விளம்பர மோகத்தால் கவரப்பட்டு, போலியான பொருட்களை வாங்கும் நிலை மாற வேண்டும்
பந்தலூர் : ""விளம்பர மோகத்தால் கவரப்பட்டு, போலியான பொருட்களை வாங்கும் நிலை மாற வேண்டும்; சமுதாயத்தில் உள்ள அனைவரும் நுகர்வோர் சட்டம் குறித்து முழுமையாக தெரிந்துக் கொள்ள வேண்டும்,'' நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
உலக நுகர்வோர் தினத்தை முன்னிட்டு, கூடலூர் நுகர்வோர் மனித உரிமை சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் சார்பில், பள்ளி மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்குதல், நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கு, பந்தலூர் புனித சேவியர் பெண்கள் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் நடத்தப்பட்டன. மாணவர் நுகர்வோர் மன்ற நிர்வாகி சிந்துஜா வரவேற்றார்.மைய தலைவர் சிவசுப்ரமணியம் பேசுகையில், ""விளம்பர மோகத்தால் கவரப்பட்டு, போலியான பொருட்களை வாங்கும் நிலை மாற வேண்டும்; இதற்கு, சமுதாயத்தில் உள்ள அனைவரும் நுகர்வோர் சட்டம் குறித்து முழுமையாக தெரிந்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,'' என்றார்.
மையம் சார்பில் வெளியிடப்பட்ட நுகர்வோர் கையேடை வெளியிட்டு டாக்டர் கதிரவன் பேசுகையில், ""நுகர்வோர் குறித்த விளக்கத்தை, மாணவப் பருவத்திலேயே தெரிந்துக் கொள்வதால், எதிர்கால சமுதாயத்துக்கு நன்மை உண்டாகும். சுகாதாரமற்ற திண்பண்டங்களை உண்பதால் பலவித நோய் ஏற்படுகிறது.
பள்ளிகளில் துவக்கப்பட்டுள்ள மாணவர் நுகர்வோர் மன்றம், இதுகுறித்து சக மாணவர்களிடம் விளக்கி, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.உணவுக் கலப்பட தடை சட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ள போதும், சம்பந்தப்பட்ட துறையினர் முழுமையாக அமல்படுத்தாததால், முறைகேடான விற்பனையில் ஈடுபடும் வியாபாரிகள் லாபம் அடைகின்றனர். நல்லதையும், தீயதையும் கண்டறிந்து பொதுமக்களிடையே தெரிவிக்க, மாணவர்கள் முன்வர வேண்டும்,'' என்றார்.
டாக்டர் சதீஷ் பேசுகையில், ""நாம் அன்றாடம் உணவில் பயன்படுத்தும் உப்பு முதல் அனைத்து பொருட்களையும், தரம் மற்றும் தயாரிப்பு, காலாவதி தேதி, விற்பனை விலை பார்த்து வாங்க வேண்டும். குறைந்தபட்ச விலைக்கு விற்பனை செய்ய வேண்டிய பொருட்களை, பல கிராமங்களில் உள்ள கடைகளில் அதிக விலைக்கு விற்பனை செய்வதுடன், காலாவதி தேதி முடிந்த பின்னும் விற்பனை செய்யப்படுகிறது; இதுகுறித்து, மாணவர் நுகர்வோர் மன்றங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்,'' என்றார்.
நுகர்வோர் கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலர் வீரபாண்டியன், பந்தலூர் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் சித்தானந்தன், பந்தலூர் நுகர்வோர்பாதுகாப்பு மைய நிர்வாகி சில்வஸ்டார் பேசினர்.
6,7,8ம் வகுப்புக்கான போட்டியில், புனித சேவியர் பெண்கள் உயர்நிலைப் பள்ளியை சேர்ந்த தெய்வக்கனி, ஸ்ரீஜா, இளையகன்னி, தமிழரசி முதல் மூன்று இடம் பெற்றனர். 9ம் வகுப்பில் புஷ்பலதா, நீமா, பிரதீபா, ஜெயஸ்ரீ முதல் மூன்று இடங்களை பெற்றனர்; இவர்களுக்கு பரிசுகளுடன் சான்றிதழ் வழங்கப்பட்டது.
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய இணை செயலர் கணேசன், நிர்வாகி மஞ்சு, மாணவர் நுகர்வோர் மன்ற ஆசிரியர்கள் சபீனா, மார்ட்டின் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர். மாணவர் நுகர்வோர் மன்ற நிர்வாகி பிரியா நன்றி கூறினார்.
Top சம்பவம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக