயிகளுக்கு சரியான விதத்தில் உதவ வேண்டும் என்ற உண்மையான நோக்கத்தில் இப்போதைய நிலையை அலசி ஆராய்ந்து ஒருங்கிணைந்த முழுமையான ஒரு திட்டத்தை மத்திய அரசு வகுக்க வேண்டும்.

pls visit our webs http://cchepnlg.blogspot.in/ http://cchepeye.blogspot.in/ http://consumernlg.blogspot.in/
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக