அனீமியா நோயால் 60 சதவீத பெண்கள் பாதிப்பு மாவட்ட குடும்ப நல மருத்துவர் தகவல்
""நீலகிரியில், 60 சதவீத பெண்கள் அனீமியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால், குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்ள தயங்குகின்றனர்,'' என மாவட்ட குடும்ப நல மருத்துவ அதிகாரி கூறினார்.
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய மக்கள் மையம் சார்பில், குன்னூர் உபாசி அரங்கில் உலக மக்கள் தொகை தின சிறப்பு கருத்தரங்கு முகாம் நடத்தப்பட்டது. கவுரவ விருந்தினராக பங்கேற்ற மாவட்ட மருத்துவ, கிராமப்புற சேவை மற்றும் குடும்ப நல இணை இயக்குனர் டாக்டர். ஜெயலட்சுமி பேசியதாவது:
நீலகிரியில் ஆறு அரசு மருத்துவமனைகள், 30 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 194 துணை சுகாதார நிலையங்கள், தன்னார்வ அமைப்பான இந்திய குடும்ப நலச்சங்கம், 18 அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகள், இரண்டு நகராட்சி சுகாதார நிலையங்களில் குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகின்றன. குடும்ப கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வு, அறுவை சிகிச்சை செய்ய, மாதந்தோறும் ஒவ்வொரு பகுதியிலும் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. மாவட்டத்தில் பல பெண்கள் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொள்ள தயக்கம் காட்டுகின்றனர். இதற்கு காரணம், பல பெண்கள் பலவீனமான நிலையில் உள்ளது தான். மாவட்டத்தில் பல பெண்கள் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். 60 சதவீத பெண்கள் அனீமியா நோய்க்கு ஆளாகியுள்ளனர்; பெண்கள் சரியான நேரத்தில் போதிய அளவு உணவை உட்கொள்ளாதது தான் இதற்கு காரணம். பெண்கள், உணவு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். ஆண்கள், "வாசக்டமி' என்ற குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொள்ள முன்வர வேண்டும். மாவட்டத்தில் ஜனத்தொகை அதிகரித்து வருகிறது. குடும்ப கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வை மக்கள் பெற வேண்டும். இவ்வாறு, டாக்டர். ராஜலட்சுமி பேசினார். மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு, பள்ளி மாணவ, மாணவியருக்கு இடையே நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. கட்டுரைப் போட்டியில் குன்னூர் சாந்தி விஜய் பள்ளி மாணவி ராஜலட்சுமி முதலிடம், குன்னூர் புனித மேரீஸ் பள்ளி மாணவியர் சுஸ்மிதா, சாரல் மார்டினா இரண்டு மற்றும் மூன்றாம் பரிசு பெற்றனர். ஓவியப் போட்டியில், குன்னூர் சாந்தி விஜய் பள்ளி மாணவியர் வைஷ்ணவி, திவ்யா முதலிரு இடங்கள், குன்னூர் புனித மேரீஸ் பள்ளி மாணவி கவுரி 3வது இடம் பெற்றனர். .
வரும் 2050ம் ஆண்டில்"அம்மாடியோவ்!'
மக்கள் தொகை சிறப்பு கருத்தரங்கில்"திடுக்'
வரும் 2050ம் ஆண்டின் உலக மக்கள் தொகை, 900 கோடியாக அதிகரிக்கும் என ஐ.நா., சபை தெரிவித்துள்ளது' என, மக்கள் தொகை கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது. பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி, தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது. வீடு,வீடாக வரும் அலுவலர்களுக்கு உரிய தகவல் அளித்து, ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜூலை 11ம் தேதி உலக மக்கள் தொகை தினமாக கடைபிடிக்கப்படும் நிலையில், கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய மக்கள் மையம் சார்பில், குன்னூர் உபாசி அரங்கில், உலக மக்கள் தொகை தின சிறப்பு கருத்தரங்கு முகாம் நடத்தப்பட்டது. கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய மக்கள் மையம் தலைவர் சிவசுப்ரமணியம் வரவேற்றார். சர்வதேச நிர்வாக இயல் ஆலோசகர் சுந்தர், சிறப்பு விருந்தினராக பேசியதாவது: இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு, தற்போது துரிதப்படுத்தப்பட்டுள்ளது. உலகில் 60 நாடுகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. பெருகியுள்ள மக்கள், அவர்களுக்கு தேவையான உணவு, உடை, இருப்பிடம், கல்வி, மருத்துவம், அறிவியல் ஆராய்ச்சி உட்பட மக்களின் தேவைகளை அறிந்துக் கொள்ள, இந்த கணக்கெடுப்பு அவசியமாகிறது. கணக்கெடுப்பின் முக்கியத்துவம் அறியாத பலர், கணக்கெடுப்பு நடத்தும் அலுவலர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை. பாதுகாக்கப்பட்ட, சட்ட விதிகளுக்கு உட்பட்ட சகல வசதிகள் நிறைந்த வாழ்க்கையை மக்கள் வாழ வேண்டும். மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே துல்லியமான கணக்கெடுப்பை நடத்தி முடிக்க முடியும். உலக மக்கள் தொகை 686 கோடியாக உள்ளது; இந்தியாவில் 118 கோடி பேர் வசிக்கின்றனர்; உலக மக்கள் தொகையில் இது 17 சதவீதம்; மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப நிலப்பரப்பு விரிவடையாததால், 17 சதவீத மக்கள் 2.4 சதவீத நிலத்தில், கடும் நெரிசலுக்கு மத்தியில் வசிக்கின்றனர். இந்தியாவில், ஆண்டுக்கு 1.50 கோடி பேர் பிறக்கின்றனர்; மக்கள் தொகை, ஆண்டுக்கு ஏழு கோடி அதிகரிக்கிறது; இதே நிலை நீடித்தால், வரும் 2050ம் ஆண்டின் உலக மக்கள் தொகை, 900 கோடியாக அதிகரிக்கும் என ஐ.நா., சபை தெரிவித்துள்ளது. குடும்ப கட்டுப்பாடு, கருத்தடை சாதனம் குறித்த விழிப்புணர்வை, மக்களிடையே அதிகளவு கொண்டு செல்ல வேண்டும். இவ்வாறு, சுந்தர் பேசினார்.
மக்கள் தொகை கணக்கெடுப்பின் அவசியம், குடும்ப கட்டுப்பாடு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், காந்திபுரம், ஆழ்வார்பேட்டை பகுதியில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள், கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய மக்கள் மையத்தினர் குறு நாடகம் நடத்தினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக