அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

திங்கள், 13 ஜூன், 2011

"காகிதப் பை' காலத்தின் கட்டாயம்!

"காகிதப் பை' காலத்தின் கட்டாயம்!
சு. சிவசுப்பிரமணியம், தலைவர், 
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் 
பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

அனைத்துத் துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தும் பொருள்களில் கணிப்பொறிக்கு அடுத்த இடத்தைப் பாலித்தீனுக்கு வழங்கலாம். ஏதேனும் ஒருவகையில் இந்த இரு பொருள்களும் இல்லாமல் சந்தைப்படுத்துதல் இயலாத காரியமாகிவிட்டது.

காயப்பொடி தொடங்கி உயிர்காக்கும் விலையுயர்ந்த மருந்துகளும்கூட பாலித்தீன் பாதுகாப்பு வளையத்தோடுதான் விற்கப்படுகின்றன.
நிலத்தடிநீரைக் கேள்விக்குறியாக்குவதோடு, தூய்மையான காற்றுக்குத் தட்டுப்பாட்டை ஏற்படுத்த காத்திருக்கும் பாலித்தீன் கழிவுகளின் அபாயம் சாமானியர்களைச் சென்றடையாமல் இல்லை. கிராமத்து முதியோருக்கும்கூட பாலித்தீன் பைகளின் கேடுகள் தெரிகின்றன. ஆனால், அதன் பயன்பாட்டைத் தவிர்க்க முயற்சிப்பதில்லை.       


தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அரசு, பாலித்தீன் பைகளுக்குத் தடை விதித்துள்ளது. இது வரவேற்கத்தக்கது.

சுற்றுச்சூழலைப் பேணிக்காக்கும் அக்கறையிலும், மக்களின் ஜீவாதாரப் பிரச்னையுடன் தொடர்புடையது என்பதாலும் இத் திட்டத்தை அமல்படுத்துவதோடு நின்றுவிடாமல், கண்காணிப்பை அதிகப்படுத்துவது அரசின் கடமை.

பாலித்தீன் பயன்பாடு விஷயத்தில் வணிகர்களை மட்டுமே குறை சொல்வதும் சரியாகாது. பைகள், கூடைகளை வீட்டிலிருந்து எடுத்துக்கொண்டு கடைகளுக்குச் செல்வதை மக்கள் நாகரிகக் குறையாகக் கருதுகிறார்கள்.

அக் காலத்தில் துணிப்பைகளில் பொருள்களை வாங்கிப் பழகிய முதியவர்கள்கூட, இப்போது "கேரீ-பேக்' இல்லையா எனக் கேட்கின்றனர். இது ஆரோக்கியமான சூழல் அல்ல, சுற்றுச்சூழல் கேடுகளுக்கு விதை விதைப்பது போன்றதாகும்.

பாலித்தீன் பயன்பாட்டைப் பொறுத்தவரையில் ஆணிவேராக பெரிய நிறுவனங்களே உள்ளன. ஏனெனில், இன்று திரும்பிய திசையெங்கும் ஏதோ ஒரு பெரிய நிறுவனத்தின் பாலித்தீன் பைகள்தான் வண்ணமயமாகக் காட்சியளிக்கின்றன.

பொருள்களைத் தயாரிப்பதிலும், அதைச் சந்தைப்படுத்துவதிலும் வெளிநாட்டு யுக்திகளை விரும்பும் இந் நிறுவனங்கள், காகிதப் பை போன்ற பாலித்தீனுக்கு மாற்று வழிகளைப் பயன்படுத்துவதில் மட்டும் ஆர்வம் காட்டுவதில்லை.

பசுமை விரும்பிகளாகத் தங்களைக் காட்டிக்கொள்ள பல நிறுவனங்கள் போட்டியிடுகின்றன. ஆனால், புல் வளருவதையும் விரும்பாத பாலித்தீன் பைகள் ஒவ்வொரு நாளும் சில நூறு கிலோவரை மண்ணில் புதைவதற்கு நாமும் ஒரு காரணமென்பதை இந் நிறுவனங்கள் உணர மறுப்பதேன்?

எனவே, முதல்கட்டமாக தமிழகத்தில் அனைத்துத் துறைகளிலும் உள்ள பெரிய நிறுவனங்களை தமிழக அரசு அழைத்துப் பேச வேண்டும். அவர்களிடம், பாலித்தீன் பயன்பாட்டை முற்றிலும் தடுத்து நிறுத்துவது அல்லது படிப்படியாக மாற்றுவழிகளைப் புகுத்துவது குறித்து வல்லுநர்களைக் கொண்டு ஆலோசனை வழங்கலாம்.

மக்களிடம் பாலித்தீன் பயன்பாடுகளைத் தடுக்க விழிப்புணர்வுப் பிரசாரம் செய்வதோடு, தேவைப்பட்டால் உள்ளாட்சித் துறைகள் மூலம் எச்சரிப்பதும்கூட தவறில்லை.

ஏற்கெனவே, உள்ளாட்சித் துறைகளின் கண்டிப்பால் மழைநீர் சேகரிப்புத் திட்டம் பல பகுதிகளில் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டன. அதே பாணியில் பாலித்தீன் ஒழிப்புக்கும் அரசு முக்கியத்துவம் அளிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

மாநிலத்திலேயே முன்னோடியாக கன்னியாகுமரி மாவட்டத்தில், பாலித்தீன் பயன்பாட்டுக்கு எதிராக எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கைகள் மக்களிடம் மட்டுமன்றி, இந்தியாவின் மதிப்புக்குரியவர்களில் ஒருவராகத் திகழும் அப்துல் கலாமிடமும் வரவேற்பைப் பெற்றது.

இந்த நடவடிக்கைகளை மாநிலம் முழுமையும் செயல்படுத்துவதென்பது அரசு நினைத்தால் சாத்தியமே.

குறிப்பாக, உணவுப்பொருள் தொடர்பான நிறுவனங்களிடமும், ஜவுளித்துறை நிறுவனங்களிடமும் காகிதப் பை, துணிப் பை போன்ற மக்கும் பொருள்களின் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கினால் சிறப்பான மாற்றத்தைக் காண முடியும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

இது எளிதில் இயலாத விஷயம் என்றாலும், எதிர்காலச் சமூகத்தின் நலனைக் கருத்தில்கொண்டு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டியது அவசியம்.

ஏற்கெனவே பாலித்தீன் பைகள் உற்பத்தித் தொழிலில் இருப்பவர்களுக்கு மாற்றுத் தொழிலுக்கான வாய்ப்பை அரசு ஏற்படுத்தலாம்.

அத் தொழிலில் ஈடுபட்டவர்களில் விருப்பமுள்ளவர்கள் காகித மற்றும் துணிப் பைகள் உற்பத்திக்கு மாற விரும்பினால், சிறப்புக் கடனுதவிகளை அளிக்கலாம்.

மகளிர் சுயஉதவிக் குழுவினர், இளைஞர்கள் ஆகியோருக்கு வருவாய் தரும் வகையில் ஒவ்வோர் ஊராட்சி ஒன்றியத்திலும் அரசு சார்பில் காகிதப் பை தயாரிப்பு மையங்களைத் திறக்கலாம். இதன் மூலம் அப் பகுதிக்கான காகிதப் பை தேவையைச் சமாளிப்பதுடன், வேலைவாய்ப்பையும் அதிகரிக்கலாம்.

 இன்னும் 10 ஆண்டுகளில் பாலித்தீனால் உருவாகப்போகும் சுற்றுச்சூழல் கேடுகளைத் தடுக்க அரசின் உறுதியான நடவடிக்கை இப்போதே தேவை

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக