ஊட்டி : " ரத்த தானம் மூலம் வாழ்நாளில் 100 பேருக்கு உயிர் கொடுக்கலாம்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊட்டி நகர மக்கள் விழிப்புணர்வு சங்கம், கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் ஆகியவை இணைந்து லவ்டேல் நீலகிரி மெட்ரிகுலேசன் மேல் நிலைப் பள்ளியில் உடல் உறுப்புகள் தானம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தின.
பள்ளி தாளாளர் ரெமா பத்மநாபன் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் சேன்டி வரவேற்றார்.
இதில், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க திட்ட மேலாளர் டாக்டர் அமராவதிராஜன் பேசுகையில், ""இன்றைய நிலையில் உடல் உறுப்பு தானம் மிகவும் அத்தியாவசியமானது. நமது உடலில் பல உறுப்புகளை தானமாக வழங்க முடியும். ஆகவே, சிறுநீரகம், கல்லீரல், இதயம், நுரையீரல், கணையம், கண் விழித்திரை (கார்னியா), எலும்பு மஜ்ஜை, தோல் எலும்பு, இதய வால்வுகள், உடல் திசுக்களை தானம் செய்யலாம். உயிருடன் வாழும்போது, பலருக்கு உதவும் வகையில் ரத்ததானம் செய்ய முடியும். 18 வயதுக்கு மேற்பட்டோர், தனது உடலில் உள்ள ரத்தத்தில் 350 மில்லி மட்டும் தானமாக வழங்க முடியும். நமது உடலில் 6.5 லிட்டர் ரத்தம் இருக்க வேண்டும். இதில், 60 சதவீதம் திரவ தன்மை கொண்டது. ஹிமோகுளோபின், சிவப்பணுக்கள், வெள்ளையணுக்கள் ஆகியன நிறைந்துள்ளன. ரத்த தானம் மூன்று மாதத்திற்கு ஒருமுறை செய்யலாம். இதனடிப்படையில் வாழ்நாளில் 100 உயிரை காப்பற்ற முடியும். அதுபோலவே கண் தானமும் மிகவும் அவசியமாகிறது. கண் விபத்தினால் பாதிக்கப்படும்போது கார்னியா பகுதியில் ஏற்படும் பாதிப்பை கண் தானம் பெறுவதன் மூலம் சரி செய்ய முடியும். இரு உறவினர்கள் ஒப்புதலோடு கண் தானம் செய்ய உறுதிமொழி எடுத்து கொண்டு மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கத்தில் பதிவு செய்து கொள்ளலாம். கண்தானம், உடல்தானம், ரத்த தானம் குறித்து எல்லா நிலை மக்களிடமும் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்,'' என்றார்.
மக்கள் சட்ட மைய நிறுவனர் வக்கீல் விஜயன் பேசுகையில்,"" சமீபத்தில் இதயேந்திரனின் இதய தானம் நிகழ்வு மூலம், உடல் உறுப்பு தானம் பரவலாகியது. அதுபோல நாமும் உடல் உறுப்பு தானம் செய்ய முடியும். இந்த தானத்தை அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ கல்லூரிகளில் நேரிலோ, அமைப்புகள் வாயிலாகவோ வழங்கலாம்,''என்றார்.
ஊட்டி நகர மக்கள் விழிப்புணர்வு சங்க செயலாளர் ஜனார்த்தன்,
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு-மக்கள் மைய தலைவர் சிவசுப்ரமணியம் மற்றும் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக