4.கலப்படத்தால் நோய்; பாராமல் விட்டால் பாதிக்கும் மெய்! பொருட்களை பார்த்து வாங்க பழகிக்கோங்க...
ஊட்டி : "கலப்பட பொருட்களை உட்கொள்வதால் புற்றுநோய் வரை பாதிப்பு ஏற்படுகிறது' என அதிர்ச்சி தெரிவிக்கப்பட்டது.உலக நுகர்வோர் தினத்தை முன்னிட்டு, கூடலூர் நுகர்வோர் மனித உரிமை சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், மக்கள் மையங்கள் சார்பில், "உயிரைக் கொல்லும் உணவுக் கலப்படம்' என்ற தலைப்பில், மாவட்ட அளவிலான கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டது. ஊட்டி, குன்னூர், கோத்தகிரி பகுதிகளை சேர்ந்த 60 பேர் கட்டுரை எழுதி அனுப்பினர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி, மாவட்ட நுகர்வோர் குழு கூட்டமைப்பு, பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம் சார்பில், ஊட்டி அருகேயுள்ள காத்தாடிமட்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடத்தப்பட்டது. நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் சிவராஜ் வரவேற்றார்.
பள்ளி தலைமை ஆசிரியர் செவணன் தலைமை வகித்து பேசுகையில், ""உணவுக் கலப்படத்தால் மக்கள் பாதிக்கின்றனர்; பல உணவுப் பொருட்கள், உடலுக்கு தீங்கு விளைவிப்பதை அறியாமலே பயன்படுத்துகிறோம். இவற்றை அறிந்துக் கொள்வதுடன், போதை வஸ்துகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்,'' என்றார்.ஊட்டி நகர விழிப்புணர்வு சங்க செயலர் ஜனார்தனன் பேசுகையில், ""அரிசியில் கல், மண், கோதுமையில் எர்காட், ஊமத்தை விதைகள், கேழ்வரகில் மணல், செயற்கை நிறங்கள், ரவை, கோதுமை, அரிசி மாவுகளில் மரவள்ளி மற்றும் கிழங்கு மாவு, பருப்பு வகைகளில் நச்சுசாயம், வனஸ்பதியில் உருளைக் கிழங்கு மாவு, தேயிலை தூளில் முந்திரி மற்றும் புளியங்கொட்டை தூள் உட்பட பல பொருட்களில் கலப்படம் செய்யப்படுகிறது. சாலையோரங்களில் விற்கப்படும் பழங்கள் மற்றும் உணவுப் பொருட்களில் வாகனப் புகை, மண்புழுதி படிந்திருக்கும். கலப்பட பொருட்களை பயன்படுத்தும் மக்களுக்கு புற்றுநோய் வரை பாதிப்பு ஏற்படுகிறது,'' என்றார்.
நீலகிரி மாவட்ட நுகர்வோர் கூட்டமைப்பு தலைவர் சிவசுப்ரமணியம் பேசியதாவது: தரமாக, சுகாதாரமாக, சரியான விலையில் உணவு கிடைக்க வேண்டும். பாதுகாப்பான தரமான உணவு உண்ணாவிட்டால், நம்மால் சரியாக சிந்திக்கவும், செயல்படவும், அமைதியாகவும் வாழ முடியாது. உணவுக் கலப்பட தடை சட்டம் 1954ன் படி, கலப்படம் செய்வோருக்கு அளிக்கப்படும் தண்டனையை விட, விற்பவருக்கு கூடுதல் தண்டனை கிடைக்கும்.உணவுப் பொருட்கள் வாங்கும் போது தரம், தேதி, எடை, காலாவதி, அதில் உள்ள சத்துக்கள் குறித்து அறிந்து வாங்க வேண்டும். உணவுப் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட உணவு பாதுகாப்பு சட்டம் 2006ஐ நடைமுறைபடுத்தினால் பயன் கிடைக்கும். கலப்பட பொருட்கள் விற்பது தெரிந்தால், மாவட்ட கலெக்டர், ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வாளர், துணை இயக்குநர், ஊரக நலம், நகராட்சி நகர் நல அலுவலர், தன்னார்வ நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு நிர்வாகிகளுக்கு புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு, சிவசுப்ரமணியம் பேசினார்."நெஸ்ட்' அறக்கட்டளை நிர்வாகி சிவதாஸ் பேசுகையில், ""ரசாயன உரங்களால், உணவில் ரசாயன தன்மை சேர்ந்து தாய்ப்பாலில் கூட விஷத்தன்மை அடைகிறது. கீரை, பருப்பு, வேர்கடலை, கொண்டை கடலை போன்ற புரத சத்து உணவுகள், பேரிச்சம்பழம், முருங்கை, வல்லாரை, கேழ்வரகு போன்ற உணவு வகைகள், நமது உடலுக்கு பல்வேறு சத்துகளை அளிக்கிறது. மனமும், உடலும் அமைதியாக இருக்க தியானப் பயிற்சி அவசியம். கடைகளில் விற்கப்படும் ஊட்டச்சத்து பொருட்களை விட சத்தான தரமான உணவே, உடலையும், மனதையும் தரமானதாக மாற்றும். இயற்கையாக கிடைக்க கூடிய கீரை, நெல்லி, பழ வகைகள் அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்,'' என்றார்.
தொடர்ந்து, நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கு நடத்தப்பட்டது. ஆறு முதல் 8ம் வகுப்பு பிரிவில், கக்குச்சி மகாத்மா காந்தி பள்ளி மாணவி ஷீபா, கோத்தகிரி ரிவர்சைடு பள்ளி மாணவன் தக்ஷின், பிக்கட்டி பிரியதர்ஷினி பள்ளி மாணவி மனிஷா லாவண்யா முதல் மூன்று பரிசு பெற்றனர். பிளஸ் 1 பிரிவில், காத்தாடி மட்டம் அரசு மேல்நிலைப் பள்ளியின் மஞ்சுளா, சபரி, சரண்யா, ராகுல் முதல் மூன்று பரிசு பெற்றனர். ஊட்டி பிரீக்ஸ் பள்ளி மூன்றாம் வகுப்பு மாணவன் சாமி ஜஸ்னா, ரிவர்சைடு பள்ளி மாணவன் நித்தேசுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. தேவர்சோலை நுகர்வோர் சங்கத் தலைவர் மாரிமுத்து, துணைத் தலைவர் சிதம்பரநாதன், காத்தாடிமட்டம் நுகர்வோர் சங்க துணைத் தலைவர் பாபு, ஆசிரியர்கள் மோகனன் ராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக