கூடலூர் அரசுப் போக்குவரத்து கிளையில் போதிய பஸ்கள் இயக்கப்படாததால், தனியார் வாகனங்களை நாட வேண்டிய நிலைக்கு, பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
கூடலூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகாவில் டான்டீ அரசு தேயிலைத் தோட்டம், தனியார் தோட்ட நிறுவனங்களோடு, ஏராளமான சிறு விவசாயிகள் உள்ளனர். கூடலூர் தொகுதியில், கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், எம்.எல்.ஏ.,வாக இருந்த மில்லருக்கு, சுற்றுலாத் துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. தி.மு.க., ஆட்சியில், எம்.எல்.ஏ.,வாக உள்ள ராமசந்திரனுக்கு, கதர்வாரியத் துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சர் தொகுதி என்ற அந்தஸ்தை கூடலூர் தொகுதி பெற்றிருந்தும், மக்களின் போக்குவரத்து தேவை, போதியளவு நிறைவேற்றப்படாமல் உள்ளது. 34 வழித்தடங்களுடன் துவக்கப்பட்ட கூடலூர் போக்குவரத்து கிளையில், 2000ம் ஆண்டில் 54 ஆக உயர்த்தப்பட்டது; தற்போது 48 வழித்தடங்களாக குறைக்கப்பட்டுள்ளது.
இயக்கப்படும் பஸ்களும், பழைய பஸ்களாக உள்ளதால், அவ்வப்போது பாதி வழியில் பழுதாகி, பொதுமக்கள் அவதிப்பட வேண்டியுள்ளது.
போக்குவரத்து தேவையை நிறைவு செய்யும் தனியார் வாகன உரிமையாளர்களும், எரிபொருள் விலை உயர்வை காரணம் காட்டி, பல மடங்கு கட்டணம் வசூலிக்கின்றனர். அரசு பஸ்சில் 3.50 கொடுத்து பயணிக்கும் இடத்துக்கு, தனியார் வாகனங்களில் 15 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. பல நேரங்களில் தொங்கிக் கொண்டு பயணிப்பதால், விபத்து அபாயம் ஏற்படுகிறது.
பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டும், குறிப்பிட்ட நேரத்துக்கு பஸ் இயக்கப்படாததால், காலை நேரத்தில் பள்ளிக்கும், மாலையில் வீட்டுக்கும் செல்வதில் தாமதம் ஏற்படுகிறது.
மாறியது வழித்தடம்: பந்தலூரிலிருந்து சேலத்துக்கு, காலை 10.00 மணிக்கு பஸ் இயக்கப்பட்டு வந்தது. சில வாரங்கள் வரை, வாரத்துக்கு சில நாட்கள் மட்டுமே பந்தலூர் வந்துச் சென்ற இந்த பஸ், தற்போது நாடுகாணியிலிருந்து சேலத்துக்கு இயக்கப்படுகிறது.
பந்தலூரில் காத்திருப்போர், கூடலூர், ஊட்டி சென்று, சேலம், ஈரோடு பஸ்களில் பயணிக்க வேண்டியுள்ளது. ஒதுக்கப்பட்ட வழித்தடங்களில் முறையாக பஸ் இயக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்தியும், அமைச்சர்கள், போக்குவரத்து கழகத்தினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, மக்களின் போக்குவரத்து தேவை குறித்து செவிமடுத்து நடவடிக்கை எடுத்தால், தேர்தல் சமயத்தில் இப்பிரச்னை எதிரொலிக்காது என எதிர்பார்க்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக