குடிநீரைக்கூட காசு கொடுத்துத்தான் வாங்க வேண்டிய நிலையில், சுவாசிக்கும் காற்று மட்டுமே (காற்றுதான்...சுத்தமான காற்றில்லை) இப்போது இலவசமாகக் கிடைக்கிறது. அந்த வகையில், மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழக மக்கள் அதிர்ஷ்டசாலிகள். காரணம், ஆட்சியாளர்களால் அவர்களுக்குப் பல பொருள்கள் இலவசமாகக் கிடைத்துக் கொண்டிருக்கின்றன.
கடந்த ஆட்சியில் அவர்களுக்கு டிவி, மின்சாரம் (இலவச இணைப்பாக பல மணி நேர மின் தடை), 2 ஏக்கர் நிலம் (அதிர்ஷ்டம் உள்ளோருக்கு மட்டும்) உள்ளிட்டவை இலவசமாகக் கிடைத்து வந்தன.
ஆட்சி மாறினாலும் இலவசத் திட்டத்தில் மாற்றமில்லை. ஆனால், இலவசப் பட்டியலில் சில பொருள்களுக்குப் பதிலாக, வேறுசில பொருள்கள் உதாரணமாக கிரைண்டர், மிக்ஸி, பேன் போன்றவை இடம்பெற்றிருக்கின்றன. அதில் இப்போது அவர்களுக்கு முதலாவதாகக் கிடைத்திருப்பது இலவச அரிசி 20 கிலோ.
கடந்த ஆட்சியில் நியாயவிலைக் கடையில் கிலோ ரூ. 1-க்கு வழங்கப்பட்ட அரிசி இப்போது இலவசமாக வழங்கப்படுகிறது. 1 ரூபாய்க்கும், இலவசமாக வழங்கப்படுவதற்கும் அதிக வித்தியாசமில்லை என்றாலும், இது வாக்களித்த மக்களை அதிக மகிழ்ச்சியில் ஆழ்த்தும். என்றாலும், அவர்களின் கவலையெல்லாம் "அரிசி இலவசம் சரி, ஆனால் அதை வழங்குவது அதே நியாயவிலைக் கடை; பணியாளர்களும் அதே பணியாளர்கள்தானே' என்பதுதான்!
ஏனெனில், நியாயவிலைக் கடைகளுடன் பொதுமக்களுக்கு ஏற்பட்ட கடந்த கால அனுபவங்கள் அப்படிப்பட்டவை என்றால் மிகையில்லை.
மாதம் தொடங்கி ஐந்து தேதிக்குள் பொருள்கள் வாங்கச் சென்றாலோ அங்குள்ள விற்பனையாளரின் பதில் ""லோடு இன்னும் வரவில்லை, போன மாசமுள்ள ஸ்டாக்கை வைத்துத்தான் சமாளித்துக் கொண்டிருக்கிறேன்'' என்பதாகவே இருக்கும். "பொறுத்தார் பூமி ஆள்வார்' எனச் சமாதானப்படுத்திக்கொண்டு இருபதாம் தேதிக்குப் பிறகு சென்றாலோ ""ஸ்டாக் தீர்ந்துவிட்டது. இனி லோடு வந்தால்தான் உண்டு'' என்பதாக இருக்கும் அவர்களின் பதில்.
ஆக, எப்போது சென்றால் பொருள்கள் கிடைக்கும் என்பது மக்களுக்கும் தெரியாது. அந்த ரகசியத்தை விற்பனையாளர்களும் வெளிப்படுத்துவதில்லை. மேலும், ஒரு ரூபாய்க்குக் கிடைத்த அரிசியும் பொதுவாக பல வண்ண அரிசிதான் (இடைத்தேர்தல் நேரத்தில், அமைச்சர், அதிகாரிகளின் ஆய்வின்போது தரமான அரிசி தட்டுப்படுவது தனிக்கதை).
பெரும்பாலான நியாயவிலைக் கடைகளில் வாங்கும் பொருள்கள் குறித்த விவரங்களைப் பதிவேட்டில் பதிவதற்கும், பொருள்களை அளந்து கொடுப்பதற்கும் ஒருவரே டூ இன் ஒன் ஆகச் செயல்படுவதால் பொதுமக்கள் மணிக்கணக்கில் வெயிலில் காத்துக்கிடக்க வேண்டியது ஏற்படுவதும் கண்கூடு.
இதேபோல, 10 கிலோ வாங்கினால் தூசிகள், வண்டுகள், பூச்சிகள்போக பாதிக்குப்பாதிகூட தேறாத கோதுமை, 3 லிட்டர் வாங்கினால் அரை லிட்டர் வரை சேதாரமாகும் மண்ணெண்ணெய் ஆகியவற்றையும் மக்கள் முணுமுணுப்புடன் வேறுவழியின்றிதான் வாங்கிச் சென்று கொண்டிருக்கின்றனர். சில நியாயவிலைக் கடைகளில் மண்ணெண்ணெய் வாங்க வேண்டுமெனில் சோப்பு, டீ தூள், உப்பு போன்றவற்றைவும் வாங்க நிர்பந்திக்கும் நிலையும் நீடிக்கிறது.
மேலும், கடைகளில் விருப்பச் சீனி வழங்கப்படும் என பலகையில் எழுதிவைக்கப்பட்டிருக்கும். கேட்டால் கிடைக்காது. நியாயமாக வழங்க வேண்டிய சீனியே விற்பனையாளரின் விருப்பத்தின்பேரில்தான் வழங்கப்படுவதால் அதையே "விருப்பச் சீனி' என நாம் எடுத்துக்கொள்ள வேண்டியதுதான்.
இத்தனையையும் மிஞ்சும்வகையில் கடந்த ஆட்சியில் இறக்கைக்கட்டி பறந்த விஷயம் அரிசி கடத்தல். மாநிலத்தின் பல பகுதிகளிலும் அரிசி கடத்தும் லாரிகள், வேன்களை போலீஸôர் தொடர்ந்து சென்று கண்காணிப்பதற்குள் வாகனங்களை நிறுத்திவிட்டு ஓட்டுநர்களும், உடன் வந்தவர்களும் ஓடிச் செல்வதும், வாடிக்கையான நிகழ்வாகவே ஆகிவிட்டது. இது தொடர்பாக ஊடகங்களிலும், பத்திரிகைகளும் வந்த செய்திகளே சான்றுகள். காவலர்களின் வேகத்தைவிட, கடத்தல்காரர்கள் அதிக வேகத்தில் செயல்பட்டதன் விளைவுதானோ என நினைக்கத் தோன்றுகிறது.
எனவே, புதிய அரசு நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் பொருள்களின் அளவு, தரம், முழுமையாக மக்களைச் சென்றடைகிறதா என்பதைக் கண்காணிப்பதுடன், கடத்தல் பேர்வழிகளை முற்றிலும் ஒழிக்க வேண்டும்.
இருக்கும் அத்தனை குறைகளையும் ஒருசேரக் களைந்தால்தான் திட்டங்களின் உரிய பலன் மக்களைச் சென்றடையும். இல்லையெனில் பல கைகள் மாறிச்செல்லும் பனிக்கட்டி கடைசிக் கையை அடையும்போது ஒன்றுமில்லாததாகி விடுவதைப்போன்ற நிலைமைதான் இதிலும் ஏற்படும்.
அமைச்சர்கள் மக்களிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா அறிவுறுத்தியிருக்கிறார். புதிய அரசும் மக்களிடம் நல்ல பெயர் வாங்க வேண்டுமெனில், நியாயவிலைக் கடை "அரிசியியலில்" இருக்கும் இத்தகைய குறைகளையும் முற்றிலும் களைய முழுமூச்சுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக