"நீலகிரி மாவட்டத்தில் நுகர்வோர் அமைப்புகளின் பெயரை கூறி "வசூல்' வேட்டை நடத்தி வருபவர்கள் குறித்து உடனடியாக புகார் தெரிவிக்க வேண்டும்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய மக்கள் மைய தலைவர் சிவசுப்ரமணியன், மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனு:
நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு நுகர்வோர் அமைப்புகள் தன்னார்வத்துடன் செயல்பட்டு, பல பணிகளில் ஈடுபட்டு மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன. ஆனால், இவற்றின் பெயரை கூறிக் கொண்டு தவறான வழியில் பணம் சம்பாதித்து கொண்டிருக்கின்றன.மாவட்டத்தின் பல பகுதிகளில் நுகர்வோர் அமைப்பு பிரதிநிதி என கூறி ரேஷன் கடையில் வசூல் செய்வதாகவும், குந்தா, ஊட்டி, குன்னூர் தாலுகாக்களில் அதிகபட்சமாக இது நடைபெறுவதாகவும், சிலர் மினி பஸ்களில் இலவச பயண அனுமதி சீட்டு பெற்று செல்வதாகவும், மரக்கடைகள், பிற வணிக நிறுவனங்களிலும் பல காரணங்களை கூறி வசூலில் ஈடுபடுவதாகவும் மையத்திற்கு புகார்கள் வருகின்றன.
தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள் நல்ல நோக்கத்துடன் செயல்படுவதை களங்கப்படுத்துவதை தொடர்ந்து அனுமதிக்க இயலாது. தொடர்ந்து இதுபோன்று நுகர்வோர் அமைப்புகள் பெயரினை பயன்படுத்தி வசூல் வேட்டையில் ஈடுபடும் போலி நபர்கள் வரும் பட்சத்தில் அவர்கள் குறித்து காவல் நிலையத்திலோ அல்லது மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலோ புகார் தெரிவிக்கலாம்.
நீலகிரி மாவட்ட நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு என்ற பெயரில் எங்களது அமைப்பு மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, இதுபோன்று நடப்பவர்கள் குறித்து தகவல் கிடைத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் விபரங்களுக்கு மாநில நுகர்வோர் ஆலோசனை மையத்தில் 044-28592828 என்ற எண்ணில் தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு, சிவசுப்ரமணியம் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக