அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

திங்கள், 22 மார்ச், 2010

போலி மருந்து விற்றால் ஆயுள் தண்டனை ; முதல்வர் தலைமையில் நடந்த அவசர கூட்டத்தில் முடிவு


மார்ச் 22,2010,00:00 IST





மேலும் படங்கள் >>

சென்னை: தமிழகத்தில் போலி மற்றும் காலவதியான மாத்திரைகளை விற்றதாக 7 பேர் கைது செய்யப்பட்டதை அடுத்து முதல்வர் கருணாநிதி சுகாதார ஆய்வு மற்று உயர் போலீஸ் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் சட்ட நடைமுறைகள் கடுமையாக்க முடிவு செய்யப்பட்டதாக சுகாதார செயலர் நிருபர்களிடம் தெரிவித்தார். அவசர ஆலோசனை கூட்டம் முடிந்த பின்னர் நிருபர்களிடம் பேசிய தமிழக சுகாதார செயலர் சுப்புராஜ் கூறியதாவது:



போலி மற்றும் காலவதியான மருந்துகள் விற்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். இவர்களை தமிழகத்தில் வேரோடு களைய வேண்டும் என்றும் , இந்த குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு உயர்ந்த பட்டசம் ஆயுள் தண்டனை வழங்கிட குற்ற நடைமுறை சட்டத்தில் மாற்றம் கொண்டு வர முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். இதன்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.







மனித உயிர்களை காக்கும் மருந்துகள் காலாவதியானால், அவற்றை அழித்துவிட வேண்டும். அவற்றை மீண்டும் விற்பனை செய்யும் போது, உயிர் காக்கும் மருந்துகளே மனித உயிர்களை பலிவாங்கி விடும்.அழிக்கப்பட வேண்டிய மருந்துகளை மீண்டும் புழக்கத்தில் விட்டு, பொதுமக்கள் உயிருடன் விளையாடி வந்த கும்பல், தற்போது சென்னை போலீசாரிடம் சிக்கியுள்ளது.பொதுவாக மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், தங்கள் தயாரிப்பு மருந்துகளை டீலர்களுக்கு அனுப்பி அவர்கள் மூலம் மருந்துக் கடைகள், மருத்துவமனைகளுக்கு விற்பனை செய்கின்றன. இவ்வாறு அனுப்பப்படும் மருந்துகளில் தயாரிப்பு மற்றும் காலாவதியாகும் காலம் குறித்த தகவல்கள் இடம் பெற்றிருக்கும். குறிப்பிட்ட காலாவதியாகும் காலம் முடிந்த பின், அந்த மருந்துகளை விற்பனைக்கு வைக்கக் கூடாது என்பதே விதி.இவ்வாறு காலாவதியாகும் மருந்துகளை, மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தனியாக பிரதிநிதி ஒருவரை நியமித்து அவற்றை அழிப்பதற்கான பணியில் ஈடுபடுகின்றன.







சென்னையை பொறுத்தவரையில் கொடுங்கையூர், எழில் நகரில் தான் காலாவதியான மருந்து பொருட்கள் அழிக்கப்படுகின்றன. இவ்வாறு அழிக்க வேண்டிய மருந்துகள், மீண்டும் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுவதாக சென்னையில் உள்ள மருந்து ஆய்வு அதிகாரி இளங்கோவிற்கு தகவல் கிடைத்தது.7 பேர் கைது: உடன் அவர், சென்னை நகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் புகார் அளித்தார். கமிஷனர் உத்தரவின்படி, வடசென்னை இணை கமிஷனர் சேசஷாயி, புளியந்தோப்பு துணை கமிஷனர் பாஸ்கரன் மேற்பார்வையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு சோதனை நடத்தினர். அதில், கோயம்பேட்டில் உள்ள 'மீனா ஹெல்த் கேர்' எனும் மருந்து ஏஜன்சியில் இருந்து பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள காலாவதியான மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.இதில், கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அளிக்கப்படும் மருந்துகள் அதிகளவில் இருந்ததாக கூறப்படுகிறது.







இது தொடர் பாக, முத்தமிழ்நகர் ஆறாவது தெருவைச் சேர்ந்த ஜெகதாம்பாள் (50), அவரது மருமகள் சுமிதாராணி (29), சூளைமேடு ராகவன் தெருவைச் சேர்ந்த தம்பிராஜன் (50), கோயம்பேடு, பிருந்தாவன் தெருவைச் சேர்ந்த கோபிநாதன் (29), கொளத்தூரைச் சேர்ந்த விஜயகுமார் (34), புளியந் தோப்பைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் (35) மற்றும் பாடி, சீனிவாச நகரைச் சேர்ந்த கிருபாகரன்(30) ஆகிய ஏழு பேரையும் போலீசார் கைது செய்தனர்.மேலும், கோயம்பேடு, மீனா ஹெல்த்கேர் நிறுவனத்தின் உரிமையாளர் மீனாட்சி சுந்தரம்(45), கைது செய்யப் பட்ட ஜெகதாம்பாளின் மகனும், சுமிதாராணியின் கணவனுமான ரவி (எ) பிரபாகரன், வெங்கடேசன், எழும்பூர், அர்ஜுனா கார்டன் தெருவைச் சேர்ந்த சஞ்சய் குமார், சூளைமேட்டை சேர்ந்த பாஸ்கரன்(35), பிரதீப் ஜோர்டியா (32), சேகர் (35) ஆகிய ஏழு பேரை தேடி வருகின்றனர்.







கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் அழிக்கக் கூறி தரும் காலாவதியாகும் மருந்துகளை வெங்கடேசன் என்பவர், ஜெகதாம்பாளின் மகன் ரவியிடம் கொண்டு சென்று கொடுத்துள்ளார். இவற்றை பெற்ற ரவி, எழும்பூரில் உள்ள சஞ்சய் குமாரிடம் கொடுத்துள்ளார். அவர், மருந்து ஸ்டிரிப்களில் உள்ள தயாரிப்பு, காலாவதி குறிப்புகள், விலை மற்றும் பேட்ஜ் எண்களை ரசாயனக் கலவை கொண்டு அழித்துவிட்டு, புதிய தயாரிப்பு, புதிய தேதி பதிவு செய்து, சூளைமேட்டை சேர்ந்த மார்க்கெட்டிங் ஏஜன்ட்டான பிரதீப் ஜோர்டியாவிடம் அளித்துள்ளார்.மருந்துகளை பெற்ற பிரதீப் ஜோர்டியா, அவற்றை கோயம்பேட்டில் உள்ள மொத்த விற்பனையாளருக்கு அனுப்பி, அதன் பின், மருந்துக் கடைகளுக்கு வினியோகம் செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்துகள், பல ஆண்டுகளாக விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.







போலீசார் தரப்பில், தலைமறைவாக உள்ளவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அப்படி பிடிபடும் போது இவர்கள் எங்கெல்லாம் இம்மாதிரி செயல்பட்டு காலாவதியான மருந்துகளை விற்று பலரது வாழ்வில் சதி புரிந்திருக்கின்றனர் என்று தெரியும்.







சுகாதாரத் துறை செயலர் சுப்புராஜ் உத்தரவில், ''தமிழகம் முழுவதும் 42 ஆயிரம் மருந்துக் கடைகள் உள்ளன. இவற்றின் மூலம் மருந்துகள் விற்பனை செய்யப் படும் நிலையில், இது போன்ற மோசடி சம்பவங்கள் சவாலாக அமைந்து விடுகின்றன. விலை உயர்ந்த மருந்துகள் மட்டும் இப்படி விற்பனை செய்யப்படுகின்றன. தமிழகம் முழுவதும் போலி மருந்துகளை கண்டுபிடிக்க மருந்து கட்டுப்பாட்டு புலனாய்வு பிரிவினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது,'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது







காலாவதி மருந்துகள் கண்டறியப்பட்டது எப்படி? மருந்து நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளில் போலி வராமல் தடுக்க பல யுக்திகளை கையாளுகின்றன. அதே போன்று, ஆண்டு தோறும் தயாரிக்கப்படும் மருந்துகளில் குறிப்பாக மாத்திரைகளை பொறுத்தவரையில் ஒவ் வொரு ஆண்டும் மாத்திரைகள், அட்டைகளில் வைக்கப்படும் எண்ணிக்கையில் மாறுபடுகின்றன.உதாரணமாக 2008ம் ஆண்டு தயாரிக்கப் பட்ட மாத்திரை அட்டைகளில் எட்டு மாத்திரை இருந்தால், அடுத்தாண்டில் 10 மாத்திரைகள் கொண்டதாகவும், அதற்கடுத்தாண்டில் 12 மாத்திரை அல்லது 15 மாத் திரைகள் கொண்டதாகவும் இந்த அட்டைகள் இருக்கும் என கூறப்படுகிறது.பறிமுதல் செய்யப்பட்ட காலாவதியான மாத்திரை அட்டைகளில் தயாரிக்கப்பட்ட ஆண்டிற்கும், மாத்திரை அளவிற்கும் சம்பந்தமில்லாமல் இருந்ததால் தான் இந்த மோசடி கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது.







காலாவதி மருந்து சாப்பிட்டால் என்னவாகும்?காலாவதியான மருந்துகள் சாப்பிட்டால் மனித உயிர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து டாக்டர் ஒருவர் தெரிவித்த தகவல்:சர்க்கரை வியாதி, உயர் ரத்த அழுத்த பாதிப்புகள் உள்ள நோயாளிகள் காலாவதியான மருந்துகளை சாப்பிட்டால் சர்க்கரை அளவோ, ரத்த அழுத்தத்தின் அளவோ கட்டுக்குள் வராது. மாறாக வேறு பல பிரச்னைகளை உண்டாக்கிவிடும். கர்ப்பிணி பெண்களுக்கு தைராய்டு இருக்கும் பட்சத்தில், அவர்களுக்கு கொடுக்கப்படும் மருந்து காலாவதியானதாக இருந்தால், குழந்தை மூளைக் கோளாறுடன் பிறக்க வாய்ப்புள்ளது. பொதுவாக மருந்துகள் சூரிய வெப்பம் பட்டால் விஷமாகக் கூட மாறிவிட வாய்ப்புள்ளது. எனவே, காலாவதியான மருந்துகள் சாப்பிட்டால் மருந்தின் தன்மையை பொறுத்து பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக