புலயன் சாதியினருக்கு தாழ்த்தப்பட்டோர் பிரிவில் சாதி சான்றிதழ் வழங்க கோரிக்கை
உதகை, பிப். 28: நீலகிரி மாவட்டத்தில் பந்தலூர் பகுதியில் வசித்துவரும் புலயன் சாதியினருக்கு தாழ்த்தப்பட்டோர் பிரிவில் சாதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கூடலூர் நுகர்வோர் மனித உரிமை சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையத்தின் தலைவர் சிவசுப்பிரமணியம் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
நீலகிரி மாவட்டத்தில் பந்தலூர் வட்டத்தை உள்ளடக்கிய பல பகுதிகளில் இந்து புலயன் பிரிவை சார்ந்தோர் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் இப்பகுதியில் பரம்பரை பரம்பரையாகவே வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் சொந்தமாக நிலம் வைத்திருப்பதுடன், அரசின் சார்பில் குடும்ப அட்டை பெற்று நிலவரி மற்றும் வீட்டு வரி என அனைத்து வரிகளையும் செலுத்தி வருகின்றனர். அரசு பள்ளிகளில் கல்வி கற்றும், இதர அரசு சலுகைகளையும் பெற்று வந்துள்ளனர்.
இவர்கள் இந்து புலயன் என்ற இனத்தை சேர்ந்த மலையாளத்தை தாய்மொழியாக கொண்டாலும், தமிழகத்தையே தாய் மண்ணாகக் கொண்டவர்கள். இவர்களது சாதியினம் தமிழக அரசின் மாநில சாதிகள் பட்டியலில் எஸ்சி பட்டியலிலேயே இடம் பெற்றுள்ளது. அதேபோல, நீலகிரி மாவட்ட அளவிலான சாதிகள் பட்டியலிலும் எஸ்சி பட்டியலில் இடம் பெற்றுள்ளது. கேரள மாநிலத்திலும் இதே பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
ஆனால், இவர்களுக்கு பந்தலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தற்போது தாழ்த்தப்பட்டோருக்கான சாதி சான்றிதழ் வழங்கப்படுவதில்லை. இதே பகுதியில் வசித்து வந்தவர்களுக்கு கடந்த 1989ம் ஆண்டு வரை கூடலூரில் எஸ்சி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான காரணத்தை கேட்டால் முறையான பதில் அளிப்பதில்லை. அண்மையில் சேரம்பாடி பகுதியை சேர்ந்த சதானந்தன் என்பவர் தனது மகளின் மேல் கல்விக்காக சாதி சான்றிதழ் கேட்டபோது உரிய சான்றிதழ் அளிக்கப்படவில்லை.
இதற்காக தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் விளக்கம் கேட்டபோது இடம் பெயர்ந்தவர்களா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அந்த சான்றிதழ் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஆய்வை வருவாய்த்துறையினர்தான் மேற்கொள்ள வேண்டும். சதானந்தனுக்கு எஸ்சி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளபோது, அவரது மகளுக்கு அந்த சான்றிதழ் வழங்கப்படாதது வியப்புக்குரியதாக உள்ளது.
பந்தலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படாமாலேயே தாங்களாகவே முடிவெடுத்து அரசு ஆணை என்ற பெயரில் மக்களை ஏமாற்றுகின்றனர். எனவே, இப்பிரச்சினையில் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு உரிய சாதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக