மேற்கு வங்க மாநிலம் சிங்கூரில் அரசு கையகப்படுத்திய நிலத்தை டாடா நிறுவனம் உபயோகித்து புதிய வகை "நானோ' எனும் சிறிய மோட்டார் வாகனத்தைத் தயாரிக்க முயற்சித்தபோது, மிகப் பெரிய அளவில் நில உரிமையாளர்களின் எதிர்ப்பு உருவாகி, அந்தத் தொழிற்சாலையே குஜராத் மாநிலத்திற்கு இடம் பெயர்ந்துவிட்டது.
அந்தப் பிரச்னையை அடிப்படையாகக் கொண்டு அரசியல் செய்த மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
புதிய அரசு பெரிய தொழிற்சாலைகளை ஆதரிக்காது என்ற எண்ணம் பரவலாகி, அந்த மாநிலத்தில் எந்தவிதமான புதிய தொழிற்சாலையும் தொடங்கப்படாததோடு, ஏற்கெனவே அங்கே இயங்கும் தொழிற்சாலைகள் மற்ற மாநிலங்களுக்கு இடம் பெயரும் நிலைமை உருவாகியது.
இது அந்த மாநிலத்தின் பொருளாதாரத்தை மிகப் பெரிய அளவில் பாதித்தது. இதை சரி செய்யும் முதல் முயற்சியாக, மாநில முதல்வர் மம்தா பானர்ஜி சிங்கப்பூர் நாட்டிற்கு சென்று, அந்நாட்டின் பிரதமர் மற்றும் உயரதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, மேற்கு வங்கத்தில் தொழில் தொடங்க வரும் நிறுவனங்களுக்கு நிலம் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளார்.
"கோல்டோர் எனும் ஊரில் 1,000 ஏக்கர் நிலம் புதிய தொழிற்சாலைகளை அமைக்க தயாராக மாநில அரசின் வசம் உள்ளது' என அறிவித்துள்ளார். கோல்டோர் எனும் கிராமம், மேற்கு மிதினாப்பூர் மாவட்டத்தில் உள்ளது. கொல்கத்தா நகரிலிருந்து 185 கி.மீ. தூரம். இந்த நிலம் 950.17 ஏக்கர் பரப்பளவு உள்ளது.
1965-ஆம் ஆண்டு இந்த நிலத்தில் 310 ஏக்கர் பரப்பளவில் சணல் பயிரிட்டு, அம் மாநிலத்தின் மிக முக்கியமான விவசாயப் பயிரான சணலின் உற்பத்தியையும், திறனையும் எப்படி பெருக்கிக் கொள்ளலாம் என்பதை ஆய்வு செய்வதற்காக ஒரு ஆராய்ச்சி மையம் நிறுவப்பட்டது.
ஆனால், எந்த வேலையும் நடைபெறாமல் செயலற்ற நிலையில் அந்த மையம் இருந்து வந்தது. எனவே, அந்த நிலப்பரப்பை மேற்கு வங்க தொழில் வளர்ச்சி கழகத்துக்கு மாற்றி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலத்தை உடனடியாக புதிய தொழிற்சாலைகள் தொடங்கும் அன்னிய நிறுவனங்களுக்கு வழங்க முடியுமா என்பதை அறிய ஒரு ஆங்கில பத்திரிகையைச் சேர்ந்த சில நிருபர்கள் விசாரணையில் இறங்கி தகவல்களை சேகரித்தனர்.
அதன்படி, இந்த மாநில முதல்வர் குறிப்பிட்ட 1,000 ஏக்கர் நிலத்தின் ஒரு பகுதியில் 600 குடிசைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குடிசைகளை அமைத்துள்ள ஆக்ரமிப்பாளர்கள் பிழைப்பு தேடி கிராமப்புறங்களிலிருந்து குடி பெயர்ந்து கோல்டோர் நகருக்கு வந்தவர்கள்.
இந்த ஆக்ரமிப்பாளர்கள் கூறுகின்றனர்: "முதல்வர் மம்தா பானர்ஜி, நிலங்களை கைப்பற்றி கார் தொழிற்சாலையை சிங்கூரில் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தவர். அப்படிப்பட்டவர் எங்களை நிலத்திலிருந்து வெளியேற்றித் தொழிற்சாலைகளை அமைக்க உத்தரவிடுவார் என நாங்கள் நம்பவில்லை'.
மேலும், சணல் ஆராய்ச்சியில் ஈடுபட்ட விவசாய ஆராய்ச்சி மையம், 15 பெரிய கட்டடங்களை இந்த நிலத்தில் கட்டி, நூற்றுக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களுடன் இயங்கி வருகிறது. இந்தக் கட்டடங்களை இடித்துத் தரைமட்டமாக்குவதும், இங்கே பணி செய்யும் அரசு ஊழியர்களை வேறு இடங்களுக்கு மாற்றி உத்தரவிடுவதும் உடனடியாக நடக்கும் காரியமல்ல எனவும் கூறப்படுகிறது.
இந்த நிலப் பகுதிக்கு மின்சாரம் வழங்கும் சந்திரக் கோனா சாலை துணை மின் நிலையம் 29 கி.மீ. தூரத்தில் உள்ளது. சம்மபந்தப்பட்ட 1,000 ஏக்கர் நிலத்தில் கனரக தொழிற்சாலைகளைத் தொடங்க 132 கே.வி. திறனுடனான மின்சாரம் வழங்கப்பட வேண்டும்.
இதற்காக ஒரு துணை மின்நிலையம் இந்த நிலத்தின் அருகில் உடனடியாக நிறுவப்பட வேண்டும். உயரழுத்த மின்சாரக் கம்பிகளுடன் 29 கி.மீ. தூரத்திலிருந்து மின்சாரத்தை இந்த நிலப் பகுதிக்கு கொண்டு வரவும், அங்கேயே ஒரு துணை மின் நிலையத்தை உருவாக்கவும் குறைந்தது 6 மாத காலம் பிடிக்கும் எனக் கூறப்படுகிறது.
ஆக, இதுபோன்ற நடைமுறைச் சிக்கல்களுள்ள ஒரு நிலத்தை ஏற்றுக் கொண்டு, கனரகத் தொழிற்சாலைகளை எங்கள் மாநிலத்தில் நிறுவுங்கள் என சிங்கப்பூர் அரசையும் அங்குள்ள பெரிய தொழில் நிறுவனங்களையும் மேற்கு வங்க முதல்வர் கேட்டுக் கொள்வது நம்மில் பலருக்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை உருவாக்குகிறது.
மம்தா பானர்ஜி தூய்மையான, ஊழலற்ற நடைமுறைகளை கடைப்பிடிக்கும் ஓர் அரசியல் தலைவர். நேர்மைக்கும் எளிமைக்கும் பெயர் போன தரமான இடதுசாரித் தலைவர்களை எதிர்த்து அரசியல் செய்து, அதில் வெற்றி பெற்று அரசமைத்தவர்.
ஆனால், ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின், நிர்வாகத்தை சரியான முறையில் புரிந்து கொண்டு தனது வளர்ச்சித் திட்டங்களை வகுத்துள்ளாரா எனும் சந்தேகம் எழுந்துள்ளது. சுமார் 40 ஆண்டுகளாக அடித்தட்டு மக்களின் ஆட்சியாக நடந்த மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சியில், அரசு ஊழியர்களையும், நில ஆக்கிரமிப்புகள் செய்துள்ள கீழ்த்தட்டு மக்களையும் சட்ட விதிமுறைகளின்படி கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கவில்லை.
உதாரணமாக, இந்த நிலத்தில் உள்ள 600 குடிசைகளுக்கும், ஆக்கிரமிப்பாளர்களுக்கு நம் மாநிலத்தில் கிராம அதிகாரிகளால் வழங்கப்படும் பி-மெமோ எனப்படும் தாக்கீது கூட வழங்கப்பட்டிருக்கவில்லை.
எனவே, சட்ட விதிமுறைகளின்படி அங்கே நில ஆக்கிரமிப்புகளை அகற்றும் பழக்கமும் கிடையாது. இந்த நிலைமை அந்த மாநிலத்தின் எல்லா மாவட்டங்களிலும், தாலுகாக்களிலும், கிராமங்களிலும் நிலவுகிறது எனலாம்.
எனவே, முதல்வர் மம்தா பானர்ஜி தொழில் தொடங்க சிங்கப்பூர் நாட்டவரை அழைக்கும் முன்னரே, சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளின் கூட்டத்தை கொல்கத்தா மாநில தலைமை செயலகத்தில் கூட்டி, நிலத்தின் தன்மை, சம்பந்தப்பட்ட ஆவணங்கள் ஆகியவற்றை ஆராய்ந்து தேவையான நடவடிக்கைகளைத் தொடங்கியிருக்க வேண்டும்.
ஆனால், அவர் நடவடிக்கையைத் தொடங்கியிருந்தாலும் பலன் இருந்திருக்காது. ஏனெனில் அந்த மாநில உயரதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதை நிறுத்தி பல காலம் ஆகிவிட்டது எனக் கூறுகிறார்கள் அங்குள்ள அதிகாரிகள்.
மேலும், குறிப்பிட்ட அந்த 1,000 ஏக்கர் நிலப் பகுதிக்கு செல்ல 29 கி.மீ. தேசிய நெடுஞ்சாலை என்.எச். 60-லிருந்து பிரிந்து கிராமப்புற சாலையில் பயணம் செய்ய வேண்டும். அந்த சாலை மிகவும் மோசமான மேடு பள்ளங்களுடன் இருப்பதால் தொழிற்சாலைகளுக்குத் தேவையான பல இடுபொருள்களையும், கருவிகளையும் ஏற்றிச் செல்லும் பெரிய லாரிகள் பயணிக்க முடியாது.
29 கி.மீ. நீள சாலையின் கடைசி 11 கி.மீ. தூரம் நான்கு மீட்டர் அகல ஒருவழிச்சாலை. தொழிற்சாலைகளை இணைக்கும் சாலைகள் குறைந்தபட்சம் 14 மீட்டர் அகலத்துடன் நான்குவழிச் சாலைகளாக இருக்க வேண்டியது அவசியம்.
இதுபோன்ற சாலைகளை அந்தப் பகுதியில் அமைக்க, குறைந்தது ஒன்பது மாதங்கள் ஆகும் எனக் கூறுகிறார்கள் அந்த பகுதியின் பொதுப்பணித் துறை அதிகாரிகள்.
மேற்கு வங்க அரசே நினைத்தாலும் அந்த மாநிலத்தில் சில பிரச்னைகளை சமாளிப்பது மிகவும் கடினம். உதாரணமாக, இந்த சாலை செல்லும் பல இடங்களில் மிக நெருக்கமான குடிசைகள், கான்க்ரீட் வீடுகள் உள்ளனவாம்.
அந்த வீட்டு உரிமையாளர்களிடமிருந்து வீடுகளை வாங்கி, பின் அவற்றை அப்புறப்படுத்தி சாலைகளை அமைப்பது முடியாத ஒரு காரியம் எனக் கூறுகிறார்கள்.
அடுத்து இந்த 1,000 ஏக்கர் நிலத்தில் பல பெரிய தொழிற்சாலைகளை நிறுவ அடிப்படை தேவைகளில் ஒன்று தாராளமான நீர் வரத்து. அந்த நிலத்திலிருந்து 18 கி.மீ. தூரத்தில் சிலபதி எனும் நதியிலிருந்துதான் தண்ணீர் கொண்டு வரப்பட வேண்டும். சிலபதி நதி எல்லா பருவங்களிலும் நீர்வரத்துள்ள ஒரு நதியல்ல.
தொடர்ந்து தாராளமாக நீர்வளம் தேவைப்படும் கனரக தொழில்களைத் தொடங்க, அந்த நிலப் பகுதியிலிருந்து 55 கி.மீ. தூரத்தில் உள்ள குப்னராயன் எனும் வற்றாத நதியிலிருந்து நீர் கொண்டு வரப்பட வேண்டும்.
ஆக மொத்தத்தில் இவை எதுவுமே சாத்தியமில்லை என்பதுதான் உண்மை. அதுமட்டுமல்ல, இந்த விவரங்கள் முழுமையும் சிங்கப்பூரின் பிரதமர், அந்நாட்டின் உயர் அதிகாரிகள் மற்றும் பெரிய தொழிலதிபர்களுக்குத் தெரிய வரும்போது, நம் நாட்டு அரசியல் தலைவர்களைப் பற்றியும் ஆட்சிமுறை பற்றியும் என்ன நினைப்பார்கள் என்ற கேள்வி எழுகிறது.
ஜனநாயக நிர்வாகத்தின் அடிப்படை அம்சமான அதிகாரிகளிடமிருந்து பெறப்பட வேண்டிய "தெளிவுரை'யை மேற்கு வங்க முதல்வர் பெறவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது.
நேர்மையான அரசியல்வாதியாக இருந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வராவது வேறு; திறமையான முதல்வராக உருவாகி மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களை வகுத்துத் திறம்பட நிர்வகிப்பது வேறு. இதனை நிரூபித்திருக்கிறார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி!
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக