""எதிர்கால சமுதாயம் சிறப்பாக இருக்க, இயற்கையை பாதுகாக்க வேண்டும்' என, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஊட்டி அருகேயுள்ள காத்தாடிமட்டம் அரசு மேல்நிலைப் பள்ளி சார்பில், நுந்தளா கிராமத்தில் என்.எஸ்.எஸ்., சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மக்கள் மையம், நீலகிரி மாவட்ட நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு சார்பில், நுகர்வோர் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் சிவராஜ் சிவபுத்ரா வரவேற்றார்.
பள்ளி தலைமை ஆசிரியர் செவணன் தலைமை வகித்தார்.
நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் மக்கள் மையத் தலைவர் சிவசுப்ரமணியம் பேசுகையில், ""தரமான வாழ்வுக்கு தரமான பொருட்களே உதவும். தர முத்திரைகளைப் பார்த்து, பொருட்ளை வாங்க வேண்டும். சேமிக்கும் பணத்தை முறையாக முதலீடு செய்வது அவசியம். அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள், வங்கி, தபால் நிலையங்களில் முதலீடு செய்தால், பாதுகாப்பு, நம்பகத் தன்மை, உரிய வட்டித் தொகை கிடைக்கும்; முதலீடு செய்யும் முன் போதிய விழிப்புணர்வு பெற வேண்டும்,'' என்றார்.
மாவட்ட கூட்டமைப்பு பொதுச் செயலாளர் வீரபாண்டியன் பேசுகையில், ""வாங்கும் பொருட்களுக்கு "பில்' பெற வேண்டும். தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்தி, தேவையான தகவல்களை கேட்டுப் பெற முடியும். நமது உரிமையை, எப்போதும், எதற்காகவும் விட்டுக் கொடுக்கக் கூடாது. மனித உரிமைகள் மீறப்பட்டால், மனித உரிமை ஆணையத்தை அணுக வேண்டும்,'' என்றார்.
ஊட்டி நகர மக்கள் விழிப்புணர்வு சங்க செயலாளர் ஜனார்தனன் பேசுகையில், ""புவி வெப்பத்தால், விவசாயம் உட்பட பல தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ரசாயன உரங்களின் பயன்பாடால், உணவுப் பொருட்களில் விஷத் தன்மை அதிகரிக்கிறது. வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்பது, திடக்கழிவு மேலாண்மையில் சுகாதாரத்தை மேம்படுத்துவதன் மூலம், இயற்கையை பாதுகாக்க முடியும்,'' என்றார்.
"நுகர்வோர் கருத்துக்கள்' என்ற தலைப்பில், மாணவன் வினித் பேசினார்.
என்.எஸ்.எஸ்., மாணவர்கள், நுகர்வோர் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வினியோகித்தனர். மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு சங்க நிர்வாகி பிரபு உட்பட பலர் பங்கேற்றனர். ஓவிய ஆசிரியர் பழனியப்பன் நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக