புதுடில்லி : சந்தையில், பிரபல பிராண்டுகளின் பெயர்களில் விற்பனை செய்யப்படும் தேனில் கலப்படம் செய்யப்படுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.
இயற்கையில் கிடைக்கக் கூடிய உணவுப் பொருட்களில், நீண்ட நாட்களுக்கு கெட்டுப் போகாமல் இருக்கக் கூடியது தேன். இது, மருந்துப் பொருளாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், தேனுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தேனை பல்வேறு நிறுவனங்களும், பாட்டிலில் அடைத்து, தங்கள் பிராண்டுகள் பெயரில் விற்பனை செய்து வருகின்றன. ஆனால், அந்த தேனில், ரசாயனப் பொருட்கள், தேவைக்கு அதிகமாக கலக்கப்படுவதாக, ஆய்வில் அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.
டில்லியைச் சேர்ந்த சுற்றுச்சூழல் மற்றும் அறிவியல் மையம், இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் 10 பிரபல பிராண்டுகளின் தேன் மற்றும் ஆஸ்திரேலியாவில் இருந்து ஒரு பிராண்டையும், சுவிட்சர்லாந்திலிருந்து ஒரு பிராண்டையும் வரவழைத்து ஆய்வு செய்தனர். அதில், அளவுக்கு அதிகமாக, "ஆக்சிடெட்டாசைக்ளின் ' உள்ளிட்ட "ஆன்ட்டிபயாடிக்' மருந்துகள் தேவைக்கு அதிகமாக கலக்கப்பட்டுள்ளது தெரிந்துள்ளது. அதாவது, ஒரு கிலோ கிராம் தேனில், 3.7 மைக்ரோ கிராம் முதல் 250 மைக்ரோகிராம் வரை ஆன்ட்டிபயாடிக் மருந்துகள் கலக்கப்பட்டுள்ளன.
அதிகபட்சமாக, ஒரு ஸ்பூன் தேன் அதாவது 20 கிராம் தேனில், 5 மைக்ரோ கிராம் ஆன்ட்டிபாடிக் மருந்துகள் கலக்கப்பட்டுள்ளன. சாதாரணமாக, நோய் ஏற்பட்டால், மனிதர்கள் சாதாரணமாக 500 மைக்ரோ கிராம் ஆன்ட்டிபயாடிக் எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால், தேனில் கலக்கப்படும் ஆன்ட்டிபயாடிக், இதனை விட ஆயிரம் மடங்கு அதிகமாக உள்ளது. இந்த கலப்பட தேனை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், இரத்த சம்பந்தமான நோய்கள், நுரையீரல் பாதிப்புகள் உள்ளிட்டவை ஏற்படும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும், தேனீ வளர்ப்பவர்களும், ராணி தேனீ அதிக முட்டைகள் இடுவதற்காக கூடுகளில், ஆன்ட்டிபயாடிக்கை பயன்படுத்துகின்றனர். இதிலிருந்து பெறப்படும் தேனும், உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்று மருத்துவ விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக