இரா.தேசிகன். அறங்காவலர், கன்ஸ்யூமர்ஸ் அசோசியேசன் ஆப் இந்தியா : பணம் கொடுத்து பொருளையோ, சேவையையோ வாங்குபவர், நுகர்வோர். அப்படிப் பார்த்தால், கடைக்கோடி கிராமத்தில் இருக்கும் படிப்பறிவில்லாதவரும், பட்டப்படிப்பு படித்து ஆடம்பர காரில் செல்பவரும் நுகர்வோரே. "கொடுத்த காசுக்கு உரிய பொருளை, சேவையை கேட்க வேண்டும்' என்ற விழிப்புணர்வு தற்போது வேகமாக பரவி வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான நுகர்வோரின் நலன் காக்க, அடுத்து அமையும் அரசு என்ன செய்ய வேண்டும் என விளக்குகிறார் இரா. தேசிகன்.
எந்த ஒரு பொருளையோ, சேவையையோ விலை கொடுத்து வாங்கும் நுகர்வோர், அதில் ஏதேனும் குறை இருந்தாலோ, சேவை குறைப்பாடு இருந்தாலோ, நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் மூலம், மாவட்ட, மாநில நுகர்வோர் கோர்ட்டு களில் வழக்கு தொடுத்து, உரிய தீர்வு பெற முடியும். சாமானியர்களும் பயன்பெறும் வகையில், 1986ம் ஆண்டு, டிசம்பர் 24ம் தேதி, நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டப்படி, நுகர்வோர் கோர்ட்டில் தாக்கல் செய்யும் வழக்குகள், 90 நாட்களுக்குள் முடிக்கப்பட வேண்டும். ஆனால், நடைமுறையில், நுகர்வோர் கோர்ட் வழக்குகளும், சிவில் வழக்குகளைப் போல ஆண்டுக்கணக்கில் இழுத்தடிக்கப்படுகின்றன.
இதனால், சாதாரண சிவில் கோர்ட் வழக்குகள் கிட்டத்தட்ட, 125 ஆண்டுகள் நடந்ததாக கின்னஸ் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலை, நுகர்வோர் கோர்ட் வழக்குகளுக்கும் வந்துவிடுமோ என்ற கவலை ஏற்படுகிறது. என்னுடைய ஒரு வழக்கு, ஆறு ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. என்னைப் போன்ற சமூக ஆர்வலருக்கே இந்த நிலை என்றால், சாதாரண மக்களின் நிலையை நினைத்துபாருங்கள்.
நுகர்வோர் கோர்ட்டுகளில் வழக்காட, வக்கீல்கள் தேவையில்லை என்ற நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் சொல்லப்பட்டதற்கு மாறாக, எதிர்மனுதாரர்கள், வக்கீல்களை வைத்து ஒவ்வொரு வழக்குக்கான தேதிகளை வைத்துவிடுகின்றனர். தேசிய நுகர்வோர் கோர்ட் வழிகாட்டுதலின்படி, ஒரு வழக்கில் இரண்டு முறைகளுக்கு மேல்,"வாய்தா' வழங்கக்கூடாது. ஆனால், நுகர்வோர் கோர்ட் வழக்குகளுக்கும் வரையறை இல்லாமல், வாய்தா வழங்கப்படுகிறது.
நுகர்வோர் கோர்ட்டுகளில் வழக்குகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல், "பெஞ்ச்' அமைக்கப்படவில்லை. அலுவலக உதவியாளர், "ஸ்டெனோகிராபர்' உள்ளிட்ட அலுவலக பணியாளர் பற்றாக்குறையால், நுகர்வோர் கோர்ட் நிர்வாக செயல்பாட்டில் தாமதம் ஏற்படுகிறது.இவையெல்லாம், நுகர்வோர் கோர்ட் வழக்குகள் ஆண்டுக்கணக்கில் நிலுவையில் இருப்பதற்கு காரணங்கள். மாவட்ட நுகர்வோர் கோர்ட்டுகளில் மனுதாரருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்படும்பட்சத்தில், எதிர்மனுதாரர், அந்த தீர்ப்பை எதிர்த்து மாநில நுகர்வோர் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய வேண்டும் அல்லது தீர்ப்புபடி, மனுதாரருக்கு நஷ்டஈடு தரவேண்டும்.
இந்த இரண்டு வழிமுறையை பின்பற்ற தவறும் எதிர்மனுதாரரை கைது செய்ய, நுகர்வோர் கோர்ட், உள்ளூர் போலீசிற்கு, "பிடிவாரன்ட்' உத்தரவு பிறப்பிக்கிறது. இந்த உத்தரவையும், சில போலீசார் நடைமுறைப்படுத்துவதில்லை. பிடிவாரன்ட் உத்தரவை செயல்படுத்தாத போலீசாருக்கு விளக்கம்கேட்டு, "நோட்டீஸ்' அனுப்பும் அவலநிலையில் தான் இன்னும் நுகர்வோர் கோர்ட்டுகள் உள்ளன.
நுகர்வோர் கோர்ட் வழக்குகளை இழுத்தடிப்பதற்கு என்றே சில வக்கீல்கள் உள்ளனர். பிடிவாரன்ட் உத்தரவை செயல்படுத்தாமல், எதிர்மனுதாரருக்கு சாதகமாக செயல்பட சில போலீசாரும் இருக்கின்றனர். இவர்களே சாமானியர்களுக்கு நுகர்வோர் கோர்ட்டுகளில் நீதி கிடைக்க காலதாமதம் ஆவதற்கு போதுமானவர்கள். நுகர்வோர் கோர்ட் வழக்குகளில் அரசியல் தலையீடு இருப்பதாக சொல்ல முடியாது.
இந்நிலை மாற, புதிதாக அமைய உள்ள அரசு, அவசியம் செயல்படுத்த வேண்டிய ஆலோசனைகள்:
வழக்குகளை குறிப்பிட்ட கால அளவிற்குள் முடிக்க, நுகர்வோர் கோர்ட்டுகளுக்கு போதுமான உள்கட்டமைப்பு வசதிகளையும், பணியாளர் நியமனத்தையும் செய்துத் தர வேண்டும்.
நுகர்வோர் கோர்ட்டுகளின், "பிடிவாரன்ட்' உத்தரவுகளை செயல்படுத்த போலீஸ் நிலையங்களில் தனிபிரிவு ஏற்படுத்தப்பட வேண்டும். அதன்மூலம் இந்த உத்தரவுகளை இரண்டு நாட்களுக்குள் கண்டிப்பாக செயல்படுத்த வேண்டும்.
நுகர்வோர் கோர்ட் வழக்குகளில், இருமுறைக்கு மேல் எதிர்மனுதாரர் தரப்பில் வாய்தா கேட்கப்படும், ஒவ்வொரு முறைக்கும், மனுதாரருக்கு, 500 ரூபாய் வழங்க ஆவன செய்ய வேண்டும்.
நுகர்வோர் கோர்ட்டுகளில் நீதிபதிகள் ஓய்வுபெறும்போது, காலியாகும் அப்பணியிடத்தை உடனடியாக நிரப்பி, வழக்கு விசாரணைகளில் தொய்வு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
நுகர்வோர் கோர்ட் இணையதளம், "அப்-டேட்'டாக இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது போன்று நுகர்வோருக்கு பயன் கொடுக்கும் பல்வேறு நடவடிக்கைகளை அடுத்து அமையும் அரசு செய்ய வேண்டும். இதன்மூலம், நுகர்வோர் என்ற வட்டத்தில் வரும், கோடிக்கணக்கான மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும். அவர்களது பாராட்டுகளும் அரசுக்கு சென்று சேரும்.